வல்லரசு, சாம்ராஜ்யம் என உலகில் மார்தட்டிக் கொண்டு அலையும் அமெரிக்கா பிச்சைக்காரர்களின் பூமியும் கூட. அமெரிக்கா முழுவதிலும் நீங்கள் பயணித்தால் இந்த பிச்சைக்காரர்களின் தரிசனம் கிடைக்கும். இவர்களை பார்த்து முகம் சுழித்து விலகிப் போகும் வெள்ளை மேட்டிமை மனங்களையும் சர்வசாதாரணமாக நீங்கள் பார்க்கலாம். கல்வி அறிவு பெறாத, உணவுக்கு வழி இல்லாத, வீடு கூட இல்லாத கோடிக்கணக்காணவர்கள் அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களின் ஜனத்தொகை புஷ் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கணிசமான வளர்ச்சி பாதையில் உள்ளதாக அமெரிக்க பத்திரிகைகளே தெரிவிக்கின்றன. ஐ.நா. சபையின் பல அறிக்கைகளும் அமெரிக்காவின் எதார்த்த நிலையை அசலாக பிரதிபலிக்கிறது.

Bush and Saddam

அமெரிக்காவின் வர்த்தக ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நகரம் நியூயார்க். உலக அளவில் அமெரிக்க சின்னமாகவே உருமாறிவிட்ட சுதந்திர தேவி சிலை அங்குதான் உள்ளது. அது அமெரிக்காவின் பரப்பான சுற்றுலா தளமும் கூட. சுற்றுலா பயணிகள் மற்றும் அமெரிக்காவில் குடியேறியவர்கள் அங்கு கூட்டம் கூட்டமாக செல்வது வழக்கம். நியூயார்க் நகரத்தில் உள்ள பேட்டரி பார்க் கிலிருந்து படகு மூலம் நீங்கள் சிலை உள்ள சிறிய திட்டை சென்றடையலாம். பேட்டரி பார்க் (Battery Park) முழுவதும் நீங்கள் ஆயிரக்கணக்கான பிச்சைகாரர்களை காணலாம். மக்கள் அங்கு படகு சவாரிக்காக ஆயிரக்கணக்கில் வரிசையில் காத்துக் கிடப்பார்கள். அந்த வரிசையில் உலகின் எல்லா தேசத்து மக்களையும் நீங்கள் காணலாம். ஆனால் எவராலும் இந்த முகங்களை பார்த்து எந்த தேசத்தை சார்ந்தவர்கள் என கண்டுபிடிக்க இயலாது. அவர்களுடன் உரையாடலில் ஈடுபடாமல் அது சாத்தியமில்லை. ஆனால் வரிசையில் நிற்பவர்களை பரவசத்தில் ஆழ்த்தும் வித்தை அறிந்தவர்கள் அமெரிக்க பிச்சைக்காரர்கள்.

விசித்திரமான பிச்சைக்காரர்களான இவர்கள் தேர்ந்த இசைக் கலைஞர்கள். வேலை கிடைக்காததால் இசையின் தோழமையுடன் வயிற்றை கழுவுகிறார்கள். நாம் வரிசையில் நின்று கொண்டிருக்கும் பொழுது நம் அருகில் வந்து நிற்பார்கள், கன நேரத்தில் இந்திய சுதந்திர கீதத்தை இசைக்க துவங்குவார்கள். லட்சம் மைல்களுக்கு அப்பால், அந்நிய நாட்டில் சட்டென அந்த கீதம் உங்கள் மனதில் ஏற்படுத்தும் பரவசம் விவரிக்க இயலாதது. பலர் கண் கலங்கி சட்டை பைக்குள் அல்லது வேலட்டில் கையை நுழைப்பார்கள். பல நேரங்களில் இந்தியர்கள் ஒரு டாலரை கையில் எடுத்தால், நீங்கள் தான் அதிகம் சம்பாதிக்கிறீர்கள் கொஞ்சம் தாராளமாக குடுங்கள் என உரிமையுடன் பேசத்துவங்குவார்கள்.

