வழக்கறிஞர் போராட்டத்தில் விடுதலை இராசேந்திரன் பேச்சு 

புது தில்லியில் சுமார் ஒரு மாத காலமாக போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, சென்னை உயர்நீதிமன்ற முற்போக்கு வழக்கறிஞர்கள் சங்க சார்பில் 6.4.2017 அன்று ஒரு நாள் அடையாள பட்டினிப் போராட்டம், அமைப்பின் தலைவர் வழக்கறிஞர் ரஜினிகாந்த் தலைமையில் உயர்நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே நடைபெற்றது. பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்கள் பங்கேற்றுப் பேசினர். கழக சார்பில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார். அவர் உரையில் குறிப்பிட்டதாவது:

“தமிழக விவசாயத்தையும் விவசாயிகளையும் காங்கிரஸ் ஆட்சியானாலும், பா.ஜ.க. ஆட்சியானாலும் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. டெல்லியில் 25 நாள்களாக போராடும் விவசாயிகளை மோடி ஆட்சி திரும்பிப் பார்க்கக் கூட மறுப்பது தமிழர்களுக்கு இழைக்கும் அவமானம். மூன்று முறை மத்திய நிதியமைச்சர் ஜெட்லியை சந்தித்துப் பேசிய பிறகு இறுதி சந்திப்பில் ஓரளவு முன்னேற்றம் இருந்தது என்று போராடும் விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். என்ன முன்னேற்றம் என்ற கேள்விக்கு, மூன்றாவது முறையாக அமைச்சர் எங்களை உட்கார வைத்துப் பேசினார் என்று கூறினார். தமிழக விவசாயிகளை உட்கார வைத்துப் பேசுவதற்குக்கூட இவர்கள் தயாராக இல்லை. பிரதமர் மோடி சந்திக்கவே மறுத்து வருகிறார். மோடியின் பா.ஜ.க. பார்வையில் போராடும் விவசாயிகளும் இந்துக்கள் தானே! இந்துக்களின் காவலர் இந்துக்களின் தேசம் என்று மார்தட்டும் ஆட்சி, விவசாயிகளை இப்படி அவமதிக்கலாமா?

இப்போது  விவசாயிகள் முன் வைக்கும் கோரிக்கைகள் என்ன?

விவசாயிகளுக்கான பயிர் கடன், மாநில அரசு கூட்டுறவுத்துறை, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமும் வழங்கப்படுகிறது. தனியார் நிதி நிறுவனங்களும் கடன் தருகின்றன. கூட்டுறவுத் துறை வழங்கும் கடன்களை ரத்து செய்யும் அதிகாரம், மாநில அரசிற்கு உண்டு. இப்போது சென்னை உயர்நீதிமன்றமே அதை இரத்து செய்துள்ளது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் வழங்கப்படும் கடன்களை ரத்து செய்யும் அதிகாரம், மத்திய அரசுக்கே உள்ளது. இதன் படி, பல்வேறு வகையில், தமிழக விவசாயிகள், 86 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளனர். வறட்சியால் விவசாயிகள் பரிதவிக்கும் நிலையில், இந்த கடன்களை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்பது, விவசாயிகளின் கோரிக்கை.

ஆந்திரா, தெலுங்கானா மாநில அரசுகள் வங்கிகளுடன் பேசி, ஆந்திரா, 60 ஆயிரம் கோடி ரூபாய்; தெலுங்கானா, 17 ஆயிரம் கோடி ரூபாய், விவசாய கடன்களை ரத்து செய்துள்ளன. வங்கிகளுக்கு ஐந்து தவணைகளில் பணத்தை திருப்பி செலுத்துவதாக உறுதி அளித்து, இரண்டு தவணைகளையும் செலுத்தி விட்டன.

