“திராவிடர் கழகத்தைப் பொறுத்த வரை - நாங்கள் எதிர் நடவடிக்கைகளில் இறங்குவதென்றால், திட்டமிட்டு, தீர்மானம் போட்டு, காவல் துறைக்குத் தகவல் கொடுத்து முறைப்படித்தான் செய்வோம்”

இது திருவாளர் கி.வீரமணி விடுத்த அறிக்கை. எப்போது? ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலை உடைக்கப்பட்ட போது, பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் கொதித் தெழுந்து, பார்ப்பனர்களின் பூணூல்களை அறுத்தபோது, பெரியார் திராவிடர் கழகத்தினரைக் காட்டிக் கொடுக்கும் நோக்கத்தோடு, விடுத்த அறிக்கை.

“பெரியார் சிலையை உடைத்தவர்கள் மீதும், அதற்குப் போட்டியாக, சில கடவுளர் படங்களை உடைத்தவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரு சாராரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் சொல்லப் போனால், வீரமணி குறிப்பிட்டிருப்பதைப் போல், கடவுளர் படங்களை எரித்தவர்கள் திராவிடர் கழகத்தினர் அல்ல. அவர்கள் பெரியார் திராவிடர் கழகம் என்ற வேறு ஓர் அமைப்பைச் சார்ந்தவர்கள்”

இது தமிழக முதல்வர் கலைஞர் அப்போது அளித்த பேட்டி!

இப்பபோது - முத்துப்பேட்டையில் மீண்டும் பெரியார் சிலை உடைக்கப்பட்டதைத் தொடர்ந்து, தஞ்சையில் பார்ப்பனர்களின் பூணூல் அறுக்கப்பட்டது. நெய்வேலியில் வில்லுடையான் பட்டு முருகன் கோயிலுக்குள் அர்ச்சகப் பார்ப்பனரின் பூணூல் அறுக்கப்பட்டுள்ளது, அர்ச்சகர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் திராவிடர் கழகத்தினர்.

இது தொடர்பாக வீரமணி தலைமையிலான திராவிடர் கழகத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெரியார் திராவிடர் கழகத்தினர் மீது, இதே “குற்றத்துக்காக” - தேசியப் பாதுகாப்புச் சட்டத்தைப் போட்டு - பார்ப்பனர்களை குளிர வைத்த தமிழக முதல்வர் கலைஞர், இப்போது, தனது ‘அரசவைப் பாராட்டுரையாளர்’ கட்சியைச் சார்ந்தவர்கள் என்பதற்காக, தேசியப் பாதுகாப்புச் சட்டத்தைப் போட முன்வரவில்லை. எதையும் தீர்மானம் போட்டுத்தான் செய்வோம் என்று ‘வீராப்பு’ பேசிய வீரமணியார்களின் முகத்திரையும் இதில் கிழிந்து தொங்குகிறது.

தேசியப் பாதுகாப்புச் சட்டம் யார் மீதும் பாயக் கூடாது என்பதே எங்கள் நிலை. ஆனாலும், ‘குலத்துக்கு ஒரு நீதி’ கூறும் ‘வர்ணாஸ்ரமத்தை’ப் போல் - ‘புகழ் பாடிகளுக்கு’ ஒரு ‘நீதி’ யையும், ‘கொள்கையாளர்களுக்கு’ ஒரு ‘நீதி’யையும் பின்பற்றும் தமிழக முதல்வரின் இரட்டை வேடத்தை - தமிழின உணர்வாளர்களின் சிந்தனைக்கு முன் வைக்கிறோம்!