இதில் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் விசயம் என்னவென்றால் இதுபோல் உலக மக்கள் யாவரையும் முகச் சாடையை வைத்து கண்டுணர்ந்து உலக நாடுகள் அனைத்தின் தேசிய கீதங்களையும் இசைக்க தெரிந்த மேதைகள் இந்த பிச்சைக்காரர்கள். ஜாக்கி சான், ஐஸ்வர்யா ராய்க்கு பதிலாக உலக அளவில் சகோதரத்துவத்தை பரப்புவதற்கான தூதர்களாக ஐ.நா. இந்த பிச்சைக்காரர்களைத்தான் நியமிக்க வேண்டும். அங்குள்ள ரயில் நிலையங்கள் தான் பிச்சைக்காரர்களுக்கான இலவச இரவு விடுதி. அமெரிக்க காவல் துறையின் கெடுபிடி அதிகமாக இருப்பதால் எந்த நேரமும் பயத்துடனும், ஒருவித கலக்கத்துடன் அலைபவர்கள் இவர்கள். அமெரிக்க நகரங்களின் பல முக்கிய பகுதிகளுக்குள் இந்த பிச்சைக்காரர்கள் நுழைவது தடை செய்யப்பட்டுள்ளது. பல பிச்சைக்காரர்கள் நாள் முழுவதும் ரயிலில் பயணிப்பார்கள், காலை எழுந்தவுடன் அளவற்று பயணம் செய்யும் Unlimited Travel Ticket ஐ வாங்கிக் கொண்டு ரயிலேறி விடுவார்கள்.

இலவச உணவு மையங்களில் வயிற்றை நிரப்பிக் கொண்டு மீண்டும் பயணம். தொண்டு நிறுவனங்களின் இலவச உணவு மையங்கள் இல்லையென்றால் சோமாலியா போன்று சாவுகள் அமெரிக்காவில் வாடிக்கையாக இருந்திருக்கும். பயணிகள் ரயிலில் விட்டுச் செல்லும் படித்த புத்தகங்களை சேகரித்து அதை பழைய புத்தக கடைகளில் விற்பார்கள், கிடைத்த சேர்ப்புப் பணத்தில் அடுத்த பயணம் துவங்கும். இவர்கள் தான் அமெரிக்க தேசாந்திரிகள்.

சந்தை கலாச்சாரத்தின் போதை தலைக்கேறிய நாடு அமெரிக்கா. சாதனங்களை தயாரித்து குவிப்பதில், பெருமிதம் கொண்ட நாடு. வீட்டு உபயோக சாதனங்கள் அங்கு விதவிதமாக தினசரி தோன்றிய வண்ணம் இருக்கும். அதைவிட கூத்து அங்கு யாரும் பழுதடைந்த சாதனங்களை பழுதுநீக்கம் செய்வதில்லை. உதாரணத்திற்கு தொலைக்காட்சி பெட்டி பழுதடைந்தால் உடனடியாக அதை வீட்டுக்க வெளியே சாலையில் வைத்துவிட்டு புதிதாய் அடுத்தொன்றை வாங்கிவிடுவார்கள். அடுக்குமாடி கட்டிடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு வெளியே குவியல் குவியலாக நீங்கள் பொருட்களை காணலாம். இந்த பொருட்களை சேகரித்து அதை வைத்து குடும்பம் நடத்துபவர்கள் அங்கு ஏராளம். அமெரிக்காவில் பணிபுரிய சென்ற இந்தியர்கள் ஏராளம். மென்பொருள் துறையில் பணிபுரியும் இவர்களில் பலர் (திட்டத் தலைவர்கள் உள்பட) மாலை நேரங்களில் வெளியே கிளம்பி நல்ல பொருட்கள் கிடைக்குமா என்ற வேட்டையில் இறங்கி விடுகிறார்கள். அமெரிக்க பிச்சைக்காரர்களுக்கு கடும் நெருக்கடி தான்.

