“அங்காடித் தெரு” என்றொரு தமிழ் திரைப்படம், சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்தது. வழக்கமாக, தமிழ் சினிமாவில் திருமணம், பிறந்த நாள் உள்ளிட்ட குடும்ப நிகழ்வுகளுக்காகவும், கதாநாயகிக்கு உடைகள் எடுப்பதற்காகவும் மட்டுமே செல்வதாக ஓரிரு காட்சிகளில் பெரிய பெரிய துணிக்கடைகள் காட்டப்படும். அதிலிருந்து முற்றிலுமாக மாறுபட்டு, சென்னை தி.நகரில் அமைந்திருக்கும் ஒரு மிகப்பெரிய துணிக்கடையும், அதில் பணிபுரியும் பணியாளர்கள், அவர்களது பணிச்சூழல், தங்குமிடம், மற்றும் அதோடு தொடர்புடைய இடங்களிலும் நடைபெறும் நிகழ்வுகளையே மையக்கருவாக்கி முழு திரைப்படமும் படமாக்கப்பட்டிருக்கும். இதில் காட்டப்படும் பணியாளர்களுக்கெதிரான கொடுமைகளின் அளவுகள், இன்னும் பல மடங்கு அதிகமாகவும், வேறு வேறு வடிவங்களிலும், தமிழகத்தின் பெருநகர்புறங்களில் அமைந்துள்ள தனியார் பஞ்சு மற்றும் நூற்பாலைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கெதிராக அன்றாடம் நடத்தப்பட்டு வருகிறது.

நாட்டில் அறுபது கோடி பேர் செல்போன் பயன்படுத்துவது, கடந்த 2007ம் ஆண்டு சண்டிகர் மாநிலத்தை சேர்ந்த ஒரு தனிநபரால், எல்லோரும் விரும்பும் எண் என்பதற்காக, ஒரு குறிப்பிட்ட செல்போன் எண், ரூபாய் ஒன்றரை இலட்சம் கொடுத்து வாங்கப்பட்டது பத்திரிகைகளால் கொண்டாடப்பட்டது போன்ற நிகழ்வுகள், வர்த்தக ரீதியாக நாடு நன்கு வளர்ச்சி பெற்றுவிட்டதற்கு சான்றாக ஆளும் அரசுகளால் தொடர்ந்து சொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறது. தற்போதைய மற்றும் முந்தைய அரசுகளின் தவறான பொருளாதார திட்டமிடுதல்களினால், சமீப காலமாக வேளாண்மை அழிந்து, நகர்மயமாக்குதல் வேகமாக பரவலாக்கப்படுகிறது. இதனால் ஒருபுறம் பொருளாதாரம் ஒரு குறிப்பிட்ட பிரிவினரிடம் மட்டுமே மேலும் மேலும் சேர்ந்து கொண்டிருக்க, அதே வேளையில் பெருவாரியான அடித்தட்டு, ஒடுக்கப்பட்ட மக்கள், முன்னிலும் அதிகமாய் வறுமையை அனுபவித்து வருகிறார்கள். இதன் விளைவாக தனியார் நிறுவங்களிடம் கிடைத்த வேலைக்கு தஞ்சமடைய வேண்டிய நிர்பந்தங்கள் நிலவி வருகிறது.

 கடந்த 2006ல் நடந்த சட்டமன்ற தேர்தலின்போது தமிழ்நாட்டில் இருந்த ஆறு மாநகராட்சிகளின் எண்ணிக்கை, தொழில்மயமாக்கம் என்ற பெயரில் தற்போது மேலும் நான்கு கூடி, பத்தாக உயர்த்தப்பட்டுள்ளது. இதே தமிழ்நாட்டில்தான், இன்றளவும் கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு வாங்க வேண்டிய அளவுக்கு வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்ந்து கொண்டிருக்கும் கிராமப்புற குடும்பங்களைச் சேர்ந்த, பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்து பெண்கள், தங்கள் பகுதியைச் சேர்ந்த முகவர்களின் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளால், நகர்புறங்களில் தனியார் வசமுள்ள பஞ்சு மற்றும் நூற்பாலைகளுக்கு குறைந்த கூலிக்கு வேலைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.

