சென்னை தியாகராயநகரிலுள்ள உஸ்மான் சாலை, நீதிக்கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்த முகமது உஸ்மான் நினைவாக வைக்கப்பட்டது. பார்ப்பனர்கள் நிரம்பியிருக்கிற மாம்பலத்திற்கு பார்ப்பன எதிர்ப்பாளரான தியாகராயர் பெயரை வைத்ததும், ஒரு சாலைக்கு உஸ்மான் சாலை என்று பெயர் வைத்ததும் சாதாரண விஷயமல்ல. அது பெரிய கலகம். அதனால்தான் பார்ப்பனர்கள் திட்டமிட்டு தியாகராயர் நகரை, டி.நகராக மாற்றிவிட்டனர்.

1929 ஆம் ஆண்டு சென்னை மாகாண சட்டப்பேரவையில் சத்தியமூர்த்தி என்கிற பார்ப்பனர், நீதிக்கட்சி சட்டமன்ற உறுப்பினர் திரு.முகமது உஸ்மானை பார்த்து, “உமக்கு சீனிவாச அய்யங்காருடைய கால் பூட்சு கழற்ற யோக்கியதை உண்டா?” என்று கேட்டிருக்கிறார். அந்த மட்டமான பேச்சுக்கு சட்டப்பேரவையில் கடும் எதிர்ப்புக் கிளம்பியிருக்கிறது.

உடனே சத்தியமூர்த்தி தான் பேசியதை வாபஸ் பெற்றுக் கொண்டார். சத்தியமூர்த்தியை கண்டித்து ஒரு குட்டிக் கதையின் மூலமாக பெரியார் குடியரசில் எழுதுகிறார், கதை இதுதான்:

“ஒரு பெரியவர் ஓரிடத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தார். ஓர் அயோக்கியன் போகும்போதும் வரும்போதும் தனது கால் அவர் மீது படும்படி ஆணவமாக நடப்பதும், உடனே தெரியாமல் கால்பட்டுவிட்டது மன்னிக்கவேண்டும் என்று சொல்லி கால்பட்ட இடத்தை தொட்டுக் கண்ணில் ஒத்திக் கொள்ளவதுமாயிருந்தான்.

அப்பெரியவர் பார்த்தார், இவன் ஆணவத்தையும் மானம் கெட்ட தன்மையையும் பார்த்து, இவனுக்குச் சரியானபடி புத்தி கற்பிக்க எண்ணி, அவன் உட்கார்ந்திருக்கும்போது பிடரியில் ஒரு சரியான உதைக் கொடுத்துக் கழுத்து முறியும்படி செய்துவிட்டுத், ‘தெரியாமல் கால்பட்டுவிட்டது’ என்று சொல்லிக் கையால் அவன் கழுத்தைத் தொட்டு இரு கண்களிலும் நன்றாய் ஒத்திக் கொண்டாராம்.

உடனே உதைப்பட்டவனுக்கு புத்தி வந்து, ‘என் கால் அத்தனைமுறை பட்டதற்கும் தங்கள் கால் ஒரு முறை பலமாய் பட்டதற்கும் கணக்குச் சரியாய்விட்டது. ஆதலால் தயவு செய்து மீதி எண்ணிக்கைகளை மறந்துவிடுங்கள்’ என்று கேட்டுக் கொண்டானாம். அதைப்போல் சத்தியமூர்த்தி போன்றவர்கள் விழுந்தெழுந்தால் ஏதாவது பேசுவதும், பிறகு மன்னிப்புக் கேட்பதும் கர்வமாய் போய்விட்டது”.

இதுதான் பெரியார் சொன்னக் கதை. பெரியாரே கழுத்து முறியும்படி அடிக்கச் சொல்லியிருக்கார். பெரியார் சொன்னதை செய்பவர்களுக்குப் பேருதானே பெரியாரிஸ்ட்.

பல்லடம் நாத்திகர் விழாவில் தோழர் மதிமாறன் உரையிலிருந்து...