தமிழ்நாட்டில் மதுக்கடைகளை இழுத்து மூட வேண்டும் என்ற போராட்டம், அரசியல் கட்சிகளையும் தாண்டி மக்கள் போராட்டமாக உருவெடுத்து வருகிறது. சசிபெருமாள் என்ற காந்தியவாதி, கைபேசி கோபுரத்தின் மீது ஏறி நின்று நடத்திய போராட்டத்தில் உயிரிழந்ததைத் தொடர்ந்து போராட்டத்தின் வேகம் அதிகரித்திருக்கிறது. மதுவிலக்கு குறித்து ஜூலை 19இல் தர்மபுரியில் கூடிய திராவிடர் விடுதலைக் கழகச் செயலவை நிறைவேற்றிய தீர்மானத்தின் ஒரு பகுதியை சுட்டிக்காட்ட விழைகிறோம்.

தமிழ்நாட்டில் ஒரு காலத்தில், ‘மதுக்குடி’ தனிப்பட்ட சிலரின் பழக்கமாக இருந்த நிலை மாறி, இன்று சமூகத்தையே சீர்குலைத்து வருகிறது. மாணவர்களையும் இளைஞர்களையும் போதை அடிமைகளாகவும் குடிநோயாளிகளாகவும் மாற்றிவருவது ஆபத்தான அறிகுறியாகும். மதுக் கடைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதும், விற்பனைக்கு கூடுதலாக இலக்கை நிர்ணயிப்பதும் ஒரு மக்கள் நலன் பேணும் ஆட்சிக்கான செயல் திட்டமாக இருக்க முடியாது.

அதே நேரத்தில் முழுமையாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதிலும் பல ஆபத்துகள் இருக்கவே செய்கின்றன. கள்ளச் சாராயம் வர்த்தகமாகி, காவல்துறை-கள்ளச் சாராய வியாபாரிகள் இரகசிய கூட்டு உருவாகி, மேலும் பல சமூக-சட்ட ஒழுங்கு நெருக்கடிகளை உருவாக்கிவிடும்.

- தீர்மானத்தின் ஒரு பகுதி

முழு மதுவிலக்கு சாத்தியமில்லை என்பதால் தற்போதுள்ள மதுவிலக்கு கொள்கையில் கடுமையான மாற்றங்கள் வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

முதல் கட்டமாக கல்வி நிறுவனங்கள், மக்கள் குடியிருப்பு, மருத்துவமனைகள் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என்பதும் இப்போது போராட்டம் நடத்துவோரின் கோரிக்கையாகும். இதில் முழுமையான நியாயம் இருக்கிறது. அ.இ.அ.தி.மு.க. ஆட்சி, இந்தப் போராட்ட உணர்வுகளை அலட்சியப்படுத்துவதும் காவல்துறையின் வழியாக அடக்கி, சட்டம்- ஒழுங்குப் பிரச்சினையாகவே அணுகுவதும் வன்மையான கண்டனத்துக்கு உரியதாகும்.

1991இல் தமிழ்நாட்டில் சாராயக் கடைகளை மூடும் உத்தரவைப் பிறப்பித்தவர், இதே முதலமைச்சர் தான். சாராயக் கடைகளை மூட உத்தரவிட்டவர், அதைவிட மோசமான உடல்உறுப்புகளை பாதிக்கக்கூடிய மது வகைகளை ‘டாஸ்மாக்’ மூலம் மக்களிடையே விற்கஅனுமதிப்பது என்ன நியாயம்? மனிதாபிமானமுள்ள எந்த ஒரு ஆட்சியும் இப்படி செயல்படாது. அரசியல் செல்வாக்குடன் மது உற்பத்தி தொழிற்சாலைகளை நடத்துவோர், மலிவான ஆபத்தான மது வகைகளை விற்பனைக்குக் கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இவைகள் அரசு பரிசோதனைக்கு உட்படுத்துவதும் இல்லை. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு ‘உயிர்க்கொல்லி’கள் மது என்ற பெயரில் விற்பனைச் சரக்காக மாற்றப்படுகின்றன.

அறவழியில் நடக்கும் போராட்டங்களை அரசு அலட்சியப்படுத்துகிறது. அதுவே வன்முறைப் போராட்டமாக மாறும்போது மட்டுமே, அரசு திரும்பிப்பார்க்கிறது என்றால், அரசே, வன்முறையைத் தூண்டி விடுவதாகத் தானே அர்த்தம்?

மதுக்கடைகளை இழுத்து மூடும் போராட்டம் நடந்தால், அங்கே அது தொடர்பான அதிகாரிகள் வந்து மக்கள் பிரச்சினைகளை கேட்பது இல்லை. மாறாகக் காவல்துறைதான் வருகிறது. தமிழ் நாட்டில் அனைத்துப் பிரச்சினைகளிலும் தலையிடக்கூடிய அதிகாரம் கொண்ட அமைப்பாக காவல்துறை மாற்றப்படுவதேகடும் கண்டனத்துக்கு உரியதாகும். இப்போது மதுக்கடைகளுக்கு எதிராக நடக்கும் போராட்டம், சட்டம்- ஒழுங்குப் பிரச்சினை தொடர்பானது அல்ல. இது சமூகப்பிரச்சினை. எனவே சமூகக் கண்ணோட்டத்தில் ஆட்சி இதை அணுக வேண்டும்.

திராவிடர் விடுதலைக் கழகச் செயலவை தீர்மானப்படி முதல்கட்டமாக மதுக் கடைகள் எண்ணிக்கையைக் குறைத்து, மதுவுக்கு எதிரான பரப்புரையை மக்கள் இயக்கங்களுடன் இணைந்து அரசு நடத்த முன்வரவேண்டும். ‘எது நடந்தாலும் இறங்கி வர மாட்டோம்’ என்ற ஆணவம் அரசியலில் மக்கள் சக்தி முன் மண்டியிட்டு தோற்றுப் போயிருக்கிறது என்ற உண்மையை தமிழக ஆட்சிப் புரிந்து கொள்ள வேண்டும்!