1970-களின் பிற்பகுதியில் நான் எழுதத் தொடங்கினேன். அப்போதைய என் எழுத்து என்பது கேட்கிற, படிக்கிற பழமொழிகளையும், பொன்மொழிகளையும் கோடு போட்ட நோட்டுகளில் வேறுவேறு வண்ணங்களில் எழுதி வைப்பதாக இருந்தது. ஒர் அறிஞரின் பொன்மொழியை பச்சை வண்ண மை கொண்டு எழுதி அதற்குக் கீழே அவரது பெயரைச் சிவப்பு மை கொண்டு எழுதுவேன். அந்தப் பொன் மொழிக்கான தலைப்பை நீல வண்ணத்தில் எழுதுவேன். பொன் மொழிகளையும் பழமொழிகளையும் தேடிப்பிடிப்பதும், அவற்றையெல்லாம் எழுதிவைக்க விதம் விதமான கோடு போட்ட நோட்டுப் புத்தகங்களைக் கண்டடைவதும், அவற்றை எழுதுவதற்கு வண்ண வண்ண மைகளால் நிரப்பப்பட்ட எழுது கோல்களை அணியப்படுத்தவுமே என் பள்ளிப் பருவ காலத்துப் பகற் பொழுதுகள் பயன்பட்டன. மூன்று வகையான எழுதுகோல்களை ஒவ்வொன்றாகத் திறப்பதும் எழுதுவதும் மூடுவதுமாக நான் இயக்கும் அந்தத் தருணங்களை வேடிக்கைப் பார்ப்பதற்கும் பாராட்டுவதற்கும் கூட என் கிராமத்து மக்கள் என்னைச் சூழ்ந்து நிற்பதுண்டு. 

       ‘பத்து பொன் மொழிகளை நீ எழுத வேண்டும் என்றால் முதலில் கருப்பு எழுத்தில் பத்து தலைப்புகளையும் போதிய இடைவெளிவிட்டு எழுதி அந்தப் பேனாவை மூடிவைத்து விட்டு பிறகு பச்சை எழுத்தில் பொன்மொழிகளை எழுதி அந்தப் பேனாவையும் மூடிவைத்துவிட்டு பிறகு சிவப்பு எழுத்தில் அந்தப் பொன்மொழிகளைச் சொன்ன அறிஞரின் பெயரை எழுது. ஏன் ஒவ்வொரு பொன்மொழிக்கும் மூன்றுமுறை பேனாவைத் திறப்பதும் மூன்று முறை முடுவதுமாக இருக்கிறாய்?” என்று அப்போது என்னைச் சூழ்ந்திருந்தவர்களில் யாரோ ஒருவர் எனக்கு யோசனை சொன்னார். அட இது நமக்குத் தோன்றாமல் போய் விட்டதே என்று அன்றைக்கு நான் அடைந்த வருத்தம் இன்றைக்கும் என்னுள் நீடிக்கிறது. 

       1980-களின் தொடக்கத்தில் இருந்துதான் நான் சிந்திப்பதை எழுதத் தொடங்கினேன். அப்போது என்னுடைய எழுத்து என்பது சிறு சிறு நகைச்சுவை உரையாடல்களாகவும், கவிதைகளாகவும், சிறுகதைகளாகவும் இருந்தது. அது வரையிலான என் எழுத்துகளின் முதல் பரிணாம வளர்ச்சியாக 1983ஆம் ஆண்டு மைசூர்த் தமிழ்ச் சங்கத்தின் வெளியீடாக வெளிவந்து கொண்டிருந்த, (இன்னமும் வெளிவந்து கொண்டிருக்கின்ற) ‘மைசூர் முரசு” இதழில் என்னுடைய சில கவிதைகள் வெளிவந்தது. உத்திரமேருரில் அப்போது என் சக கவிஞராக இருந்த சுமதிமணிமுடி அந்த என் கவிதைகளைத் தன் குடும்ப நண்பரான மைசூர் கு. புகேழந்தி அவர்களுக்கு அனுப்பிவைக்க அவர் அவற்றை வெளியிட்டார். அதற்குப் பிறகு கவிஞர் எஸ். அறிவுமணி அவர்கள் தந்த ஊக்கத்தாலும், அறிமுகத்தாலும் சென்னை வானொலியின் ‘இளையபாரதம்’ நிகழ்ச்சியில் ஏராளமான கவிதைகளை எழுதி அவற்றை என் சொந்தக் குரலில் வழங்கினேன்.

அந்த அனுபவங்களும், தமிழாசிரியர் திரு. த. சலாவுத்தீன் அவர்கள் சோவியத் கலாசாரமையத்தில் நடத்திவந்த ‘புஷ்கின் இலக்கியப் பேரவை’ தந்த அனுபவங்களுமே மேடையுரைகளுக்கான அடிப்படையான, அடியுரம் போன்ற பயிற்சிகளை எனக்கு வழங்கியது. அதன் பின்னர் சென்னையில் என் கிராமப்புற எழுத்தனுபவத்தின் தொடர்ச்சியாக, 1986ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ‘தேவி’ வார இதழில் கவிஞர் நாகை மனோகரன் அவர்களின் வழியாக, (அஜந்தா ஸ்கூல் ஆப் ஆர்ட்ஸ்) திரு. க. ஜெயகிருஷ்ணன் (வளர்தொழில் ஆசிரியர்) அவர்களின் வாயிலாக ‘தேவி’ வாரஇதழில் செய்தியாளராகப் பணியில் சேர்ந்து அதன் பொறுப்பாசிரியராக இருந்த திரு. க. ஜேம்ஸ் அவர்களிடம் அச்சு ஊடகத்திற்கு எழுதும் அரிய, பயிற்சிகளைப் பெற்று அவ்விதழில் ஏராளமாக எழுதினேன். அதன் பிறகு தினமணி உள்ளிட்ட பல்வேறு வெகுஜன இதழ்களில் என் எழுத்துப் பயணம் தொடர்ந்திடப் பரவலாக அறியப்படலானேன்.