வேளாண்மை நிலங்கள் அழிப்பு, அத்தியாவசியப் பொருட்களுக்கு அதீத விலையேற்றம், வேலையில்லாத் திண்டாட்டத்தின் அளவு முன்பை விட ஒப்பிடயியலா வகையில் அதிகரிப்பு, தனியார் மயமாக்கல் சட்ட அங்கீகாரம் பெற்று உறுதி செய்யப்பட்டது, அரசு பணிகளில் பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான பணி நியமனங்களில் இடஒதுக்கீடு முழுமையாக பின்பற்றப்படாமை, பெருவாரியான நிலங்கள் ‘வளர்ச்சிக்கான பாதை’ என்ற பெயரில் மத்திய, மாநில அரசுகளால் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டது மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வரம்பற்ற சலுகைகள் என்பது போன்ற பல்வேறு காரணங்களால் பெருநகர் பகுதிகளில் புதிது புதிதாக அமைக்கப்பட்டுள்ள தனியார் நிறுவனங்களில், குழந்தைகளும், வளரிளம் பருவத்தைச் சேர்ந்த பெண்களும் மிகுதியாக சேர்க்கப்படுகின்றனர்.

வரதட்சணை ஒழிப்பு சட்டம், ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னரே கடுமையாக இயற்றப்பட்ட போதிலும், இன்றளவும் அதனை தடுத்து நிறுத்த முடியாத நிலையே நீடிக்கிறது என்பது மறுக்க இயலாத உண்மை.  இச்சூழலை பயன்படுத்திக்கொண்ட, தனியார் பஞ்சாலை மற்றும் நூல் உற்பத்தி நிறுவனங்கள், கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பாக குழந்தைகளையும், திருமணமாகாத இளம்பெண்களையும் மையப்படுத்தி “திருமகள் திருமணத் திட்டம்”, ‘சுமங்கலி திட்டம்’ என்பது போன்ற பெயர்களில் புதிய திட்டங்களை அறிமுகம் செய்ய ஆரம்பித்தன.

வருடம் முழுவதும் வேலை, குளிர்சாதன வசதியுடன் கூடிய தங்குமிடம் மெத்தை தலையணையுடன் இலவசம், குறைந்த கட்டணத்தில் மூன்று வேளை சத்தான உணவு, வாரம் இருமுறை முட்டை, மாதம் ஒருநாள் அசைவ உணவு, பண்டிகை கால போனஸ் தொகைகள், வருடத்தில் ஏழு நாட்கள் அரசு விடுமுறை, ஆறு மாதத்திற்கு ஒருமுறை சொந்த ஊர் சென்றுவர போக்குவரத்து செலவினை நிறுவனமே ஏற்கும், பயிற்சிபெற்ற பாதுகாவலரின் கண்காணிப்பு, ஓய்வு நேரங்களில் தொலைக்காட்சி, விளையாட்டு சாதனங்கள், யோகா, தொலைபேசி வசதிகள், ஆண்டுக்கு இருமுறை புத்தாடைகள், ஒப்பந்த காலமான மூன்று ஆண்டு முடிவில் ருபாய்.30,000 முதல் 40,000 வரையிலான ரொக்க தொகை என்பது போன்ற கவர்ச்சிகரமான திட்டங்கள் அடங்கிய துண்டறிக்கைகள் மூலம் கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த, தனியார் பஞ்சாலை மற்றும் நூற்பாலை நிறுவனங்களால், முகவர்கள் கிராமம் கிராமமாக ஏற்பாடு செய்யப்பட்டார்கள்.  எல்லாவற்றுக்கும் மேலாக, இவ்வளவு வசதிகளுடன் மூன்றாண்டு முடிவில் தங்கள் பெண்குழந்தைக்கு திருமணம் செய்துகொடுக்கவும், வரதட்சணை கொடுக்கவும் மொத்தமாக ஒரு பெரும்தொகை கிடைக்கிறதே என்ற ஆவலுடனும், சமூக நிர்பந்ததினாலும் கிராமப்புறத்தைச் சேர்ந்த ஏழை, எளிய பெற்றோர்கள், தங்களுடைய வளரிளம் பருவத்திலுள்ள பெண் குழந்தைகளை நூற்பாலைகளுக்கும், பஞ்சாலைகளுக்கும் வேலைக்கு அனுப்பத் துவங்கினார்கள்.

