அக்.2 திருப்பூர் ‘தமிழர் எழுச்சி விழா’வில் இயக்குனர் மணிவண்ணன் ஆற்றிய உரை:

அனைவருக்கும் வணக்கம். மாநாட்டின் நிதி நெருக்கடியை சமாளிக்க தோழர்கள் துண்டேந்தி வருவார்கள் என்று கோவை இராமகிருட்டிணன் கூறினார். இன்னமும் துண்டேந்தி, வசூல் செய்யும் நிலையில் தான், இந்தக் கழகம் இருக்கிறது. இந்தக் கழகத்தின் தலைவராக இருப்பவர் நான் மிகவும் மதிக்கக் கூடிய தோழர் கொளத்தூர் மணி. இப்போது யார் வேண்டுமானாலும் கட்சித் தொடங்கலாம்; தலைவராகலாம் என்ற நிலைக்கு நாடு வந்துவிட்டது. அதுவும் சோதிடரைக் கேட்டு விட்டுத் தான் கட்சியை தொடங்குகிறார்கள். (பலத்த சிரிப்பு) இந்த நிலையில், தெற்கு கருநாடக சிறையில் அடைத்தால் - எல்லோரும் பார்க்க வந்துவிடுவார்கள் என்று, வடக்கு கருநாடக சிறையில் ஒரு சுயமரியாதைக்காரராக ஒரு பகுத்தறிவுவாதியாக இருந்த ஒரே காரணத்தால் அடைக்கப்பட்டவர் கொளத்தூர் மணி.

‘தியாகம்’ என்ற சொல்லில் எனக்கு உடன்பாடில்லை. இந்த சமூகத்தில் பிறந்த மனிதன் சமூகத்துக்காக, உழைக்க வேண்டும் என்று கருதுபவன் நான். ஆனால், துயரங்களைச் சுமந்து கொண்டு சமூகத்துக்கு உழைத்தவர் கொளத்தூர் மணி. அதற்காகக் கடும் விலையைக் கொடுத்தவர். இப்படி, துயரங்களைத் தாங்கி, சமூகத்துக்கு உழைத்தவர்கள் மட்டுமே, இத்தகைய இயக்கங்களுக்குத் தலைமை தாங்க தகுதி படைத்தவர். அந்த வகையில், இந்த இயக்கத்துக்குத் தலைமை தாங்கும் எல்லா தகுதிகளும் கொளத்தூர் மணிக்கு உண்டு. அவருக்கு மீண்டும் என் மரியாதையைப் பதிவு செய்கிறேன்.

நான் இரண்டு திராவிடர் கழகங்களுக்கும், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் செல்லப்பிள்ளை. கம்யூனிஸ்ட் கட்சி மேடைகளில் ஏற்றப்படுகிற ஒரே சினிமாக்காரன் நான் தான். சினிமா மூலம்  இப்போது எனக்கு விளம்பரமும் புகழும் கிடைக்கிறது என்பதால், நான் சினிமாக்காரனாகவே மாறிடவில்லை. நான் திரைப்படத் துறைக்கு வருவதற்கு முன்பு சூலூரிலே என்ன பணியை செய்து கொண்டிருந்தேனோ அதைத் தான் இப்போதும் செய்து கொண்டிருக்கிறேன். அதில் எந்த மாற்றமும் இல்லை. சினிமாப் புகழை வைத்துக் கொண்டு, பெரிய தலைவராக வேண்டும், நாற்காலியைப் பிடிக்க வேண்டும் என்று நினைக்கவில்லை.

திரைப்படத் துறைக்கு வருவதற்கு முன் ஆற்றிய சமுதாயப் பணி அதிகம். அப்போது வேறு வேலை எதுவும் இல்லாமல் இருந்ததால், அப்படி செய்ய முடிந்தது. இப்போது சினிமாவுக்கு வந்த பிறகு, காசு பணம் சேர்ந்த பிறகு, வேலைகள் வந்துவிட்டதால், சமுதாயப் பணி கொஞ்சம் குறைந்திருக்கிறது. அவ்வளவு தான். மற்றபடி திரைப்படத் துறையில் சேருவதற்கு முன்பு இருந்ததைப் போலவே நான் இப்போதும் இருக்கிறேன்.

சினிமாவை வைத்துக் கொண்டு செல்வாக்கு பெற வேண்டும் என்று நான் நினைத்திருந்தால், இந்த மேடைகளை நோக்கி வந்திருக்க மாட்டேன். அரசியல் தலைவராவதற்கு அறிவு வேண்டும் என்ற அவசியமில்லை. இந்தியாவின் மக்கள் தொகை எவ்வளவு என்று தெரியாதவர்கள் எல்லாம் இந்த நாட்டில் அமைச்சர்கள் ஆவதில்லையா? நாட்டில் எத்தனை மாவட்டங்கள் இருக்கிறது என்பதைக் கூடத் தெரியாதவர்கள் மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆவதில்லையா? நினைத்திருந்தால் நான் அரசியலுக்குப் போயிருக்க முடியும். ஆனால், அது என் நோக்கமல்ல. நான் பெரியாரை நோக்கித் தான் வந்தேன். பெரியார் மட்டும் இருந்திருக்கவில்லையானால், நான் மாடு மேய்த்துக் கொண்டிருப்பேன். அல்லது ‘டாலர் சிட்டி’ யான இந்தத் திருப்பூரில், அதிக பட்சமாக ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்திருப்பேன், அவ்வளவு தான்.

பொது வாழ்க்கையில் எளிமையான, நேர்மையான அரசியல்வாதி என்று, மறைந்த கக்கனைத்தான் கூறுவார்கள். இப்போது எளிமையாகவும், தூய்மையாகவும், நேர்மையாகவும், வாழும் கக்கன் நமது தோழர் நல்லக்கண்ணு அவர்கள் தான். பெரியார் இல்லை என்றால், இவரோடு நான் சரிசமமாக மேடையில் அமர்ந்து பேச முடியாது. அதற்கான தகுதியையும் யோக்கியதையும் பெற்றுத் தந்த பெரியார் இயக்க மேடையில் நின்று நான் பேசுகிறேன்.

இதை மணிவண்ணன் என்ற தனிமனிதன் வரலாற்றில் கிடைத்த பெருமையாகவே நான் கருதுகிறேன். மனித மலத்தை மனிதன் சுமக்கும் இழிவு பற்றி, இங்கே அதியமான் பேசினார். இதை எல்லாம், திரைப்படத்தில் காட்டுவார்களா என்றும் அவர் கேட்டார். ‘லண்டன்’ என்று ஒரு படம். அதில், ஒரு வெள்ளைக்காரன் “உனது நாடு எது?” எனக் கேட்பான். இந்தியா என்று சொல்வேன். “திறந்த வெளியைக் கழிவறையாக்கிய நாடு” என்று அவன் சொல்வான். உடனே நான், மனித மலத்தை மனிதனே எடுக்கும் நாடு என்று பேசுவேன். ஆனால், இந்த வசனத்தை தணிக்கையில் வெட்டி விட்டார்கள். அவ்வளவு தான் முடியும்.

வசனம் தான் எங்களால் பேச முடியும். வெட்டியதற்கு அவன் சொன்ன காரணம்தான் வேடிக்கையாக இருந்தது. வெள்ளைக்காரன் பார்த்தால், இந்தியாவைத் தவறாக நினைப்பார்கள் என்றான். வெள்ளைக்காரன் எங்கடா, உன் படத்தைப் பார்க்கப் போகிறான்? நம் நாட்டில் உள்ளவர்களே, படத்தைப் பார்ப்பது இல்லை, இங்கே தொலைக்காட்சித் தொடர்களைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறான், நான் அந்தப் படத்தினுடைய இயக்குநர் அல்ல. எனவே, தணிக்கைக் குழுவிடம் போராடும் உரிமையும் எனக்குக் கிடையாது.

இங்கே சீமான் மிகச் சிறப்பாகப் பேசினார். திரைப்படத் துறையானாலும், மொழிப் பிரச்சினையானாலும், ஈழத் தமிழர் விடுதலையானாலும், பெரியார் கருத்தியலானாலும், என்னோடு, ஒரே சிந்தனை கொண்ட - ஒரே தண்டவாளத்தில் பயணிக்கக் கூடியவராக தோழர் சீமான் இருக்கிறார். அவருக்கு நான் எனது நன்றியைப் பதிவு செய்கிறேன்.

