cylinder lpgசிலிண்டர் ‘கேஸ்’ விலை 785 ஆகிவிட்டது. பா.ஜ.க.வின் பொருளாதாரப் புலிகள் இதை நியாயப் படுத்துகிறார்கள். இந்த ஒரு மாதத்தில் மட்டும் ரூ.75 உயர்ந்துள்ளது.

2014 மே மாதத்தில் டெல்லியில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் அனைத்து வரிகளும் நீங்கலாக ரூ.47.12; இது பிப்ரவரி யில் 2021இல் வரிகள் நீங்கலாக ரூ.29.34 ஆக குறைந்தது. ஆனால், அடிப்படையான பெட்ரோல் விலை மீது நடுவண் ஆட்சி வரி, டூட்டி, கமிஷன், லெவி என்ற பெயர்களில் 217 சதவீத வரிகளைப் போட்டு குறைந்த விலைக்கு மக்களுக்குக் கிடைக்காமல் பார்த்துக் கொள்கிறது.

2021 பிப்ரவரியில் பெட்ரோலின் சர்வதேச சந்தை நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.29.34 காசுகள் மட்டுமே. இத்துடன் மத்திய அரசு போடும் வரி 32.98 (38 சதவீதம்), விற்பனையாளர் கமிஷன் ரூ.3.69 (4 சத வீதம்), விற்பனை வரி ரூ.19.92 (23 சதவீதம்), ஆக அனைத்தையும் சேர்த்து ரூ.86.3-க்கு விற்கப் படுகிறது. (அனைத்து வரிகள் கமிஷன் உட்பட 100 சதவீதம் விதிக்கப்படுகிறது) இப்போதைய விலை ரூ. 785.

‘செஸ்’ என்று ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை முன் வைத்து போடப்படும் வரியையும் பெட்ரோலுக்கு போடுகிறார்கள். இதில் வரும் வருவாயில் மாநில அரசுகளுக்கு பங்கு கிடையாது.

இப்போது மத்திய அமைச்சர் நிர்மலா தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் பெட்ரோல், டீசல் மீது விவசாயக் கட்டமைப்பு வளர்ச்சி என்ற பெயரில் ‘செஸ்’ வரியை விதித்தார். இப்படி ‘செஸ்’ வரி விதிப்பு வழியாக கிடைக்கும் தொகை முழுவதும் மத்திய அரசின் சேமிப்பு நிதிக்கு மாற்றப்படும். இது நாட்டின் முக்கிய நலத் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும்.

இப்படி ‘செஸ்’ மூலம் கிடைத்த தொகை ரூ.1.25 இலட்சம் கோடி மத்திய அரசின் கையிருப்பில் உள்ளது. இந்தத் தொகையை பயன்படுத்திக்கூட பெட்ரோல் டீசல் விலையை குறைக்க முடியும்.

ஆனால் இந்தத் தொகையிலிருந்து ஒரு ரூபாயைக் கூட பெட்ரோல் எண்ணெய் வளர்ச்சித் திட்டங்களுக்கு அரசு பயன்படுத்தவில்லை என்று தணிக்கைக் குழு சுட்டிக் காட்டியுள்ளது. இப்போது விவசாய கட்டமைப்பு என்ற பெயரில் மற்றொரு ‘செஸ்’ வரியை மக்கள் மீது திணித்திருக்கிறார்கள்.

பெட்ரோல் - டீசலைப் பயன்படுத்து வோரும் கேஸ் சிலிண்டரைப் பயன்படுத்து வோரும் பெரும்பாலும் இவர்கள் பார்வையில் ‘இந்து’க்கள். ஆனால், ‘இந்து’க்களின் பொருளாதாரம் பற்றி கவலை இல்லை; ‘இந்து’ தர்மம் பேசும் ஜாதியும் பார்ப்பன தர்மங்களும் பற்றித் தான் அவர்களுக்கு கவலை!

- விடுதலை இராசேந்திரன்