       எழுநூற்றுக்கும் மேற்பட்ட செய்திக் கட்டுரைகள், நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட தனிக் கட்டுரைகள், இருநூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட கவிதைகள் - கவியரங்கக் கவிதைகள் என்று இதுவரை எழுதியிருக்கிறேன். இடையறாமல் எழுதிக் கொண்டுமிருக்கிறேன். சமூக மேன்மைக்காக எழுத வேண்டும் என்பதே என் எழுத்தின் கோட்பாடு. அந்தக் கோட்பாடு நேற்று எனக்குள் இருந்தது. இன்று எனக்குள் இருக்கிறது. நாளையும் அது எனக்குள் இருக்கும். நான் விதைக்கும் என் சிந்தனைகளைச் சமூகம் அறுவடை செய்ய வேண்டும் என்பதே என் விருப்பமாகும். எழுத்து எனும் வேளாண்மைத் தொழிலில் அறுவடை செய்கிறவர்கள், அதைப் விதைப்பவர்களாக இருக்க முடியாது. அப்படி இருக்கவும் கூடாது. நமது தமிழின் ஆதித் தோன்றலான திருவள்ளுவர் முதல் அண்மைச் சான்றாகத் திகழும் பாரதி வரைக்குமான நூற்றுக்கணக்கான இலக்கியர்கள் அப்படித்தான் விதைத்திருக்கிறார்கள். அப்படி அவர்கள் விதைத்தது நமது தலைமுறைகளுக்கு விளைந்து கொண்டே இருக்கிறது.

வள்ளுவனையும், பாரதியையும் அவர்களையொத்த நூற்றுக்கணக்கான தமிழ் இலக்கியர்களையும் என் காலத்தில் நான் அறுவடை செய்து கொண்டிருக்கிறேன். என் பேரனின் பேரனும் என்னைப் போலவே அவர்களை அறுவடை செய்து கொள்வான். ஒற்றை விதையாக விழுந்து முளைத்தாலும் அறுவடை செய்யச் செய்ய நெடுவடிவமெடுத்துப் பரவி விளைந்து கொடுப்பது இலக்கியம் மட்டுமே. உண்மையான இலக்கியம் தன்னை விதைக்கிறவர்களைக் காப்பாற்றுவதில்லை. தன் இலக்கியம் தனக்குச் சோறுபோட்டுக் காப்பாற்றும் என்று உண்மையான இலக்கியவாதிகள் யாரும் எதிர்பார்ப்பதுமில்லை. மகாகவி பாரதியைப் போன்றவர்கள் அப்படித்தான் தன் இலக்கியங்களிடமிருந்து சோறு, சொத்து, சுகம் போன்றவற்றை எதிர்பார்க்காமல் பட்டினிகிடந்து, அல்லலுற்று எழுதினார்கள். ஆக, தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அல்லாமல் சகமனிதர்களைக் காப்பாற்றுவதற்காக எழுதப்படுவதே இலக்கியம் என்ற உண்மையை நான் நன்கு உணர்ந்த பின்னரே என்னளவிலும் என் எழுத்தளவிலும் நான் தெளிவடைந்தேன். அதன் விளைவாகவே என் எழுதுகோல் சமூகத்தின் பக்கம் திரும்பிக் கடுகளவு கூட சமரசம் செய்து கொள்ளாமல், எவருடைய ரசனைக்கும் தீனிபோடாமல், எந்த முதலீட்டாளரையும் திருப்திபடுத்த வேண்டிய அவசியமில்லாமல், எந்த இசைக்கும் தலைவணங்காமல் எழுத ஆரம்பித்தது. என் எழுதுகோல் சமூகத்தின் சிக்கல்களையும் அவலங்களையும் எழுதியே வளர்ந்தது; வளர்கிறது. எந்த நேரமும் சிக்கல்களைப் பற்றியே சிந்தித்து எழுதுகிறோமே எனும் வருத்தம் எனக்குள் எழுத்தாலும், ’கப்பலின் ஒட்டைகள் குறித்து முதலில் கவலைப்படு அதன் கொடிபறக்கும் அழகைக் காப்பாற்றுவதற்கு’ எனும் பொன்மொழியை நினைத்துத் தெளிவுவடைகிறேன்.

       சமகாலச் சமூகவாழ்வின் துயரங்களை எழுதாமல், அவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் எவர் மனமும் புண்படாத, வெறுங்காற்றில் கத்தி வீசி வீரவசனம் பேசுவதைப் போன்ற எழுத்துகளை எழுத எனக்குக் கைவரவில்லை. அதன் விளைவாக ஒரு தரப்பினரால் நான் கண்டு கொள்ளாமல் விடப்பட்டேன்.

