"ஏண்டா தம்பி, மலம் கழிக்கும்போது வெள்ளரிக்காய் தின்கிறாயே" என்று ஒரு பெரியவர் கேட்டதற்கு, "அது பற்றி உனக்கு என்ன? நான் இப்படியும் சாப்பிடுவேன்; அதில் தொட்டுக் கொண்டும் சாப்பிடுவேன்" என்று வீரத்துடன் பதிலளித்தானாம்! வீரமணியின் 'விடுதலை' ஏடு அந்த நிலைக்கு வந்துவிட்டது. 'தினமணி', 'தினமலர்' போன்ற பார்ப்பன ஏடுகள் பெரியாருக்கு எதிராக எழுதும்போதுதான் பெரியாரிய ஏடுகள் சீறி எழுந்து பதிலடி தருவது வழக்கம். இப்போது 'விடுதலை' ஏடு பெரியாருக்கு ஆதரவாக எழுதியதற்காக சீறிப் பாய்கிறது. பெரியார் நூல்களை நாட்டுடைமையாக்க வேண்டும் என்று 'தினமணி' எழுதியிருப்பது - அதன் பார்ப்பன விஷமத்தைக் காட்டுகிறது என்கிறார், ஆஸ்தானப் புலவர் 'மின்சாரம்!'

'தினமணி'யின் கட்டுரையை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது' என்று கட்டுரையைத் தொடங்கியவர் முடிக்கும் போது, "இவை எல்லாம் திராவிடர் கழகத்துக்கு அத்துப்படியானவையே என்பதை இலேசான புன்னகையோடு இந்த அக்கப்போர்களை நிராகரிக்கிறோம்" என்று முக்கால் பக்கம் மாங்கு மாங்கு என்று எழுதி நிரப்பியப் பிறகு நிராகரிக்கும் முடிவுக்கு வருகிறார்.

அவர்கள் லேசான புன்னகையை தாராளமாக சிந்தட்டும். ஆனால், "பெரியார் நூல்களை பரப்பாமல் தடுப்பதற்கு தி.க. கடுமையாக களத்தில் இறங்கிப் போராடி வருகிறது. அம்பேத்கரின் ராமன் - கிருஷ்ணன் புதிர் நூலை அரசு வெளியிடக்கூடாது என்று மகாராஷ்டிராவில் - பா.ஜ.க., பெரும் கலவரத்தில் இறங்கியது. இங்கே, பெரியாருக்கு சொந்தம் கொண்டாடும் கட்சியே, அதைப் போன்ற பெரியார் நூல்களையெல்லாம், அரசு நாட்டுடைமையாக்க அனுமதிக்க மாட்டோம். ரத்தம் சிந்தி தடுப்போம். தமிழ்நாட்டில் எவன் வெளியிடுவான் பெரியார் நூல்களை? பார்த்து விடுகிறோம் ஒரு கை; என்று மீசையை முறுக்கிக் கொண்டு கிளம்பி விட்டது. அப்பாடா! இனி நமக்கு தமிழ்நாட்டில் வேலையே இருக்காது போலிருக்கே" என்று லேசாகப் புன்னகைக்கும் புன்னகை நாயர்களைப் பார்த்து - பா.ஜ.க. பரிவாரங்கள் வாய்விட்டு சிரித்து - கும்மாளம் போடும்.

'சிரியுங்கள்; சிரியுங்கள்; நீங்கள் என்னதான் சிரித்தாலும் - எங்களின் பெரியார் நூல்களை முடக்கும் பணியிலிருந்து திசை திருப்பவே முடியாது. நாங்கள் அடையாறு ஆலமரமாக நிற்கும் தமிழர் தலைவரின் நிழலில் வந்தவர்கள்!' என்று அப்போதும் மின்சாரங்கள் பேனாவைத் தூக்கிக் கொண்டு வந்து விடுவார்கள்!

"ராமனை செருப்பாலடிக்க வேண்டும்; சூத்திரன் என்று சொல்லும் குழவிக்கல் சாமியை குப்புறத் தள்ளி துணி துவைக்கவேண்டும்" என்ற பெரியார் கருத்தை எல்லாம் அரசு வெளியிடுமா - இப்படி ஒரு கேள்வி! ஏன் வெளியிட்டால் என்ன, பிரளயம் அழிந்து விடுமா? அம்பேத்கர் பார்ப்பன எதிர்ப்பு கருத்துகளை மகாராஷ்டிர அரசு வெளியிடவில்லையா? அதுகூட இருக்கட்டும். நாட்டுடைமையாக்குவது என்றால் அரசு மட்டுமே வெளியிட வேண்டும் என்பது அதன் பொருள் அல்ல.

வெளியிட விரும்பும் பதிப்பகத்தார் அனைவரும் வெளியிடலாம் என்பதுதான் அதன் பொருள்! இந்த அரிச்சுவடியைப் புரிந்து கொண்டு, அந்த லேசான புன்னகையை வீசுங்கள் அய்யா! "பார்ப்பன ஜெயலலிதாவிடம் எங்கள் தமிழர் தலைவர்தான் 69 சதவீத இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்தி - வேலை வாங்கினார்" என்று அன்றைக்கு 'மாஞ்சி மாஞ்சி' எழுதிய மின்சாரங்கள், இன்று 'தினமணி' பெரியார் நூல்களை நாட்டுடைமையாக்கு என்று கேட்கும்போது மட்டும், குரலை மாற்றிக் கொள்வது ஏன்? தலைவர் சுருதி பேத புரட்டல்களுக்கு பக்கவாத்தியம் வாசிக்கும் மின்சாரங்கள் பதில் சொல்வார்களா?

பெரியார் திராவிடர் கழகம் சிறு குழுவாம்! "இந்தச் சிறுகுழுவை பாராட்டுவதாலோ, அந்தக் குழுவுக்காக வக்காலத்து வாங்குவதாலோ எவ்வித இழப்பும் பார்ப்பனர்களுக்கு கிடையாது" என்று எழுதுகிறது மின்சாரம்! ஸ்ரீரங்கத்தில் இவர்களே வைத்த பெரியர் சிலையை மதவெறி சக்திகள் உடைத்தபோது - இந்த "சிறு குழு"வின் வலிமையை பார்ப்பனர்கள் நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள்.

அப்போது மூலையில் முக்காடு போட்டு, பதுங்கிக் கொண்ட "தமிழர் தலைவர் தலைமையில் அணி வகுக்கும் பெரும்சேனை"யின் வீரமும், பார்ப்பனர்களுக்கு நன்றாக தெரியும்! இவர்களின் 'பெரும் குழுவும்', பெரும் பட்டாளமும் பார்ப்பனர்களை நடுநடுங்க வைத்துக் கொண்டிருக்கும் "ஜால்ரா" புரட்சிகளை நாடு பார்த்து நகைத்துக் கொண்டுதான் இருக்கிறது.

பெரியார் நூல்கள் நாடு முழுவதும் மக்களிடையே பரவிடக் கூடாது என்பதற்காகவே பெரியார் இயக்கத்தை நடத்தி வரும் "கொள்கைக் குன்றுகள்" நாட்டு மக்கள் மத்தியில் சிரிப்பாய் சிரிப்பதை புரிந்து கொண்டு இந்த "இலசான புன்னகையாளர்கள்" பேனாவை தூக்குவது நல்லது!