kolathur mani copy‘பெரியாரும்-மார்க்சியமும்’ தலைப்பில் கொளத்தூர் மணி உரை (8)

குமரி மாவட்டம் குழித்துறையில் ஜன.24, 2021 அன்று ‘பெரியாரும் மார்க்சியமும்’ என்ற தலைப்பில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிகழ்த்திய உரை இது.

புதியதான ஒரு முதலாளித்துவத்தை பெரியார் சொன்னார். இங்கு மூலதனம் போடும் முதலாளித் துவத்தைத் தான் பேசுகிறீர்களே தவிர, பிறவி முதலாளிகள் என்று ஒரு வர்க்கம் இருக்கிறதே, அதைப் பற்றி நீங்கள் பேசுவதே இல்லை என்ற ஒரு விமர்சனம் கம்யூனிஸ்ட்கள் மீது வைத்தார்.

அவனாவது கொஞ்சம் காசாவது போட்டிருக்கிறான், இந்த பிறவி முதலாளிகளுக்கு ஒன்றுமே கிடையாது. பிறப்பைத் தவிர, இவனுக்கு எந்த மூலதனமும் கிடையாது. பிறப்பை மட்டும் வைத்துக் கொண்டு எல்லாவற்றையும் அனுபவித்துக் கொண்டு இருக்கிறான். இந்த நாட்டில், உழைப்பில் இருந்து கிடைக்கும் உபரிகளை, யார் அனுபவிக்கிறார் களென்றுதானே நாம் முடிவு பண்ணவேண்டும். அது முதலாளிகளுக்கு போவதா, தொழிலாளிகள் பங்கிட்டுக் கொள்வதா, பாட்டாளி வர்க்கத்துக்கு சேருவதா, என்பதைப் பற்றி யோசிப்பது தானே முக்கியம்.

ஆனால், உபரிகளை எந்த தடையும் இல்லாமல், எந்த கொள்முதலும் இல்லாமல் அனுபவிக்கிற பிறவி முதலாளிகளைப் பற்றி பேச மாட்டேன் என்கிறீர்கள். பிறவி முதலாளிகள் நடமாடுகிறார்கள். நடமாடாத கல் முதலாளிகள் வேறு இருக்கிறார்கள் இந்த நாட்டில். இந்த கல் முதலாளிகளுக்கு ஏராளமாக காசு போய் கொண்டிருக்கிறது. அதையும் யாரும் கருதிப் பார்ப்பதில்லை.

இந்த இரண்டு முதலாளிகளை விட்டு விட்டு, ஒரே முதலாளிகளைப் பற்றியே நீங்கள் கம்யூனிஸ்ட்கள் பேசிக் கொண்டே இருக்கிறீர்கள். அவன் தனியாக நின்றுக் கொண்டிருப்பான். இந்த இரண்டு முதலாளிகள் அவனை காப்பாற்றிக் கொண்டே இருக்கிறார்கள். இதை நீங்கள் ஏன் கருத்தில் கொள்வ தில்லை என்பதற்கு ஒரு வேறுபாடு சொல்கிறார் பெரியார்.

உண்மையான முதலாளியாக இருந்தால், அவன் லாபத்தில் திரண்ட மூலதனத்தை, மீண்டும் மறு முதலீடு செய்வான். தொழிலில் தான் முதலீடு செய்வான். ஆனால், நம்மூரில் என்ன பண்ணுகிறான், கோவில் கட்டுவான். நம்மூரில் உள்ள முகேஷ் அம்பானி கட்டியிருப்பதைப் போல உலகத்தில் எந்தப் பணக்காரனும் இவ்வளவு செலவு செய்து வீடு கட்டியிருக்க மாட்டான்.

அவன் வீடாவது கட்டியிருக்கிறான். இங்கேயுள்ள எல்லா முதலாளிகளும் கோவிலைக் கட்டிவிடுவான். எல்லா நிறுவனங் களிலும் கோவில் கட்டப்படும். அதற்கு தனியாக டிக்கட் போட்டு வசூல் செய்வது வேறு. ஆனால், அதை எல்லா முதலாளிகளும் கட்டி விடுகிறார்கள்.