என்னை பார்க்கிறவர்களைவிடவும் முறைக்கிறவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் இன்னொரு தரப்பினரால் மிகவும் கூர்மையாக கவனிக்கப்பட்டேன். என்னைக் கூர்ந்து கவனிக்கும் தரப்பு தரும் ஊக்கமும், எதையும் எதிர்பாராமல் நாம் நினைத்ததை மட்டுமே எழுத வேண்டும் என்கின்ற என் பிடிவாதமும் என் எழுத்துப் பயணத்திற்கான முக்கியமான இரண்டு காரணங்களாக இருக்கின்றன. ஊரோடு சேர்ந்து கூச்சலிட்டுக் கொண்டு ஒடுகிற ஓட்டத்தில் ஒரு தரப்பு மனிதர்களின் மிகவும் மேலோட்டமான நியாயங்களை ஏற்றுக்கொண்டு எதை எழுத முடியும்? என்று எனக்குத் தெரியவில்லை. என் ஆடைகளை எவரும் வடிவமைக்கலாம் என் சிந்தனைகளை எவராவது வடிவமைக்க முயலும் போதுதான் நான் சீறியெழுகிறேன். எழுத்தின் மூலம் விழிப்புணர்வூட்டுவதும், குரூரமான சுயநலத்தோடு பிறரது சிந்தனைகளை வடிவமைப்பதும் வேறு வேறானவை. உன் விதி எதுவோ அதன்படிதான் நடக்கும் என்பது சிந்தனையை வடிவமைப்பது. ‘என் விதி இப்படி இழிந்து கிடக்கையில் உன் விதி இவ்வளவு உயர்வாக இருக்கிறதே? என்று கேள்விகேட்பதும், கேட்கவைப்பதும் விழிப்புணர்வு.

நான் எப்போதும் விழிப்புணர்வின் பக்கமே நின்று எழுதுகிறேன். எல்லாத் தருணங்களிலும், எல்லாவற்றையும் குறித்துச் சிந்திப்பதுதான் எழுத்தாளனின், சிந்தனையாளனின் மூளைக்குரிய வேலையாக இருக்க முடியும். அதனால்தான் ‘மயிலே மயிலே என்றால் இறகு போடாது’ என்று எவரேனும் சொன்னால் ‘உனக்கு ஏன் மயில் இறகு போட வேண்டும்’? சக மனிதர்களுடனான உன் பிரச்சனைக்கு அந்த அழகான பறவையை ஏன் இழுக்கிறாய்? என்கிற தொனியில் எனக்குக் கேள்விகள் எழுகின்றன. இந்த விருதுக்காக, இந்தக் காலக்கட்டத்தில் வெளிவந்த இன்னின்ன புத்தகங்களை, இந்த நாளுக்குள் அனுப்புங்கள் என்கிற அறிவிப்பை எங்காவது பார்த்தால் அதை ஓர் அறிவிப்பாக அல்லாமல் ஒரு மேலாதிக்கக் கட்டளையைப் போலவே என் சிந்தனை புரிந்து கொள்கிறது. உங்களை நாங்கள் சரணடைய வேண்டுமா? எங்களை நீங்கள் கண்டடைய மாட்டீர்களா? என்கிற மாதிரியான கேள்விகளே என்னிலிருந்து துள்ளிக்குதித்து வெளியே வந்து விழுந்து என்னைத் தனிமைப்படுத்தவும், செய்கின்றன. தனித்துக்காட்டவும் செய்கின்றன.

       ஏன் இப்படி எல்லாவற்றையும் எதிர்மறையாகவே பார்க்கிறீர்கள் என்று கூட சிலர் என்னிடம் கேட்பதுண்டு. எல்லாவற்றையும் எதிர்மறையாகப் பார்த்துப் பேசுகிற எழுதுகிற மனோபாவம் எனக்கில்லை. அதே நேரத்தில் கேள்விகளை முன்வைக்கும் எழுத்தும் பேச்சும் எதிர்மறை என்று நீங்கள் கருதினால் நீங்கள் குறைவாகச் சிந்திக்கிறீர்கள் என்று பொருள் என்று நான் அவர்களுக்கு விடை சொல்வதுண்டு. சமூகத்தின் எந்தவொரு துறையிலும் சீர்திருத்தச் சிந்தனைகளோடு பெரும்பாடுபட்டு நெருப்பு மூட்டுகிறவர்களைக் குதர்க்கம் பேசிப் பின்னுக்கு இழுக்கிற மனோபாவம் கொண்டவர்கள், நெருப்பு மூட்டபட்டவுடன் குளிர்காய்வதற்கு மட்டும் மொத்தக் கூட்டத்திற்கும் முன்னிலை வகிக்க முன்வந்து விடுகிறார்கள். நெருப்பு மூட்டுகிறவர்கள் குளிர் காய்வதே இல்லை என்பதே உலகச் சீர்த்திருத்த வரலாறு.      

