‘கடமையை செய்; பலனை எதிர்பார்க்காதே’ என்ற கீதையின் தத்துவம், உழைக்கும் மக்களுக்கு எதிரானது என்று நடிகர் ரஜினிகாந்த் மிகச் சரியாகவே அண்மையில் கூறியிருந்தார். சென்னையில் தனது ரசிகர்களுடன் சந்திப்பு நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்த ரஜினிகாந்த், மேடையில், ‘கடமையைச் செய்; பயனை எதிர்பார்’ என்ற முழக்கத்தை பதாகையில் எழுதி நிறுவியிருந்தார். ‘விடுதலை’ நாளேடு ரஜினிகாந்தின் இந்த சரியானப் புரிதலை பாராட்டி தலையங்கம் தீட்டியிருந்தது.

ஆனால், ‘கீதையின் மறுபக்கம்’ நூலை எழுதி, கீதையை கடுமையாக விமர்சித்திருந்த கி.வீரமணி, ‘வாழ்வியல் சிந்தனை’யில் கீதையின் ஆதரவாளராகி விடுகிறார் என்பதுதான் விநோதம். பெரியார் சமூக மாற்றத்துக்கான புரட்சிகர சிந்தனைகளை மக்களிடம் விதைத்து, தமிழர்களுக்கு உணர்வூட்டினார்.

கி.வீரமணியோ, வாழ்வியல் சிந்தனைகள் என்ற பெயரில் பகுத்தறிவு கருத்துகளுக்கு மாறான கருத்துகளைப் பரப்பி வருகிறார். பெரியார் சிந்தனைகளை ஏற்று, அந்த இயக்கத்துக்கு வந்த தோழர்களிடம், தனது வாழ்வியல் சிந்தனைகளை அதுவும் பெரியார் தொடங்கிய ‘விடுதலை’ நாளேட்டிலேயே எழுதி, இயக்கத்தின் கொள்கையாகவே மாற்றும் புரட்டுகளை செய்து வருகிறார்.

திராவிடர் கழகத்தின் கொள்கை பெரியார் சிந்தனைகளா? அல்லது வீரமணியின் வாழ்வியல் சிந்தனைகளா என்பதைப் புரிந்து கொள்ள முடியாமல், அக்கழகத்தின் தோழர்கள், “வீரமணி சொன்னால் ஏற்க வேண்டியதுதான்” என்ற அடிமை மனப்போக்கில் அப்படியே ஏற்றுக் கொள்கின்றனர். எதையும், ஏன், எதற்கு என்று சிந்தியுங்கள் என்று பெரியார் முன் வைத்த பகுத்தறிவை வீரமணியின் வாழ்வியல் சிந்தனைக்குப் பொருத்திப் பார்த்தால் அவர்கள் “கழகத்தின் துரோகிகளாகி” விடுவார்கள்.

வீரமணியின் ‘வாழ்வியல் சிந்தனைகள்’ ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்படுகிறதாம். மதுரை மடாதிபதி வாழ்வியல் சிந்தனை நூல்களை வாங்கி பரப்பி வருகிறாராம். ‘இந்துத்துவா’ கூட்டம்கூட வீரமணியின் வாழ்வியல் சிந்தனைகளை தடையின்றி ஏற்றுக் கொள்ளலாம். காரணம், அந்த வாழ்வியல் சிந்தனை எதிர்ப்பு களையும், போராட்ட உணர்வுகளையும் முடக்கி, ‘அடங்கி வாழ்வதற்கான’ அறிவுரைகளையே முன் வைக்கின்றன.

‘கடமையைச் செய் பலனை எதிர்பாராதே’ என்ற கீதையின் தத்துவத்தை, வீரமணியே வாழ்வியல் சிந்தனையாகத் தரும்போது, பார்ப்பனர்களும், இந்தத்துவா வாதிகளும் அதை ஏன் எதிர்க்க வேண்டும்? ஆச்சரியப்பட வேண்டாம். கடந்த செப்டம்பர் முதல் தேதி ‘விடுதலை’யில் வெளிவந்த வாழ்வியல் சிந்தனையில் கி.வீரமணி இவ்வாறு எழுதியுள்ளார்.

“பணம் சம்பாதிப்பதைவிட - மனிதர்களை - மனிதர்களின் அன்பினை - நன்றியினை சம்பாதிப்பது தானே முக்கியம். எனவே பணியில் ஈடுபடும்போது, பணக் கணக்கு வேண்டாம். மகிழ்ச்சி தருமா என்ற மனக்கணக்குடன் ஈடுபட வேண்டும்.” - கி.வீரமணி, செப்.1, 2008 ‘விடுதலை’

பலனை எதிர்பார்க்காமல், கடமையைச் செய் என்ற கீதையின் தத்துவம் தான் கி.வீரமணியின் வாழ்வியல் சிந்தனையாக வெளி வருகிறது. இவர்களே ‘கடமையை செய் - பலனை எதிர்பார்’ என்று கூறிய ரஜினிகாந்தைப் பாராட்டி, தலையங்கமும் தீட்டுகிறார்கள். கி.வீரமணியின் இந்த சிந்தனையையும் பாராட்டி தலையங்கம் தீட்டுவார்களா?

மனிதர்களின் அன்பினை, பாசத்தை, நன்றியினை சம்பாதிப்பதற்குத்தான் - உழைப்புக்கான ஊதியத்தை எதிர்பாராமல், இடுப்பில் துண்டைக் கட்டி, கைக் கட்டி வாய் பொத்தி ‘ஆண்டைகளிடம்’ அடிமை வேலை செய்து கொண்டிருந்தது, நமது சமூகம். பயனை எதிர்பாராத அந்த ‘அன்பும்’, ‘பாசமும்’ ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலைநாட்டிய அடிமைத்தனத்தை எதிர்த்து, ‘காரி உமிழ்’, ‘ஆத்திரம் கொண்டு அடி’ தலைநிமிர்ந்து நில் என்ற கோப ஆவேசத்தை பெரியார் இயக்கம் ஊட்டியது. ‘மனக் கணக்குகளுக்கும்’, ‘பணக் கணக்குகளுக்கும்’ உள்ள பொருளியல் உறவுகளைப் புரிந்து கொண்ட எவரும் இப்படிப்பட்ட உளறல்களை, சிந்தனைகளாக முன் வைக்க மாட்டார்கள்.

வாழும் உலகத்துக்கேற்ப உனது வாழ்க்கையை தகவமைத்துக் கொள் என்ற உபதேசத்தை சாமியார்களும் , சங்கராச்சாரிகளும், தான் கூறுவார்கள். தங்களை ‘புரட்சிப் படை’, ‘போர்ப்படை’ என்று கூறிக் கொள்கிறவர்கள் கூறலாமா? இதைவிட பெரியார் கொள்கைப் புரட்டு வேறு இருக்க முடியுமா?

(புரட்டுகள் உடைப்பு தொடரும்)