1)   ஈழப்போர் மீண்டும் தொடரும் என்கிறார்களே, சாத்தியமா?                                சு.அருணாச்சலம்,தேவகோட்டை

உறுதியாகத் தொடரும்.  உலகத்தில் எந்த ஒரு விடுதலைப் போராட்டமும் தோற்றதில்லை என்பதுதான் வரலாறு.  தனி ஈழத்திற்கான காரணங்கள் அப்படியே உள்ளன.  ஈழத்தமிழர்கள் இன்றும் சொல்லொணாத் துயரத்தில் முள்வேலி முகாமிற்குள் வாழ்வதுபோல் செத்துக் கொண்டிருக்கிறார்கள்.  உரிமைகள் அனைத்தும் மறுக்கப்பட்ட நிலையில் வாழ்விடங்களே இல்லாமல் துரத்தப்படுகிறார்கள்.  இளைஞர்களை தேடித் தேடிக் கொல்கிற நிலை நீடிக்கிறது,  தமிழ்ப் பெண்களை வன்புணர்ச்சி செய்து கலப்பினத்தை உண்டாக்கும் முயற்சி நடைபெறுகிறது.  திக்கு தெரியாமல் கைபிசைந்து நிற்கிறார்கள் ஈழத்தமிழர்கள்.  எனவேதான் இழந்த நிலத்தை மீட்க, இழந்த உரிமைகளை மீட்க நிச்சயம் உரிமைப் போர் தொடரும் என்கிறேன்.

இதுவரை உலக நாடுகளின் ஆதரவு போராளிகளுக்கு இல்லாமல் போனது. அந்நாடுகள் 100 கோடி மக்களைக் கொண்ட இந்தியச் சந்தையை இழக்க விரும்பாமல் இந்திய ஆதரவு நிலையை எடுத்தன.  இந்தியாவோ இலங்கை ஆதரவு நிலையில் இருந்தது. இப்போதும் இருக்கிறது.  இதன் அயலுறவுக் கொள்கையில் மாற்றம் ஏற்படவில்லை.  ஆனாலும் இந்தியா இப்போது ஆப்பசைத்த குரங்கின் நிலையில் உள்ளது.  இந்தியாவைச் சுற்றியுள்ள கப்பல் தளங்கள் சீனர்கள் வசமாகி வருகிறது.  25 ஆயிரம் சீனர்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளது சீனா.  இதில் சிறைக் கைதிகளும் உளவாளிகளும் இருப்பதாகக் கூறுகிறார்கள்.

இலங்கையில் இந்த சீன ஆக்கிரமிப்பு, இந்திய அயலுறவுக் கொள்கையின் தோல்வியையே வெளிப்படுத்து கிறது.  இந்தப் படிப்பினையை மனதில் கொண்டு இந்திய அரசு தன் அயலுறவுக் கொள்கையில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும்.  அப்படி ஏதாவது மாற்றம் வந்தால் அது ஈழத்துக்கு ஆதரவாகப் பயன் தரலாம்.

இது ஒரு புறமிருக்க, எந்த நாட்டு விடுதலைப் போருக்கும் ஒரு பின்புலம் இன்றியமையாத தேவையாக இருக்கிறது.  ஈழப்போரின் பின்புலனாக இருந்திருக்க வேண்டிய தமிழகம், இந்தியாவில் சிறைப்பட்டுக் கிடப்பதனால் ஈழத்துக்கு உதவ இயலாத நிலை நீடிக்கிறது.  நாளை தமிழகமும் விழித்தெழிந்து தன்னுரிமைக்குக் குரல் கொடுக்கத் தொடங்குமானால் ஈழப் போராட்டத்தின் வீச்சு வேறுவிதமாக இருக்கும்.

இப்படி உலகின், அண்டை நாடுகளின் புறச் சூழல் சார்ந்து நிலவுகிறது ஒரு நாட்டின் விடுதலைப் போராட்டம். எப்படியானாலும், ஒடுக்கப் பட்ட மக்களின் உரிமைப் போர் ஒருபோதும் தோற்காது என்பது உறுதி.  அதாவது மக்கள்  போராடித் தங்கள் விடுதலையைப் பெறுவார்கள்.  அல்லது வரலாறு தன் புறச் சூழல்களால் அவர்களை விடுதலை செய்யும்.  அந்த வகையில் அந்த இலக்கை அடைய ஈழப் போர் மீண்டும் தொடரும் என்பதில் கிஞ்சித்தும் சந்தேகம் இல்லை.

