Modi and EPSதமிழ்நாட்டை உ.பி., ம.பி., இராஜஸ்தான் போன்ற மற்றொரு மாநிலமாக்க பா.ஜ.க. சூழ்ச்சிகரமான திட்டங்களை தேர்தல் களத்தில் உருவாக்கி வருவதை கழகத் தலைமைக் குழு கவலையுடன் பரிசீலித்தது. உள்ளூர் மட்டத்தில் மக்களை நேரடியாக சந்தித்தும் துண்டறிக்கை வெளியீடுகள் வழியாக கருத்துகளைப் பரப்புவதுமான பரப்புரைத் திட்டங்களை வகுப்பது குறித்தும் தலைமைக்குழு பரிசீலித்தது.

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கழக தலைமைக் குழுக்கூட்டம் 03.01.2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு மேட்டுப்பாளையம் ஈஸ்வரி அம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கழகத் தலைவர்  கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலை வகித்தார்.

இயக்கத்தின் ஏடுகள், போராட்ட திட்டங்கள், அரசியல் நிலவரங்கள், துணை அமைப்புகளின் செயல் பாடுகள், மாவட்ட நிர்வாக அமைப்புகளில மாறுதல்கள், கழகத் தோழர்களை சந்திக்கும் நிகழ்வுகள், சமூக வலைத் தளங்களின் செயல்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப் பட்டது.

1) கொரோனா ஊரடங்கு காலகட்டத்தின் காரணமாக வேறு வழியின்றி இடைநிறுத்தம் செய்ய வேண்டிய அவசியம் குறித்தும், தற்சமயம் மீண்டும் வார இதழ் வெளிவந்துள்ள நிலையில் பெரியார் முழக்கம் ஏட்டுக்கு சந்தா சேர்க்கும் பணி குறித்தும் விவாதிக்கப்பட்டது.

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’  வார ஏட்டிற்கென நன் கொடை வழியாக நிதித் திரட்டவும் இந்தப் பணியை உடனடியாகத் தொடங்கவும் முடிவெடுக்கப் பட்டது.

அதேபோல் கொரோனா ஊரடங்கினால் வெளிக் கொணர இயலாமல் போன ‘நிமிர்வோம்’  மாத இதழை மீண்டும் வெளிக் கொண்டு வருவதற்கான முயற்சியை யும், அதற்கான சந்தா சேகரிப்பு, நன்கொடை பெறுவது பற்றியும் தலைமைக் குழு விவாதித்தது.

2) எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல், மற்ற தேர்தலைப் போல் அல்லாமல் தமிழ்நாட்டில் பா.ஜ.க. காலூன்றிட திராவிட இயக்கத்தை, குறிப்பாக தி.மு.க.வை வீழ்த்தும் ஒரே நோக்கத்தோடு பா.ஜ.க. பார்ப்பனிய சக்திகள் தீவிர முனைப்பு காட்டி வருவதையும் பெரியார் இயக்கங்களை முற்றிலுமாக முடக்குவதே அதன் முதன்மையான நோக்கமாக இருப்பதையும் பலரும் சுட்டிக்காட்டினர். இந்த நிலையில் பா.ஜ.க.வின் பார்ப்பன வியூகங்களுக்கு எதிராக மக்களை நேரடியாக சந்தித்துப் பேசவும் துண்டறிக்கைகள் வெளியீடுகள் வழங்கவும் ஆலோசிக்கப்பட்டது.

3) கழகத்தின் உள் கட்டமைப்பில் மாறுதல்கள் செய்வது, கழக மாவட்ட பொறுப்பாளர்களின் பணிகள் மேலும் சிறப்புற பொறுப்புக்களை மாற்றி அமைப்பது குறித்தும் பரிசீலிக்கப்பட்டது. கழகத்தின் துணை அமைப்பான தமிழ்நாடு மாணவர் கழகத்தின் சிறப்பான செயல்பாடுகளுக்கு தலைமைக்குழு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தது. மாணவர் கழகத்தின் செயல்பாடுகளை மேலும் செழுமைப் படுத்த பொறுப்பாளர்கள் நியமனம் மற்றும் செயல் திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

4) கழக அமைப்புகளில் இளைஞர்களுக்கு மேலும் பொறுப்புகளை வழங்கி இயக்க செயல்பாடுகளை அடுத்த தலைமுறைக்கு நகர்த்த வேண்டிய அவசியம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. மாநில அளவில் கழகத் தோழர்களை பல்வேறு மாவட்டங்களில்  கழகத் தலைவர், கழகப் பொதுச் செயலாளர், கழக நிர்வாகிள் சந்தித்து உரையாடுவது பற்றி விவாதிக்கப்பட்டது.

5) கழகத் தோழர்களின் கடும் உழைப்பாலும், கழக ஆதரவாளர்களின் பெரும் உதவியோடும் வழங்கப் பட்ட கட்டிட நிதியால் கழகத்தின் தலைமைக்கழக கட்டிடம் சாத்தியப்பட்டது. நிதி அளித்தோரின் பெயர்கள் கழகத்தின் வார ஏட்டில் நன்றியோடு பகிரப்பட்டு வந்தது. கொரோனா ஏற்படுத்திய இடைவெளியால் நிதி அளித்தவர்கள் பெயர்ப் பட்டியலை முழுமையாக வெளியிட இயலாமல் போனதையும், மீண்டும் வெளி வந்துள்ள பெரியார் முழக்கத்தில் விடுபட்ட ஆதரவாளர்கள் பெயரையும் பதிவு செய்வது எனவும்  நன்றி அறிவிப்பு கடிதங்களை எழுதவும் முடிவு செய்யப்பட்டது.

தலைமைக் குழுக் கூட்டத்தில் அமைப்புச் செயலாளர் ஈரோடு ரத்தினசாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி, தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் ஆசிரியர் சிவகாமி, இணையதள பொறுப்பாளர் விஜயகுமார், முகநூல் பொறுப்பாளர் பரிமளராஜன், சென்னை மாவட்டச் செயலாளர் உமாபதி, மயிலாடுதுறை இளையராஜா, அய்யனார், மடத்துக்குளம் மோகன், சூலூர் பன்னீர் செல்வம், மேட்டூர் சக்தி, காவலாண்டியூர் ஈஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

- விடுதலை இராசேந்திரன்