தமிழ்நாட்டைப் போல, சிங்கள அரசின் கொடுமைகளை பத்திரிகையாளர் கூட்டம் நடத்தி பேட்டி கொடுத்து, கண்டனக் கூட்டம் போட்டு, ஆர்ப்பாட்டங்களை நடத்தி - “இலங்கை அரசே; தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம்” என்று கூறிக் கொண்டிருந்தால் தாக்குதல் நிறுத்தப்பட்டுவிடுமா? அல்லது இலங்கை அரசு மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, ராணுவத் தாக்குதலுக்கு இடைக்காலத் தடை வாங்க முடியுமா? அத்தகைய வாய்ப்புகள் அங்கே இருந்தால், விடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்தக் கூடாது, அது பயங்கரவாதம் என்று கூறலாம்.

உண்மையில் - அங்கே என்ன நடக்கிறது?

ஈழத் தமிழர்களின் ராணுவ அமைப்பான விடுதலைப்புலிகள் ஆயுதம் தரித்தவர்களாக - கரும்புலிகளாக - உயிர்த் தியாகம் செய்யக்கூடியவர்களாக - களத்துக்கு வந்து, ராணுவத் தாக்குதலை எதிர்கொண்டு நிற்பதால் தான் தமிழர்கள், கொஞ்சமாவது, உயிருடன் மிஞ்சியிருக்கிறார்கள்.

அப்படி ஒரு ராணுவ வலிமையோடு தமிழர்கள் இருப்பதால்தான் சர்வதேசத்தை ஏமாற்றுவதற்காவது பேச்சு வார்த்தைக்கு இலங்கை அரசு வருகிறது.

அப்படி ஒரு ராணுவ அமைப்பு தமிழர்களுக்கு இருப்பதால்தான் - தமிழ் பிரதேசங்களை ஓரளவுக்காவது, தமிழர்கள் தங்களிடம் இருத்திக் கொள்ள முடிந்தது.

தமிழ் மக்களின் ராணுவமான விடுதலைப்புலிகளின் ராணுவ வலிமையும், லட்சிய உறுதியும் உயிர்க்கொடைத் தியாகமும் தான் ஈழத் தமிழர்களின் ஒரே பாதுகாப்பு அரண்!

இந்த நிலையில் ஈழத் தமிழர்களை சிங்களப் பேரினவாதத்திடம் அடிமைப்படுத்தத் துடிக்கும் சிங்களப் பார்ப்பன சக்திகள் விடுதலைப் புலிகளின் ராணுவ வலிமையைப் பலவீனமாக்கி விட வேண்டும். அது ஒன்றே இதற்கு வழி என்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்டு விட்டார்கள்.

இலங்கை அரசின் தமிழின அழிப்புக் கொள்கைக்கு பெரும் தொண்டாற்றியதற்காக ‘சிங்கள ரத்னா விருது’ பெற்ற தமிழ்நாட்டுப் பார்ப்பனர் ராம், அவர் தனது ‘இந்து’ ஏட்டை தமிழர்களுக்கு எதிராக சிங்கள அரசுக்கு கேடயமாகப் பயன்படுத்தி வருகிறார்.

கடந்த 22 ஆம் தேதி - ‘இந்து’ ஏட்டில் வெளிவந்த தலையங்கம் - ‘தமிழ்நாடு விடுதலைப்புலிகளின் ராணுவத்தளமாக்கப்படுவதாக தமிழக அரசை எச்சரிப்பதுபோல் மிரட்டியது.

தமிழக முதல்வர் கலைஞர் நட்பு சக்திகளுக்கு தரும் முக்கியத்துவத்தைவிட பார்ப்பன எதிர்ப்புச் சக்திகளைத் திருப்திப்படுத்துவதில் தான் தீவிர ஈடுபாடு காட்டுவார் என்ற உண்மையை - பார்ப்பனர்கள் நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள். அதுதான் நடந்தது.

சிங்கள தேசிய விருது பெற்ற பார்ப்பனருக்கு - வெள்ளைக்கொடி காட்டி அடுத்த நாளே தன்னிலை விளக்கம் தந்து விட்டார், கலைஞர்.