உத்தர பிரதேச அரசு, விவசாயிகளின், 36 ஆயிரம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்துள்ளது. இதன்படி, அம்மாநிலத்தைச் சேர்ந்த, 92.5 சதவீத விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர். தமிழக அரசும் இந்த முயற்சியை மேற்கொள்ளலாம். விவசாயிகள் கடன்களை ரத்து செய்யவும், அதற்கு மத்திய அரசு நிதி உதவி செய்யவும் ஏற்கெனவே உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக காவிரி பாசனப் பகுதி மாவட்டங்களின் பாசனம் உள்ளிட்ட தேவைகளுக்கு, ஆண்டு தோறும், 193 டி.எம்.சி., காவிரி நீரை, கர்நாடகா வழங்க வேண்டும். ஆனால், நீரை தராமல் கர்நாடக அரசு முரண்டு பிடிப்பதால், டெல்டா மாவட்டங்களில் சாகுபடி கடுமையாக பாதித்து வருகிறது.

ஐந்து ஆண்டுகளாக, ஜூனில் நடக்க வேண்டிய, குறுவை சாகுபடி நடக்கவில்லை. பெருமளவு இழப்பு ஏற்பட்டு, 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற் கொலை செய்து இறந்துள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப் படுத்தும் குழுக்களை அமைக்காததே, இதற்கு காரணம்.

தமிழகம் - கர்நாடகா இடையே, பல ஆண்டு களாக நிலவி வரும் பிரச்னைக்கு தீர்வு காண அமைக்கப் பட்ட காவிரி நடுவர் மன்றம், 2007இல் இறுதி தீர்ப்பை வழங்கியது. இந்த தீர்ப்பு, தமிழக அரசின் தொடர் சட்ட போராட்டங்களால், 2013இல் மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது.

இதன்படி, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவை மத்திய அரசு அமைத்திருக்க வேண்டும். உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும், மத்திய அரசு அமைதி காக்கிறது. முதலில் உச்சநீதிமன்ற தீர்ப்பையேற்று வாரியம் அமைக்க ஒப்புக் கொண்டார்கள். பிறகு முடிவை மாற்றிக் கொண்டு, இதில் தலையிடும் உரிமை உச்சநீதிமன்றத்துக்கு கிடையாது என்று மனுதாக்கல் செய்துவிட்டது மோடி அரசு. மேலும், காவிரி நீர் பிரச்னைகளுக்கு தீர்வு காண, புதிய நதிநீர் தீர்ப்பாயம் அமைக்க முயற்சி நடக்கிறது. இதனால், காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பே கேள்விக்குறியாகி உள்ளது.

நெல், கரும்பு, கடுகு, மஞ்சள் உள்ளிட்ட, 40 வகை யான வேளாண் உற்பத்தி பொருள்களுக்கு, மத்திய வேளாண் விளை பொருள் நிர்ணய ஆணையம், விலை நிர்ணயம் செய்து வருகிறது. சாகுபடி செலவை மட்டுமே கருத்தில் கொண்டு, இந்த விலை நிர்ணயம் செய்யப்படுவதால், விவசாயிகளுக்கு போதிய விலை கிடைக்கவில்லை. பல பயிர்களுக்கு உற்பத்தியை பொறுத்தே இடைத்தரகர்கள் விலை நிர்ணயம் செய்வதால், விவசாயிகளுக்கு நஷ்டம் தொடர்கிறது. இதுவே, அவர்களின் தற்கொலைக்கு காரணம்.

உற்பத்தி பொருட்களுக்கு மத்திய, மாநில அரசுகளே உரிய விலை நிர்ணயம் செய்தால், பிரச்னை ஓரளவு தீரும். பல மாநிலங்களில், 2004இல் கடும் வறட்சி ஏற்பட்டு, விவசாயிகள் தற்கொலை அதிகரித்தது. இதற்கு தீர்வு காண, வேளாண் ஆராய்ச்சியாளர், எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமை யிலான, ஒன்பது பேர் குழு அமைக்கப்பட்டது.

'விவசாய உற்பத்தி பொருட்களுக்கு, 50 சதவீத கூடுதல் விலையை நிர்ணயிக்க வேண்டும்' என மத்திய அரசுக்கு, இக்குழு பரிந்துரைத்தது. இந்த அறிக்கையை, நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் கூட, இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை.