உண்மையான இலக்கியவாதிகள் மிகச் சிறந்த கேள்வியாளர்களாகவே இருந்தார்கள், இருக்கிறார்கள், இருப்பார்கள். கேள்வி கேட்கிற இலக்கியவாதிகளும், கேள்விகேட்கிற சமூகவியலாளர்களும் அவர்களது நிகழ்காலச் சந்தர்ப்ப சுயநலவாதிகளுக்கு கசப்பானவர்களாகக் காட்சியளிப்பார்கள். இது வரலாற்றின் எந்தக் காலத்திலும் மாறாத உண்மையாக இருக்கிறது. அத்தகையவர்களைப் பொருட்படுத்தாமல் தம் சமகாலத்தின் சிறு பகுதிக்கும், எதிர்காலத் தலைமுறையின் பெரும்பகுதிக்குமாக சமூக நலன் விரும்பும் பல எழுத்தாளர்களும், அறிவியல் கண்டுபிடிப்பாளர்களும் தம் காலத்து மனிதர்களைக் கடந்து, அவர்களை மீறி அடுத்த தலைமுறையைக் குறி வைத்தே தங்களது சிந்தனைகளை அரங்கேற்றினார்கள்.

நான் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல என் எழுத்துகளின் நோக்கமும் எதிர்கால சமூக நலனைக் குறிக்கோளாகக் கொண்டதாகும். அந்த அடிப்படையில் என் இலக்கியப் பயணத்தின் போக்கில் என் எழுத்துகள் வெவ்வேறு பரிணாமங்களைப் பெற்று வெவ்வேறு தரப்பினருக்கானதாகவும், ஒட்டுமொத்தமாக சமூக நலனுக்கு உரியதாகவும் மாறியது. ‘தேவி’ வார இதழில் பெண்களுக்கான விழிப்புணர்வாக இருந்த என் எழுத்துகள் ‘தராசு’ வார இதழில் அரசாங்கங்களின் கவனத்திற்கான பறை முழக்கமாக மாறியது. பல்வேறு இதழ்களில் சமூக நிகழ்வுகளின் இன்னொரு பக்கத்தை இடித்துரைத்து நகைப்பு செய்து கவிதைகளாக வெளிப்பட்ட என் எழுத்துகள், தினமணியில் உளவியல் சார்புக் கட்டுரைகளாகவும் சமூகம் மற்றும் காட்சி ஊடகங்களின் அவல நிலை பற்றியதாகவும் இருந்தது. கோடிக்கணக்கான மக்களை பல்வேறு விதங்களில் வெகுவேகமாகச் சீரழிக்கும் திரைப்படங்களைக் குறித்தும் அவற்றின் விளைவான சீர்கேடுகள் குறித்தும் நிறைய எழுதியிருக்கிறேன்; பேசியிருக்கிறேன். இன்னமும் அவ்வகையில் எழுதிவருகிறேன், பேசிவருகிறேன்.

       ஆற்று வெள்ளத்தில் நெடுந்தூரம் உருண்டு வரும் கரடுமுரடான கற்கள் பயணப்போக்கில் அழகான கூழாங்கற்களாக மாறுவதைப் போல என்படைப்புகள் மாறுவதை இப்போது என்னால் அனுபவப்பூர்வமாக உணரமுடிகிறது. எப்படியிருந்தாலும் பரவாயில்லை என்று நேற்று நான் பயன்படுத்திய ஆயுதங்களின் அழகும், வலிமையும் என்னையுமறியாமல் கூடியிருப்பதையே என் இலக்கியம் எனக்களித்த கொடையாகக் கருதுகிறேன். உண்மையாக இருப்பதும், மேலும் மேலும் கூர்மையடைந்து கொண்டே இருப்பதுமான என் இலக்கியப் பயணமே என் வாழ்வின், என் இலக்கியத்தின் பெருமைகளாக இருக்க முடியும்.

இன்றைய நிலையில் என் எழுத்துகள் அச்சு ஊடகங்களின் வாயிலாக வாசகர்களைச் சென்றடைந்து அவர்களின் சிந்தனை மாற்றத்திற்கு வித்திடுவதற்கு முன்பாக உளவியல் ரீதியில் எனக்குச் செய்கிற நன்மைகள் எண்ணற்றவை. ஒரு கவிதையோ அல்லது கட்டுரையோ எனக்குள் தோன்றியவுடன் அதற்கான ஊடகங்களைக் குறித்துச் சிந்திக்காமல், கவலைப்படாமல் இப்போதெல்லாம் இயல்பாக என்னால் எழுத முடிகிறது. ஊடகங்களைப் பயன்படுத்தலாம் என்கிற எண்ணம் எழுதி முடித்தப் பின்னரே எனக்குத் தோன்றுகிறது. எனக்கான மருந்தாகவும் என் எழுத்துகள் பரிணாமம் பெற்றிருப்பதால் நானே அவற்றின் முதல் நுகர்வோனாக மாறுகிறேன். ஒரு கவிதையையோ அல்லது கட்டுரையையோ எழுதிமுடித்தவுடன் எனக்குள் ஒரு நிறைவு எங்கிருந்தோ வந்து நிறைகிறது. எழுதிக் கொண்டிருக்கும் தருணங்களே எனக்கு மிக மகிழ்ச்சியான தருணங்களாக இருக்கின்றன. மற்ற நேரங்களில் எனக்கு எரிச்சலூட்டக்கூடியதாகவோ, கோபமூட்டக்கூடியதாகவே இருக்கும் எதுவொன்றும் எழுதும் தருணங்களில் மட்டும் அலட்சியப்படுத்தக் கூடியவையாக மாறிவிடுகிறது.