இது மிகவும் பொருத்தமான சிறப்பான விழா. குத்தூசி குருசாமி அவர்கள், பகுத்தறிவைப் பேசுகிறவர்களாலேயே மறைக்கப்படுபவர். தந்தை பெரியார் குத்தூசியைப் பற்றிக் கூறும் போது - “குடிஅரசு, விடுதலையில் ‘குத்தூசி’ என்ற பெயரில் எழுதுவது நான் தான் என்று நினைக்கிறார்கள். குத்தூசி எழுதாவிட்டால், இந்தப் பத்திரிகைகள் எல்லாம் நின்று போய் விடுமோ என்று நான் அச்சப்படுகிறேன்” என்று குறிப்பிட்டதோடு, பெரியாராலேயே பெரியார் என்று அழைக்கப்பட்டவர் குத்தூசி குருசாமி. அவரது விழாவில் பங்கேற்பது எனக்குப் பெருமையாக இருக்கிறது. என்னுடைய மனைவி ஒரு பார்ப்பனப் பெண். என்னடா, பார்ப்பனப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டானே என்று கேட்காதீர்கள். காதலிக்கும்போது அது தெரியவில்லை. கடைசியில் தான் தெரிந்தது. பார்ப்பனர் என்பதற்காகக் காதலைக் கைவிட முடியுமா? ஆனாலும், அவர் பார்ப்பனப் பெண்ணாக வாழவில்லை. கோவையில் வாழக்கூடிய கவுண்டர் சமுதாயத்து பெண்களைப் போல் தான் வாழ்கிறார்.

நான் இரண்டு சம்பவங்களைக் குறிப்பிட விரும்புகிறேன். அதில் ஒன்று எனது குடும்பத்தோடு தொடர்புடையது. நான் பத்தாண்டுகளுக்கு முன்பு, வயிற்றில் ஒரு அறுவை சிகிச்சை செய்து கொண்டு, பாரதிராசா மருத்துவமனையில் இருந்த போது ஒரு சம்பவம் நடந்தது. தியாகராயர் நகரில் சரவணா தெருவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் கீழ்தளத்தில், இரண்டு வீடுகளைக் கொண்ட எனது அலுவலகம் இருக்கிறது. அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் குடியிருந்த எல்லோருமே பார்ப்பனர்கள் தான்.

நாங்கள் மட்டுமே பார்ப்பனரல்லாதவர். அப்போது - இப்போது சிறைக்குப் போயுள்ள ‘அண்ணன் தம்பி’களான காஞ்சிப் பெரியவாளும், சிறியவாளும் ஒவ்வொரு குடியிருப்புக்கும் ஆசி வழங்க வந்தனர். ஒவ்வொரு வீட்டுக்கும் அவர் ‘ஆசி’ வழங்க வந்தால் அதற்கு ரூ.5000 ‘ரேட்’. இது உண்மை. வேண்டுமானால் என் மீது வழக்கு போடட்டும்.

ரசீதைக் காட்டத் தயாராக இருக்கிறேன். அப்போது, அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருக்கும், பிரமிட் நடராசன், மோகன் என்ற இருவரும் என்னை மருத்துவமனையில் சந்தித்து, சங்கராச்சாரி சுவாமிகள் குடியிருப்புக்கு வருவதாகவும், அப்போது அவருடன் வரும் சீடகோடிகள், சற்று நேரம் தங்கி இளைப்பாறுவதற்கு உங்கள் அலுவலகத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாமா என்று கேட்டார்கள்.

“தாராளமாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். வேண்டுமானால், நானே அவர்களுக்கு ‘சரவணாபவன்’ உணவு விடுதியிலிருந்து உணவு ஏற்பாடு செய்து தருகிறேன்” என்று கூறினேன். அதெல்லாம் வேண்டாம்; நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்றார்கள். “சரவணா பவன் சாப்பாடு தானே; அதை நான் செய்யக் கூடாதா” என்றேன். வேண்டாம் என்று சொல்லிவிட்டு, சற்றுத் தயங்கிக் கொண்டே இருந்தார்கள். என்ன தயங்குகிறீர்கள் என்று கேட்டேன். என்னுடைய அலுவலகத்தில் கடவுள் படங்களே கிடையாது. இரண்டு படங்களை மட்டுமே மாட்டியிருக்கிறேன். ஒன்று, எம்.ஜி.ஆர். படம். காரணம், திரைப்பட நடிகர்களுக்கு அவர்தான் மரியாதையைத் தேடித் தந்தவர். மற்றொரு முக்கிய காரணம், ஈழத் தமிழர்களுக்கு தமிழ் தமிழன் என்று பேசிக் கொண்டிருப்பவர்களைவிட, எம்.ஜி.ஆர். ஒரு தமிழனாகப் பிறக்காவிட்டாலும் பெருமளவுக்கு உதவியவர். அவரை ஒரு ‘புரட்சித் தலைவர்’ என்று நான் கருதாவிட்டாலும், மகத்தான மனிதராக நினைக்கிறேன். அதனால் அவர் படத்தை மாட்டி வைத்துள்ளேன்.

மற்றொன்று தந்தை பெரியார் படம். என்னைப் பார்க்க வந்த பார்ப்பனர்கள், மிகவும் தயங்கி நின்றது, பெரியார் படத்துக்காகத் தான். “சாமிகள் சங்கடப்படாமல் இருக்க வேண்டும். அதனாலே, பெரியார் படத்தை மட்டும் அப்புறப்படுத்த முடியுமா?” என்று என்னிடம் கேட்டார்கள். எனக்கு கோபம் வந்து விட்டது. “என்ன அய்யரே; நீங்கள் பேசுவது நாகரீகமாக இருக்கிறதா? நீங்கள் என்னை உங்கள் வீட்டுக்கு சாப்பிட அழைக்கிறீர்கள்; அப்போது, உங்கள் வீட்டில் மாட்டியுள்ள அப்பா படத்தை எடுக்க முடியுமா என்று நான் கேட்டால் எப்படி இருக்கும்? இப்படி நீங்கள் கேட்பது நியாயம் தானா? எங்களுடைய அலுவலகத்தில் எது எது எந்தெந்த இடத்தில் இருக்கிறதோ, அவை அப்படியே தான் இருக்கும். ஆனால், வருகிற விருந்தினருக்கு உரிய அனைத்து மரியாதையையும தருவேன்” என்று கூறினேன். என்னுடைய சுயமரியாதையைச் சீண்டாதீர்கள் என்றேன். அதற்குப் பிறகும் அவர்கள் அங்கே தான் தங்கினார்கள். அவர்களுக்கு இடம் தானே முக்கியம்.

என்னுடைய அம்மாவும், மனைவியும் என்னிடம் வந்து “நமது குடியிருப்புக்கே சாமிகள் வருவதால், நாங்களும் போய் பார்த்து வருகிறோம்; உனக்கும் உடல் நிலை சரியில்லாமல் இருக்கிறது” என்றார்கள். என்னுடைய அம்மாவுக்கு பக்தி எல்லாம் உண்டு. அப்படி எல்லாம் குடும்பத்தை நான் திருத்தி விட்டதாகக் கூற முடியாது. “எனது உடல்நிலை பற்றி, டாக்டரிடம் கேட்டால் தெரியும்; சாமியாருக்கு என்ன தெரியும்; சரி; உங்கள் விருப்பம்” என்று கூறி விட்டேன். சங்கராச்சாரியைப் பார்த்துவிட்டு என் மனைவி, மிகவும், நொந்து போய் திரும்பினார். மடிசார் கட்டிய பார்ப்பனப் பெண்களையும், பஞ்ச கச்சம் கட்டி பூணூல் அணிந்த பார்ப்பனர்களையும் தொட்டு ஆசி வழங்கினார். எங்களைப் பார்த்தவுடன் தூர இருந்தே ஆசி வழங்கி விட்டார். ரொம்ப மோசம்” என்றார். “அதைத் தானே நாங்கள் 50 ஆண்டுகளாகக் கூறி வருகிறோம்; அது சரி, நீயும் பார்ப்பனப் பெண் தானே” என்று கேட்டேன். “நான் மடிசார் கட்டிப் போகவில்லையே” என்றார்.