நீ தொழிலில் மறுமுதலீடு செய்யாமல், கோவிலில் ஏன் முதலீடு செய்கிறான்? அது அவனுக்கு தெரியும், இது அதைவிட பாதுகாப்பு என்று. அதைத் தான் பெரியார் குறிப்பிடுகிறார், இதைச் சொல்லியே குறிப்பிடுகிறார் அவர். மற்ற நாட்டு முதலாளிகளெல்லாம், வருகிற லாபத்தை தொழிலில் முதலீடு செய்கிறான்.

இவன் மட்டும் ஏன் கோவிலில் போடுகிறான், என்று கேள்வி கேட்கிறார். இது அவனைப் பாதுகாக்கிற கருவி என்று அவன் கருதுகிறான். தன்னை அது போராட் டத்திலிருந்து புரட்சியிலிருந்து காப்பாற்றும் என்று நம்புகிறான். அதன் மீது பார்வை செலுத்தாமல் இருக்கிறீர்களே என்பதால் ஏற்பட்ட சில குளறுபடிகளை நான் உங்களிடம் சொல்ல வேண்டும்.

எப்படிப்பட்ட வகையில், ஆரம்பத்தில் மூன்றாம் அகிலத்துக்குக் கொடுத்த அறிக்கையில், சாதியைப் பற்றி, சாதி பிரச்சனையைப் பற்றி, சொல்லியாயிற்று. மத மூட நம்பிக்கையைப் பற்றி எல்லாம் அறிக்கை கொடுத்து இருக்கிறார்கள், ஆனால் இங்கிருக்கிற கம்யூனிஸ்ட்கள். கட்சி கட்டப்படுகிறது. கட்சியின் தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எப்படி இருந்தார்கள்?

சசி ஜோஷி என்பவர், Struggle for Hegemony in India  என்கிற ஒரு புத்தகத்தில் தான் அவர் சொல்கிறார். இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி துவக்க காலத்தவர் ஒருவர், ஜோக்லக்கர், அவரை 1927ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் நாள் சென்னையில் நடந்த அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு கூட்டத்தில்தான் பிராமண சங்கத்திலிருந்து நீங்கள் விலக வேண்டும் என்று கட்சி சொல்லுகிறது.

அதற்கப்புறம் தான் பிராமண சபா உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார். அதற்கப் புறம் 1928-ல் பம்பாயில் ஒரு வேலை நிறுத்தம் நடக்கிறது. அப் பொழுது கம்யூனிஸ்ட்களின் இன்னொரு தலைவர் மிராஜ்கர், அவர் அடிக்கடி போராட் டங்களில் கலந்து கொண்டவர். ஜோக்லக்கர் கூட நிறைய போராட்டங்கள் நடத்தியவர்தான்.

அவர் சொல்கிறார் பம்பாய் நகராட்சியில் நடந்த ஒரு போராட்டத்தில், நீங்கள் கவலைப்படாதீர்கள், சோறு குழம்பு எல்லாம் பார்ப்பன சமையல்காரரை வைத்து தான் சமையல் செய்யப்படும்; எனவே நீங்கள் எல்லாம் சாப்பிடலாம் என்று முதலில் அறிவிக்கிறார். அதற்கு இந்த ஜோக்லக்கர் உடனே எதிர்ப்பு தெரிவிக்கிறார். இது 1928இல் நடக்கிறது. அவர் சொல்கிறார்.

இல்லை, இல்லை, நான் பார்ப்பனர் களிலேயே உயர்ந்த ஜாதிப் பிரிவைச் சேர்ந்தவன்; நான் பார்ப்பான் சமைத்தால் கூட சாப்பிடமாட்டேன், என் பிரிவு பார்ப்பனர் சமைத்ததை மட்டும்தான் சாப்பிடுவேன். எனவே எனக்கு அரிசியைக் கொடுத்து விடுங்கள் நான் சமைத்துக் கொள்ளுகிறேன்.

இப்படி இந்த நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியில் தலைவராக இருந்தவர், போராட்டங்களை தலைமை தாங்கி நடத்தியிருக்கிறார் என்பதற்காகச் சொல்லுகிறேன். இப்பொழுது இவர்கள் கையில் கட்சி போய் தான் இன்றைக்கு வரைக்கும், இப்பொழுது தான் இதைப்பற்றி பேசுமளவிற்கு ஒரு சூழல் இருக்கிறது என்பதற்காகச் சொல்லுகிறேன்.

