பாரதிய ஜனதா கட்சியும் - ஜெயலலிதாவும், இப்போது சேது சமுத்திரத் திட்டத்தை முழு வீச்சில் எதிர்த்து வருவது அவர்களது சந்தர்ப்பவாத அரசியலையே பச்சையாக படம் பிடித்துக் காட்டுகிறது.

சேது சமுத்திரத் திட்டம் கொண்டு வருவதற்கு தான் மட்டுமே காரணம் என்றும், கடலுக்கு அடியில் ஆதம் பாலம் என்று சொல்லப்படுகிற மணல் திட்டுகள் வழியாகக் கால்வாய் அமைப்பதே, இத்திட்டம் என்றும், கடந்த சட்டமன்ற தேர்தலில் தமது கட்சியின் தேர்தல் அறிக்கையில் அறிவித்தவர் இதே ஜெயலலிதா தான்! அவர்தான் ராமர் பாலத்தை இடிப்பதா என்று இப்போது நீலிக் கண்ணீர் வடிக்கிறார்.

இந்தத் திட்டத்துக்கு ஒப்புதல் தந்ததே வாஜ்பாய் தலைமையில் நடந்த தேசிய ஜனநாயக முன்னணி ஆட்சியில் தான்! 6 பாரதிய ஜனதா கட்சி அமைச்சர்கள் ஒப்புதலுடன் இத்திட்டம் அறிவிக்கப்பட்டது. அவர்கள் யார்?

இத் திட்டத்துக்கு மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் சில சந்தேகங்களை எழுப்பியது. அப்போது திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்புகள் பற்றி ஆய்வு நடத்துமாறு, தேசிய பொறியியல் சுற்றுச்சூழல் ஆய்வு மய்யத் (நீரி)-க்கு ஆணையிட்டார் - அன்று தரைவழி போக்குவரத்து அமைச்சராக இருந்த அருண் ஜெட்லி. (ஆணை பிறப்பித்த தேதி மார்ச் 9, 2001)

‘நீரி’ ஆய்வு மய்யம், இத் திட்டம் பற்றி விரிவாக ஆய்வு நடத்தி தனது அறிக்கையை - அன்றைய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சரிடம் அளித்தது. அவரது பெயர் கோயல், பா.ஜ.க.வைச் சார்ந்தவர்.

அடுத்து இந்த அறிக்கையை ஆய்வு செய்வதற்காக ஆய்வுக் கூட்டம் ஒன்றை, அன்றைய கப்பல் போக்குவரத்து இணை அமைச்சராக இருந்த திருநாவுக்கரசு கூட்டினார். ஆய்வுக் கூட்டம் நடந்த தேதி அக்.23, 2002.

எந்த முறையில் இத்திட்டத்தை அமுல்படுத்தலாம் என்று விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. இறுதியில், இப்போது மணல் திட்டுகளைத் தகர்த்து கால்வாய் வெட்டும் முறையே, மிகச் சிறந்த முறை (6வது பாதை) என்று முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவுக்கு வந்தவரே - இப்போது வேறு வழியில் திட்டத்தை யோசியுங்கள் என்று கூறும், திருநாவுக்கரசுதான்.

பாம்பன் தீவுக்கு கிழக்கே உள்ள ஆதம் பாலத்தின் வழியாக இத்திட்டம் உருவாக்கப்படும் என்று மாநிலங்களவையில் அறிவித்தவர், கப்பல் போக்குவரத்துத் துறையின் மற்றொரு இணை அமைச்சரான சத்ருகன் சின்கா. அறிவித்த தேதி 2003, செப்டம்பர் 29.

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மய்யம், வங்கக் கடலில் பாம்பன் பாலம் அருகே மணல் திட்டு இருப்பதை விண்வெளிக்கோள் வழியாக படம் பிடித்தது. உடனே, அதுதான் ராமர் கட்டிய பாலம் என்று இந்துத்துவாவாதிகள் கூறத் தொடங்கினர். இதை உறுதிப்படுத்திட வேண்டும் என்ற துடிப்பில், அன்று சுரங்கம் மற்றும் கனிமவளத்துறை அமைச்சராக இருந்த உமாபாரதி, தனது துறையின் கட்டுப்பாட்டில் இருந்த புவியியல் ஆய்வு மய்யத்துக்கு, இதுபற்றி ஆராய்ந்து அறிக்கை தர உத்தரவிட்டார்.

டிசம்பர் 2002-லிருந்து மார்ச் 2003 வரை மணல் திட்டுகளை விஞ்ஞான ரீதியாக சோதனைக்கு உட்படுத்தி, ஆய்வு மய்யம் தனது அறிக்கையை அளித்தது. அதில் மணல் திட்டுகள் இயற்கையாக உருவானவை, மனிதர்களால் கட்டப்பட்டது அல்ல என்று திட்டவட்டமாகத் தெரிவித்தது.

ஆக, பா.ஜ.க. அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த பிரதமர் வாஜ்பாய், அருண்ஜெட்லி, வி.பி.கோயல், சத்ருகன் சின்கா, திருநாவுக்கரசு, உமாபாரதி ஆகிய அமைச்சர்களின் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு, மணல்திட்டு ராமன் கட்டிய பாலம் அல்ல என்பது நிரூபிக்கப்பட்டு, அதன் பிறகு அவர்களின் ஒப்புதலோடு, பிரதமர் வாஜ்பாயால் அறிவிக்கப்பட்ட திட்டம் தான், சேது சமுத்திரத் திட்டம்.

இவர்கள்தான் அப்படியே அந்தர்பல்டி அடித்து ராமன் கட்டிய பாலத்தை இடிக்கலாமா என்றும் இந்துக்களின் மனத்தைப் புண்படுத்தலாமா என்றும் இப்போது ஒப்பாரி வைக்கிறார்கள்.

ராமரை வைத்து மீண்டும் மீண்டும் அரசியல் நடத்த வேண்டும் என்ற அரசியல் பிழைப்பு வாதம் - இப்படி, இவர்களைப் பேச வைக்கிறது!