தமிழகத்தில், இயல்பான ஆண்டு மழையளவு, 91.1 செ.மீ., - மாநிலத்தில், 34 ஆறுகள் உள்ளன. மொத்த நீர்வள ஆதாரம், 885 டி.எம்.சி., இதில், கர்நாடகா, கேரளா, ஆந்திரா மாநிலங்கள் வழங்க வேண்டிய, 264 டி.எம்.சி.,யும் அடக்கம். மாநிலத்திற்கு கிடைக் கும் நிலத்தடி நீர்வள ஆதாரத்தில், 77 சதவீதத்திற்கும் மேல் பயன்படுத்தப்படுகிறது.

தமிழகத்திற்கு நீர்வளம் வடகிழக்கு பருவமழை மூலமே கிடைக்கிறது. உரிய சேமிப்பு கட்டமைப்புகள் இல்லாததால், இந்த நீரின் பெரும்பகுதி வீணடிக்கப்படுகிறது. தமிழகத்தின் நீர் தேவையை பூர்த்தி செய்ய, நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவது அவசியம். காவிரி - வைகை - குண்டாறு, தாமிர பரணி - கருமேனியாறு - நம்பியாறு, அத்திக் கடவு -அவினாசி, பாலாறு - பெண்ணையாறு இணைப்புத் திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம், பல்வேறு மாவட்டங்களுக்கு போதுமான நீர்வளம் கிடைக்கும்.

இதில் ஒவ்வொரு திட்டத்திற்கும், 5,000 கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும். அத்திக்கடவு - அவினாசி திட்டம், தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்பு திட்டங்களுக்கு, சமீபத்திய தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில், குறைந்த அளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் நிலவும் போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே, அடையாளத்துக்காக இதுபோன்ற குறைந்த நிதி ஒதுக்குவது மாநில அரசின் வழக்கமாகியிருக்கிறது. எனவே, மத்திய அரசு மனது வைத்தால் மட்டுமே, தமிழகத்தில் நதிகள் இணைப்பு சாத்தியமாகும் என்ற நிலை!

கரும்பு நிலுவை பிரச்னை :     

தமிழகத்தில், மூன்று லட்சம் விவசாயிகள், 8.40 ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்து வருகின்றனர். கரும்பு கொள்முதலுக்கு, மத்திய அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை; மாநில அரசின் பரிந்துரை விலையையும் சேர்த்து, கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

சந்தையில் சர்க்கரை விலை குறைவால் உற்பத்தி செலவை ஈடுகட்ட முடியவில்லை எனக்கூறி, சர்க்கரை ஆலைகள், 2013 முதல் 2015 வரை, கரும்பு கொள்முதல் விலையை வழங்கவில்லை.

2015க்கு பின், சர்க்கரை விலை உயர்ந்து, இலாபம் கிடைத்தும், இதுவரை, விவசாயிகளுக்கு, 1,600 கோடி ரூபாய் நிலுவையில் வைத்துள்ளன.

இது தொடர்பாக, தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகங்களை அழைத்து, அரசு தரப்பில் பலமுறை பேச்சு நடத்தியும் பயன் இல்லை. அரசின் உத்தரவுக்கு சர்க்கரை ஆலை நிர்வாகங்கள் கட்டுப்படாமல் இருப்பதற்கு, சட்டத்தில் உள்ள ஓட்டைகளே காரணம். 'கரும்பு கொள்முதல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி, மாநில அரசு சட்டப்பூர்வமாக்கி கொள்ள வேண்டும்' என, 2005இல், ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது.

12 ஆண்டுகள் ஆகியும், இன்னும் தமிழக அரசு அதற்கான முயற்சி எடுக்கவில்லை. தமிழக அரசு இந்த சட்டத்தை இயற்றுவதே, இந்த சிக்கலுக்கு தீர்வாகும். இதுபோன்ற பிரச்னை களுக்கு, இப்போதாவது மத்திய, மாநில அரசுகள் தீர்வு கண்டால் தான், அவர்களின் வாழ்வாதாரம் மேம்படும்; தொடரும் மரணங்களையும் தடுக்க முடியும்” என்றார் விடுதலை இராசேந்திரன்.