7.10.2006 அன்று ‘பெரியார் திராவிடர் கழகம்’ நடத்திய தந்தை பெரியார் அவர்களின் 128வது பிறந்தநாள் விழா ‘ஒடுக்கப்பட்டோர் உரிமை மாநாட்டில்’ நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

1. தூக்குத் தண்டனைக்கு எதிரான மனித உரிமைக் குரல் உலகம் முழுவதும் வலிமை பெற்று வருகிறது. 74 நாடுகளில் மரண தண்டனை முழுமையாக ஒழிக்கப்பட்டு விட்டது. 26 நாடுகளில் சட்டப் புத்தகங்களில் மட்டும் “மரண தண்டனை” இருக்கிறது. அய்.நா. மன்றம், மரண தண்டனைக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்று உலக நாடுகளை வலியுறுத்தி வருகிறது.

‘பழிக்குப் பழி வாங்குதல்’ என்ற கோட்பாடு மாறி வரும் நாகரிக சமூகத்துக்கு ஒவ்வாதது என்ற கண்ணோட்டத்திலும், தூக்குத் தண்டனை விதிக்கப்படுவதாலேயே குற்றங்கள் குறைந்து விட்டன என்ற கருத்து உறுதியாகாத நிலையிலும் இந்திய அரசு தூக்குத் தண்டனைக்கான சட்டப் பிரிவை முழுதாக நீக்கிட வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது. ஏற்கனவே தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கான தூக்குத் தண்டயைiயும் ரத்து செய்ய வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

2. போர் நிறுத்த ஒப்பந்தத்தை வெளிப்படையாக மீறிச் செயல்பட்டு - ஈழத் தமிழர்கள் மீது கடுமையான பொருளாதாரத் தடைகள், ஆள் கடத்தல்கள், படுகொலைகளையும் நடத்தி வரும் சிறீலங்கா அரசின் நடவடிக்கைகளை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவும், சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் கண்டித்து வரும் நிலையில், இந்திய ஆட்சி, இந்தப் பிரச்சினைகளில் பாராமுகமாக செயல்பட்டு வரும் அணுகுமுறையை மாற்றிக் கொண்டு, சிறீலங்கா அரசைக் கண்டிக்க முன்வருவதோடு, ஈழத்தில் நடக்கும் தமிழர்கள் போராட்டத்தை இனியும் ‘பயங்கரவாதம்’ என்று முத்திரை குத்தாமல், தமிழர்களின் விடுதலைப் போராட்டமாக அங்கீகரிக்க வேண்டும் என்று மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

3. மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியிலிருந்தபோது புகுத்திய ‘இந்துத்துவா’ கல்விக் கொள்கையின் அடிப்படையில் கடந்த ஆட்சியில் நம் தமிழ்நாட்டு பாடத் திட்டங்களிலும், வரலாற்றுத் திரிபுகளும், மதவெறிப் பார்வையும் இடம் பெற்றுள்ளதை சுட்டிக்காட்டி, தமிழக அரசு அவற்றைக் களையும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துவதோடு, தமிழ்நாட்டில் நடைபெற்ற சமூகநீதிக்கான போராட்ட வரலாற்றை - ஒவ்வொரு நிலையிலும், பாடத் திட்டத்தில் இடம் பெறச் செய்ய வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

4. தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த மாணவர்கள் ‘மருத்துவம், பொறியியல்’ போன்ற தொழிற்கல்விகளில், படிப்பதற்கான தகுதிகளைப் பெற்று வளர்ந்து வரும் நிலையில், தனியார் கல்லூரிகளில் இவர்களுக்கான இடஒதுக்கீடுகள் உறுதி செய்யப்பட்டாலும், தனியார் கல்வி நிறுவனங்கள் நிர்ணயித்துள்ள கட்டண சுமை, இந்த மாணவர்களின் கல்விக்கு பெரும் தடையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் கேரள அரசு அண்மையில் தனியார் கல்லூரிகளின் கட்டணம், நன்கொடையைக் கட்டுப்படுத்துவதற்காகவே சிறப்பு சட்டத்தைக் கொண்டு வந்துள்ளதுபோல், தமிழ்நாடு அரசும் சட்டம் கொண்டு வந்து சமுதாயத்தின் அடித்தட்டு மாணவர்களின் கல்வித் தடையை நீக்க முன்வர வேண்டும் என்று, இம்மாநாடு வலியுறுத்துகிறது.

5. மகாராஷ்டிர மாநில அரசு - அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் தாழ்த்தப்பட்ட பழங்குடி மாணவர்களுக்கான முழு கல்விச் செலவையும் ஏற்று வருவதைப் போல், தமிழ்நாடு அரசும் அந்த சமூக நீதித் திட்டத்தைப் பின்பற்றிட முன்வரவேண்டும் என்று இம்மாநாடு கோருகிறது.

6. மக்கள் சமூகத்தில் சரிபாதியாக உள்ள பெண்களுக்கு சட்டமன்ற, நாடாளுமன்றங்களில் 30 விழுக்காடு அளிக்க வழிவகை செய்யும் சட்டத்தை நிறைவேற்றுவதை அரசும், எதிர்க்கட்சிகளும் நீண்டகாலமாக தள்ளி வந்துள்ளதை திட்டமிட்ட சூழ்ச்சியாகவே இம்மாநாடு கருதுகிறது. எல்லா கட்சிகளுக்கிடையேயும் கருத்தொற்றுமை ஏற்பட்டு விட்டதாக கூறப்படும் நிலையில், வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரிலாவது அச்சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.

7. மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு - 50 ஆண்டு காலமாக 60 விழுக்காட்டுக்கும் மேலாக உள்ள பிற்படுத்தப்பட்டோருக்கு பறிக்கப்பட்டுள்ள நிலையில், இப்போது வீரப்ப மொய்லி குழுவின் அறிக்கை - ஏற்கனவே விகிதாச்சாரத்தில் குறைத்து வழங்கப்பட்டு வரும் 27 சதவீத ஒதுக்கீட்டைக்கூட, படிப்படியாக நிறைவேற்றலாம் என்று பரிந்துரைத் திருப்பது, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்துக்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகமாகும். வீரப்ப மொய்லி குழுவின் அறிககையை, மத்திய அரசு முற்றாக புறக்கணித்து வரும் கல்வி ஆண்டிலேயே எவ்வித விதி விலக்கும் இன்றி எல்லா கல்வி நிறுவனங்களிலும் 27 சதவீத இடஒதுக்கீட்டை அமுல்படுத்த வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.