‘இந்து’ நாளேடு வெளியிட்ட ராஜபக்சே சிறப்புப் பேட்டியின் உள் நோக்கத்தை அம்பலப்படுத்தி ‘வெப்டுனியாடாட்காம்’ இணையதளம் வெளியிட்ட கட்டுரை.

விக்கிரமாதித்தன் கதை என்பது மிகவும் சுவராசியமானது - சிறுவர் களுக்கு மட்டுமல்ல, இளைஞர்களுக்கும் முதிர்ந்தவர்களுக்கும் கூட - அது சுவராசியமானது. அந்தக் கதை இப்படி ஆரம்பிக்கும், “தனது முயற்சியில் என்றுமே மனம் தளராத விக்கிரமாதித்தன், காட்டைக் கடந்து சென்றுக் கொண்டிருந்தான். ஒரு முருங்கை மரத்தை அவன் கடந்து கொண்டிருந்தபோது, அதில் தொங்கிக் கொண்டிருந்த ஒரு பிணத்தைக் கண்டான். அதனை இறக்கி அடக்கம் செய்வதற்காக மரத்திலேறி, பிணம் தொங்கிக் கொண்டிருந்த கயிற்றை அறுத்து, அதனை தனது தோளில் சுமந்து கொண்டு இறங்கியபோது, அதற்குள் இருந்த வேதாளம் லக்க லக்கவென்று சிரித்தது.

ஏன் சிரிக்கிறாய் வேதாளமே? என்று விக்கிரமாதித்தன் கேட்க, ஏற்றுக் கொண்ட முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தா, இப்படித்தான் அன்றொரு நாள்... என்று கூறி, ஒரு கதையை சொல்லத் துவங்கும். வேதாளத்தின் கதையைக் கேட்டு முடித்த விக்கிரமாதித்தனிடம் அந்த வேதாளம் சில கேள்விகளைக் கேட்கும். அந்த கேள்விகளுக்கு விக்கிர மாதித்தன் சரியான பதிலை கூறா விட்டால் அவனுடைய தலை சுக்கு நூறாக வெடித்துவிடும் என்று எச்சரிக்கும்.

கதையை நன்கு புரிந்து கொண்டு கேட்ட விக்கிரமாதித்தன், வேதாளத்தின் கேள்விகளுக்கு சரியான பதிலைத் தருவான். அவனுடைய பதிலைக் கேட்டு அசந்து போகும் வேதாளம் அவனை பாராட்டிவிட்டு, தான் குடி கொண் டிருந்த அந்த உடலை விட்டு வெளியேறி மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக் கொள்ளும்.. இப்படி முடியும் அந்தக் கதை.

இந்தக் கதைக்கு இன்றைக்கு என்ன அவசியம் வந்தது என்று கேட்கத் தோன்றுகிறதா? இப்படிப்பட்ட கதை களுக்கு அடிப்படை உள்ளதா? வேதாளம் எப்படி பேசும்? என்றெல் லாம் அறிவுப்பூர்வமான கேள்விகளை எழுப்பினால் இந்தக் கதை இனிக்காது. கேள்விகளைக் கேட்காமல், அதில் கூறப்படுவதையெல்லாம் நம்பி, படித்துக் கொண்டே வந்தால் மட்டுமே சுவராசியமாக இருக்கும்.

எனவே, சொல்லுவதையெல்லாம் கதைகளையெல்லாம் நம்பும் ‘மன பக்குவம்’ உள்ள நிலையிலேயே இதை யெல்லாம் படித்து நாமும் வளர்ந்துள் ளோம். என்றாலும், இன்றைக்கு நாம் இந்தக் கதைகளையெல்லாம் படித்து நமது அறிவு நிலையை உயர்த்திக் கொள்ள முயற்சிப்பதில்லை. ஆனால், இப்படிப்பட்ட கதைகளை நம்பும் மனோநிலை அல்லது முதிர்ச்சி இருந்தால் மட்டுமே இன்றைய உலகில் நடக்கும் பல விடயங்களை நம்மால் ‘உண்மை’யென்று நம்பி ஏற்றுக் கொள்ள முடியும்.

