“காங்கிரசே; ஈழத்தில் எமது தொப்புள் கொடி உறவுகள் - ஒவ்வொரு நாளும் பிணங்களாக கொத்து கொத்தாக கொல்லப்படுகிறார்களே! இதைத் தடுக்கக் கூடாதா? போரை நிறுத்தச் சொல்லக் கூடாதா?” - என்று கதறினோமே! – கட்சிகளை மறந்து, தமிழராய் குரல் எழுப்பினோமே! - மனித சங்கிலிகள் நடத்தினோமே! - தீர்மானங்கள் போட்டோமே! - எல்லாவற்றுக்கும் மேலாக - எம் தமிழினத்தின் பிள்ளைகள் 17 பேர் தங்கள் உடலுக்கு தீ வைத்துக் கொண்டு, தங்கள் மரணத்தையே பணயம் வைத்து போர் நிறுத்தம் கோரினார்களே! - இந்திய ஆட்சியே! காங்கிரஸ் ஆட்சியே! ஒரு வார்த்தை.... ஒரே ஒரு வார்த்தை... ‘போரை நிறுத்து’ என்று இலங்கையை எச்சரித்தீர்களா? ஆயுதங்களையும் - போர் பயிற்சியும், ஆயுதம் வாங்க நிதியையும் வாரி வழங்கிவிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்து அனுப்புகிறோம் என்றீர்களே? இது என்ன நாடகம்? எங்களை ஏமாளிகளாக்குகிறீர்களா?

உலகமே கண்டித்தாலும்....

போரை நிறுத்து என்கிறது, அய்.நா. போரை நிறுத்து என்கிறது பிரிட்டன். போரை நிறுத்து என்கிறது, அமெரிக்கா. போரை நிறுத்து என்கிறது, சர்வதேச மனித உரிமை அமைப்புகள். இந்திய தேசமே! எமது வாக்குகளை வாரிச் சென்ற காங்கிரசே; போரை நிறுத்து என்று உனது குரல், ஒலிக்காதது ஏன்? ஏன்? ஏன் இந்த வஞ்சகம்? போனாரா? வெளிநாட்டுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, போரை நிறுத்த போக வேண்டும் என்று தமிழகத்தின் ஒரு மித்த குரலை மதித்து கொழும்பு போனாரா? இல்லையே! கிளிநொச்சி வீழ்ந்தால் போவேன் என்றார் பிரணாப் முகர்ஜி; ஆம்; வீழ்ந்த பிறகு தான் போனார்; போனவர் சொன்னார் என்ன சொன்னார்? போரை நிறுத்தச் சொன்னாரா? இல்லையே! சிங்கள ராணுவத்தின் வெற்றியைப் பாராட்டினார். 25 ஆண்டுகால இராணுவ நடவடிக்கைகள் வெற்றி பெறத் தொடங்கிவிட்டன என்றார்.

அய்யகோ; இது என்ன கொடுமை? எமது தமிழினத்தை கொன்று குவிக்கும் ராணுவத்தை இவர்களால் எப்படி புகழ முடிகிறது? போரை நிறுத்தச் சொல்லி, இந்தியா எங்களிடம் கோரிக்கை வைக்கவில்லை - என்கிறார், இலங்கை அதிபர் இனப்படுகொலையை நடத்தும் இராஜபக்சே. “இந்தியா உதவி செய்வதால் தான் விடுதலைப் புலிகளை நம்மால் வீழ்த்த முடிந்தது. எனவே, இந்தியாவைப் பற்றி தவறாகப் பேசாதீர்கள்” - என்று இந்தியாவுக்கு இலங்கை நாடாளுமன்றத்தில் நற்சான்றிதழ் வழங்கியுள்ளார், அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீபால டி சில்வா.

இலங்கையின் இறையாண்மையை காப்பாற்ற, நாம் ராணுவ உதவி செய்வது உண்மைதான் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வை.கோ.வுக்கு எழுதிய கடிதத்தில் ஒப்புக் கொண்டிருக்கிறார், பிரதமர் மன்மோகன் சிங். இலங்கைக்கு அதன் தேசப் பகுதிக்குள் எந்த இடத்திலும் குண்டு போட உரிமை இருக்கிறது; அதை நாம் தடுக்க முடியாது என்று இந்திய ராணுவ தளபதிகள் மாநாட்டில் பேசினார், பிரதமர் மன்மோகன்சிங். “ஈழத் தமிழர்கள் மீது போரை முற்றாகவும், நேரடியாகவும் நடத்துவதே இந்திய அரசு தான்” - என்று சிங்கள இடதுசாரி முன்னணி தலைவர் கலாநிதி விக்கிரம பாகு கருணாரத்ன.

இந்திய அரசே; காங்கிரஸ் ஆட்சியே! சோனியாகாந்தியே! மன்மோகன் சிங்கே! எமது தமிழினத்தைப் படுகொலை செய்யும் இனப்படுகொலைக்கு துணைப் போகும் காங்கிரசுக்கு நாங்கள் வாக்களிக்க வேண்டுமா? எமது இனத்தின் படுகொலைக்கு - நாங்களே ஒப்புதல் வழங்க வேண்டுமா? நாங்கள் உணர்ச்சியுள்ள தமிழர்கள்; எமது தொப்புள் கொடி உறவுகளின் மரண ஓலங்களை - நாங்கள் இனியும் கேட்கத் தயாராக இல்லை. காங்கிரசை தோற்கடிக்க தயாராவோம்; காங்கிரசை - எதிர்த்து சம போட்டியில் களத்தில் நிற்கும் வேட்பாளருக்கு வாக்களித்தால்தான் காங்கிரசு வேட்பாளரை தோற்கடிக்க முடியும் என்பதை நெஞ்சில் நிறுத்துவோம்! விரட்டுவோம் இனப்பகையை! வீழ்த்துவோம், காங்கிரசை!