இடஒதுக்கீடு
யாருக்கு? யார் ஒதுக்குவது
இடஒதுக்கீடு
சலுகையல்ல, உரிமை!
இடஒதுக்கீடு இருந்தால்
திறமைக்கும் தகுதிக்கும்
மதிப்புயில்லை என்கிறாய் -
திறமையும்
தகுதியும் நிறைந்தவனை
நான் மதிக்கிறேன்.
நீ மதிப்பாயா?
திறமையும் தகுதியும்
பயிற்சியும் நிறைந்தவன்
அர்ச்சகன் ஆகலாமென்றால்.
நீ சொல்லுகிறாய்
“பிற்படுத்தப்பட்டவன்
அதனினும்
பின்தள்ளப்பட்டவன் அர்ச்சகனா?
ஆண்டவனுக்கே
அடுக்காது என்கிறாய்”
மடையனே!
கண்ணப்பவேடன் சுவைத்த
கறிச்சோற்றையே தின்றவன் கடவுளா?
அத்தனை மனிதனையும்
அவன்தான் படைத்தான் என்றால்
அவனவன் வழிப்பாட்டை
ஆண்டவன் மறுப்பானா?
வழி
வழியாய்
வழிப்பாடு செய்தவனை
விளக்குக்கு எண்ணெய் ஊற்ற
பூதொடுக்க
வெளியே நிறுத்திவிட்டு
கருவறைக் கதவுகளை
பூ நூலால் கட்டி வைத்தாய்
அதையும்
திருமறைக்காட்டில்
திறந்து வைத்தானே!
நற்றமிழ் பாடலால்
திருநாவுக்கரசன்!
மறந்தாயா?
நீ
கல்வியையும்
தரமறுக்கிறாய்.
இனி நீ என்ன தருவது
நான் தருகிறேன்
பெரியாரின் வழியில்
தலைகளை எண்ணி
கைகளை எண்ணி
ஏந்தும் கைகளுக்கும்
எழுகிற தலைகளுக்கும்
கொடுத்தது போக
மீதி உனக்கு
அதுவரை
பின்னுக்கு நில்!