இராஜதந்திரம் என்றும், பத்திரிகை தர்மம் என்றும் கூறிக் கொண்டு நமக்கு சொல்லப்பட்டு வரும் செய்திகளையும், பேட்டிகளையும் படிக்கும்போது, விக்கிரமாதித்தன் கதை படிக்கும் சிறுவர்கள் என்று நம்மை இவர்கள் நினைக்கின்றனரோ என்றே நினைக்கத் தோன்றுகிறது.

நமது நாட்டின் பாரம்பரியம் மிக்க ஒரு பத்திரிகை சிறிலங்க அதிபர் ராஜ பக்சேயை சந்தித்து, மிகுந்த சிரத்தை யுடன் பேட்டி கண்டு அதனை வெளி யிட்டிருப்பதைப் படிக்கும் போது வேதாளமும், விக்கிரமாதித்தனும் நடத்திய உரையாடலைப் படிக்கும் ‘ஃபிலிங்’ நமக்கு ஏற்பட்டது. அந்த அளவிற்கு அந்தப் பேட்டியில் ‘உண்மை’ குறட்டை விட்டுக் கொண்டு உறங்கியது. (தூங்கும் எதனையும் தமிழர்கள் எழுப்ப மாட்டார்கள். அது உண்மையாக இருந்தாலும் என்ற அதீத நம்பிக்கையுடன்) இருவர் நடத்திய உரையாடல் இங்குள்ளவர்களால் சிரத்தையுடன் விவாதிக்கப்பட்ட போது நமக்கு மூடில்லாமலேயே சிரிப்பு வந்தது.

இலங்கைத் தலைநகர் கொழும்புவில் ஒரு அமைதியான சூழலில் எடுக்கப் பட்ட அந்தப் பேட்டியில், சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்சே கூறுகிறார், “தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் ரிதியான தீர்வு காண்பதென்று நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் மொழி, அரசியல் உள்ளிட்ட உரிமைகளை உள்ளடக்கிய அதிகாரப் பகிர்வின் மூலம் சிறிலங்கா வின் ஒற்றுமைக்கு உட்பட்டு, அந்த அரசியல் தீர்வு இருக்கும்” என்று கூறியதை தலைப்புச் செய்தியிட்டு வெளியிட்டது அந்தப் பாரம்பரிய நாளிதழ்.

இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதில் உறுதியுடன் உள்ளதாகக் கூறும் தாங்கள், தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போர் நிறுத்தத்தை தன்னிச்சையாக முறித்துக் கொண்ட போது, “தற்பொழுது மேற்கொள்ளப் பட்டு வரும் இராணுவ நடவடிக்கை யின் வாயிலாக ஒரு அரசியல் தீர்வு உருவாகும் வழி பிறந்துள்ளது” என்று கூறினீர்களே? அதன் பொருள் என் என்று கேட்கவில்லை. (வேதாளம் கதைவிடும் போது விக்கிரமாதித்தன் இடைமறித்து எதுவும் பேசினானா? இல்லையே. அதனால் கேட்கவில்லை)

“எனது தமிழ் சகோதரர்களுக்கு ஜன நாயக, அரசியல், மொழி உரிமைகள் அந்தத் தீர்வில் இருக்கும்” என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், உங்களது இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, “சிறிலங்கா சிங்களவர்களின் தேசம். தொன்றுதொட்டு இங்கு சிங்கள அரசர்கள்தான் ஆண்டு வந்தனர். பெரும்பான்மையாக உள்ள சிங்களவர்களின் மேலாதிக்கத்தை தமிழர்கள் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்” என்று பேசியது அல்லாமல், செய்தியாளர்கள் கேட்கும்போது அதனை நியாயப்படுத்தியும் பேசினாரே? அதற்கு உங்கள் பதிலென்ன என்றும் வினவவில்லை.

