anna univஅண்ணா பல்கலைக்கழகத்தில் நடுவண் அரசு நிதி உதவியுடன் நடத்தப்படும் ‘எம்.டெக்’ எனும் மேல் பட்டப் படிப்புக்கான இரண்டு வகுப்புகளை பா.ஜ.க. ஆட்சி மூடிவிட முடிவு செய்துவிட்டது.

காரணம், நிதிப் பற்றாக் குறையல்ல; நிர்வாகக் காரணம் அல்ல; அல்லது இந்தப் பிரிவுகளில் சேருவதற்கு மாணவர்கள் ஆர்வம் காட்டவில்லை என்ற காரணம் அல்ல. இடஒதுக்கீடு என்ற கொள்கையைக் காரணம் காட்டி இந்த வகுப்புகளை நிறுத்தி வைத்திருப்பதுதான் கொடுமை.

குழந்தை யாருக்கு சொந்தம் என்று இரண்டு பெண்களிடையே ஏற்பட்ட மோதலில் குழந்தையை வெட்டி இருவருக்கும் சமமாகப் பிரித்துக் கொடுங்கள் என்று ஒரு பெண் கோரிக்கை வைத்ததாக ஒரு கதை உண்டு.

உண்மையான தாயாக பெற்ற மகளின் மீது பாசம் கொண்டவராக இருந்திருந்தால் இப்படிக் கூறியிருக்க மாட்டார். குழந்தையை இரண்டாக வெட்டி பங்கு போடச் சொன்ன பெண்ணின் மனநிலைக்கும் நடுவண் பா.ஜ.க. ஆட்சியின் இந்த முடிவுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.

அண்ணா பல்கலைக்கழகம் தமிழ்நாட்டின் கல்விச் சொத்து. தமிழ்நாடு அரசால் தமிழ்நாடு மக்களால் கட்டி எழுப்பப்பட்ட மதிப்பு மிக்க நிறுவனம். தமிழகக் கல்வி உரிமையை பறித்துக் கொண்ட பா.ஜ.க. ஆட்சி தமிழ்நாட்டின் சமூக நீதியைக் குழி தோண்டி புதைத்து வருகிறது. ‘நீட்’ தேர்வை திணித்தார்கள்.

மருத்துவப் படிப்பில் அகில இந்திய கோட்டாவுக்கான இடங்களில் பிற்படுத்தப்பட்டோர் உரிமைகளைப் பறித்தார்கள். அண்ணா பல்கலைக் கழகத்தை இரண்டாகப் பிரித்து வெளிநாட்டு மாணவர்கள் படிப்புக்கு கதவு திறந்து விடும் முயற்சிகளை துணைவேந்தர் வழியாக மேற்கொண்டார்கள். தமிழ்நாடு அரசின் எதிர்ப்பு பற்றி கவலைப்படவில்லை.

இப்போது அதே அண்ணா பல்கலைக்கழகத்தில் ‘எம்.டெக்.’ என்ற மேல்பட்டப் படிப்புக்குரிய ‘எம்.டெக் பயோ டெக்னாலஜி’, ‘எம்.டெக். கம்ப்யூடேஷனல் பயோலாஜி’ என்ற இரண்டு பிரிவுகளையும் மூடி விட்டார்கள். இந்த தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகத்தில் தமிழகத்தில் பின்பற்றப்படும்

69 சதவீத இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என்கிறது தமிழக அரசு. ஆனால் மய்ய அரசின் 27 சதவீத இடஒதுக்கீட்டை மட்டுமே பின்பற்றுவோம்; இல்லாவிட்டால் இரண்டு பிரிவு வகுப்புகளையுமே இழுத்து மூடிவிடுவோம் என்ற முடிவுக்கு நடுவண் பா.ஜ.க. ஆட்சி வந்திருப்பது இடஒதுக்கீடு கொள்கையில் ‘மனுவாதி’களுக்கு உள்ள வெறுப்பையும் கசப்பையுமே உணர்த்துகிறது.