ஆழ்ந்தும், ஆய்ந்தும் நான் எழுதும் நேரங்களில் வாய் அகன்ற ஒரு பாத்திரத்திலிருந்து வாய் குறுகிய ஒரு பாத்திரத்தில் துளியளவும் சிந்தாமல் நீரை ஊற்றி நிரப்பி வெற்றிகண்ட உணர்வை நான் எனக்குள் பெறுகிறேன். ஒரு கவிதையை எழுதி முடித்த உடன் இந்தக் கவிதை இவ்வுலகின் எந்த நூலகத்திலும் இல்லை என்கிற நினைவு என்னை நிமிரச் செய்கிறது. நான் எழுத நினைக்கும் எதுவொன்றையும் வேறு எவரும் எழுத முடியாது என்பதால் நான் மட்டுமே அவற்றை எழுத முடியும் என்பதால் நான் எழுதுகிறேன். மனிதகுலத்தின் நீண்டநெடிய வரலாற்றில் லட்சக்கணக்கான அறிஞர்களால் பல லட்சக்கணக்கான நூல் வடிவங்களில் எழுதப்படவேண்டிய யாவும் எழுதப்பட்டுவிட்டது அதை மீறி நாம் எதை எழுதிவிட முடியும்? என்ற சிந்தனை கடுகளவும் எப்போதும் என்னுள் ஏற்பட்டதில்லை.

வரலாற்றின் அனுபவங்களையும், வரலாற்றின் வெளிப்பாடுகளான நூல்களையும் உள்வாங்கி உள்வாங்கி ஒவ்வொரு தலைமுறையும் எழுதிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் சமுக அறிவியல். அப்படித்தான் பல தலை முறைகளின் அடுக்குகளில் இருந்து நாம் கற்கிறோம். நம் அடுக்கில் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு வேண்டியதை வைத்துவிட்டுப் போகிறோம். திருவள்ளுவரும், பாரதியும் இவர்களையொத்த நூற்றுக்கணக்கான நம் பழந்தமிழ்ப் படைப்பாளிகளும் நமக்கான தங்களது எழுத்தைத்தான் எழுதி வைத்துவிட்டுப் போயிருக்கிறார்களே தவிர, நாம் எழுத வேண்டியதையெல்லாம் எழுதி வைத்து விட்டுப் போகவில்லை எனும் புரிதலோடு நாம் எழுத வேண்டியிருக்கிறது. எத்தகைய எழுத்தும் அப்போதைக்கு நம் அருகிலோ எதிரிலோ இருப்பவர்களுக்காக எழுதப்படுகிறது என்கிற நிலையைத்தாண்டி, எங்கேயோ எப்போதோ இருக்கப் போகிறவர்களுக்காகவும், படிக்கப் போகிறவர்களுக்காவும் எழுதப்படுகிறது என்கிற புரிதலோடும் எழுத வேண்டிருக்கிறது.

என் எழுத்து, என் பேச்சு குறித்த எதிர் விமர்சனங்கள் எதுவும் என்னை எப்போதும் பாதிப்பதில்லை. சார்பு விமர்சனங்களும் பெரிதாக என்னை மகிழ்ச்சியில் மிதக்கச் செய்வதுமில்லை. தாம் படைக்கிற இலக்கியங்களைக் குறித்து எந்த இலக்கியவாதியும் பெரிதாக அலட்டிக்கொள்ளத் தேவையில்லை என்பதே என் அனுபவநிலை. பனை ஒலைகளிலும் கற்சுவர்களிலும் இந்த உலகை உலுக்கியெடுக்கும் இலக்கியங்களை எழுதிவிட்டுப் போயிருக்கிறவர்களின் மரபில் தோன்றியிருக்கிற நாம், கணிப்பொறிகளை வைத்துக்கொண்டு அவர்களைத் தாண்டாமல் அலட்டிக்கொள்ளக் கூடாது. அவர்களைத் தாண்டினாலும் அலட்டிக் கொள்ளக் கூடாது என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். ஏனெனில் பள்ளத்தில் கிடந்து கொக்கரிப்பது பரிதாபம். உயரத்தில் நின்று (கொண்டு இருப்பதாக நினைத்துக் கொண்டு) கொக்கரிப்பது ஆணவம். இந்த இரண்டு நிலையுமே நமது எந்தப் படைப்பாளிக்கும் நேரக்கூடாது. ஒவ்வொருவரும் அவரவர் காலத்தின் அவரவர் எழுத்தை எழுதிவிட்டுப் போயிருக்கிறார்கள்.

நம் எழுத்தை நாம் எழுதிவிட்டுப் போவோம் என்கிற உறுதியான புரிதல் எனக்கு உண்டு. ஆனாலும் எனக்கு முன் எழுதப்பட்ட இலக்கியங்களிலும் என் சமகாலத்தில் எழுதப்படுகிற இலக்கியங்களிலும் அறியாமையோ, சமூக அறிவியலுக்குப் புறம்பான பார்வையோ பொதிந்திருக்குமானால் அதை விளக்கிச் சொல்லவும் விலக்கி வைக்கவும் முனையும் குரல்களில் என்னுடைய குரலும் ஒன்றாக இருக்கும்.