“மடிசார், பஞ்ச கச்சம் கட்டிப் போனால் தான், பார்ப்பனர்கள் என்று கண்டுபிடிக்க ஞானம் தேவை இல்லையே; அந்தக் கோலத்தோடு வராவிட்டாலும்கூட, உண்மையான பார்ப்பனர்கள் யார் என்பதைக் கண்டுபிடிப்பது தானே ‘ஞானம்’? அவருக்கு ‘ஞானம்’ இருந்திருந்தால், மடிசார் கட்டாமலேயே உன்னைப் பார்ப்பனர் என்று கண்டு பிடித்திருக்க வேண்டுமே! தோற்றத்தைப் பார்த்துக் கண்டுபிடிப்பதற்கு, ஒரு சாதாரண மனிதனே போதுமே! இதற்காக காஞ்சிபுரத்திலிருந்து, நான்கு வேதங்களையும் கரைத்துக் குடித்தவனா வரவேண்டும்? உண்மையைக் கண்டறியாதவன் எப்படி ஞானியாக இருக்க முடியும்?” என்று கேட்டேன். அப்போதே நான் சொன்னேன், இவர்கள் மோசடிக்காரர்கள். எப்போதாவது, ஒரு நாள் சிறைக்குப் போவார்கள் என்றேன். அதுதான் நடந்தது.

மற்றொரு சம்பவம் ‘காமெடி தலையன்’ புட்டபர்த்தி சாய்பாபாவைப் பற்றியது. இது மதச்சார்பற்ற நாடு. ஆனால் மதச்சார்பற்ற நாட்டின், பிரதமர்களும், குடியரசுத் தலைவர்களும், ’இந்து’ மதத்தைச் சார்ந்த புட்டபர்த்தி சாய்பாபாவின் காலடியில் போய் விழும் கேவலங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. நாம் சுயமரியாதையை இழந்து, இந்த கேவலங்களை அனுமதித்துக் கொண்டிருக்கிறோம். நமது மக்கள் மடையர்களாக இருப்பதால் தானே இது நடக்கிறது? இதை சுட்டிக்காட்டி கண்டிக்காமல், ஒதுங்கி நிற்க முடியாது. சுட்டிக் காட்டியேயாக வேண்டும். அந்த புட்டபர்த்தி ஆசிரமத்திலேயே கொலைகள் நடந்தது. அதை எல்லாம் மூடி மறைத்து விட்டார்கள். அதே போல், இந்த சங்கராச்சாரி மீதான கொலை வழக்குகளும் ஆகலாம். நாம் ஒன்றும் சொல்வதற்கு இல்லை.

ஒரு முறை டெல்லியிலிருந்து, ஜெட் விமானத்தில் நானும், ஒளிப்பதிவாளர் ராஜிவ் மேனனும் வந்து கொண்டிருந்தோம். ராஜிவ் மேனன், தீவிரமான கடவுள் மறுப்பாளர். துணிவோடு, எதிர்த்து வாதாடுவார். எங்களோடு விமானத்தில், அமெரிக்காவிலிருந்து ‘டெக்சாஸ்’ மாநிலத்திலிருந்து ஒரு புட்டபர்த்தி சாய்பாபா சீடரும் வந்தார். அவரது பெற்றோர்கள் இந்தியாவில் தான் இருக்கிறார்கள். அவர் ஒரு மலையாளி. பாபாவை தரிசித்து விட்டு, உடனே அமெரிக்கா திரும்ப விரும்புவதாகவும், தனது பெற்றோர்களைக்கூட பார்க்கப் போவதில்லை என்றும் அவர் கூறினார். மற்றொரு மலையாளி, அமைதியாகப் புத்தகம் ஒன்றைப் படித்துக் கொண்டு வந்தார்.

மூன்று மலையாளிகளும் பேசிக் கொண்டு வந்தனர். அப்பா அம்மாவைப் பார்க்க விரும்பாமல் சாய்பாபாவைப் பார்க்க வந்திருக்கிறார், அந்த மனிதர். ராஜிவ் மேனன், சாய்பாபா லிங்கம் எடுக்கும், விபூதி வரவழைக்கும் மோசடிகளை எல்லாம் மலையாளத்திலே அவரிடம் விளக்கிக் கூறினார். உடனே அந்த சாய்பாபா சீடர், “சரி, அப்படியானால், தன்னை தரிசிக்க வந்த சீடர்களை, சாய்பாபா பெயர் சொல்லி அழைக்கிறாரே, அது எப்படி முடியும்” என்று கேட்டார். உடனே, அமைதியாக புத்தகம் படித்து வந்த மலையாளி, “அது எனக்குத் தெரியும். புட்டபர்த்தியில் நான் அந்த வேலையைத் தான் செய்து வந்தேன்.

எனக்கு விருப்பமில்லாததால், நானே விலகி வந்து விட்டேன்” என்று கூறி, அந்த ரகசியத்தை அவர் அம்பலப்படுத்தினார். ஆசிரமத்துக்கு வரும் சீடர்களிடம் - குறைந்த கட்டணத்தில் தங்குமிடங்களை ஏற்பாடு செய்வதாகக் கூறி, சாய்பாபா ஆட்கள், அவர்களிடம் நைசாகப் பேசி, அவர்களின் பெயர் மற்றும் பிரச்சினைகளைக் கேட்டு, பதிவு செய்கிறார்கள். இந்த விவரங்கள் சாய்பாபாவிடம் முன் கூட்டியே ரகசியமாகப் போய் விடுகின்றன. பக்தர்கள் கூட்டத்தில் - சாய்பாபா வரும் போது, சாய்பாபா ஆட்கள், தாம் தகவல் சேகரித்த ஆட்களின் தோள் மீது வைக்க, உடனே சாய்பாபா, ஏற்கனவே தன்னிடம் வந்து சேர்ந்த தகவல் அடிப்படையில் பெயர் சொல்லி அழைத்து, பிரச்சினைகளையும் கூறவே, சீடர் வியந்து போகிறார். இது தான் நடக்கிறது” என்று அவர் விளக்கினார்.

இதைச் சொன்னவர், நுண்ணுயிர்த் துறையில் ஒரு விஞ்ஞானியாக டெல்லியில் பணியாற்றிக் கொண்டிருப்பவர். ஏற்கனவே சாய்பாபாவின் சீடராக இருந்து, இந்த வேலைகளைச் செய்து கொண்டிருந்தவர். இப்படித் தான் சாமியார்கள் பல ஆண்டுகாலமாக நம்மை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதைத் தான் பெரியாரும் சுட்டிக் காட்டினார். கடவுள் நம்பிக்கையாளர்களை விட, அந்த நம்பிக்கையைப் பயன்படுத்தி மோசடி செய்கிறவர்கள் தான், மிக மோசமானவர்கள். தான் வாழும் சமூகமோ, குடும்பமோ, தனது பிரச்சினைகளைத் தீர்க்க முடியாத போது, இதயமில்லாத இந்த சமூகத்தில், இதயமுள்ளவன் தேடி அலைவதாகக் கடவுள் இருக்கிறது என்ற கருத்தை காரல்மார்க்ஸ் கூறுகிறார். எனவே விரக்தியில் ஒரு நம்பிக்கையைத் தேடுகிறவர்கள் கடவுளை நோக்கிப் போகிறார்கள். ஆனால், நம்பிக்கையைப் பயன்படுத்தி, மோசடி செய்கிறவர்கள் தான், மிக மோசமாகக் கண்டிக்கப்பட வேண்டியவர்கள்.

இன்று உலக மக்களுக்கு பெரும் எதிரியாகவும் - தடையாகவும் இருப்பது அமெரிக்கா தான். சுனாமி இந்தியாவைத் தாக்கப் போகிறது என்பது நான்கு மணி நேரத்துக்கு முன்பே அமெரிக்ககாரனுக்குத் தெரியும். ஆனால் உள்துறை அமைச்சகத்தோடு தொடர்பு கொள்ள முடியாததால், முன்கூட்டியே எச்சரிக்க முடியவில்லை என்கிறான். உள்துறை அமைச்சரோடு தொடர்பு கொண்டு அமெரிக்ககாரன் பேச முடியாமல் போய் விடுமா என்ன? இது அமெரிக்ககாரனின் சூழ்ச்சி.