தமிழ் சிஸ்டர்ஸ் அண்ட் பிரதர்ஸ் என்று விவேகானந்தர் ரேஞ் சுக்கு பேசுகிறீர்களே, நீங்கள் ஆட்சிக்கு வந்தப் பிறகு தானே கொழும்புவிலிருந்து தமிழர்கள் வெளியேற்றப்பட்ட னர் என்றும் கேட்கவில்லை. 1500 பேர் கடத்தப்பட்டு காணடிக்கப்பட்டதாக ஐ.நா. மனித உரிமை அமைப்பு அறிக்கை கொடுத்ததே ஏன்? என்றும் கேட்கவில்லை. (வேதாளம் பேசுகிறது, விக்கிரமாதித்தன் கேட்டுக் கொண் டிருக்கின்றான், நாமும் கதையை மேற்கொண்டு படிப்போம்)

“ஒரு அரசியல் பிரச்சினைக்கு இராணுவ தீர்வு இருக்காது. இருக்கவும் முடியாது. இதில் நான் எப்போதும் உறுதியாக இருந்துள்ளேன். பயங்கர வாதிகள்தான் இராணுவத் தீர்வு. இந் நாட்டில் வாழும் மக்களுக்குத் தேவை அரசியல் தீர்வு தான்” என்று ஆணித் தரமாக ராஜபக்சே கூறியுள்ளார்.

இவ்வளவு உறுதியாக உள்ள நீங்கள் இதனை உங்களுடைய தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளீர்களா? என்று கேட்கவில்லை. அது மட்டுமா? தமிழர் களுக்கு தற்பொழுதுள்ளதை விட எந்த ஒரு கூடுதல் உரிமையும் தரக் கூடாது என்று கூறி வரும் சிங்கள பேரினவாத கட்சியான ஜனதா வி முக்தி பெரமுணா வுடன் எந்த அடிப்படையில் கூட்டு வைத்துப் போட்டியிட்டீர்கள் என்றோ அல்லது அவர்களின் ஆதரவுடன் எந்த அடிப்படையில் ஆட்சி அமைத்தீர்கள் என்றோ கேட்க வில்லை. (தொடர்ந்து கதையைப் படியுங்கள்)

“இந்திய அரசு கேட்டுக் கொண்டதற்கு இணங்க எங்களது அரசமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட 13வது சட்ட திருத்தத்தினைக்கூட நடைமுறைப் படுத்த முடியாததற்குக் காரணம் பிரபாகரனும் அவருடைய ஆட்களும் தான்” என்று ராஜபக்சே கூறியதும், இயற்கையாகவே இரண்டு கேள்வி களை எழுப்பியிருக்க வேண்டும். ஒன்று, அந்த அரசமைப்புத் திருத்தத்தை எதிர்த்து ஜனதா விமுக்தி பெரமுணா தொடர்ந்த வழக்கில், அத்திருத்தம் செல்லாது என்று சிறிலங்க உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்தது.

இரண்டு, கடந்த வாரம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தமிழர் பிரச்சினை தொடர்பாக (தமிழ் நாட்டில் ஏற்பட்ட கொந்தளிப்பின் காரணமாக) விவாதம் நடந்தபோது பேசிய ஜனதா விமுக்தி பெரமுணா கட்சி உறுப்பினர் விஜித ஹெராத், “இந்தியாவின் வற்புறுத்தலுக்குப் பணிந்து 13வது சட்ட திருத்தத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவீர் களா?” என்று கேட்டதற்கு, அயலுறவு அமைச்சர் ரோஹித போகல்லகாமா, “அனைத்துக் கட்சி பரிந்துரைக்குப் பின் அதைப் பரிசீலிப்போம்” என்று வழுக்கலாக பதிலளித்துள்ளாரே? என்று கேட்டிருக்கலாம். (ஆனால் விக்கிரமாதித்தன் குறுக்கிடவில்லை, கதைதொடர்கிறது)