“இலங்கையில் சிங்கள ராணுவத்தால் கொடுமைப்படுத்தப்படுகிற அல்லது கொல்லப்படுகிற அப்பாவித் தமிழர்களைக் காப்பாற்றுவதற்கு இந்திய அரசு முன்வர வேண்டுமென்று, தமிழ்நாட்டிலே உள்ள கட்சிகள், குறிப்பாக தி.மு.கழகம் போன்றவை கேட்டுக் கொள்வதற்கும், அதற்காக ‘இந்து’ பத்திரிகை எழுதியிருப்பதைப் போல நடைபெறுகிற எல்.டி.டி.யினருக்கான ஆயுத விநியோக இடமாக தமிழகத்தைப் பயன்படுத்துவதற்கும் உள்ள வேறுபாட்டை தமிழக அரசு உணராமல் இல்லை. ‘இந்து’ தலையங்கத்திலே குறிப்பிட்டிருப்பதைப்போல், அத்தகைய செயலில் ஈடுபடுவோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்” என்று ‘சிங்கள தேசிய விருதாளருக்கு’ தன்னிலை விளக்கம் தருகிறார் கலைஞர்!

நாங்கள் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசுவதாலேயே அவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக இருப்போம் என்று நம்பி விடாதீர்கள் என்பதையே கலைஞர் வேறு வார்த்தைகளில் சொல்கிறார் போலும்!

ஈழத் தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும் என்றால் அதற்கு என்ன வழி? தமிழ் மக்களின் ராணுவமான விடுதலைப்புலிகள் ஆயுதத்தைக் கீழே போட்டுவிட்டு, சிங்கள அரசிடம் ‘கவுரவமான சரணாகதி’ அடைய வேண்டும் என்கிறது ‘இந்து’! அந்த ‘சரணாகதி’ வெற்றி பெற தமிழ்நாட்டுக்கும், இலங்கைக்கும் இடையே உள்நாட்டு, வெளிநாட்டு கடல் பரப்புகளில் விடுதலைப் புலிகள் போக்குவரத்தை முற்றாகத் தடை செய்ய வேண்டும் என்கிறார், சிங்கள விசுவாசி ராம்!

தமிழ் மக்களின் ராணுவத்துக்கு ஆயுதம் ஏற்றி வந்ததாகக் கூறப்பட்ட ஒரு படகை, இந்திய கப்பற்படை நடுக்கடலில் சுற்றி வளைத்து, பிறகு வெடி வைத்து தகர்த்துள்ளனர். ஆனால், அந்தப் படகு தமிழகத்தை நோக்கி வரவில்லை. யாழ்ப்பாணத்தை நோக்கிச் சென்ற படகு! இதை பத்திரிகையாளரிடம் கூறியிருப்பவர் தமிழ்நாட்டின் காவல்துறை தலைமை இயக்குனராக இருக்கும் முகர்ஜி எனும் பார்ப்பனர்! (The vessel was not heading for the Tamil Nadu Costs) காவல்துறை இயக்குனர் உண்மையைக் கூறிவிட்டார் என்பதாலேயே அவரையும், தமிழக அரசையும் தனது தலையங்கத்தில் கடுமையாக சாடுகிறது ‘இந்து’. யாழ்ப்பாணம் நோக்கிப் போனாலும்கூட, விடுதலைப்புலிகள் ஆயுதம் கொண்டு போவதைத் தடுக்க வேண்டும் என்பதுதான் ‘இந்து’வின் நோக்கம்! இந்த ‘பச்சை இன துரோகத்தை’ எப்படி தமிழக அரசு அங்கீகரிக்கிறது, என்பதுதான் நமது கவலை!

தமிழ்நாடு - விடுதலைப்புலிகளின் ஆயுதத் தளமாகப் பயன்படுத்தப்படுகிறது என்பது உண்மை தானா?

இது பார்ப்பன ஊடகங்கள் - மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி, ஜெயலலிதா கட்சியினர் இணைந்து, திட்டமிட்டு நடத்தும் பொய்ப் பிரச்சாரமே தவிர வேறு அல்ல.

தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகள் ஆயுதம் தயாரித்தார்களா? அப்படி ஏதாவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதா?

தமிழ்நாட்டில் - விடுதலைப்புலிகளின் ராணுவப் பயிற்சிகள் நடக்கிறதா?

தங்களது நாட்டிலிருந்து - ஆயுதங்களைக் கொண்டு வந்து தமிழ் நாட்டில் விடுதலைப் புலிகள் பதுக்கி வைத்திருக்கிறார்களா? அப்படி ஏதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதா?