இந்தத் திருப்பூர் - டாலர் நகரில் - தொழில் வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. வேலை வாய்ப்பு கிடைக்கிறது. உண்மை தான். ஆனால் யாருக்குப் பயன்? பணக்காரர்கள் தான் பயனடைகிறார்கள். இங்கே வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு நிச்சயமாக நீண்ட ஆயுள் கிடையாது. நச்சுச் சூழலில் அவர்கள் வேலை செய்ய வேண்டியிருக்கிறது. தேவகவுடா காலத்திலிருந்து, கருநாடகத்திலிருந்து தண்ணீரைத் திறந்துவிடு என்று நாம் போராடுகிறோம்.

ஆனால் அணையைத் திறந்துவிடாதே என்று, போராட வேண்டிய ஒரே நகரம் திருப்பூர் தான். சாயக் கழிவு நீர் தேங்கி நிற்கும் ஒரத்துப்பாளையம் அணையைத் திறந்து விட்டால், நச்சு பரவி நீர் நிலைகளைக் கெடுத்துவிடும் ஆபத்து. தொழில் வளருகிறது என்பது உண்மை தான்; ஆனால் நச்சுத் தன்மையைப் பரவவிட்டு வளருகிறது. அமெரிக்ககாரன், இப்படி சுற்றுச்சூழலைச் கெடுக்கும் தொழிற்சாலைகளைத் தனது நாட்டில் அனுமதிப்பது இல்லை. அவைகளை இங்கே தள்ளி விடுகிறான்.

நாம் தயாரித்த பிறகு, பொருளாக வாங்கிக் கொள்கிறான். இந்த அமெரிக்க சுரண்டலை நாம் எதிர்க்க வேண்டுமானால், நாம் சுயமரியாதை உணர்வைப் பெற வேண்டும். நம்முடைய நாட்டில் ஒரு காலத்தில் சுயமரியாதை - பகுத்தறிவைப் பேசியவர்கள் எல்லாம் இப்போது சோரம் போய் விட்டார்கள். உலகத்திலே இன்று சுயமரியாதையைப் பற்றி பேசுகிறார்கள் யார் தெரியுமா? மெக்சிக்கோ நாட்டுக்காரன் பேசுகிறான். அவன் முழக்கம் சுயமரியாதை முழக்கமாகவும், பகுத்தறிவு முழக்கமாகவும் இருக்கிறது.

நண்பர் விஜயகாந்த் திடீர் என்று கட்சி ஆரம்பித்து பெரியார் சிலைக்கு மாலை போடுகிறார்! பெரியாரும் அவரும் ஒரே சாதியில் பிறந்தவர்கள் என்பதைத் தவிர அவருக்கும் பெரியாருக்கும் என்ன உறவு? சோதிடக்காரன் சொன்னதைக் கேட்டு - அண்ணா, அம்பேத்கர் என்று பார்க்கிற சிலைகள் எல்லாவற்றுக்குமே மாலை போடுகிறார். மதுரை மீனாட்சிக்குக் கூட மாலை போடுவார். ஆனால், அர்ச்சகப் பார்ப்பான் அவரை உள்ளே விட மாட்டான். அதனால் தான் போடவில்லை. ஒரு கட்சியைத் துவக்கினால், அதற்கு ஒரு நோக்கம் இருக்க வேண்டாமா? ஒரு தேசம், தேசத்தில் வாழும் இனம், அவர்களின் மொழி, அதற்கு எழும் பிரச்சினைகள், அந்தப் பிரச்சினையை வென்றெடுக்கவே கட்சிகள் துவக்கப்பட வேண்டும்.

இன்றைக்கு ஈழத்திலே - ஒரு விடுதலை இயக்கம், ஈழத் தமிழர்களின் விடுதலைக்காகத் துவக்கப்பட்ட இயக்கம் - இன்று மிகப் பெரும் வளர்ச்சியைப் பெற்றுள்ளது. ஒரு துப்பாக்கி வாங்குவதற்கான காசு கூட இல்லாமல் துவக்கப்பட்ட இயக்கம் தான், இன்று உலகத்திலே உள்ள ராணுவ விற்பன்னர்கள் எல்லோரும் மூக்கில் மீது விரலை வைத்து அதிசயப்படத்தக்க அளவுக்கு சொந்தத்தில் விமானம் வைத்திருக்கிறார்களாமே, கப்பல் வைத்திருக்கிறார்களாமே என்று அதிசயப்படும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது. எப்படி வளர முடிந்தது? அவர்களுக்கு ஒரு இனத்தின் விடுதலை என்ற லட்சிம் இருக்கிறது. ‘உயிர் என்னடா மயிர்’ என்று உயிரைத் தியாகம் செய்யக்கூடிய சாகத் தயாராக உள்ள இளைஞர்கள் வந்தார்கள். அதனால் அந்த இயக்கம் வளர முடிந்தது.

இன்றைக்கு தமிழ் சினிமாவை வாழ வைப்பதுகூட உலகம் முழுதும் உள்ள ஈழத்தமிழர்கள் தான் என்பதை நான் உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். இன்று ரகுமானோ, சங்கரோ, மிக அதிக சம்பளம் வாங்குகிறார்கள் என்றால், அதற்குக் காரணம் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் அல்ல. அய்ரோப்பாவிலும், கனடாவிலும், ஆஸ்திரேலியாவிலும், அமெரிக்காவிலும் வாழும் ஈழத் தமிழர்கள் - டாலரில் செலவு செய்து, தமிழ்ப்படம் பார்ப்பதால் தான், இயக்குனர்களுக்கு இவ்வளவு சம்பளம் கிடைக்கிறது. ஈழத் தமிழர்கள் திரைப்படம் பார்ப்பதை நிறுத்தி விட்டால் நானெல்லாம் நடுத்தெருவில் தான் நிற்க வேண்டும்; இதுதான் உண்மை. ஈழத் தமிழன் தான் தமிழ் சினிமாவையும் காப்பாற்றுகிறான். தமிழ் மொழியையும் காப்பாற்றுகிறான்.

எனவே சீமான் குறிப்பிட்டதுபோல், கடைசி ஈழத் தமிழன் இருக்கும் வரை, தமிழ் அழியாது. அதற்காக, தமிழனாகப் பிறந்த நாம், கை கட்டி வேடிக்கை பார்க்கலாமா? நமக்குக் கடமைகள் கிடையாதா? எனக்கு, தமிழ் ஒன்றும் கடவுள் இல்லை. அது தமிழனின் வாழ்க்கைக்கான அடையாளம். அப்படித்தான் நான் பார்க்கிறேன். நான் தெலுங்கனாகவோ, மலையாளியாகவோ, குஜராத்தியாகவோ பிறந்திருந்தால், இதே உணர்ச்சியோடு அந்த மொழிகளுக்காகப் போராடி இருப்பேன். அவ்வளவு தான்.

தமிழன் என்ற அடையாளத்தை நாம் இழந்துவிட்டால் என்னவாகும்? திருச்சி பேருந்து நிலையத்திலே கழிப்பறையை ஏலம் எடுத்திருப்பவன் ஒரு மார்வாடி. தமிழன், வெளியே மூத்திரம் பெய்தால், மார்வாடி ஆட்கள் வந்து அடிக்கிறான். வீதியிலே மூத்திரம் பெய்யாதே என்பதற்காக அவன் அடிக்கவில்லை. கழிவறைக்குள் கட்டணம் செலுத்தி விட்டுப் போ என்று அடிக்கிறான். எனவே, மார்வாடியின் அனுமதியோடு, அவன் தயவின்றி, தமிழன் மூத்திரம்கூட பெய்ய முடியாது என்ற நிலை வந்துவிட்டது. பார்ப்பன-பனியாக்களின் ஆதிக்கம் வேகமாக வளர்ந்து வருகிறது. இன்று தொழிற்துறைகள் எல்லாம் யாரிடம் இருக்கின்றன? திரைப்படத் துறையே இன்று மார்வாடிகளிடம் தான் இருக்கிறது.

ஒருநாள் ஓட்டல் ஒன்றில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. மகேந்திரன் என்ற மார்வாடி, காஜா மொய்தீன் என்ற தயாரிப்பாளருக்கு, கடன் கொடுத்திருந்தார். படப் பிடிப்பில் நடிக்க வந்தவர்களும் மார்வாடிகள். படப்பிடிப்பு முடிந்தவுடன், மார்வாடி கடனாகக் கொடுத்த பணத்தை, படத்தில் நடித்த மார்வாடிகளே, ‘வவுச்சரில்’ கையெழுத்துப் போட்டு, வாங்கிக் கொண்டு போய் விட்டார்கள். மார்வாடிகள் கடனாகக் கொடுத்த பணம் மார்வடிகளிடமே போய் விடுகிறது. வட்டி மட்டும் தான் நாம் கட்டுகிறோம்.

