sawant judgeஉச்சநீதிமன்ற நீதிபதியாகி ஓய்வு பெற்ற பிறகும் விளிம்பு நிலை மக்களான தலித், இஸ்லாமியர், ஆதிவாசிகளுக்காகப் போராட்டக் களத்தில் நின்றவர் நீதிபதி பி.பி. சாவந்த். அண்மையில் முடிவெய்தி விட்டார். அவர் வழங்கிய தீர்ப்புகள் சமூக நீதி, மாநில உரிமை வரலாறுகளில் என்றென்றும் உயிர்ப்புடன் இருக்கும்.

எதிர்கால தீர்ப்புகளுக்கு வெளிச்சம் பாய்ச்சும்! எஸ்.ஆர். பொம்மை வழக்கில் ஆளுநர்கள், மாநில அரசுகளைக் கலைக்கும் தங்கு தடையற்ற அதிகார முறைகேடுகளுக்கு கடிவாளம் போட்டு, அவற்றில் நீதிமன்றம் தலையிட உரிமை உண்டு என்று தீர்ப்பளித்து, மாநில உரிமைக்கு வலு சேர்க்கும் தீர்ப்பை வழங்கி இந்தியா மதச்சார்பற்ற நாடு என்பதையும் உறுதி செய்தார்.

மண்டல் பரிந்துரை அடிப்படையில் 27 சதவீத பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை எதிர்த்த வழக்கில் (இந்திரா சகானி) அரசியல் சாசன அமர்வில் ஒருவராக இருந்து சமூக நீதியின் நியாயங்களுக்கு தனது தீர்ப்பு வாசகங்கள் வழியாக வலிமை சேர்த்தார்.

மக்கள் எண்ணிக்கையில் ஒரு சிறு பிரிவினராக இருப்பவர்களின் நலக் கண்ணோட்டத்தில் தான் தேசத்தின் முன்னேற்றம் மதிப்பிடப்படுகிறது. அவர்கள் உருவாக்கித் தரும் கொள்கைகளே தேச நலனைப் பாதுகாக்கும் கொள்கையாகி விட்டது என்று கூறியதோடு ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் நலன் மட்டுமே ஒட்டு மொத்த தேச மக்களின் நலனைவிட மேலானது; முக்கியமானது என்ற பார்வையில் அரசு நிர்வாகமும் ஒரு சார்பாக செயல்படுகிறது என்று தனது தீர்ப்பில் எழுதினார்.

1871ஆம் ஆண்டு பிரிட்டிஷ் இந்தியாவில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அதிகாரியாக செயல்பட்ட டாக்டர் டபிள்யூ ஆர். கார்னிஷ், அனைத்துத் துறைகளிலும் பார்ப்பனர் ஆதிக்கம் நிறைந்து வழிவதை சுட்டிக்காட்டி, ‘பார்ப்பனக் கண்ணாடி வழியாகவே’ நாட்டின் முன்னேற்றம் பார்க்கப்படுகிறது என்று வெளிப்படையாகவே அறிக்கையில் பதிவு செய்தார். பி.பி. சாவந்த், இதே கருத்தை ஒரு சிறு பிரிவினர் தரும் ‘Prescription’ என்ற வார்த்தையில் குறிப்பிட்டார்.

பி.பி. சாவந்த், பதவி ஓய்வுக்குப் பிறகு மக்கள் தொண்டாற்ற வந்தார். ‘ஆர்.எஸ்.எஸ். இல்லாத இந்தியாவை உருவாக்க ஒன்றுபடுவோம்’ என்ற முழக்கத்தை முன் வைத்து, அவரும் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பி.ஜி. கோல்சேவும் இணைந்து, ‘ஆர்.எஸ்.எஸ். முக்த் பாரத்’ இயக்கத்தைத் தொடங்கினார்கள்.

பல்வேறு தலித், முஸ்லிம், ஆதிவாசிகள் அமைப்புகள் இந்தக் குடையின் கீழ் கொண்டு வரப்பட்டன. 2015இல் இந்த அமைப்பு நடத்திய மாபெரும் பேரணியை முடக்குவதற்கு மகாராஷ்டிரா ஆட்சியின் காவல்துறை கடும் நெருக்கடிகளை கெடுபிடிகளைத் தந்தது. தலைவர்கள் உரையை திரைக்காட்சி வழியாக ஒளிபரப்பத் தடை போட்டனர்.

நீதிபதிகள் இதை எதிர்த்து மக்களுக்காக வீதிக்கு வந்து போராடினார்கள். ‘கழகங்கள் இல்லாத தமிழகம்’ என்ற முழக்கத்தோடு தமிழ்நாட்டில் கால்பதிக்க முயன்ற பா.ஜ.க., இப்போது அ.இ.அ.தி.மு.க. என்ற கழகத்தின் தோள் மீது சவாரி செய்து கொண்டிருக்கிறது.

ஆனால், ஆர்.எஸ்.எஸ். இல்லாத இந்தியாவுக்காக நாட்டின் மிக உயர் பதவியிலிருந்த பி.பி.சாவந்த், பதவி ஓய்வுக்குப் பிறகும் மக்களை அணி திரட்டிய பெருமைக்குரியவராக உயர்ந்து நிற்கிறார். பதவிக்கு பெருமை சேர்த்த போராளிக்கு நமது வீரவணக்கம்!

- விடுதலை இராசேந்திரன்