 

 

2)செம்மொழி மாநாட்டைப் பற்றி கடும் விமர்சனங்கள் நிலவுகிறதே.  உங்கள் கருத்து என்ன?

-கி. சுந்தரமூர்த்தி, உத்தமபாளையம்

50ஆயிரம் ஆண்டு வரலாறு தமிழினத்திற்கு இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.  இத்தனை ஆண்டுகளில் 50 ஆயிரம் தமிழர்கள் ஒரே நேரத்தில் கொன்று அழிக்கப் பட்டதாக வரலாறு இல்லை.  இது தமிழ் ஈழத்தில் நிகழ்த்தப் பட்டது.  சிறை பிடிக்கப்பட்ட மூன்று லட்சம் தமிழர்களில் 1 லட்சம் மக்கள் முள்வேலி முகாமில் முடங்கி செத்துக் கொண்டிருக்கிறார்கள்.   கண்டிக்க வேண்டிய தமிழினத் தலைவர் முத்தமிழ் அறிஞர்... மூச்சு விடக் காணோம்.  ஒப்புக்கு ‘தபால்’ போட்டுவிட்டு அமைதியாகி விடுகிறார்.  இது தமிழர் நெஞ்சில் ஆறாத நெருப்பாய் எரிமலையாய் பொருமுவதைக் கண்டு இதை எப்படி தணிப்பது என்று சிந்தித்து வடிவமைக்கப்பட்டதுதான் செம்மொழி மாநாடு.

இவற்றின் ஊதுகுழலாக பேராசிரியர் சிவதம்பி அழைக்கப்பட்டார்.  ஈழம் என்பதே சிங்களத்திலிருந்து பெறப்பட்ட சொல் என்றும் இங்கே உள்ள தமிழருக்கு இந்தியா எப்படியோ அதுபோல எனக்கு இலங்கை என்றும் சொன்னதோடு, உலகத் தமிழருக்கெல்லாம் தலைவர் கலைஞர்தான் என்றும் கூறி, எரிகிற தமிழர் நெஞ்சில் நெய்யை ஊற்றிச் சென்றுள்ளார். தமிழறிஞர்கள் நூற்றுக் கணக்கானவர்களைப் புறந்தள்ளி,  கவியரங்கம், கருத்தரங்கம், வழக்காடு மன்றம் என்றும் கேளிக்கையாளர்களைப் பேசவிட்டு அவர்கள் முடியாட்சிக் காலம் போல் மன்னர், இளவரசர், இளவரசியார் புகழ்பாட, குடும்ப உறுப்பினர் சகிதம் கூடிக் களித்து மகிழ்ந்ததுதான் மிச்சம்.

கோடிக்கணக்கான ரூபாயைச் செலவழித்து உலகம் முழுவதும் உள்ள தமிழறிஞர்களை இரண்டாகப் பிரித்தார்கள்.    மற்றபடி தமிழுக்கு என்ன செய்தார்கள்?  தமிழைக் கல்வி மொழியாக்க, ஆட்சி, நீதி நிர்வாக மொழியாக்க என்ன செய்தார்கள்?  நீதிமன்ற மொழியாக தமிழ் வேண்டும் என்று பட்டினிப் போராட்டம் நடத்திய வழக்கறிஞர்களைக் கைது செய்து சிறையலடைத்துவிட்டுத்தானே, செம்மொழி மாநாடு நடந்தது.  ஈழத்தில் தமிழர்கள் படுகொலை.  தமிழகத்தில் உணர்வாளர்களுக்கு வெஞ்சிறை.  அப்புறமென்ன தமிழுக்கு மாநாடு.  இது போதாதென்று செம்மொழி மாநாடு நடத்திய முதலமைச்சருக்கு உலகத் தலைவர்கள் சேர்ந்து பாராட்டு விழா நடத்த இருக்கிறார்கள் என்ற செய்தி வருகிறது.  எதிர்கட்சிகள் கூறுவதுபோல் இது ஒரு தன்னல தம்பட்ட மாநாடுதான்.  இதற்கு விமர்சனமும் கண்டனமும் அல்லாமல் பாராட்டா வரும்?  வேறு என்ன சொல்ல.

Pin It