இதைச் சொன்னால், இந்தி படித்தால் தானே வேலை கிடைக்கும் என்கிறான். எனக்கு சிரிப்பாக இருக்கிறது. இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்றால், ஏன்டா, வடநாட்டிலிருந்து இங்கு வந்து பேல்பூரி விக்கிறான்? இனிப்பு விக்கிறான்? இதை விடுதலை இராசேந்திரன் தான், தொலைக்காட்சியில் நடந்த ஒரு விவாதத்தில் கேட்டார். எனக்கு பல ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் நான் விடுதலை இராசேந்திரனின் ரசிகன். அவர், தொலைக்காட்சியில் ‘நேருக்கு நேர்’ நிகழ்ச்சியில் வந்து விட்டால், உடனே நான் போய் தொலைக்காட்சி முன்பு உட்கார்ந்துவிடுவேன். கிழி கிழி என்று கிழிப்பார். இவரை பேச விடாம என்னென்னமோ செய்து பார்ப்பானுங்க; எதுக்கும் அசர மாட்டார். அவனுங்க அப்படியே மாத்திடுவானுங்க. இவர் விடவே மாட்டார். இப்படி இரண்டு பேர் இருக்கிறதால தான், எதிரிகளுக்கு சரியான பதிலடி தர முடியுது. தோழர் இராம கிருட்டிணன் கூட, பேசிக் கொண்டிருக்கும் போது, ஒரு அருமையான கருத்தைச் சொன்னார். பெரியார், ஒரு 15 வருடம் 20 வருடம் தள்ளிப் பிறந்திருந்தால், இப்போது உயிருடன் இருந்திருப்பார். இப்போது உயிருடன் இருந்திருந்தால் தொலைக்காட்சிக்கும் வந்திருப்பார் என்று சொன்னார்; எவ்வளவு அருமையான கருத்து!

காலம் முழுதும் பெண்களுக்காக உழைத்தவர் தந்தை பெரியார். இப்போது பெண்களுக்கு இடஒதுக்கீடு பற்றி பேசுகிறார்கள். எல்லாம் ஓட்டுக்காகத்தான். உண்மையாக பார்ப்பனப் பெண்களுக்கும் சேர்த்துத் தான் சம உரிமை கிடைக்க வேண்டும் என்று குரல் கொடுத்தவர் தந்தை பெரியார். ஆனால், பெண்களுக்காக அவர் சிந்தித்தார். பெண்களுக்காகத்தான் போராடினார் என்பது பெண்களுக்கே தெரியாது. அதுதான் சோகம். பெரியாரை ‘பார்ப்பன எதிர்ப்பாளர்’ என்ற ஒற்றை அடையாளத்துடன் மட்டுமே புரிந்து கொண்டிருக்கிறார்கள். அவர் மானுட உரிமையாளர். இவரின் பல்வேறு கொள்கைப் பரிமாணங்களும் மக்களிடையே போய்ச் சேர வேண்டுமானால், இது போன்ற ‘குடி அரசு’ தொகுப்புகளை வெளியிடுவதைத் தவிர வேறு வழி இல்லை.

பெரியார் இறந்துவிட்டார் என்பதற்காக - நாம் அழுது கண்ணீர் வடித்துக் கொண்டு உட்கார்ந்திருக்க முடியாது. வருடத்துக்கு இரண்டுமுறை அவரது சிலைக்கு மாலை அணிவித்ததோடு வேலை முடிந்து விட்டதாகக் கருதக் கூடாது. அவரது கருத்துகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். நான் குத்தூசியின் நூல்களை ஏற்கனவே வாங்கி விட்டேன். வீட்டில், எனது மனைவியிடம், அந்தக் கட்டுரைகளைப் படித்துக் காட்டுவேன். அவர் அதைக் கேட்டு சிரித்து, கருத்துகளை உள்வாங்கிக் கொள்வார். அவர் சிரிப்பதைப் பார்த்து, கருத்தை உள்வாங்கிக் கொள்கிறார் என்றே நான் கருதுகிறேன். அதற்குப் பிறகு கோயிலுக்குப் போவதும், ஓரளவு என் மனைவியுடம் குறைந்திருக்கிறது.

பெரியார் சொன்னது போல் - நாம் பார்ப்பனியத்தையும், கடவுளையும் அவ்வளவு எளிதில் விரட்டிவிட முடியாது. அவைகள் எல்லாம் நமக்கும் ‘சீனியர்’. அவன் 2000 வருடமாக இதை வைத்துக் குப்பைக் கொட்டிக் கொண்டிருக்கிறான். பார்ப்பனியம் என்ற கருத்தியலை நிலைநிறுத்துவதற்கு, தன்னுடைய தத்துவம் - சித்தாந்தம், வாழ்க்கை முறையைக் காப்பாற்றுவதற்காக அவன் ஒரு நிறுவனத்தையே உருவாக்கி வைத்திருக்கிறான். இதுதான் கோயில், அதற்கு முழு நேர ஊழியர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தான் அர்ச்சகர்கள், பூசாரிகள். அவர்களுக்கு மாதம் மாதம் சம்பளம், சாப்பாடு, வாழ்க்கைக்கான உத்திரவாதங்கள் தரப்படுகின்றன. முழுமையான கட்டமைப்போடு அது இயங்கி வருகிறது. ஆனால், நாம் நமது வாழ்க்கை, தொழில், எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு, ஓய்வு நேரத்தில் தான் இந்தப் பணிகளை செய்ய முடிகிறது. அது போதாது, நாம் கம்யூனிஸ்ட் கட்சிகளைப் போல, முழு நேர ஊழியர்களை, ஆங்காங்கே உருவாக்க வேண்டும். (கைதட்டல்) அவர்கள் - இந்தப் புத்தகங்களை நாம் வாழுகிற பகுதியில் மக்களிடம் போய் படிக்க வேண்டும். இந்தப் புத்தகங்களை வாங்கி, நமது புத்தக அலமாரியில் வைத்து விட்டால் போதாது. மணிவண்ணன், இத்தகைய புத்தகங்களைக்கூட படிக்கிறார் என்ற பெருமைக்காக, இந்த நூல்கள் பயன்படக் கூடாது. இதன் கருத்துகள் மக்களிடம் போய்ச் சேர வேண்டும்.

ஒவ்வொரு நாளும் இரண்டு அல்லது மூன்று கட்டுரைகளைப் படித்தால், அதைப் படிக்கக் கேட்பவர்கள், மீண்டும் கேட்க விரும்புவார்கள். நாம், அந்தக் கட்டுரைகள், எந்தக் காலத்தில் எந்தச் சூழ்நிலையில் எழுதப்பட்டது என்பதை, எடுத்துக் கூற வேண்டும். அப்போது தான் கடந்த காலத்தில், இந்த தேசத்தில் என்ன நடந்தது என்ற வரலாறு அவர்களுக்கு தெரியும். தமிழன் என்றால் யார் என்ற வரலாறு புரியும். இப்போது, தமிழ், தமிழன் என்று பேசினாலே ‘தீவிரவாதி’ என்கிறான். ‘நக்சலைட்’ என்கிறான். பிரிவினைவாதி என்கிறான். இப்போது மணிப்பூர், அசாம், நாகாலாந்துக்காரர்கள் எல்லாம் தனி நாடு கேட்டுப் போராடுகிறார்கள். அவர்கள் எல்லாம் பிரிந்து போய் விட்டாலே, பிறகு நாம் தனியாகத்தானே இருக்க வேண்டும்? அதுதான் நடக்கப் போகிறது. இது வரலாற்று உண்மை. ஏனென்றால் நாங்கள், ‘இந்தியனாகப்’ பிறக்கவில்லை. தமிழனாகத்தான் பிறந்தோம். எனவே நாங்கள் தமிழனாகத்தான் இருப்போம். நாங்கள் எப்போது ‘இந்தியனாக’ப் பிறந்தோம்?