இந்திய அரசியலமைப்பு சாசனம், பதினான்கு வயது வரையிலும் உள்ள ஆண், பெண் அனைவரும் குழந்தைகளே என்று கூறினாலும், இந்திய அரசால் கையொப்பமிட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் உரிமைப் பிரகடனம், 1989, “18 வயதுக்குக் குறைவான அனைவரும் குழந்தைகளே” என்று தெளிவாகக் கூறுகிறது.  ஆனால் தனியார் நூற்பாலை மற்றும் பஞ்சாலை நிறுவனங்களில், பன்னிரெண்டு வயதிலிருந்து இருபது வயதுக்குட்பட்ட பெண்களே வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர். பணிக்கு அமர்த்தப்படும் ஒப்பந்த காலமான மூன்றாண்டு முழுவதும் அனைவரும் ‘தொழிற்பழகுநர்’களாகவே கருதபடுகின்றார்கள். மேலும் தொழிலாளர் நல சட்டங்களில் சொல்லப்பட்டுள்ள விகிதங்களில் தொழிற்பழகுநர்கள், தற்காலிக மற்றும் நிரந்தர பணியாளர்கள் பணியமர்த்தப்படுவதில்லை.

சுமங்கலி திட்டங்கள் குறித்து, அரசுசாரா அமைப்புகள். மனித உரிமை குழுக்கள், பொதுநல அமைப்புகள் சென்னை, கோயம்புத்தூர், மதுரை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இத்திட்டத்தினால் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிப்புக்குள்ளாக்கப்பட்ட பெண் குழந்தைகள், அவர்களது பெற்றோர்கள், தனியார் நிறுவன உரிமையாளர்கள், அவர்களது பிரதிநிதிகள் போன்றவர்களை உள்ளடக்கி நடத்திய “பொது விசாரணைகள்” மூலமாக, இத்திட்டத்தின் வாயிலாக நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள், சித்திரவதைகள் தொடர்பான பல்வேறு சட்டமீறல் நிகழ்வுகள் வெளிஉலகுக்குத் தெரியவந்தது.

தினமும் பன்னிரெண்டு மணி நேரத்திற்கும் கூடுதலாக வேலை வாங்கப்படுதல், அதிக வேலைபளு, ‘தொழிற்பழகுநர்’ என்ற பெயரில், அந்த நிறுவனத்தின் அத்தியாவசியமான, அடிப்படை பணிகள் அனைத்தையும் செய்ய வைத்தல், நிர்வாக அதிகாரிகள் மற்றும் ஆண் பொறுப்பாளர்களால், பெண்குழந்தைகள் பாலியல் ரீதியான சித்திரவதைகள், தொந்தரவுகள், சீண்டல்களுக்கு உள்ளாக்கப்படுதல், போனஸ் வழங்காமை, பெற்றோரைப் பார்க்க அனுமதியாமை, உரிய தங்குமிட வசதியின்மை, சுத்தமில்லாத உணவு வழங்கப்படுதல், இரவு நேரங்களிலும் வேலை வாங்கப்படுதல், வார விடுமுறை வழங்காமை, ஒப்பந்த காலமான மூன்றாண்டு முடிவுக்கு வருமுன்பே ஏதேனும் ஒரு காரணம் கூறி பணியாளர்கள் நிறுவனத்தைவிட்டு வெளியே அனுப்பப்படுதல், இதன் காரணமாக, ஒப்பந்த பணம் கொடுக்காமல் தவிர்க்கப்படுவது, பணியாளர்களின் தொலைபேசிகள் கண்காணிக்கப்படுவது, பணி தொடர்பான போதிய பாதுகாப்புக் கவசங்கள் வழங்கப்படாதது உள்ளிட்ட அனேக சித்திரவதைகள், சட்ட மீறல்கள் தொடர்ந்து நடைபெறுவதாக பாதிக்கப்பட்ட பெண்களின் வாக்குமூலங்களின் வாயிலாகப் பதிவுசெய்யப்பட்டது. 