இன்னொரு கம்யூனிஸ்ட் கட்சி தலைவர். 2006-ல் நடந்த நிகழ்ச்சி ஒன்றைச் சொல்ல வேண்டும். மேற்கு வங்கத்தில் சுபாஷ் சக்ரவர்த்தி என்ற போக்குவரத்துத் துறை அமைச்சர் ஒருவர் இருந்தார். பத்திரிக்கையில் ஒரு செய்தி வருகிறது. 14.9.2006 அன்று பீர்பூம் மாவட்டம், காளி கோவிலில் சென்று காணிக்கை 501 ரூபாய் செலுத்தி மலர் தூவி, மந்திரம் ஓதி வழிபட்டார்.

இந்த செய்தி வந்தவுடன் ஜோதிபாசு, முன்னாள் முதலமைச்சர், அதைப் பற்றி விமர்சிக்கிறார். என்னய்யா இது, அக்கிரமாக இருக்கிறது, என்ன இப்படி பண்ணுகிறீர்கள், ஒரு கம்யூனிஸ்ட் பண்ணுகிற வேலையா இது என்று சொல்லி யிருக்கிறார் ஒரு பேட்டியில். கம்யூனிஸ்ட் செய்கிற வேலையில்லை என்று சொல்லுகிறார். அவ்வளவு தான்.

அதற்கு அடுத்த நாள் இவர் பத்திரிக்கை யாளர்களிடம் பதில் கூறுகிறார். நான் முதலில் இந்து மற்றும் ஒரு பிராமணன். அதற்கு அடுத்துதான் கம்யூனிஸ்ட் என்று விளக்கம் தருகிறார்.

அதற்கு, மேற்கு வங்க மாநில கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் பீமன் போஸ். மனிதர் என்கிற முறையில் அனைவருக்கும் பலவீனங்கள் உண்டு என்றும், கோவிலுக்கு செல்வோர்கள் மீது நடவடிக்கை எடுக்க கட்சியின் விதிகள் இல்லை என்று சொல்லிவிடுகிறார். அதற்கு ஜோதிபாசு விமரிசனம் செய்கிறார்.

அதற்கப் புறம், பழம் பெரும் தலைவர் வினய் கோனர், சுபாஷ் சக்ரவர்த்தி சொன்னது போல, தாராள கொள்கையுள்ள ஒரு இந்து கூட சொல்ல மாட்டான் என்கிறார்.

ஜோதிபாசு கேட்டார். யாரைப் பார்த்து அவர் தொழுதார். காளி இருக்கிறாளா? இல்லாத ஒன்றுக்கு பூசை செய்வது எப்படி? மனித இனத்தை அமைச்சர் வணங்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். நீ போய் கல்லைப் பார்த்து கும்பிடுகிறாய், மனிதனைப் பார்த்து வணங்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

அது பற்றி கருத்து கூறிய சுபாஷ் சக்ரவர்த்தி, நானும் ஒரு இந்து, பிராமண வகுப்பைச் சேர்ந்தவன், மரபுகளை என்னால் மீற முடியாது. (இது 2006-ல். இதற்கு முன் நான் சொன்னது 1928இல்). மாஸ்கோவிலுள்ள லெனின் நினைவிடத்திற்கு செல்லும் யாராகயிருந்தா லும் முஷ்டியை உயர்த்த வேண்டிய கட்டாயம் இருக்கிறதே ஏன்? அதுபோலவே நானும் கும்பிடுகிறேன் என்று அறிக்கையில் கேட்கிறார்.

நமது நடவடிக்கைகளை நம்மைச் சுற்றியுள்ள சூழல் தான் தீர்மானிக்கிறது. ஜோதிபாசு என் கடவுள். அவர் கடவுள் இல்லை என்கிறார். ஆனால் அவர் ஜோதிபாசு என் கடவுள். அவர் கருத்தை விமரிசிக்க நான் விரும்பவில்லை என்று கூறி விவாதத்தை முடித்துக் கொள்கிறார்..      

ஹிரேன் முகர்ஜியை வியக்க வைத்த பெரியார் புரட்சி

ஹிரேன் முகர்ஜி அவர்கள் ஒரு முறை ஈவிகே சம்பத்தைப் பார்த்து சொன்னதாக சொல்லுவார்கள். ஹிரேன் முகர்ஜி ஒரு பெரிய பார்லிமெண்டேரியன். அவர் ஈவிகே சம்பத் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது சொன்னாராம், தமிழ் நாட்டுக்கு வந்து ஒரு திருமணத்தைப் பார்த்துவிட்டு போயிருக்கிறார். அதெப்படி உங்களால் பார்ப்பான் இல்லாமல் திருமணம் நடத்த முடிகிறது, என்று அவர் கேட்டாராம். அதற்கு, ரொம்ப நாளாக நடந்துக் கொண்டிருக்கிறது.