வெள்ளைக்காரர்கள் வசதிக்காக நாங்கள் ‘இந்தியர்கள்’ ஆக்கப்பட்டோம். இப்போது, இந்தப் பார்ப்பனர் - பனியா நலனுக்காக இந்தியர்களாக இருக்கிறோம். அவர்களுடைய தொழில் - வர்த்தகத்துக்கு இடையூறுகள் வந்துவிடக் கூடாது என்பதற்காக. இந்தியாகளாக நாம் வாழ்கிறோம்; இவர்கள் வசதிக்கும் வாழ்வுக்கும் நாம் இந்தியர்களாக இருக்க வேண்டியிருக்கிறது. அமெரிக்காகாரன் - இப்போது, நம்நாட்டு வேம்புக்குக்கூட, உரிமை கோருகிறான்.

நான் 13 தடவை அமெரிக்காவுக்கு போயிருக்கிறேன். அங்கு ஒரு வேப்ப மரம்கூட கிடையாது. ஆனால், நமது நாட்டு வேம்புக்கு, அமெரிக்காகாரன் ‘காப்பீட்டு உரிமை’ வாங்கி வைத்திருக்கிறான். வேப்பமரமே இல்லாத ஒரு தேசத்துக்காரன், அதற்கு உரிமை கோருகிறானே. இதை டெல்லியில் உள்ள நமது ஆட்சியாளர்கள் தட்டிக் கேட்க வேண்டாமா? நம்முடைய தாயிடமிருந்து நாம் பால் குடிக்க, மாற்றானிடம் போய் நாம் அனுமதி கேட்க வேண்டுமா? இந்த சூழ்நிலையை நாம் மாற்றி அமைக்க வேண்டும்; மீட்டெடுக்க வேண்டும்: அதற்கு நாம் என்ன செய்யப் போகிறோம்?

எனக்கு 51 வயதாகிவிட்டது. இன்னும் அதிகமாக 20 ஆண்டுகள் வாழலாம். அதுவே எனது பேராசை தான். ஆனால், இந்தக் காலத்துக்குள் நம்மை வாழ வைத்த சமூகத்துக்கு நாம் என்ன செய்யப் போகிறோம்? அதற்குத் தான், இந்தக் கூட்டங்களுக்கு வருகிறோம். இல்லாவிட்டால் ஏற்கனவே சொன்னதுபோல் துண்டு போடும் கூட்டங்களுக்குப் போயிருப்பேன். ஆனால், அந்த சூழ்ச்சி எல்லாம் நமக்குத் தெரியாது. நான் நேர்மையாக இருக்கிறேன்; பெரியார் கொள்கைகளை நேசிக்கிறேன்; அதனாலே அய்யாவினுடைய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறேன்; முழு நேர ஊழியர்களை நியமிப்பது என்றால் கடினம் தான். அதற்குப் பொருளாதார வசதிகள் வேண்டும்; அதற்குத் திட்டமிட வேண்டும்; அப்படியெல்லாம் திட்டமிட்டு பணியாற்றினால்தான், நம்முடைய காலத்திலாவது, சாமியார்களை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வைத்தக் கொள்ளலாம். அவர்களை முற்றாக ஒழிக்க முடியா விட்டாலும், கட்டுப்பாட்டிலாவது வைத்திருக்கலாம்.

சாமியைப் பற்றி, திரைப்படத்தில் ஏதாவது பேசினால், விடமாட்டேன் என்கிறார் ராமகோபாலன். இது என்ன அயோக்கியத்தனம்! அவர், பத்தாயிரம் விளக்கை ஏற்றி, பூசை நடத்துகிறாரே, அங்கே போய் நான் ஏதாவது பேசினேனா? உனக்கு உன் கருத்தைப் பரப்ப உரிமை இருக்கும்போது, எனக்கு என் கருத்தைப் பேச உரிமை கிடையாதா?

இப்போதுகூட ‘மஜா’ என்று ஒரு படம்! தலைப்பு எப்படி இருக்குது? (சிரிப்பு) அதிலே, நடிகர் வடிவேலுவை, ஆட்களை வைத்து அடித்துத் தூக்குவதாக ஒரு காட்சி. அப்போது, வடிவேலு அய்யா, அய்யா... என்று கத்துவார். அப்போது நான் சொல்வேன், “டேய்! என்னடா ஊருக்கு ஊரு அய்யா என்கிறீங்க...இருப்பது ஒரே அய்யா தான்டா; அவரும் போயிட்டார்டா, போடா” என்பேன். இது உங்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன். ‘அமைதிப்படை’ படத்தில் ஒரு வசனம் வரும் - சத்தியராஜிடம் நான் பேசுவேன், ‘டேய் கருமம்; இந்தக் கடவுளைத்தான் கண்டுபிடிச்சான். இந்த சாதியைக் கண்டுபிடிச்சவன் யாருடா?” என்று கேட்பேன். அதுவா, இந்த மணியாட்டுறவன்தான் கண்டுபிடிச்சான் என்று, அவர் சொல்வார். உடனே, நீங்கள் இந்துக்களைத்தானே விமர்சனம் செய்கிறீர்கள்? இஸ்லாமியர்களையோ, கிறிஸ்தவர்களையோ, விமர்சிக்கிறீர்களா என்று கேட்கிறார்கள். இஸ்லாமியர்கள் நபியை ஏற்றுக் கொண்டவர்கள் எல்லாம், மெக்காவிலிருந்தும், மெதினாவிலிருந்துமா வந்தார்கள்? கிறிஸ்துவை வணங்குகிறவர்கள் எல்லாம், ஜெருசலத்திலிருந்தா வந்தார்கள்? ஜார்ஜ்புஷ் பங்காளிகளா? அவர்கள் எல்லாம் நம்ம ஆளு தானப்பா! உன் தொல்லை தாங்காமல் தானே அங்கே போனான்? (கைதட்டல்)

நீ அவன் காலிலே மூத்திரமடிச்சிட்டிருந்த! எத்தனை நாள்தான், அவன் ஈரத்தோட நடந்திட்டுருப்பான். போடான்னு சொல்லிட்டு, வேற மதத்துக்குப் போயிட்டான். நீ ஏன் இந்து... இந்துன்னு அலறுரே! நான் ‘இந்து’ என்று உன்கிட்டே சொன்னேனா? நான் மனுசன்டா? நான் இந்துவும் இல்ல, கிறிஸ்தவனும் இல்ல, முஸ்லீமும் இல்ல, மனிதன்! நான் மனிதனை மனிதனாக்க வேண்டும் என்று விரும்புகிறவன். அதற்காகப் போராட வேண்டும் என்று கருதுபவன். சரி, நீ, இஸ்லாமியனையும், கிறிஸ்துவனையும் ‘இந்து’வாக்க வேண்டும் என்கிறாய். அப்படி அவன் இந்துவானால், எந்த சாதியில் சேர்ப்பாய்? எல்லோரும் போய் - முஸ்லீம்களிடம் கெஞ்சி கூத்தாடி, இந்துவாக மாறுங்கள் என்று கேட்போம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது, அவர்களை நீ எந்த சாதியில் சேர்ப்பாய். இப்போது மாநாடு நடத்தப் போகிறார்களாம்; இந்துக்கள் சிறுபான்மையாகிவிட்டார்களாம்; சொல்கிறார்கள். அதற்காக மாநாடு நடத்தப் போகிறார்களாம்.

கிறித்தவர்களையும், முஸ்லிம்களையும் ‘இந்து’வாக்கி விட்டால், மெஜாரிட்டியாகி விடலாம் என்கிறார்கள். சரி, நீயே சாதிகளையும், சாதிக்குள் சாதியையும் பிரித்து வைத்துக் கொண்டு ‘மைனாரிட்டி’ ஆகிவிட்டதாகக் கூறுவதில் ஏதேனும் அர்த்தமிருக்கிறதா? நீ மைனாரிட்டிதான். நீ மைனாரிட்டி ஆகியே தீரவேண்டும், வேறு வழியில்லை. (கைதட்டல்). ஆக, காவிக் கூட்டத்தின் எண்ணிக்கைக் குறைந்தேதான் தீரும். இதுதான் வரலாறு. இப்போது வேண்டுமானால், நீ வலிமையாக இருப்பதுபோல் தோன்றலாம். (இதற்குக்கூட நமது ‘திராவிட’ கட்சித் தலைவர்கள் தான் காரணம். எல்லா திராவிடக் கட்சித் தலைவர்களுக்கும் நான் ‘நன்றி’ கூற வேண்டும். (சிரிப்பு).