இதுபோன்ற அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டும், மேலும் இது தொடர்பாகக் கிடைத்த பல்வேறு தகவல்களைக் கொண்டும், பிப்ரவரி 2006ல் மதுரை உயர்நீதிமன்றத்தில் சி.ஐ.டி.யு தொழிற்சங்கம், ‘திருமகள் திருமண திட்டம்’ என்ற பெயரில், வளரிளம் பெண்கள், தமிழ்நாட்டின் தனியார் நூற்பாலை மற்றும் பஞ்சாலைகளில் பணிக்கு அமர்த்தப்பட்டு சுரண்டப்படுகின்றனர், இது கட்டாயப்படுத்தி வேலை வாங்குவதற்கு ஒப்பானது’ என்று கூறி வழக்கு தொடர்ந்தது.  இந்த பிரச்சனை தொடர்பாக, உரிய தொழிலாளர் நல அதிகாரிகளிடம் சென்று முறையிடுங்கள் என்று கூறி இந்த வழக்கு முடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு கடந்த 2006ம் ஆண்டில் “எதுவெல்லாம் நூற்பாலை” என்பது உள்ளிட்ட பல்வேறு அரசாணைகளை இயற்றியது.  இதன் தொடர்ச்சியாக 14.02.07 அன்று தொழிற்சாலைகள் தலைமை ஆய்வாளர், சுமங்கலி திட்டம் தொடர்பாக தமிழக அரசுக்கு அனுப்பிய விரிவான அறிக்கையில், “திருமகள் திருமண திட்டம்” என்ற பெயரில் “கேம்ப் கூலி முறை” நூற்பாலைகளில் நடைமுறையில் உள்ளது.  பதினைந்து வயதுக்கு மேற்பட்ட இளம் பெண்கள், அந்த நிறுவனத்தின் மொத்த பணியாளர்களில் 60 முதல் 80 விழுக்காடு வரை “தொழிற்பழகுநர்” என்ற பெயரில் 3 ஆண்டுகால ஒப்பந்தத்தின் கீழ் பணியில் அமர்த்தப்பட்டு, இறுதியில் ரூபாய்.30,000/- முதல் ரூபாய்50,000/- வரையிலும் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.  மொத்தமாகக் கிடைக்கும் அந்த தொகை, அப்பெண்களின் திருமண செலவுக்கு பயன்படுத்தப்படுகிறது.  ஈரோடு, கோயம்புத்தூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய மூன்று மாவட்டங்களில் மொத்தமுள்ள 1371 நூற்பு ஆலைகளில், 406 ஆலைகளில் 38,461 இளம் பெண்கள் சுமங்கலி திட்டதின் கீழ் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளார்கள். இருந்த போதிலும், உடனடியாக இந்த ‘சுமங்கலி திட்ட முறை’யை ஒழித்துவிட முடியாது.  மாறாக, மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கலாம்” என்று பரிந்துரை செய்திருந்தார்.  அந்த பரிந்துரையின் அடிப்படையில் 30.03.07 அன்று மேற்கண்ட மூன்று மாவட்டங்களிலும் தமிழக அரசு அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர்களின் தலைமையில் ஐந்து நபர்கள் அடங்கிய மாவட்ட கண்காணிப்புக் குழுக்களை அமைத்தது.

இதற்கிடையில், மதுரையிலுள்ள சோகோ அறக்கட்டளையின் மேலாண் அறங்காவலர் மகபூப்பாட்சா அவர்கள் 2007 மார்ச் மாதம் இறுதியில், சுமங்கலி திட்டத்தின் மூலமான மனித உரிமை மீறல்கள் குறித்து விரிவான புகார் ஒன்றை, தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு அனுப்பியதன் காரணமாக ஆணையம், தமிழ்நாடு அரசுக்கு சுமங்கலி திட்டம் தொடர்பான அறிக்கையை நான்கு வார காலத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆணையிட்டது.

இதனைத் தொடர்ந்து 2007 ஜூன் மாதத்தில், தமிழகத்தில் சுமங்கலி திட்டம் அமலில் உள்ள பதினேழு மாவட்டங்களில், ‘எந்தெந்த நூற்பாலைகளில் இளம்பெண்கள், தொழிற்பழகுநர்களாக பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளார்கள் என்பது குறித்தும், அவர்களது பணிசூழல் குறித்தும், இதுபோல இளம்பெண்கள் சுரண்டப்படுவதிலிருந்து தடுக்கப்படுவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிந்துரை செய்வது’ போன்ற நோக்கங்களுக்காக, மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டது.

இவ்விதமாக தனியார் நூற்பாலை மற்றும் பஞ்சாலை நிறுவனங்களில், சுமங்கலி திட்டத்தின்படியான ஒப்பந்த காலமான மூன்றாண்டுகளும், பணியாளர்கள் அனைவரும், ‘தொழிற்பழகுநர்’களாக வைக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், கடந்த 2008ம் ஆண்டில் ‘தொழிலக வேலைவாய்ப்பு (நிலை ஆணைகள்) சட்டம்,1946’ல் தொழிற்பழகுநராக ஆறு மாதங்களுக்கும் கூடுதலாக எவரும் வைக்கப்படக்கூடாது என தமிழகஅரசால் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இத்திட்டம் தொடர்பாக, மாநிலத்தின் பிரதான எதிர்கட்சிகள், தொழிற்சங்கங்கள், மனித உரிமை அமைப்புகள் போன்றவைகள் தொடர்ந்து தலையீடு செய்தன. இதுபோன்ற காரணங்களால் தமிழ்நாடு அரசு 16.05.08 அன்று, நூற்பாலைகளில் தொழிற்பழகுநர்களாக பணிபுரியும் இளம் பெண்களுக்கு, தினக்கூலியாக ரூ.110/- வழங்கவேண்டும் என்று அறிவிக்கை பிறப்பித்ததோடு மட்டுமின்றி 07.11.08ல் இந்த அறிவிக்கையானது தமிழக அரசால் உறுதி செய்யவும்பட்டது.