வேலையில்லா திண்டாட்டமும், கல்வி பெற இயலாததுமே அமெரிக்காவின் நெருக்கடிகளுக்கான முக்கிய காரணங்கள். நம் ஊர் +2 போல் அங்கு Pre Degree முடித்தவர்களே மிகவும் குறைவு. Pre Degree படித்து முடித்ததையே தங்கள் வாழ்நாள் சாதனையாக மார்தட்டிக் கொள்வார்கள். அதைவிட கொடுமை அமெரிக்காவில் உயர் படிப்பின் கட்டணம் மிகவும் அதிகம். அங்குள்ள நடுத்தர வர்க்கம் கூட இதை அடைய இயலாது. தன் சொந்த நாட்டு மக்களுக்கு அரசு வருவாயை செலவு செய்து கல்வி அளிக்க வக்கில்லாத அமெரிக்கா தந்திரமாக இந்திய அரசு வரி பணத்தில் படித்தவர்களை வேலையில் அமர்த்திக் கொள்கிறது. இதைத்தான், Brain Train என்கிறார்கள். ஒரு மாணவர் B.E., படிக்க 40 லட்சமும் B.Tech, படிக்க 1.25 கோடியை செலவிடுகிறது இந்திய அரசு. நோகாமல் நொங்கு திண்பது அமெரிக்கா. இது தனிக் கதை.

அமெரிக்காவின் உச்ச பட்ச ஏழ்மையை தரிசிக்க நீங்கள் Brooklyn, Bronx ஆகிய இரண்டு மாகாணங்களுக்குள் பயணிக்க வேண்டும். 90% கறுப்பர்கள் வசிக்கும் இந்த மாகாணத்துக்குள் வெள்ளையர்களை நீங்கள் காண முடியாது. அமெரிக்கர்கள் இந்த மாகாணங்களின் வழியாக செல்லும் கார்களில் அல்லது ரயிலில் கூட பயணிப்பது கிடையாது.

அமெரிக்காவில் விரவிக் கிடக்கிறது ஏழ்மை, கல்வி பெறாதவர்கள், வேலை கிடைக்காதவர்கள் பல கோடி.. இந்த சமனற்ற, சீரழிவுகள் நிறைந்த தங்கள் தேசத்தை விட்டு விட்டு இந்திய ஏழ்மையை, எய்ட்ஸ் நோயை என பல திட்டங்களுக்காக பில் கேட்ஸ் ஏன் மடியில் பணத்தை கட்டிக் கொண்டு அழைகிறார். ஃபோர்ட் நிறுவனத்திற்கு அமெரிக்க ஏழைகள் பற்றிய கவலை இல்லையா. இது எல்லாம் திட்டமிடப்பட்ட முரண். தன் நாட்டின் பஞ்சத்தை, பட்டினியை போக்க கதியற்ற அமெரிக்க அதிபர் புஷ் உலகை காப்பாற்ற வலம் வருகிறார்.....

---------------------

ஜார்ஜ் புஷ் இந்தியாவுக்குள் நுழைவதற்கு பல வாரங்களுக்கு முன்பே இந்திய நாளிதழ்கள், தொலைக்காட்சிகள் ஏராளமான விவாதங்களுக்கு தளம் அமைத்தது. இந்தியாவில் உள்ள முதலாளிகள் மற்றும் ஆளும் வர்க்கம் தவிர்த்து புஷ்ஷை எவரும் வரவேற்பதாக இல்லை. நாடெங்கிலும் கோபா வேசத்துடன் மக்கள் லட்சக்கணக்கில் தெருக்களில் திரண்ட வண்ணம் இருந்தனர். இடது சாரிகள், இஸ்லாமிய அமைப்புகளும் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தனர். வேண்டாத விருந்தாளியாக தன் பரிவாரங்களுடன் வந்து சென்றார் ஜார்ஜ் புஷ்.