தமிழ்நாட்டில் அத்வானி, வாஜ்பாய், முரளி மனோகர் ஜோஷி என்ற பெயரெல்லாம், இவர்கள் இல்லாவிடில் யாருக்காவது தெரியுமா? எப்படித் தெரியும்? அவர்களை அழைத்து வந்து, பொட்டு வைத்து, பூ வைத்து, தேர்தலில் வெற்றி பெற வைத்தது யாரு? அய்யா பெயரைச் சொல்லிக் கொண்டிருந்த கட்சிகள் தானே! இப்ப விஜய்காந்தே அய்யா படத்தைப் போடுகிறார். இனி ராமகோபாலன்கூட அய்யா படத்தைப் போட்டாலும் போடுவாரு. நாளைக்கே பெரியார் திடலுக்குப் போய் மாலை போட்டார்னா, தடுக்கவா முடியும்? ஓட்டு வாங்கணும்னு வந்தா இப்படித்தான் ஆகும். அதனால் தான், அய்யா, ஓட்டு வாங்கப் போகாதீங்கடா, கெட்டுப் போயிடுவீங்கடா என்று சொல்லி, எங்களை எல்லாம், இங்கேயே உட்கார வைச்சுட்டார். கருப்புச் சட்டைய வேறு மாட்டிவிட்டுட்டாரு. கருப்புச் சட்டையப் போட்டா, சினிமாத் தொழிலிலே யாரும் பேசகூட மாட்டான். சத்யராஜ் நமது சிந்தனையாளர். அவருகூட கேட்பாரு, அட படப்பிடிப்புக்கு வரும் போதெல்லாம் கருப்புச்சட்டை எதுக்கு என்பார்.

அட, அது தானய்யா இருக்கு என்பேன், பார்த்தேன். எல்லோரையும் கருப்புச் சட்டைப் போட வைக்கனும்னு மனசுல வச்சிக்கிட்டே இருந்தேன். சரியா, காவிரிப் பிரச்சினை வந்தது. நெய்வேலியில் போய் போராடப் போனாங்க. அதுதான் சரியான வாய்ப்பு என்று கருதி, “அன்புத் தோழர்களே, ஈழத் தமிழர் பிரச்சினைக்காக எம்.ஜி.ஆர். எல்லோரையும் கருப்புச் சட்டைப் போடச் சொன்னார். அதுபோல் நாமும் கருப்புச்சட்டைப் போட வேண்டும்; காரில் கருப்புக் கொடி கட்ட வேண்டும்” என்றேன். உணர்ச்சி வயப்பட்டு, எல்லாரும் கைதட்டி வரவேற்றனர். நடிகர் மாதவன், கமலஹாசன் எல்லோரும் கருப்புச்சட்டை தான். நடிகை சிம்ரன்கூட, கருப்பு சுடிதார் தான்! (சிரிப்பு; கைதட்டல்) அப்போது எனக்கு இதே மகிழ்ச்சி. ‘ஆகா, போங்கடா எல்லாரும் கருப்புச் சட்டையில்ன்னு’ பார்த்து மகிழ்ந்தேன். சபரிமலைக்கு மாலைப் போட்டு எங்களைக் கேவலப்படுத்துறீங்கல்ல, இப்ப, நீங்க போடுங்க (கைதட்டல்) என்னால முடிந்தது அவ்வளவு தான்!

கருநாடகத்துக்காரன் - அவனது அணைகளை எல்லாம் நிரம்பி, அணை உடையும் நிலை வந்தால் தான், தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்து விடுகிறான். நான் இப்போது மைசூரில் படப்பிடிப்பிலிருந்து வருகிறேன். விக்ரம், நான், பசுபதி ஆகியோர், ஒரு லாரியில் உட்கார்ந்து பாடுவதுபோல பாடல் காட்சி எடுக்கப்பட்டது. அப்போது கன்னடக்காரன் - “மணிவண்ணா, கீழே இறங்கு” என்று கன்னடத்தில் மரியாதை இல்லாமல் கெட்ட வார்த்தையில் பேசுகிறான். நாங்கள் படப்பிடிப்பில் இருந்த லாரி அவ்வளவு கேவலமானது. உடனே கீழே இறங்க முடியாது. தமிழன் என்றால், அவ்வளவு கேவலமாக அங்கே பேசுகிறான்.

இதே மாண்டியா மக்கள் 25 ஆண்டுகளுக்கு முன்பு, நாங்கள் படிப்பிடிப்புக்குச் சென்ற போது மிகவும் அன்பு பாராட்டுவார்கள். அப்படிப்பட்ட மக்கள் - தமிழன் என்றால் வெறுக்கிறார்கள். அந்த அளவுக்கு, கன்னடர்களிடம், ஒரு உணர்ச்சியை, அங்கே உருவாக்கி வைத்துள்ளார்கள். நம்முடைய தமிழ்நாட்டுத் தலைவர்கள், குறைந்தது அந்த உணர்ச்சியையாவது இங்கே ஏற்படுத்தினார்களா என்று கேட்கிறேன். தமிழ்நாட்டில் எவன் வேண்டுமானாலும் வரலாம், சுரண்டலாம். சென்னையில் பார்த்தால், தமிழர்கள் நகரமாகவே இல்லை. கோவையில் எங்கு பார்த்தாலும் மார்வாடிகள் கூட்டமாகவே இருக்கிறது. தமிழனையே காணோம்! அப்ப நாம எல்லோரும் எவ்வளவு இளிச்சவாயனாக இருக்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்தப் புரிதலோடு மக்களைத் தயார்படுத்தவில்லையானால், நாம் இந்தியர்கள் என்ற பெயரில் நமது தலையில் மிளகாய் அரைக்கப்படும் (கைதட்டல்). அவன் மிளகாயை அரைத்துக் கொண்டே இருப்பான். நாமும் தலையைக் காட்டிக் கொண்டே இருப்போம். அப்புறம் கொளத்தூர் மணியும், இராமகிருட்டிணனும் சிறைக்குப் போய்க் கொண்டே இருக்க வேண்டியது தான். அத்தகைய சூழலை உருவாக்குவதற்கு மக்களைத் தயார்படுத்த வேண்டும். அதற்கு சுயமரியாதையையும், பகுத்தறிவையும் பரப்ப வேண்டும். அய்யா, அதற்கான தனித்துவமான கொள்கைகளை தந்துவிட்டுச் சென்றிருக்கிறார்.

அண்மையில் நானும் நடிகர் சுந்தர்ராசனும், கொங்கு வேளாளர் கல்லூரியில் பேசினோம். 10,000 பேர் கூட்டம். கூட்டத்தின் கடைசியில் இருப்பவர்களுக்கு சுந்தர்ராசன் பேச்சு கேட்கவே இல்லை. ஆனாலும் கைதட்டினார்கள். சுந்தர்ராசன் காந்தியைப் பற்றிப் பேசினார். பேச்சு புரியாமலே எப்படி கைத்தட்டினார்கள் என்று கேட்டேன். காந்தியைப் பற்றிப் பேசும்போது, அவரைப் பற்றி நன்றாகத் தானே பேசுவார்கள் என்று நினைத்து கைதட்டினார்களாம்.

நான் பேசும்போது கூறினேன், எனக்கு இதில் உடன்பாடு கிடையாது. என்னை அய்யா அப்படி வளர்க்கவில்லை என்று கூறினேன். சில பேர் கூறுவதுபோல் பெரியாரைக் கைப்பிடிச்சு நாங்கள் வளராவிட்டாலும்கூட, அவரைப் படித்து வளர்ந்தவர்கள் நாங்கள் (பலத்த கைதட்டல்). அய்யாவுக்கு ‘அன்டர்வியர்’ துவைத்துப் போட்டால்தான், அவருக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது (கைதட்டல்). அய்யாவுக்கு கால் அமுக்கிவிட்டால்தான், அவரது இயக்கத்துக்கு தலைவராக இருக்க முடியும் என்ற அவசியம் கிடையாது. அய்யா எதைச் சொன்னார் என்பதைப் புரிந்து கொண்டு, எப்படி வாழ வேண்டும் என்று சொன்னாரோ, அப்படி வாழ்வோர் எல்லாருமே, பெரியார் இயக்கத்தை வழி நடத்துவதற்குத் தகுதி படைத்தவர்கள் தான்! (கைதட்டல்) அப்படித்தான் நாங்கள் வளர்க்கப்பட்டோம். காந்தி என்ன சொன்னாலும் அது உண்மையாகத்தான் இருக்கும் என்று நம்பி ஏமாந்ததால்தான் நாம் இந்த இழிநிலையில் இருக்கிறோம் என்றுதான் எங்களுக்கு அய்யா சொன்னார் என்று நான் அந்த விழாவில் பேசினேன்.

