கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 3 காவலர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டதன் பின்னணியில் அவர்கள் கருப்புச் சட்டை அணிந்து பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சம்பவம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

கடலுர் மாவட்டம் கடலூர் போக்குவரத்து முதல்நிலைக் காவலர் எஸ்.ரஞ்சித், கடலூர் புதுநகர் காவல் நிலையக் காவலர் டி.ரங்கராஜன் மற்றும் திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையக் காவலர் ஜி.அசோக் ஆகியோர் கருப்புச் சட்டை அணிந்து அண்மையில் கடலூரில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, அதைப் புகைப்படமாக எடுத்து சமூக வலைதளங்களில் தங்கள் நண்பர்கள் குழுவில் பகிர்ந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் 3 காவலர்களையும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ், கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்குப் பணியிட மாற்றம் செய்து கடந்த 6-ம் தேதி உத்தரவு பிறப்பித் துள்ளார். இதுகுறித்து சக காவலர்கள் மத்தியில் பல்வேறு யூகங்கள் பரிமாறப்படுவதோடு விவாதங் களும் நடைபெற்று வருகின்றன.

3 பேரையும் பணியிட மாற்றம் செய்ததற்குப் பின்னணியில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்ததுதான் காரணம் எனக் கூறப்படுகிறது. ஆனால், அவர்கள் சீருடையிலோ அல்லது பணி நேரத்திலோ தங்களுக்கு விருப்பமான தலைவருக்கு மரியாதை செலுத்தவில்லை. மாறாக மாற்று உடையில்தான் மரியாதை செலுத்தியுள்ளனர்.

“பெரியார் என்ன தீவிரவாதியா, அவருக்கு மரியாதை செலுத்துவதில் என்ன தவறு?” என்ற யூகத்தின் அடிப்படையில் விவாதங்களும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இது தொடர்பாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவிடம் கேட்டபோது, நிர்வாகக் காரணங்களின் அடிப்படையில், விழுப்புரம் சரக டிஐஜி உத்தரவின் பேரில் 3 பேரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.

இதையடுத்து, விழுப்புரம் சரக டிஐஜி எழிலரசனிடம் கேட்டபோது, “பெரியார் மரியாதைக்கு உரியவரே. எனவே அவர்கள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்ததற்காகவோ, மரியாதை செலுத்தியதற்காகவோ அவர்கள் பணியிட மாற்றம் செய்யப்படவில்லை. அதைத் தாண்டி வேறு சில செயல்களில் ஈடுபட்டதாலேயே பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்” என்றார்.

தமிழக அரசு அலுவலகங்களில் மாட்டக்கூடிய அரசியல் சார்பற்றவர்களின் படங்களாக பெரியார், திருவள்ளுவர் படங்கள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

பெரியார் பிறந்த நாள் நினைவு நாளில் அரசு சார்பில் அவர்களது சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்படுவதோடு, அரசு சார்பில் ஏடுகளில் விளம்பரங்களும் வெளியிடப்படுகின்றன. 

இந்தியாவில் அரசியல் பதவி வகிக்காத தலைவருக்கு முதல்முறையாக அரசு மரியாதையுடன் இறுதி நிகழ்வுகள் நடத்தப்பட்டது காந்தியடிகளுக்குத்தான். இரண்டாவதாக, பெரியாருக்கு, கலைஞர் ஆட்சி அரசு மரியாதையுடன் இறுதி நிகழ்வுகளை நடத்தி பெருமை சேர்த்தது.

நிர்வாகக் காரணங்களுக்காகவே இவர்கள் மாற்றப்பட்டார்கள் என்று இப்போது அதிகாரிகள் விளக்கம் தருவது போலி சமாதானம். பெரியார் சிலைகளுக்கு மாலை போட்ட 3 காவல்துறையினரில் ஒருவர் போக்குவரத்துத் துறைப் பிரிவில் பணியாற்றுகிறவர்.

நிர்வாகக் காரணங்கள், மாலை போட்ட இந்த மூன்று பேருக்கு மட்டுமே தான் இப்போது உருவாகியிருக்கிறதா? வெளி மாநில காவல் துறை அதிகாரி ‘இந்துத்துவா’ துறையாக காவல்துறையை மாற்றும் நிர்வாகப் பணிகளுக்கு இந்த ‘பெரியாரிஸ்டுகள்’ முட்டுக்கட்டையாக இருப்பார்கள் என்ற நிர்வாகக் காரணமாக வேண்டுமானால் இருக்கலாம். 

தமிழக முதல்வர் என்ன செய்ய போகிறார்? தமிழ்நாட்டில் நடப்பது இவர்கள் கூறும் ‘திராவிட’ ஆட்சியா? அல்லது ‘பாரதிய சரணாகதி’ கட்சியா?

விடுதலை இராசேந்திரன்