‘சுப.வீ.’ எழுப்பிய கேள்வி

பொடா சட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று அறிக்கை விடுத்துள்ள ஜெயலலிதா, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் உள்ளிட்ட தோழர்கள் மீது ஜெயலலிதா ஆட்சி போட்டிருந்த ‘பொடா’ வழக்குகளைத் தமிழக அரசு திரும்பப் பெற்றுள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மக்கள் உரிமைக் கூட்டமைப்பு நடத்திய மாநாட்டில் பேசிய விடுதலை சிறுத்தைகளின் பொதுச்செயலாளர் தொல். திருமாவளவன், ‘பொடா’வை எதிர்ப்பதில், விடுதலை சிறுத்தைகள் தான் வீரத்துடன் செயல்பட்டு வருகிறது என்று கூறினார்.

ஜெயலலிதா அணியினரை முன்னிறுத்திப் ‘பொடா’ எதிர்ப்பு மாநாடு நடத்துவதில் தமக்கு உடன்பாடில்லை என்று அறிக்கை விடுத்த பேராசிரியர் சுப.வீரபாண்டியனை கடுமையாக விமர்சித்தார் திருமாவளவன். கூட்டணிக்காக கொள்கையை விட்டுத் தரக்கூடிய இயக்கம் விடுதலை சிறுத்தை அல்ல என்று அறிவித்ததோடு, தி.மு.க.வைக் கடுமையாக விமர்சித்தார். ஆனால் அடுத்த நாளே நெடுமாறன் உள்ளிட்டோர் மீதான பொடா வழக்குகளைத் திரும்பப் பெற்றதைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுவிட்டார், ஜெயலலிதா! ஆனால் திருமாவளவன். இதுவரை இதைப் கண்டிக்காமல் மவுனம் சாதித்து வருகிறார்.

பேராசிரியர் சுப.வீரபாண்டியன் எழுப்பிய கேள்வியில் நியாயம் இருக்கிறது என்பதைத் தான் இது காட்டுகிறது!

 தமிழக முதல்வரின் பாராட்டத்தக்க நடவடிக்கை

பொடா சட்டம் கொடூரமானது; அந்த சட்டத்தைப் பயன்படுத்துவதில் - பொடாவைவிடப் பல மடங்கு கொடூரமாக செயல்பட்டவர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அதனால்தான் பம்பாய் குண்டு வெடிப்பு நடந்தவுடனேயே - பா.ஜ.க.வின் குரலோடு தன்னை இணைத்துக் கொண்டு மீண்டும் ‘பொடா’ சட்டத்தைக் கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்.

பழ. நெடுமாறன் உள்ளிட்டோர் மீது தமிழக அரசு ‘பொடா’ வழக்குகளைத் திரும்பப் பெற்றதையும் கண்டித்துள்ளார். பயங்கரவாதத்தை ‘பொடா’ சட்டங்களால் அடக்கிவிட முடியாது என்று மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், ஜெயலலிதாவுக்கு நன்றாகவே பதில் சொல்லியிருக்கிறார்.

நாடாளுமன்றம் தாக்கப்பட்டதையும், குஜராத் கோயிலுக்குள் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தியதையும், ‘பொடா’ சட்டத்தால் தடுக்க முடியவில்லை. ‘பொடா’ அமுலில் இருந்த போதுதான் இவைகள் எல்லாம் நடந்தன என்று ப.சிதம்பரம் சுட்டிக் காட்டியிருக்கிறார். பிரதமர் மன்மோகன் சிங்கும், மீண்டும் ‘பொடா’ கொண்டு வரப்பட மாட்டாது என்று உறுதியளித்திருப்பது, வரவேற்கத்தக்க அறிவிப்பாகும்.

சிறுபான்மை சமூகத்தையே ஒடுக்குவதற்கு பா.ஜ.க.வுக்கு ‘பொடா’ வேண்டும்; அதே போல் தமிழின உணர்வாளர்களையும், மனித உரிமைக்குக் குரல் கொடுப்பவர்களையும், முடக்கி செயல் படாது ஒடுக்குவதற்கு, பார்ப்பன ஜெயலலிதாவுக்கு ‘பொடா’ தேவைப்படுகிறது. ஆட்சியை விட்டு மக்களால் இறக்கப்பட்டப் பிறகும், ஜெயலலிதாவால் ‘பொடா’வின் மீதான பாசத்தை மட்டும் விட முடியவில்லை.

இந்த நிலையில், தமிழக அரசு, பழ. நெடுமாறன், சுப. வீரபாண்டியன், பாவாணன், சாகுல் அமீது, மருத்துவர் தாயப்பன், பரந்தாமன் உள்ளிட்டோர் மீதான பொடா வழக்குகளை திரும்பப் பெற்றுள்ளது. மக்கள் உரிமைக் கூட்டமைப்பு இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி ஜூன் 15 ஆம் தேதி மாநாடு நடத்திய நிலையில், அதற்கு முதல் நாளே தமிழக அரசு இந்த மகிழ்ச்சியான அறிவிப்பை மக்கள் உரிமைக் கூட்டமைப்புக்கு மதிப்பு மிக்க பரிசாக வழங்கியிருக்கிறது. கோரிக்கையை வைப்பதற்கு முன்பே, நியாயத்தை உணர்ந்து செயல்பட்ட தமிழக முதல்வர் கலைஞரை பாராட்டி, மகிழ்கிறோம்.

இதே போல் - தர்மபுரியில் ‘நக்சலைட் தீவிரவாதிகள்’ என்ற பொய்யான குற்றச்சாட்டில், எந்தக் குற்றச் செயலிலும் ஈடுபடாத 27 தோழர்களை 24.11.2002 அன்று ஜெயலலிதா அரசு கைது செய்து - பிறகு ‘பொடா’ சட்டத்தை ஏவியது. இரண்டரை ஆண்டு சிறைவாசத்துக்குப் பிறகு, ஆறு பெண்கள் மட்டும் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். 21 ஆண் தோழர்கள் கடந்த மூன்றரை ஆண்டுகளாக சிறையில் வாடுகின்றனர். இவர்களின் குடும்பங்கள் ‘சின்னா பின்னமாகி’ அலைக்கழிக்கப்பட்டு வருகின்றன.

அதே போல் - ‘நக்கீரன்’ ஆசிரியர் கோபால் மீதும் ‘பொடா’ சட்டத்தின் கீழ் பொய் வழக்கு தொடரப்பட்டது. நக்கீரன் கோபால் துப்பாக்கி வைத்திருந்ததாக பொய் வழக்குப் போட்டனர். அவரை ‘பொடா’வில் சிறைப்படுத்துவதற்காக ‘தமிழகம் முழுதும் கலவரப்பகுதியாக’ ஜெயலலிதா அறிவித்து கைது செய்தார்.

பகத்சிங், பிரபாகரன் என்ற இளம் சிறுவர்களையும் சட்ட விரோதமாக ‘பொடா’வில் கைது செய்த ஜெயலலிதா அரசு சிறையில் அடைத்ததை உயர்நீதிமன்றமே கண்டித்தது. அடக்கு முறைகள் இல்லாத மக்களாட்சி வந்துள்ள சூழலில் ‘பொடா’வின் கீழ் தொடரப்பட்ட, அனைத்து வழக்குகளையும், தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்; தமிழர்கள் உரிமையுடன், இதை எதிர்பார்க்கிறார்கள்.

முதல்வர் கலைஞர் செய்வார் என்ற உறுதியான நம்பிக்கை உண்டு!