முன்னரே நான் குறிப்பிட்டதைப் போல ஒரு தலைமுறையின் இலக்கியவாதி தான் வாழும் காலத்தின் தலைமுறை மக்களுக்காக மட்டுமின்றி, தனக்குப் பிறகான தலைமுறை மனிதர்களுக்காவும் எழுதுகிறான். ஒரு படைப்பு அதை எழுதியவனின் காலத்திற்குப் பிறகும் தன்னைக் கடக்கும் ஒவ்வொரு தலைமுறையினரிடமும் பேசிக்கொண்டே இருக்கிறது. நமது பழந்தமிழின் பல படைப்புகள் அவ்வகையில் இன்றளவும் நம்மிடம் பேசிக் கொண்டிருக்கின்றன. உலக மானுடத்தின் நல்வாழ்வை விரும்பி எழுதப்பட்ட தீர்ப்புகளாக பல இலக்கியங்களை நமது முன்னோர்கள் தமிழர்களாகிய நமக்குமட்டுமல்ல, நாம் வாழும் இந்த உலகிற்கும் அளித்திருக்கின்றனர்.

       ஆகச்சிறந்த ஆவணங்களாக நம்மிடமிருக்கும் நூற்றுக்கணக்கான தமிழ் இலக்கியங்களைக் கண்டு உலகமொழி வல்லுனர்கள் தலைமுறைகள்தோறும் வியப்பும் நெகிழ்ச்சியும், மகிழ்ச்சியும் அடைகின்றனர். ஆனால் நமது மொழி நமது மண்ணில் இரண்டாம் நிலையில் கூட வைக்கப்படவில்லையே எனும் சீற்றம் எனக்குள் மேலெழுந்துகொண்டேயிருக்கிறது. நமக்குக் கிடைத்த விடுதலை நமது மொழியைக் காப்பாற்றப் பயன்படவில்லையா? அல்லது அதற்குப் போதுமானதாக இல்லையா? எனும் ஐயம் எனக்குள் தலைவிரித்தாடுகிறது. பிற மொழிகளின் தாக்குதல்களில் இருந்து நம் தமிழைக் காப்பாற்ற முடியாதவர்களாக நாம் இருக்கிறோமே எனும் வேதனை யார் யாரையெல்லாம் நிலைக்குலைய வைக்கிறதோ அவர்களில் ஒருவனாக நான் இருக்கிறேன்.

       எந்தவொரு வேற்று இனமும் படையெடுத்து வராதபோது விடுதலை பெற்று இருக்கும் இனமாகத் தமிழினம் இருக்கிறது. எந்தவொறு வேற்று மொழியும் அழிக்காமல் இருக்கும்போது அழியாமல் இருக்கும் மொழியாக தமிழ் மொழி இருக்கிறது.

       தமிழினத்தையும், தமிழ்நிலத்தையும் போதுமான அளவுக்கு ஆண்டு அனுபவித்துவிட்டு தங்களது தாயகங்களுக்குத் திரும்பி போன ஒவ்வொரு இனமும் போகும்போது மிகவும் கவனமாகத் தங்களது மொழியை தமிழ் மண்ணில் விட்டு விட்டும், விதைத்து விட்டும் போயிருக்கின்றன. அல்லது தமிழர்கள் தங்களது பகைவர்களைத் துரத்திவிட்டு அவர்களின் மொழியை மட்டும் பற்றிக் கொண்டார்கள். பகைவர்கள் போய்விடுகிறார்கள். அவர்களது மொழிமட்டும் தமிழ் நாட்டைவிட்டுப் போகமாட்டேன் என்கிறது. தமிழர்களின் ‘சீமை’ மோகம் மொழியில் கொஞ்சம் கூடுதலாகவே இருக்கிறது என்பதில் ஐயமில்லை. தமிழல்லாத வேற்றுமொழிச் சொற்களைப் பயன்படுத்துவதில் தமிழர்கள் பெருமிதம் கொள்கிறார்கள். தங்களுக்கு தெரிந்த ஒன்றிரண்டு வேற்று மொழிச் சொற்களைக் கூட தங்களது உரையாடல்களில் மறவாமல் பயன்படுத்துகிறார்கள். நான்கூட அத்தகைய இடர்ப்பாடுகளில் என்னையுமறியாமல் இடறிவிழுந்து விழிப்படைந்து மீளும் தருணங்களில் என்னால் மட்டுமே உணர முடிந்த ஒரு வேதனை என்னை வாட்டியெடுக்கிறது. எழுத்துத் தமிழிலும் கலப்படங்கள் கோலோச்சுகின்றன. இதன் விளைவாகவே இன்றைய நமது தமிழ்மொழி ‘கலப்படக்களஞ்சியம்’ என பெறக் கூடாத ஒரு தகுதியைப் பெற்றிருக்கிறது. என் எழுத்துகளில் இத்தகையை கவலைகளையும், கேள்விகளையும் இடையறாமல் எழுப்பிவருகிறேன். அதை என் முதன்மையான எழுத்துக்கடமை என்றும் உணருகின்றேன்.