மீனவர் பிரச்சினையில் தான் எவ் வளவு தெளிவு! “நான் மீன் வளத்துறை அமைச்சராக இருந்துள்ளேன். அப் பொழுது எல்லையைக் கடந்து சென்ற மீனவர்கள் (இந்திய கடலோரப் படை யால்) பிடித்துச் செல்லப்பட்டபோது நான் அங்கு வந்து பேசியிருக்கிறேன். அவர்களுக்கு சர்வதேச கடல் எல்லை என்பதெல்லாம் தெரியாது. மீன் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்குச் சென்று அவர்கள் மீன் பிடிப்பார்கள். இது மனிதாபிமான பிரச்சினை. இதனை நாங்கள் ‘நன்கு’ புரிந்து கொண்டுள்ளோம்.

எனவே மீனவர்களை தண்டிக்கலாமா?” என்று கூறியவரிடம், அப்படியானால் நீங்கள் சிறிலங்க அதிபராக வந்தப் பிறகும் ஏராளமான தமிழக மீனவர்களை உங்கள் கடற்படை தொடர்ந்து சுட்டுக் கொன்றது ஏன்? என்று கேட்கவில்லை (கதை சுவாரஸ்யம் கெட்டு விடுமல்லவா?)

“சிங்களர், தமிழர், முஸ்லிம், கிறித்து வர் என்று இங்கு வாழ்ந்துக் கொண் டிருக்கும் அனைவருக்கும் சிறிலங்கா சொந்தம். எல்லா மத, மொழி, இன மக்களும் சம உரிமையுடனும், சுதந் திரத்திடனும் வாழ வேண்டும் என்பதே இந்த அரசின் நோக்கம். அதனால் தான் ஐ.நா.வில்கூட நான் தமிழில் பேசினேன்” என்று கூறி முடிக்கும் போதும், அப்படியானால் தமிழர்களுக்கு எந்த உரிமையையும் அளிக்கக் கூடாது என்று கூறும் கட்சிகளான ஜனதா விமுக்தி பெரமுணாவும், ஜாதிக ஹேல உருமையாவும் உங்களையும், உங்கள் ஆட்சியையும் ஆதரிப்பதேன்? என்று கேட்கவில்லை. கதையும் முடிந்து விடுகிறது.

பொதுவாக வேதாளம் கதை சொல்லி முடித்ததும், கதையைக் கேட்ட விக்கிரமாதித்தனிடம் சில கேள்விகளைக் கேட்கும் என்றும் அதற்கு விக்கிரமாதித்தன் சரியான பதிலைச் சொல்லவில்லையென்றால் அவனுடைய தலை வெடித்துச் சிதறிவிடும் என்றும் வேதாளம் கூறும். அது இந்தக் கதையில் ஏன் நடைபெறவில்லை?

இங்கு வேதாளமும், விக்கிரமாதித்தனும் கேள்வி பதிலாகவே கதை கூறி முடிக்கின்றனர். கதையைப் படிப்பவர்களின் காதில் இதமாக பூ சுற்றவேண்டும் என்பதற்காகவே விக்கிரமாதித்தன் கேள்விகளைத் தவிர்க்கின்றான். எனவே, கதை சொல்லி முடித்துவிட்டப் பின் வேதாளம் சந்தோஷமாக ‘மீண்டும்’ முருங்கை மரம் ஏறிவிடுகிறது.

விக்கிரமாதித்தன் தனது பணி முடிந்த ‘திருப்தியோடு’ நாடு திரும்பி விடுகின்றான். மீண்டும் விக்கிரமாதித்தன் அந்த கொழும்புக் காட்டுப்பகுதி வழியாக செல்வான். அப்பொழுதும் அவனைப் பார்த்து அந்த வேதாளம் சிரிக்கும், என்னவென்று கேட்பான், கதையை சொல்லும் வேதாளம். அது ஆங்கிலத்தில் தலைப்புக் கதையாகவும், கலந்துரை யாடலாகவும் வெளி வரும்.

அதுவரை ஆவலுடன் காத்திருப்போமாக...