இந்த வகுப்புகளில் சேருவதற்கு இரண்டு நுழைவுத் தேர்வுகளை மாணவர்கள் எழுத வேண்டும். ஒன்று பா.ஜ.க. ஆட்சி திணித்த ‘நீட்’ தேர்வு. இதில் தேர்ச்சி பெற்ற பிறகு பையோ டெக்னாலாஜிப் பாடத்தில் கிராட்ஜுவேட் ஆட்டிடியுட் டெஸ்ட் (Graduate attitude Test-B) என்ற தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

இரண்டு தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்று 45 மாணவர்கள் எம்.டெக்கில் சேரக் காத்திருந்தபோது இந்த அதிர்ச்சியான அறிவிப்பால் மாணவர்களும் பெற்றோர்களும் நிலைகுலைந்து நிற்கிறார்கள்.

மத்திய அரசு நிதி உதவி வழங்குகிறது என்ற காரணத்தால் இத்தகைய விபரீத முடிவுகளை எடுத்துக் கொண்டிருக்கிறது. ‘எம்.டெக். பயோ டெக்னாலஜி’ 1985ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டு விட்டது. இதில் படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ரூ.12,000 உதவித் தொகை வழங்கப்படுகிறது. ‘கம்ப்யூடேஷனல் பயோலஜி’ 2014ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

இதற்கு மாதம் ரூ.12,500 உதவித் தொகை வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு வரை டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் ‘பயோ டெக்னாலஜி’க்கான நுழைவுத் தேர்வையும் புதுச்சேரி பல்கலைக்கழகம் கம்ப்யூடேஷனல் பயோலாஜிக்கான நுழைவுத் தேர்வையும் நடத்தி வந்தன.

இவ்வாண்டு உ.பி.யில் பைசாபாத்தில் உள்ள பயோ டெக்னாலஜி மண்டல மய்யத்துக்கு இந்தத் தேர்வுகள் நடத்தும் பொறுப்புகளை மாற்றி வழங்கி புதிய குழப்பங்களை பா.ஜ.க. ஆட்சி உருவாக்கி வகுப்புகளையே மூட வைத்துவிட்டது.

இந்த இரண்டு வகுப்புகளும் மிகவும் மதிப்பு மிக்கவை. அதுவும் கொரானாவுக்குப் பிறகு இந்தப் படிப்புகளுக்கான முக்கியத்துவம் கூடியிருக்கிறது. இந்த நிலையில், “உதவித் தொகை வழங்காவிட்டாலும் பரவாயில்லை; வகுப்புகளை மூடாதீர்கள்; காத்து நிற்கும் மாணவர்கள் வாழ்க்கையை ஓராண்டு காலம் வீணடிக்காதீர்கள்” என்று பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்திருக்கும் செய்திகள் ஏடுகளில் வெளி வந்திருக்கின்றன. இந்த வகுப்புகளை தனியார் கல்லூரிகளில் படிக்க மாணவர்கள் பெரும் தொகையை செலவிட வேண்டியிருக்கும்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் சூரப்பா என்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சார்ந்தவரை ஆளுநர், துணைவேந்தராக்கியதிலிருந்தே குழப்பங்கள் தலைதூக்கி விட்டன. மாநில அரசு அவர் மீது விசாரணை ஆணையம் ஒன்றை நியமித்திருக்கிறது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு எனும் சமூக நீதியைக் குலைத்து சமூக நீதிப் பார்வையில் தமிழகம் கட்டியமைத்த கல்வி அமைப்பையே சீர்குலைக்கும் செயல்பாடுகள் தொடர்ந்து அரங்கேற்றப்பட்டு வருகின்றன. ‘உயர்ஜாதி ஏழை’களுக்கான 10 சதவீத இடஒதுக்கீடு தமிழ்நாட்டில் அமுல்படுத்தப்படவில்லை.

அது மாநில அரசுகளின் விருப்பம் சார்ந்த சட்டம் தான்; கட்டாயப்படுத்த முடியாது. தமிழக ஆளுநர் வழியாகவும் மறைமுக அழுத்தங்கள் தரப்பட்டன. இதனால் ஆத்திரமடைந்த ‘மனுவாத’ பார்ப்பனர்கள் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டையே சீர்குலைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் அண்ணா பல்கலைக்கழகத்தில் இழைக்கப்பட்டுள்ள இந்த அநீதிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு இதைக் கடந்து போக முயற்சிக்காமல் எம்.டெக். வகுப்புகளைத் தொடங்குவதற்கு பா.ஜ.க. ஆட்சிக்கு உரிய அழுத்தம் தர வேண்டும்.

- விடுதலை இராசேந்திரன்