       இன்னும் நூறு ஆண்டுகளில் அழியக்கூடிய மொழிகளில் தமிழும் ஒன்றாக இருக்கும் என்று உலகநாடுகள் மன்றத்தின் மொழிப் பாதுகாப்புப்பிரிவு அறிவித்திருப்பதை விளையாட்டாக எடுத்துக் கொள்கிற மூடர்களில் ஒருவனாகவோ, ஐயாயிரம் ஆண்டுத்தொன்மையுடையத் தமிழ்மொழியை நூறு ஆண்டுகளில் அழிக்க யாரால் முடியும்? நமது தமிழ் எத்தகையச் சூழ்நிலையிலும் தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ளும்‚ நம்மையும் அது காப்பாற்றும்‚ என்று பிதற்றுகிற அறிவிலிகளில் ஒருவனாகவோ நான் இருக்க விரும்பவில்லை. ஆள்கிறவர்களின் மொழி வாழும்; ஆளப்படுகிறவர்களின் மொழி அழியும் அல்லது அழிக்கப்படும். தமிழர்கள் ஆளப்படுகிறார்கள்; அழிக்கப்படுகிறார்கள். ஒரு இனம் எல்லா வகையிலும் அழிக்கப்படுகிறது என்றால் அந்த இனத்தின் மொழி மட்டும் எப்படிப் பிழைக்கும்? தமிழ் இனம் அழிந்து விட்டதே என்று கவலைப்பட்டு அதன் மொழியை வேறு இனத்தவர்கள் பேசவும், பராமரிக்கவும், பாதுகாக்கவும் முன்வருவார்களா? நம்முடைய ஒன்றை நம்மையன்றி வேறுயாரால் காப்பாற்ற முடியும்? உலக நாடுகளின் அவை தமிழ் மொழி அழியும் என்று சொன்னதற்கான காரணங்கள் நம் கண்முன்னரேயே தெரியும் போது, தமிழ் மொழி தன்னைதானே பாதுகாத்து கொள்ளும் என்பவன் கடைக்கோடி மூடனாகவோ அல்லது உள் மனதில் தமிழ் எனும் மொழிக்கு எதிரான நயவஞ்சகனாகவோ இருப்பான். எனவேதான் தாய் மொழித்தமிழைப் பாதுகாப்பதில் தமிழ்ச் சமூகம் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டிய காலக்கட்டம் இது என்பதை என் எழுத்துகளிலும், சொற்பொழிவுகளிலும் மிகவும் அழுத்தமாக வலியுறுத்தி வருகிறேன்.

தனக்கு நேர்ந்த தாய்மொழியில் பல்வகை இலக்கியங்களை எழுதுவது மட்டுமல்ல, தன் தாய்மொழியின் மேன்மைகள் குறித்தும், அதைக் காப்பாற்றிப் பாதுகாத்து அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு ஒப்படைப்பது குறித்தும் எழுதுகிறவனே தன் மொழியின் நலன் விரும்பும் உண்மையான எழுத்தாளனாவான். அதனால்தான் ‘வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர்’ என்று பாரதி எழுதினான். தான் வாழ்வதற்காக தனது மொழியில் எதையாவது எழுதுகிறவர்கள் பிழைப்பாளர்கள். தனது மொழியும் வாழவேண்டும் என்று தனது எழுத்துகளில் அயராமல் வலியுறுத்துகிறவர்கள் எழுத்தாளர்கள். தாய்மொழியைப் பாதுகாப்பதுபற்றிய அறிவியல் பார்வையோ, திட்டங்களோ, அக்கறையோ எதுவுமில்லாமல், தரமான ஒரு இலக்கிய நூலை எழுதிவிட்டால் அதுவே தமிழைப் பாதுகாத்து அதன் புகழைப் பரவச் செய்யும் என்று சில இலக்கியவாதிகள் கருதிக் கொண்டிருக்கிறார்கள். இது கடைந்தெடுத்த சுயநலம் நிறைந்த ஆணவப் பார்வையாகும். தனது தாய்மொழியை நேசித்து அது வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் மொழி வெறியர்கள் அல்ல. அது மொழிவெறி என்று சொல்கிறவர்களை வேறு ஏதோ ஒரு மொழியின் வெறியர்கள் என்றுதான் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

       தமிழ்நாட்டின் தலைநகரமும் பிற பெருநகரங்களும் ஆங்கிலத்திற்கும் வேற்று இனமக்களுக்கும் உரியது என்றும், கிராமங்கள் மட்டுமே தமிழுக்கும், தமிழர்களுக்கும் உரியது என்றும், ஒரு கருத்து உருப்பெற்று பரவி வலுப்பெற்று வருகிறது. அந்தக் கருத்து தமிழ்மொழியும், இனமும் வேகமாக அழிவதற்கான எச்சரிக்கை மணி என்பது புரிந்து கொள்ளப்படவில்லை. நமது மண்ணும் மொழியும் போகிற போக்கைப் பார்த்தால் அடுத்தடுத்தத் தலைமுறைகளிடம் தமிழை ஒப்படைக்கவேண்டும் என்று விரும்பும் தமிழ் எழுத்தாளர்கள் தமிழ்ச் சமூகத்தின் பிற வாழ்வியல் சிக்கல்களை இலக்கியங்களாக்கும் முயற்சியை கைவிட்டு முழுநேரமும் தமிழுக்கு நேர்ந்துள்ள அவலங்களைப்பற்றி மட்டுமே எழுதவேண்டியிருக்குமோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது. தமிழர்களின் பெரும்பாலான பிள்ளைகள் வேற்று மொழியை தமது கல்விக்கான மொழியாகவும், வேலைவாய்ப்புகளுக்கான மொழியாகவும் ஏற்க நேர்ந்திருக்கும் இந்தக் காலக்கட்டம் நம் மொழியின் வரலாற்றில் மிகவும் துயரமானதாகும்.