இத்தனை பலகீனமான திட்டமிடுதல்களுடன் எந்த அதிபரும் பயணித்திருக்க மாட்டார். ஜார்ஜ் புஷ் இந்திய பாராளுமன்றத்தில் பேசுவார் என முதலில் அறிவிக்கப்பட்டது. பாராளுமன்றத்தில் எதிர்ப்பு வலுக்கத் துவங்கியது. இடது சாரிகளின் எதிர்ப்புக்குரல் திட்டமிடுபவர்களை திடுக்கிடச் செய்தது. முடிவை மாற்றி செங்கோட்டையில் பேசுவார் என அறிவிக்கப்பட்டது. என்ன ஆனதோ தெரியவில்லை அங்கும் அவர் பேசப் போவதில்லை என அறிவித்தார்கள். விசாரித்துப் பார்த்த பொழுது செங்கோட்டைப் பகுதியில் இஸ்லாமியர்கள் கணிசமான எண்ணிக்கையில் வாழ்ந்து வருவதால் பாதுகாப்புக் காரணங்களால் இடமாற்றம் செய்யப்பட்டதெனத் தெரிந்தது. தொலைக்காட்சிகளில் பார்த்த பொழுது அவர்களின் எதிர்ப்பு மிகுந்த ரௌத்திரத்துடன் அனல் வீசுவதை உணர முடிந்தது. பாதிக்கப்பட்ட சமூகத்தின் கோபம் வெளியாகும் பொழுது அது இப்படித்தான் இருக்கும்.

அமெரிக்க தூதரக அதிகாரிகள் மற்றும் இந்திய அமைச்சர்கள் புது தில்லியில் வெளியாகும் எல்லா நாளிதழ்களிலும் விளம்பரம் கொடுத்தார்களாம். அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் உரையாற்றவதற்கான இடம் தேவை என அந்த அறிவிப்பு கூறியது. புது தில்லியில் எவரும் செவி சாய்க்க வில்லை போலும். அடுத்த அறிவிப்பு வந்தது அவர் பூராணா கில்லாவில் பேசுவார் என. தமிழில் பூராணாகில்லாவுக்கு அர்த்தம் பழைய கோட்டை. தூதரக அதிகாரிகள் துப்புரவுத் தொழிலாளர்களைப் போல் ஒட்டடை அடிக்கத் துவங்கினார்கள். பாலடைந்த இந்த கோட்டைதான் புஷ் உரையாற்றுவதற்கான பொருத்தமான இடமும் கூட. இந்திய அமைச்சரவை இதைத் திட்டமிட்டுச் செய்ததா எனத் தெரியவில்லை.

பாவம் தூதரக அதிகாரிகள் கடந்த ஒரு மாதமாக சாமியானா பந்தல்களை, கொட்டகைகளை பிரிப்பதுவும், மேய்வதுவுமாக அழைந்து கொண்டு இருந்தார்கள். புது தில்லி மக்களைப் பொருத்தவரை அவர்களுக்கு கடந்த மாதத்தில் ஒரு விசயம் புலப்பட்டது. சாமியானா பந்தல்களை சுமப்பவர்கள் எல்லாம் அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் என அடையாளம் கண்டு கொண்டனர். பரவாயில்லை ஒரு விதத்தில் புஷ் வருகையால் கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொண்டார்கள் அமெரிக்கத் தூதரக அதிகாரிகள்.

பூராணாகில்லாவின் கூத்து அடுத்து துவங்கியது. இந்த நிகழ்வை யார் நடத்துவது என்பது தான் அந்த கூத்தின் மையக் கரு. இந்திய வர்த்தக கூட்டமைப்பு அந்த நிகழ்வை நடத்தப் போவதாக பத்திரிகைகளில் அறிவித்தது. அமெரிக்கத் தூதரகம் அவர்கள் தான் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பதாக அறிவித்தார்கள்.

