மாநாடுபோல் நடந்த ஆத்தூர் விழா

“நம்புங்க அறிவியலை; நம்பாதீங்க சாமியார்களை” என்ற முழக்கத்தை முன்வைத்து திராவிடர் விடுதலைக் கழகம்ஆகஸ்டு 7 முதல் 12 வரை நடத்திய பரப்புரைப் பயணத்தின் நிறைவு விழா பொதுக் கூட்டம்,  ஆகஸ்டு 12 வெள்ளி மாலை சேலம் மாவட்டம் ஆத்தூரில் எழுச்சியுடன் நடந்தது. 6 நாள் பயணத்தையும் முடித்துக் கொண்டு ஆத்தூரில் கழகச் செயல் வீரர்கள் திரண்டிருந்த காட்சி ஒரு மாநாடு போலவே இருந்தது. பேய், பில்லி, சூன்யம், சோதிடம், தீமிதித்தல் உள்ளிட்ட மக்களை மிரட்டிக் கொண்டிருக்கும் மூடநம்பிக்கைகளை ஊர்ஊராகச் சென்று தோழர்கள் வீதி நாடகம், மந்திரமா-தந்திரமா பாடல்கள் வழியாக விளக்கியபோது மக்கள் தந்த ஆதரவு,  தோழர்களை உற்சாகக் கடலில் மூழ்கச் செய்துவிட்டது.

பள்ளத்தூர் நாவலரசு குழுவினரின் இசைநிகழ்ச்சியுடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. பெரம்பலூர் தாமோதரன், ‘மந்திரமா-தந்திரமா’ நிகழ்ச்சிகளை சில நிமிடங்கள் நடத்தினார். சேலம் பிரபு குழுவினர் இரண்டு வீதி நாடகங்களை நடத்தினர். தொடர்ந்து ‘விரட்டு’ வீதி நாடகக் குழுவினரின் ‘ஒன்றுமில்ல’ என்ற வீதி நாடகம் நடைபெற்றது. பின்னர் ஒவ்வொரு பயணக் குழுவின் ஒருங்கிணைப்பாளரும் பயண அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

மயிலாடுதுறையிலிருந்து புறப்பட்ட பரப்புரைக் குழு ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் இளையராஜா, திருப்பூர் பரப்புரைக் குழு ஒருங்கிணைப்பாளர் சூலூர் பன்னீர்செல்வம், சத்தியமங்கலம் பரப்புரைக்குழு ஒருங்கிணைப்பாளர் பவானி வேணுகோபால், சென்னை குழுவின் ஒருங்கிணைப்பாளர் அய்யனார் ஆகியோர் உரையாற்றியதைத் தொடர்ந்து பயணக் குழுவினர், கழகத் தலைவர், பொதுச் செயலாளரோடு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பயணக் குழுவில் முழுமையாக பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து பயணத்தில் மக்களிடம் உரையாற்றிய பொருளாளர் திருப்பூர் துரைசாமி, சாக்கோட்டை இளங்கோ, கோபி. வேலுச்சாமி உரையாற்றினர். வெளியீட்டு செயலாளர் இராம.இளங்கோ, அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன், பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆகியோர் உரையைத் தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி தீர்மானங்களை முன்மொழிந்து உரையாற்றினார். ஆத்தூர் நிறைவு விழாவுக்கு முன்னின்று ஏற்பாடுகளைச் செய்த நகரத் தலைவர்ஆத்தூர் மகேந்திரன் நன்றி கூற 10 மணியளவில் நிகழ்ச்சி நிறைவடைந்தது.