‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ - கி.வீரமணியின் கொள்கைப் புரட்டுகளைத் தொடர்ந்து - தோலுரித்து வருகிறது. இதற்கு அவர்களிடமிருந்து வரும் பதில் நீண்ட மவுனம் தான். ‘அமைதி காத்து சாகடிப்பது’ என்ற பார்ப்பன தந்திரத்தையே தனது அணுகு முறையாக வீரமணி பின்பற்றி வருகிறார்.

பெரியார் கொள்கைகளை தங்களின் சந்தர்ப்பவாதத்துக்கேற்ப திருத்திக் கொள்வதற்காகவே இவர்கள் உண்மையான வரலாறுகள் வெளிவந்துவிடக் கூடாது என்பதில் மிகவும் குறியாக செயல்படுகிறார்கள். திறந்த புத்தகமாக எந்த சவாலையும் உறுதியாக எதிர் கொண்டு பெரியார் கருஞ்சட்டைப் படையினரின் தலையை நிமிர வைத்தார். அந்த சிறப்புகளும், பெருமைகளும் இன்று சிறுமையாக்கப்பட்டு சீர்குலைந்து போய் நிற்கின்றன.

பெரியார் தங்களுக்கு மட்டுமே உரிமை என்று சொந்தம் கொண்டாடுகிறவர்கள் பெரியார் ஒவ்வொரு கருஞ்சட்டை தோழனுக்கும் வழங்கி விட்டுச் சென்ற கொள்கைப் பெருமைகளை சிதறடித்து, விவாதங்கள் என்றாலே தலைதெறிக்க ஓடும் நிலைக்கு வீரமணி கொண்டு வந்துவிட்டார்.

தன்னை ஆளும் கட்சிகளின் பக்கவாத்தியக் குழுவாக்கிக் கொண்டு, முதல் பாராட்டு மாலை தன்னுடையதாகவே இருக்க வேண்டும் என்பதிலேயே இரவும் பகலும் கண்துஞ்சாது உன்னிப்பாகக் ‘கடமையாற்றும் காவலராகி’ விட்டார் வீரமணி. அவர் நிலை தான் அப்படியென்றால், அவர் வழியில் நடைபோடும் விடுதலை தலையங்க எழுத்தாளர்களும் அந்த நிலைக்கு வந்து விட்டனர்.

கடந்த அக்.11 ஆம் தேதி ‘விடுதலை’ நாளேட்டில் வெளிவந்த தலையங்கத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது: “ஈரோடு பக்கத்தில் சதுமுகை என்ற ஊரில் பிள்ளையார் சிலைக்கு செருப்பு மாலை போட்டு பழியை திராவிடர் கழகத்தினர் மீது போட்டு, பிறகு காவல்துறை கண்டுபிடித்தது” என்று அத்தலையங்கம் கூறுகிறது.

சதுமுகையில் இந்து முன்னணியினர் அப்படி ஒரு வேலையை செய்து பழியை பெரியார் திராவிடர் கழகத்தினர் மீது போட்டதால், பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் பழனிச்சாமி, அண்ணாத்துரை, தன்ராசு, ரவி, கனகராசு ஆகியோர் கைது செய்யப்பட்டனர் என்பதே உண்மை. பிறகு - பெரியார் திராவிடர் கழகம் எதிர்ப்பு தெரிவித்து போராடிய பிறகு, காவல்துறை மீண்டும் விசாரணை நடத்தி, பிள்ளையார் சிலைக்கு செருப்பு மாலை போட்ட இந்து முன்னணியைச் சேர்ந்த செல்வகுமார், மஞ்சுநாதன் என்ற இருவரையும் கைது செய்து கழகத் தோழர்களை விடுதலை செய்தது.

இந்த செய்தியை வெளியிட்ட ‘இந்து’ நாளேடு திராவிடர் கழகத்தினர் கைது செய்யப்பட்டதாக பொய்யாக செய்தியை வெளியிட்டதைப் பயன்படுத்தி கி.வீரமணி, இந்த ஏட்டின் பொய்ச் செய்தியை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு திராவிடர் கழகத்தினர்மீது இந்து முன்னணியினளர் பழி சுமத்துவதாக நீண்ட அறிக்கையை தனது விடுதலையில் வெளியிட்டுக் கொண்டார்.

இதற்கு ஆதாரமாக ‘இந்து’ ஏட்டின் பொய்ச் செய்தியையும் அப்படியே அந்த அறிக்கையில் படம் பிடித்துப் போட்டுக் கொண்டார். வீரமணியின் இந்த அற்பமான செயலை ‘பெரியார் முழக்கம்’ அப்போதே சுட்டிக்காட்டியது. அது மட்டுமல்ல, ‘திராவிடர் கழகத்தினர்’ கைது செய்யப்பட்டதாக பொய்ச் செய்தி வெளியிட்ட ‘இந்து’ ஏட்டுக்கும் கழகம் கடிதம் எழுதி, திருத்தம் வெளியிட வேண்டும் என்று கோரியது.

காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் பிரதியை அனுப்பினால் தான் திருத்தம் வெளியிடுவோம் என்று ‘இந்து’ பதில் கூற, அதையும் பெரியார் திராவிடர் கழகம் அனுப்பியது. அதன் பிறகு, ‘இந்து’ ஏடு தவறுக்கு வருத்தம் தெரிவித்து திருத்தத்தையும் வெளியிட்டது. (‘இந்து’ ஏடு வெளியிட்ட திருத்தத்தை இங்கே வெளியிட்டிருக்கிறோம்). இவ்வளவுக்கும் பிறகு மீண்டும் பழைய பொய்யையே உறுதி செய்து ‘விடுதலை’யில் தலையங்கம் தீட்டுகிறார்கள்.

பெரியார் திராவிடர் கழகம் ‘குடிஅரசு’ தொகுதிகளை வெளியிட்டால், ‘துரோகிகள்’, ‘புரட்டர்கள்’, ‘திரிபுவாத திம்மன்கள்’, ‘அனாமதேயங்கள்’ என்று வசைபாடும் கி.வீரமணி, பெரியார் திராவிடர் கழகத்தின் செயல்பாடுகளை தங்களது செயல் பாடாக மாற்றி உண்மைகளைத் திரித்து எழுதுவதற்காக வெட்கப்பட வேண்டாமா? கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவமே இப்படி திரிக்கப்படும்போது, கடந்த கால வரலாறுகளை எல்லாம் எவ்வளவு மோசமாக திரித்துக் கொண்டிருப்பார்கள்?

தமிழர்களின் சிந்தனைக்கே விட்டு விடுகிறோம்!

(புரட்டுகள் உடைப்பு தொடரும்)