அழைப்பிதழ்களையும், நுழைவுச் சீட்டுகளையும் அச்சடித்து விநியோகித்தது தூதரகம். புஷ் உரை நிகழ்த்துவதற்கு முதல் நாள் இந்திய வர்த்தக கூட்டமைப்பு தாங்கள் தான் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருப்பதாகவும், அமெரிக்கத் தூதரகம் விநியோகித்துள்ள நுழைவுச் சீட்டுகளுடன் எவர் வந்தாலும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவித்தது. தமிழ் சினிமாவில் வரும் செந்தில், கவுண்டமணி நகைச்சுவை காட்சிகளைப் பார்த்தது போல் இருந்தது. நிகழ்ச்சி நிரல் மாற மாற அழைப்பிதழ்களும், நுழைவுச் சீட்டுகளும் அச்சடித்து அமெரிக்கத் தூதரகத்திற்கு வெளியே குவிந்து கிடந்தது. தில்லியில் வாழும் விளிம்பு நிலை மக்கள் குளிர் காலம் என்பதால் சுடுதண்ணீர் போட இந்த காகிதக் குவியலைப் பயன்படுத்திக் கொண்டார்கள். அவர்கள் பகுதியில் சுவரொட்டிகள் வேறு அச்சடித்து ஒட்டினார்கள். சுடுதண்ணீர் போட அட்டைகள் கொடுத்த ஜார்ஜ் புஷ்க்கும், தூதரக அதிகாரிகளுக்கும் நன்றி! நன்றி!! நன்றி!!!

*****************

ஜார்ஜ் புஷ் விமானத்தில் வந்திறங்கினார். அவரை வரவேற்க இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் விமான நிலையம் சென்றார். இந்திய மண்ணில், இந்தியத் தலைநகரில் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் இந்தியப் பிரதமரை சோதனையிட்டனர். இதைவிட அவர்கள் நம்மை தலைகுனிய வைக்க முடியாதென்று தோன்றுகிறது. இந்த செய்திகளை நாளிதழ்களில் படிக்கும் பொழுது அமெரிக்க விமான நிலையம் ஒன்றில் ஜார்ஜ் பெர்ணாண்டஸ் நிர்வாணப்படுத்தப்பட்டது நினைவுக்கு வந்து சென்றது. நம் இறையாண்மையை குழி தோண்டிப் புதைக்கும் அடிமை மனோபாவம் உடையவர்களுக்கு இது கூட பல்லிளிக்கும் செயலே.

உலகில் எங்கெல்லாம் அநீதி நடக்கிறதோ, அங்கெல்லாம் அமெரிக்கா ஆஜராகி விடுமாம். மன்மோகன் சிங்கை அருகில் வைத்துக் கொண்டு தாக்குதல் தொடுக்கப்பட வேண்டிய நாடுகளின் பட்டியலை வாசிக்கிறார். வடகொரியா முதல் மியான்மர் வரை, ஜிம்பாப்வே, க்யூபா - இந்த நாடுகள் எல்லாம் விடுதலை அடைய தவிக்கிறதாம். இந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் நாங்கள் அடிமைத்தளையில் திணறிக் கொண்டிருக்கிறோம் என்று ஜார்ஜ் புஷ்ஷிடம் மனு போட்டார்களாம். தாக்கு தல் தொடுத்து இவர்களை யெல்லாம் விடுதலை யடையச் செய்ய விருக்கிறார் புஷ். தீவிரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவும், அமெரிக்காவும் கூட்டாக செயல்படுவோம் என தான்தோன்றித்தனமாக அறிவிக்கிறார். நிரம்பிய புன்னகையுடன் அடிமை மனோபாவத்தின் திருவுரு மன்மோகன் சிங் உரையை மௌனத்துடன் ஆமோதிக்கிறார்.