‘தமிழக அரசின் இந்த அறிவிக்கையானது, அரசியலமைப்பு சாசனத்திற்கும், தொழிலாளர் நல சட்டங்களுக்கும் புறம்பானது. மேலும் இத்திட்டத்தின் மூலமாக, திருமணமாகாத கிராமப்புற ஏழை எளிய பெண்கள் பலரின் வாழ்க்கை மேம்பாடு அடைந்துள்ளது.  எனவே, இந்த அறிவிக்கையானது இரத்து செய்யப்பட வேண்டும்’ என்று ஐந்துக்கும் மேற்பட்ட தனியார் நூற்பாலை சங்கங்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் 2009ல் வழக்கு தொடர்ந்தன.  ‘இந்த அறிவிக்கையானது, சட்டப்படி செல்லத்தக்கதே. எனவே, நூற்பாலைகள் இந்த அறிவிக்கையின்படி நாளொன்றுக்கு ரூ.110/- வீதம் அனைத்து தொழிற்பழகுநர்களுக்கும் வழங்க வேண்டும் என்று அந்த வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பளித்தது’. இதனை எதிர்த்து நூற்பாலைகள் மேல்முறையீடு செய்தன.  மேல்முறையீட்டில், ‘தொழிற்பழகுநர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தைக் கொடுக்கவில்லையெனில், நூற்பாலை நிறுவனங்களுக்கு பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவவதற்க்கும், நிறுவனத்தை நடத்துவதை நியாயபடுத்துவதற்க்கும் எந்தவிதமான உரிமையும் இல்லை’ என்று கூறியதோடு மட்டுமின்றி, ஏற்கனவே தனி நீதிபதியால் வழங்கப்பட்ட தீர்ப்பு உறுதியும் செய்யப்பட்டது.

சுமங்கலி திட்டமானது இன்றளவும் தமிழகத்தின் நூற்பாலைகளில் அமலில் உள்ளது. 2010ம் ஆண்டில் மட்டும், இத்திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டத்தில் பணிபுரிந்த, பத்து பெண்கள் தற்கொலை செய்துள்ளார்கள். இது போன்ற வழக்குகள் கூடுதல் கவனத்துடன் விசாரிக்கப்பட வேண்டியது அவசியமானது. இத்திட்டத்தின் வாயிலாக பாதிக்கப்பட்ட பெண்களின் வாக்குமூலங்களுக்கும், அரசு நியமித்த மாவட்ட கண்காணிப்புக் குழுக்களின் அறிக்கைகளுக்கும் நேரெதிரான வேறுபாடுகள் உள்ளன. இதன் காரணமாக கண்காணிப்புக் குழுக்களின் செயல்பாடுகள் ஐயத்திற்குள்ளாக்கப்படுவது இயல்பானதே. இத்திட்டத்தில் அரசு தீவிர கவனம் செலுத்தி, சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடக்காமல், விதிமுறைகளை மீறிடும் நூற்பாலைகள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது மட்டுமே, இந்த நாட்டின் குடிமக்களான, இத்திட்டத்தின் கீழ் பணிபுரியும் குழந்தைகளுக்கும், வளரிளம் பெண்களுக்கும் அவர்களது உரிமை உத்தரவாதபடுத்தப்படும்.

கொத்தடிமை முறைக்கு ஒத்த, மூன்றாண்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமைந்த இந்த சுமங்கலி திட்டமானது முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டியதே என்ற தொழிற்சங்கவாதிகள், மனித உரிமை ஆர்வலர்களது எதிர்பார்ப்பு, சட்டப்படியும், இயற்கை நீதியின்படியும் நியாயமானதே. ஆனால், அதற்கு முன்பாக இத்திட்டத்தின் கீழ் பணிபுரிபவர்களுக்கும் மற்றும் ஏழை எளிய வளரிளம் பெண்களுக்கும், மத்திய, மாநில அரசுகள் பயனுள்ள, சிறப்பான தொழிற்பயிற்சிகள் அளித்து, அவர்களை சுயமாக சொந்தகாலில் நிற்கவைக்க வேண்டியது, மக்கள் நல அரசுகளின் அடிப்படையான மற்றும் தவிர்க்கயியலாததுமான கடமையாகும்.

Pin It