ஒரு தனியார் தொலைக்காட்சியில் விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கம் அளித்த சிறப்பு பேட்டியின் ஒரு பகுதியை மட்டும் ஆதாரமாகக் காட்டி, முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலைக்கு புலிகள் பொறுப்பேற்றுள்ளதைப்போல ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இது குறித்து கருத்துக் கூறிய மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா புலிகளின் செயலை மறக்க மாட்டோம், மன்னிக்க மாட்டோம் என மிகக் கடுமையாக கூறியுள்ளார்.

பாலசிங்கத்தின் நேர்காணலில் ராஜீவ் கொலைக்கு வருந்துவதாக கூறியுள்ளாரே தவிர தாங்கள் அச்செயலை செய்ததாகக் குறிப்பிடவில்லை. ஆனால், நீண்ட இடைவெளிக்குப் பின் தாழ்வாக பறக்கும் விமானங்களை கண்காணிக்கும் ரேடார் கருவிகளை இலங்கை அரசுக்கு இந்திய அரசு வழங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புலிகளின் செயலை மறக்க மாட்டோம் மன்னிக்க மாட்டோம் என்ற மத்திய அரசின் கருத்து ஈழத் தமிழர்களை நிம்மதியாக வாழ விட மாட்டோம் என்ற பொருள் கொண்டதா? என எண்ணத் தோன்றுகிறது.

இலங்கை அரசுக்கு அளிக்கும் எவ்வித ராணுவ உதவியும் ஈழத் தமிழர்களை அழிப்பதற்கான உதவியாகவே கருதப்படுகிறது. விடுதலைப் புலிகள் மீது மத்திய அரசுக்கு வெறுப்பு இருந்தாலும் அதற்காக ஒட்டு மொத்த தமிழ் இனத்தையும் எதிரிகளாக கருதி அவர்களை அழிக்க இராணுவ உதவி அளிப்பதை நடுநிலையாளர்கள், குறிப்பாக, தமிழ்நாட்டு தமிழர்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

இலங்கை அரசுக்கு இராணுவ உதவி வழங்குவதை பெரியார் திராவிடர் கழகம் வன்மையாக கண்டிக்கிறது. ஈழ இனப் பிரச்சினைக்கு இப்பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என விரும்புகிற இந்திய அரசு, தமிழ் மக்களின் உணர்வுகளை மதித்து விடுதலைப் புலிகள் என்பதையும் தாண்டி ஈழத் தமிழர்கள் அமைதியின்றி, உரிமையின்றி வாழ்வதை கருத்தில் கொண்டு இலங்கை அரசுக்கு இராணுவ உதவிகள் வழங்குவதை நிறுத்த வேண்டும். அமைதி முயற்சிக்கு முனைப்பாக பங்காற்ற மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்

ஈழத்தில் புலிகள் நடத்தும் தனி அரசு

தமிழ் ஈழத்தில் - விடுதலைப்புலிகள், தனி ஆட்சியையே நடத்தி வருகிறார்கள் என்று சி.என்.என். தொலைக்காட்சி படங்களுடன் ஒளிபரப்பியது. என்.டி.டிவி - பாலசிங்கத்திடம் ஒரு மணி நேரம் பேட்டி எடுத்து, அதில் மூன்று நிமிட நேர பேட்டியை மட்டும் திரித்து ஒளிபரப்பி, விடுதலைப் புலிகளுக்கும், இந்தியாவுக்குமிடையே முரண்பாட்டை கூர்மையாக்கும் முயற்சிகளில் இறங்கியது. இதற்கு மாறாக - சி.என்.என். தொலைக்காட்சி, ஈழத்தில் விடுதலைப்புலிகள் தனியாட்சியை நடத்தி வரும் உண்மையை, படம் பிடித்து ஒளிபரப்பியது.

கிளிநொச்சியைத் தலைமையகமாகக் கொண்டு, விடுதலைப் புலிகள் தனி அரசு ஒன்றையே நடத்தி வருவதாக அந்த செய்தி கூறியது. புலிகளின் தலைமைச் செயலகம், விடுதலைப்புலிகளின் நீதிமன்றம், காவல்துறை, சட்டக்கல்லூரி, வங்கி ஆகியவற்றின் கட்டமைப்புகளையும், பெயர்ப் பலகையோடு சேர்த்து படம் பிடித்து ஒளிபரப்பியது.

நீதிமன்றங்களின் பொறுப்பாளராக இருக்கும் பரராஜசிங்கம் அவர்களின் பேட்டியையும் ஒளிபரப்பியது. புலிகளின் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக வந்துள்ள பொது மக்கள், தமிழீழக் காவல்துறை சீருடையில் பணியாற்றும் பெண் காவல்துறை அதிகாரிகளின் படங்களையும், படம் பிடித்துக் காட்டியது.

தமிழ் ஈழப் பிரதேசத்தில் 73 சதவீத பகுதிகள் - விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. இங்கு ஏற்கனவே தமிழ் ஈழ அரசு ஒன்றை விடுதலைப் புலிகள் நடத்தி வரும் நிலையில் தான் பேச்சுவார்த்தை மேடைக்கு வந்துள்ளார்கள்.

பார்ப்பன ஊடகங்களின் பொய்ப் பிரச்சாரங்கள் - அய்ரோப்பிய, அமெரிக்கத் தடைகளால் இனி, தமிழர்களின் விடுதலையை பின்னோக்கி நகர்த்த முடியாது என்பதை இந்த செய்திகள் சர்வதேச சமூகத்துக்குத் தெரிவித்துள்ளன என்று அரசியல் நோக்கங்கள் கருதுகிறார்கள், என்.டி. டிவிக்கு போட்டியாக - சி.என்.என். மேற்கொண்ட இந்த நடவடிக்கை உண்மைகளை உலகுக்கு எடுத்துச் சொல்லவே உதவியிருக்கிறது.