மகாத்மா காந்தியை கேவலப்படுத்தும் செயல் அடுத்து நிகழ்ந்தது. ஜார்ஜ் புஷ் ராஜ்காட் சென்று மகாத்மாவுக்கு அஞ்சலி செலுத்துவார் என அறிவிக்கப்பட்டது. அவர் அங்கு செல்வதற்கு முன்னால் அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகள் ராஜ்காட்டைப் பார்வையிட்டனர். காந்தியின் உறங்கிக் கொண்டிருக்கும் இடத்தில் பதிக்கப்பட்டுள்ள பளபளக்கும் சலவைக் கற்களை அமெரிக்க மோப்ப நாய்கள் நக்கத் துவங்கின. காந்தியின் பெயரைச் சொல்லி கடந்த ஐம்பது ஆண்டுகளாக பிழைப்பு நடத்தும் காங்கிரஸ் கட்சி மௌனம் காத்தது. காந்தியின் பெயரைச் சொல்லி இயங்கும், கதர்கடைகள் தடையற்று இயங்கின. பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிகழ்ந்த அமளி மட்டுமே நம்பிக்கை அளித்தது. மகாத்மா காந்தியின் பேரன் துஷார்காந்தி கண்ணீர் மல்க பத்திரிகையாளர்களிடம் தனது கண்டனத்தைப் பதிவு செய்தார். ராஜ்காட்டில் உள்ள காந்தியின் சமாதி இந்திய அரசாங்கத்தின் தீவிர பாதுகாப்பு அளிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்று. அங்கே அந்நியப் பாதுகாப்புப் படையினரை நம் அதிகாரிகள் அனுமதித்திருக்கவே கூடாது.

Dog in Rajkot
அருந்ததி ராய் கூறியது போல ஜார்ஜ் புஷ் என்ற போர்க் கிருமினலை காந்தியின் சமாதிக்கே அனுமதித்திருக்கக் கூடாது. அஞ்சலி செலுத்தும் விதமாக புஷ் ரோஜா இதழ்களை சலவைக் கற்களின் மீது தூவும் பொழுது அது ரத்தக் கறையாகவே படியும்.

ஜெர்மன் ஷேபர்ட் மற்றும் லாப்ரடார் வகையை சேர்ந்த 17 நாய்களை கொண்ட K-9 படை இந்தியா வந்தது. புஷ் வருவதற்கு வெகு முன்பாகவே இந்த மோப்ப நாய்கள் இந்தியா வந்து சேர்ந்தனர். நாள் ஒன்றுக்கு இந்த நாய்கள் ஒவ்வொன்றுக்கும் US $ 200 அதாவது 9000 ரூபாய் அறை வாடகைக்கு பிடிக்கப்பட்டது. அதை விட கொடுமை இந்த நாய்களை யாரும் பெயர் சொல்லி அழைக்கவில்லை. அந்த நாய்களின் பதவிகளான சேர்ஜன்ட் மேஜர், லெப்டினன்ட், இரண்டாம் லெப்டினன்ட் என அழைத்தார்களாம்.

உலகின் ஒட்டுமொத்த விவசாயத்தை அழித்துதொழித்த அமெரிக்கக் பன்னாட்டு நிறுவன அதிகாரிகளுடன் ஹைதராபாத் சென்றார் புஷ். விவசாயிகளின் தோழனாக பத்திரிகைப் புகைப்படக் காரர்களுக்கு ஏரைத் தோளில் சுமந்து போஸ் கொடுத்தார். இந்திய விவசாயத் துறையை மான்சாண்ட்டோவுக்கும், சிறு வணிகத்தை வால்மார்ட் நிறுவனத்திற்கும் முற்றிலுமாக திறந்து விடும்படி பணிவாக அதட்டினார். அமெரிக்கக் கோரிக்கைகளை யார் விரைவில் நிறைவேற்றுவது, அல்லது நிறைவேற்றியது என்ற ஓட்டப் பந்தயத்தில் நான் முந்தி நீ முந்தி என பா.ஜ.கட்சிக்கும் காங்கிரசுக்கும் ஒரே போட்டி. என்ன ஒற்றுமை பாருங்கள்.