1927-லிருந்து நடந்துக் கொண்டிருக்கிறது என்று அவர் சொல்லியிருக்கிறார். உங்க சித்தப்பா பெரிய ஆள் தானப்பா. பார்ப்பானை விட்டுவிட்டு கல்யாணம் நடத்துகிறாரல்லவா? நமக்கு மிகச் சாதாரணமாக இங்கு தெரிகிறது. ஆனால் அவர்களுக்கு, பெரிய புரட்சியாளர்களுக்கு, கூட நாம் செய்வது பெரிய புரட்சியாகத் தெரிகிறது.

இந்த பிரச்சனை எப்பொழுது வந்தது என்றால், சோம்நாத் சட்டர்ஜி-யின் பேரனுடைய பூணூல் கல்யாணத்திற்கு அழைப்பு கொடுக்கிறார் எல்லா எம்.பி.க்களுக்கும். அதை திமுக எம்.பி ஒரு பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் சொல்கிறார்.

இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால், கிண்டலுக்காக சொல்லவில்லை, அங்கு கூட அப்படி நடக்கிற சூழலில் நாம் இங்கு சடங்கு களில்லாமல் நிகழ்ச்சிகள் நடத்துகிறோம் என்பதற்காகச் சொல்கிறேன். இது பத்திரிகை செய்தியாக வந்த பிறகு அது ஒரு பிரச்சனையானது. அப்படி தான் அங்கே சூழல் இருக்கிறது.

இங்கு ஏ.எஸ்.கே ஐயங்கார், ஏ.எஸ்.கே ஆகி விட்டார். ஆனால், அங்கு அப்படியெல்லாம் எந்த மாற்றமும் நிகழவில்லை என்பதற்காகச் சொல்லு கிறேன். ஏனென்றால், அதைப் பற்றி நாம் சிந்திக்க தவறிவிட்டது என்பது, அவர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. பரவாயில்லை, நம்முடைய ஆதிக்கத்திற்கு என்றும் ஆபத்து வராது என்று மகிழ்கிறார்கள்.

சி.பி.இராமசாமி ஐயர் ஒருமுறை சொன்னார், ரொம்ப காலத்துக்கு முன்னால். அவர் வைஸ்ராய் கவுன்சிலில் உறுப்பினராக இருந்தவர். அதற்கு பின்னால் அவர் என்னென்னவோ பதவிகளி ளெல்லாம் இருந்துவிட்டு வந்தவர். கம்யூனிசம் வருவதைத் தடுத்தாகவேண்டும். காந்தி சொன்னார், உப்பு சத்தியாகிரகம் எதற்கு நடக்கிறது என்றால், இதை மட்டும் நான் செய்யாமல் இருந்திருந்தால், கம்யூனிசம் வந்திருக்கும் என்றார்.

அதற்குத் தான் ஒரு போராட்டம் மக்களெல்லாம் ஜெயிலுக்கு அனுப்பியது கம்யூனிசம் வராமல் இருப்பதற்காக. அதற்கு சி.பி.இராமசாமி ஐயர் உடனே பதில் சொன்னாராம், இந்து மதம் இங்கே இருக்கிறவரை, அரையடி கல் சிலை சாமி இருக்கிறவரைக்கும், இங்கே கம்யூனிசம் வந்துவிடாது.

எந்த அளவிற்கு அவர்களுக்குப் புரிந்து இருக்கிறது என்பதைப் பாருங்கள். பார்ப்பனருக்கு நன்றாக புரிந்திருக்கிறது. நாம் இதை வைத்துக் கொண்டு இருக்கிறவரை, நம்மை எதுவும் ஒன்றும் செய்துவிட முடியாது என்று அவனுக்குத் தெரியும். நாம் புரிந்துக் கொள்ள காலம் தள்ளிப்போனது என்பது தான் இப்பொழுது உள்ள சிக்கலாக

நாம் பேசிக் கொண்டிருக்க வேண்டியதாக இருக்கிறது.

(தொடரும்)

- கொளத்தூர் மணி