இந்தியா சுதந்திரம் பெற்றபோது, காந்தி எங்கே இருந்தார்? அவர் சுதந்திர தின விழாவிலே கலந்து கொள்ளாமலே ஒதுங்கிவிட்டார். அந்தக்கால கட்டங்களிலே வரலாற்றிலே காந்தியாருக்கு என்ன இடம்? ரூபாய் நோட்டிலே காந்தி படத்தைப் போடுகிறோம். ஆனால், வெள்ளைக்காரனிடமிருந்து சுதந்திரம் வாங்கிய காலகட்டத்தில் காந்தி எங்கே போனார்? ஏன் இதை யாரும் கேட்பதில்லை; காந்தி என்றாலே விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவரா? ஆனால், என்னை வளர்த்த பெரியார் என்ன சொல்லித் தந்தார்? ராமசாமி நாயக்கர் சொல்கிறார் என்பதற்காக எதையும் ஏற்றுக் கொள்ளாதே; வீட்டுக்குப் போ உன் அறிவைக் கொண்டு சிந்தித்துப் பார் என்று சொன்னார்.

பெரியார் திடலிலே கிறிஸ்தவ மதப்பிரச்சாரம் எல்லாம் நடக்கிறதே என்ற கேள்வி எழுந்தபோது, விடுதலை ராசேந்திரன் தான் எனக்கு தெளிவுபடுத்தினார். பெரியார் கூட்டங்கள் நிகழ்ச்சிகளை நடத்த சென்னையிலே அரங்குகள், மண்டபங்களை தர மறுத்தார்கள். அப்போது, நான் ஒரு அரங்கைக் கட்டி அதில் எல்லோரும் கருத்து கூறும் வாய்ப்புகளை வழங்குவேன் என்பதற்காகத்தான் பெரியார், பெரியார் திடலில் ஒரு மன்றத்தை ஏற்படுத்தினார் என்று கூறினார். அப்படி, எல்லோரும் அவரவர் கருத்துகளைக் கூறட்டும். எது சரி, எது தவறு என்பதை உனது மூளையைப் பயன்படுத்தி முடிவுக்கு வா என்று சொன்னார் தந்தை பெரியார், அப்படி முடிவெடுக்கும்போது தான் நமக்கு சரியான விடுதலை கிடைக்கும். அதற்கான கொள்கைத் தெளிவு கிடைக்கும். அந்த விடுதலை அமெரிக்கக்காரனிடமிருந்து விடுதலை, பார்ப்பன-பனியாக்களிடமிருந்து விடுதலை, உண்மையான நமது பொருள் உற்பத்திக்கான சுதந்திரம்.

நெடுஞ்சாலைகளைப் போடுகிறார்கள், அதிலிருந்து விலகி கிராமத்துக்குப் போனால், மிக மோசமாக இருக்கிறது. உண்மையில் கிராமத்தில்தான் மக்கள் வாழ்கிறார்கள். பணக்காரர்கள் தொழில் நடத்துவதற்கு வசதியாக சாலைகளைப் போடுகிறார்களே தவிர கிராம மக்கள் வாழ்க்கை மிக மோசமாகவே இருக்கிறது. இந்த நிலைமை எல்லாம் மாற சுயமரியாதையும், பகுத்தறிவும் தான் தேவை. அதை உண்டாக்கக்கூடிய சக்தி பெரியார் கொள்கைகளுக்கு மட்டும் தான் உண்டு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நாம் தான் அதைச் செய்தாக வேண்டும்.

‘விநாயக சதுர்த்தி’ என்ற விழா எப்படித்தான் இங்கே இவ்வளவு வேகமாகப் பரவியதோ தெரியவில்லை. அதைப் பற்றி நான் பேசாமல் போகவேக் கூடாது. உயரம் உயரமாக பிள்ளையார் சிலைகளை வைக்கிறார்களே, அந்த இடத்தை எல்லாம் பாருங்கள், எல்லாமே மூத்திர சந்தாகத்தான் இருக்கும். அங்கே ‘பிளீச்சிங்’ பவுடரைப் போட்டு சுத்தம் செய்து, பிள்ளையார் சிலையை வைக்கிறான். நமது பெண்கள், அங்கே குத்து விளக்கை ஏற்றி வைக்கிறார்கள். கடைசியில் சிலையைக் கொண்டு போய் கடலில் போடுகிறான். பெரியாரே அதைத் தானே சொன்னார். இப்போது அவனே அதைத் தான் செய்கிறான். எங்கள் வீட்டுக்குப் பக்கத்திலே கழுதைகள் மூத்திரம் பெய்த இடத்தில் நாகத்தம்மாள் கோயில் கட்டிவிட்டான். கேட்டால், அதற்கு ஸ்தலபுராணம் இருக்கிறது என்கிறான். 20 ஆண்டுகளுக்கு முன்பு தான் அங்கே கோயிலே வந்தது. அப்படியானால் ஸ்தல புராணங்கள் என்பவை எல்லாம் மோசடி தானே. மதுரை மீனாட்சி கோயில் இருக்கும் இடம் ஒரு காலத்தில் புறம்போக்காகத் தானே இருந்திருக்கும்.

ஸ்தல புராணம் கூறுகிற எல்லா இடங்களிலும் ஒரு காலத்தில் வெற்றிடமாகத் னே இருந்திருக்கும். வரப்போகிற ஒரு திரைப்படத்தில்கூட நான் இந்தக் கருத்தைக் கூறி இருக்கிறேன். தணிக்கையில் விடுவார்களா என்பது தெரியவில்லை. உடல் பருத்த ஒரு நடிகை உட்கார்ந்து எழுந்திருப்பதற்குக்கூட தெலுங்கில் கடவுளைக் கூப்பிடுகிறார். நான் சொன்னேன் - இப்படி உன்னைத் தூக்கி விடுவதற்கு எல்லாம்கூட கடவுளைக் கூப்பிடாதே. அப்புறம் உனக்கு உண்மையிலேயே பெரிய பிரச்சினை என்று வந்து, நீ கூப்பிடும் போது கடவுள் வராமலே போய் விடுவார் என்று கூறினேன். மக்கள் சிந்தனை அப்படி எல்லாம் இருக்கிறது. எனவே பெரியாரை நினைவுபடுத்த வேண்டிய பொறுப்பு - அவரது கருத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. நான் எப்போதும் உங்களுடன் ஒத்துழைப்போடு இருப்பேன்.

நான் உங்கள் இயக்கத்தின் ‘கார்டு’ இல்லாத உறுப்பினர். இவ்வளவு நேரம் நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்போது எவ்வளவோ தொலைக்காட்சிகள் இருக்கும்போதுகூட, இவ்வளவு பொறுமையாக நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். மிகவும் வியப்பாக இருக்கிறது. தொலைக்காட்சியின் வீச்சு அவ்வளவு அதிகமாக இருக்கிறது. போப்பின் மரணத்தை 130 காமிராவை வைத்துப் படம் பிடித்து உலகம் முழுதும் ஒளிபரப்புகிறான்.

ஒரு காமிராவை வைத்துப் படம் எடுப்பதே எங்களுக்கு அவ்வளவு சிரமம். 130 காமிராக்களை ஏற்பாடு செய்து, உலகம் முழுதும் போப் மரணத்தை ஒளிபரப்புகிறான். போப் மரணத்தை - இப்படி முன்கூட்டியே திட்டமிட்டு, தொலைக்காட்சி மூலம் பரப்புகிறான். தொலைக்காட்சிகள் ஆதிக்கம் அப்படி இருக்கிறது. இவ்வளவு பெரும் திறளாகக் கூடி கருத்துகளைக் கேட்கும் உங்களுக்கு எனது நன்றி - மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.