தமிழ் தன் பரப்பில் இருந்து உள்வாங்கி வேகமாகச் சுருங்கி வருகிறது. நமது பிள்ளைகளுக்கு நாம் புகட்ட வேண்டிய தமிழ்ப் பாடத்தை நாம் புகட்டவில்லை. தமிழுக்கு எதிரானவர்களுக்குப் புகட்ட வேண்டிய பாடத்தையும் நாம் புகட்டவில்லை. தமிழின் பரவலான பயன்பாட்டு எல்லைகள் சுருங்கி அது ‘அலமாரிகளில்” ஆவண மொழியாகிக் கொண்டிருக்கிற நிலையை மாற்றியமைப்பதில் மற்றவர்களைக் காட்டிலும் எழுத்தாளர்களுக்கே பெரும்பங்கு உண்டு. அதை நான் உணர்கிறேன். அந்த அடிப்படையில் நான் எழுத ஏதுவாக, என் மொழியைப் போராடிப் பாதுகாக்கவும், பாதுகாக்கப்படுகிற என் மொழியில் என் சிந்தனைகளை எழுதவும் நான் விழைகிறேன். இந்த விழைவின் அடிப்படையில் தான் நான் இயல்பான எழுச்சி மிளிர எழுதிக் கொண்டிருக்கிறேன்.

இந்தப் பூமிப் பெரும்பரப்பில் எங்கெங்கோ இருப்பவர்களோடு வெவ்வேறுபட்ட நேரங்களில் என்னைப் பகிர்ந்து கொள்ளவும், எழுதி எழுதிப் பிழை பார்த்து என் பிழைகளைச் சரி செய்து கொண்டு மேம்படவும், ஜெயகாந்தன் சொன்னதைப் போல் படிக்கிறவர்களை இயன்றவரை மேம்படுத்தவும், இளம்பருவத்திலேயே இயல்பாக எனக்குள் எழுந்த எழுத்தாற்றலை எதன் பெருட்டேனும் தொலைத்து விட்டு, காலம் கடந்து தேடிக்கொண்டிருக்கக் கூடாது என்கிற தெளிவிலும், கண்களுக்கும் காதுகளுக்கும் ஏக காலத்தில் விருந்தளித்து கவனத்தை ஈர்க்கும்படியான காட்சி ஊடகக் கலைகளின் பால் ஈடுபாடில்லாமல் போனமையாலும், கண்களும் மூளையும் ஏக காலத்தில் இயங்கித் தெரிந்து கொள்ளவும், தெளிந்து கொள்ளவும், ஆரவாரமின்றி வழி வகுக்கும் எழுத்துக்கலையே எனக்கேற்ற கலை என்றுணர்ந்து ஏற்று ஈடுபாடு கொண்டமையாலும், சிந்திக்கிற எதுவொன்றையும் அண்டை மனிதர்களிடம் வார்த்தைகளால் பகிர்ந்து கொள்ள முனையும்போது அவர்கள் தங்களது அறியாமைகளைக் குறுக்கே கிடத்தி மறிப்பதாலும், மிக நீண்ட இக் கட்டுரையின் பக்கங்களில் நான் விவரித்திருக்கும் அனைத்துச் செய்திகளும் தமிழ்ச் சமுகத்தின் எதார்த்தமான உண்மைகளாக இருப்பதாலும், அவற்றுக்கான தீர்வுகளுக்கும் தெளிவுகளுக்கும் என்னளவில் என் எழுதுகோலின் வழியில் மற்றவர்களோடு சேர்ந்து நான் போராடவும் பாடுபடவும் வேண்டி இருப்பதாலும், இத்தனைக்கும் மேலாக என்னை வாழவைக்கும் இந்த மாபெரும் பூமிக்கோளத்தையும், அதன் ஈடு இணையற்ற அழகுக் கோலத்தையும் மனிதர்கள் உள்ளிட்ட அதன் லட்சக்கணக்கான உயிரினங்களை நான் எல்லை கடந்து வெகுவாக நேசிப்பதாலும், அந்த நேசிப்பின் வெவ்வேறு வகை வெளிப்பாடுகளாக என் எழுத்தையே கொடையாக வழங்கவேண்டும் எனும் இயற்கையான எனது நல்லியல்பின் காரணமாகவும் நான் எழுதுகிறேன். 

       ‘துருப்பிடித்து அழிவதைவிட தேய்ந்து அழிவது மேல்’ என்பது என் இளம்பிராயத்தில் கோடுபோட்ட நோட்டுப்புத்தகத்தில் வண்ண மையால் நான் எழுதிய அறிஞர்களின் பொன் மொழிகளில் ஒன்றாகும். அந்த பொன்மொழியை இப்போதும் நான் அடிக்கடி நினைவுகூறுகிறேன் துருப்பிடித்து அழிய அல்ல... தேய்ந்து அழியுமாறு இயங்குகிறது எனது வாழ்க்கை.

- ஜெயபாஸ்கரன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

கைபேசி: 9444956924

Pin It