மதுரையிலிருந்து அலுமினியக் கட்டிகள்; பம்பாயிலிருந்து சென்னைக்கு கொண்டுவரப்பட்ட, சைக்கிளில் பயன்படுத்தப்படும் ‘பால்ரஸ்’ குண்டுகள் ஆகியவை தமிழ்நாட்டிலிருந்து கடத்தப்படும் போது பிடிபட்டிருக்கின்றன. இவைகள் ஆயுதங்கள் அல்ல, ஆயுதத் தயாரிப்புக்குப் பயன்படுத்தப்படும் உதிரிப் பொருள்கள்; அவ்வளவுதான். அதுவும் தமிழ் நாட்டிலிருந்து அவர்கள் நாட்டுக்குக் கொண்டு போகப்பட்டவையே தவிர, அங்கிருந்து தமிழகம் வரவில்லை. இந்த நிலையில் - தமிழ்நாட்டை ராணுவத்தளமாகப் பயன்படுத்துகிறார்கள் என்று குற்றம்சாட்டுவது சரிதானா?

‘விண்’ தொலைக்காட்சியின் செய்தி அலசலில் அதன் செய்தியாளர் டி.எஸ்.எஸ்.மணி ஒரு செய்தியைக் கூறினார்: நடுக் கடலில் இந்தியக் கப்பல் படையால் விடுதலைப்புலிகள் படகு சுற்றி வளைக்கப்பட்டவுடன் கைது செய்யப்பட்டவர்களில் விடுதலைப் புலி இயக்கத்தைச் சார்ந்தவராக உளவுத் துறையால் கூறப்படும் ஒரு தோழர் சொன்னாராம், ‘தமிழ் நாட்டுக்கோ, தமிழ் நாட்டு மக்களுக்கோ ஒரு சிறு இடையூறும் எங்களால் ஏற்பட்டு விடக் கூடாது என்று எங்கள் தலைமை கண்டிப்பாக உத்தரவிட்டுள்ளது. நடுக் கடலில் நிற்கும் படகில் வெடி மருந்துகள் உள்ளன.

அவை கடலில் தொடர்ந்து நிறுத்தப்பட்டிருக்குமானால் வெடிக்கக்கூடிய ஆபத்துகள் உண்டு. எனவே உடனே படகை வெடிவைத்து தகர்த்து விடுங்கள்’ என்று அந்தத் தோழர் சொல்ல, உடனே, இந்திய அதிகாரிகள், படகை வெடி வைத்து தகர்த்தார்கள்; விடுதலைப்புலிகள் எவ்வளவு பொறுப்புணர்வோடு செயல்படுகிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டோம் என்று, உயர் அதிகாரி ஒருவரே கூறியதாக, அந்த செய்தியில் டி.எஸ்.எஸ். மணி குறிப்பிட்டார்.

தமிழ்நாடு அரசிடமோ, இந்திய அரசிடமோ விடுதலைப் புலிகள் ஆயுத உதவி கேட்கவில்லை. ராணுவ உதவி கோரவில்லை, தமிழ்நாட்டை தங்களது ராணுவத்துக்கான தளமாகவும் பயன்படுத்தப்படவில்லை.

அதே நேரத்தில் - இலங்கை அரசு என்ன செய்கிறது?

தமிழ்நாட்டிலிருந்து ஈழத்துக்கு உயிர் காக்கும் மருந்துகளை வாங்க முயற்சித்தார்கள் என்று ஜெயலலிதா ஈழத் தமிழர்களை கைது செய்து, சிறையில் போட்டார். அவரது பார்ப்பன ஆட்சியில் உயிர் காக்கும் மருந்துகள் அனுப்புவது கூட பயங்கரவாத நடவடிக்கைகளாகக் கருதப்பட்டன.

அதே தமிழ்நாட்டில் - சிங்கள விமானப் படைக்கு பயிற்சிகள் நடக்கின்றன. கோவையில் எதிர்ப்பு தெரிவித்தால் - போபாலுக்குக் கொண்டு போய் பயிற்சி தருகிறார்கள்.

கடலில் மீன் பிடிக்கச் செல்லும் - தமிழ் நாடு மீனவர்கள், சிங்களக் கப்பல் படையால் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். கொழும்புக்குக் கொண்டு போய் சிறையிலடைக்கப்படுகிறார்கள். அவர்களின் படகுகளும், வலைகளும் நாசமாக்கப்படுகின்றன. இது தொடர்ந்து நடக்கும் அவலம்.

இப்போது கடல் பரப்பைச் சுற்றி வளைத்து கடலோரப் பாதுகாப்புப் படை - கப்பல் படைகள் கூடுதல் படை வலிமையோடு கண்காணிக்கக் கிளம்பியிருப்பதைப் போல் - தமிழக மீனவர்கள் உயிரைக் காப்பாற்றும் தீவிர நடவடிக்கைகள் இதற்கு முன் எடுக்கப்பட்டனவா? ரோந்து சுற்றுவதற்கு இப்போது மட்டும் வந்துள்ள 23 மிதவைக் கலங்கள் இந்த மீனவர்களைக் காப்பாற்ற வராமல் போனது ஏன்?

இவ்வளவு தீவிர கண்காணிப்புகளும், முடுக்கி விட்டதற்குப் பிறகுதான், புதுக்கோட்டை மீனவர் ஒருவர் சிங்களக் கப்பல் படையால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அப்படியானால் இந்தக் கண்காணிப்புப் படைகள், தமிழ் மீனவரைக் கண்காணிக்காதா? இந்தக் கண்காணிப்புப் படைகள் யாருக்காக? சிங்களர்கள் நலன் காக்க மட்டும் தானா?

ஒவ்வொரு முறை மீனவர் சுடப்பட்டு சாகும்போதும் முதல்வராக இருப்பவர்கள் பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதுவதோடு, பிரச்சினை முடிந்து போய் விடுகிறது. இது தானே தமிழன் நிலை?

இவற்றையெல்லாம் எதிர்த்து - எந்தப் பார்ப்பான் எழுதினான்?

இப்போதும்கூட மத்திய அரசு - ஏதாவது உருப்படியான நடவடிக்கை எடுத்துள்ளதா? அதற்கு தமிழக முதல்வர் கலைஞர் அழுத்தம் தந்திருக்கிறாரா?

ஈழத்திலிருந்து வந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை, பிரதமர் மன்மோகன் சந்தித்தார். மகிழ்ச்சிதான். அதுவே ஈழத் தமிழரைக் காப்பாற்றும் நடவடிக்கை ஆகிவிடுமா?

அந்த சந்திப்பிற்குப் பிறகு - சிங்கள ராணுவத்தின் தாக்குதல் நின்றதா? - சிங்கள ராணுவம் அதற்கு பயந்ததா?

அதற்குப் பிறகாவது - சிங்கள அரசுக்கு இந்தியாவின் சார்பில், தாக்குதலை நிறுத்தச் சொல்லி எச்சரிக்கையாவது செய்யப்பட்டதா? முதல்வர் என்ற முறையில் கலைஞர் மத்திய அரசிடம் வலியுறுத்தினாரா?

கலைஞர் ஆட்சியில் - தமிழரின் தன்மானத் தந்தை பெரியார் சிலை உடைப்பைக் கண்டு கொதித்தெழுந்த - பெரியார் திராவிடர் கழகத்தினரும், தேச விரோதிகள் - அவர்கள் மீது தேச பாதுகாப்புச் சட்டம் பாய்ந்தது.

தங்களின் தேசப் பாதுகாப்புக்காக தங்களது தேசம் நோக்கி - கடலில் ஆயுதங்களை எடுத்துச் சென்றவர்களும் தேசவிரோதிகள். அவர்கள் மீதும் தேசப் பாதுகாப்புச் சட்டம்!

அப்படியானால் இந்தத் தேசம் யாருக்கான தேசம்?

இந்த தேசத்தின் உண்மையான விசுவாசிகள் என்றால் அவர்கள் பார்ப்பனர்களுக்கு பணிந்து போக வேண்டுமா? பார்ப்பனர்கள் மிரட்டினால் - உடனே ஓடி வந்து அவர்களைத் திருப்திப்படுத்துவோர்தான் தேச பக்தர்களா? தேச பக்திக்கு இலக்கணம் வகுப்பதே பார்ப்பனர்கள்தானா? பார்ப்பானை எதிர்த்தால் - தேச விரோதி முத்திரை குத்தப்பட்டு தேசப் பாதுகாப்பு சட்டம் பாயுமா? தமிழரின் ஆட்சிக்கு இது அடையாளம் ஆகுமா?

மனசாட்சியும், மான உணர்வும், சுய மரியாதையும் வற்றிப் போகாத தமிழர்களின் சிந்தனைக்கு இந்தக் கேள்விகளை பணிவோடு சமர்ப்பிக்கிறோம்!