*************

அமெரிக்க ஜனாதிபதிக்கு இந்திய எருமைமாடு ஒன்றை காண விருப்பம் என தூதரக அதிகாரிகள் தெரிவித்ததற்கு இணங்க ஆந்திர முதலமைச்சர் எருமை மாடு ஒன்றைத் தேடத் துவங்கினார். சந்திரபாபு நாயுடுவும், ராஜசேகரும் தொடர்ந்து கடைபிடித்துவரும் கொள்கைகளால் ஆந்திர கிராமப்புற நிலப்பரப்பை சுடுகாடாக மாறிவருகிறது. விவசாயிகளின் தற்கொலையில் அந்த மாநிலமே முதலிடம் வகிக்கிறது. அங்கு எப்படி கொழுத்த எருமை கிடைக்கும். கடைசியில் ஒரு வழியாக ஹரியானாவிலிருந்து எருமை ஒன்று வரவழைக்கப்பட்டது. அதை புஷ்ஷிடம் காட்டுவது என முடிவு செய்தார்கள். எருமையைப் பார்த்த புஷ் மாட்டுக்குப் பால் கறப்பதை பார்க்க வேண்டுமென்று விரும்பினார் மாடு ஒத்துழைக்க வில்லை. ஆந்திர அமைச்சரவை எவ்வளவோ முயற்சி செய்தது. இருப்பினும் பயன் இல்லை.

அந்த மாடு புஷ்ஷுடன் பேசத் தயாரானது. எருமை மாட்டுடன் உரையாடலில் ஈடுபட்டார் ஜார்ஜ் புஷ். என்ன பேசினார்களோ தெரியவில்லை இணக்கமான பேச்சுவார்த்தையாக அது அமைந்தது. அமெரிக்கக் கோரிக்கைகள் அனைத்துக்கும் அந்த எருமை தலையாட்டிய வண்ணம் இருந்தது. அந்தக் காட்சிகளை தொலைக்காட்சியில் பார்த்த பொழுது யாகவா முனிவர் நினைவில் வந்து சென்றார். ஜார்ஜ் புஷ் வந்திறங்கியதிலிருந்தே இந்திய ஆளும் வர்க்கம் தலையாட்டி பொம்மைகளாய் மாறிப்போனது.

ஜார்ஜ் புஷ் எதிர்கட்சித் தலைவரான அத்வானியைச் சந்தித்தார். இந்த சந்திப்பு எதற்கானதென்று குழப்பமாக இருந்தது. கூர்ந்து கவனித்த பொழுது புஷ் பத்திரிக்கையாளர்களிடம் பேட்டியளித்த பொழுது கூறிய வரி ஒன்று மின்னலாய் மனதைக் கிழித்தது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான அமெரிக்க தாக்குதலுக்கு அமெரிக்கக் கப்பல் படை இந்து மகா சமுத்திரம் வழிவந்த பொழுது இந்தியக் கப்பற்படை அவர்களுக்கு வழிகாட்டி உதவி செய்ததாம். அமெரிக்கா அந்த உதவியை என்றும் மறக்காதாம். அதற்காக இந்த சந்தர்ப்பத்தில் புஷ் நன்றி தெரிவித்துக் கொண்டார். அப்படியென்றால் நன்றி கூறத்தான் அத்வானியைச் சந்தித்தார்போல் தெரிகிறது.

**************

பொதுவாக நம்மிடம் உள்ள பொருளை அடகு வைக்க, பொருளை எடுத்துக் கொண்டு மார்வாடிக் கடைக்கு நாம் செல்வது வழக்கம். காலம் மாறிவிட்டது. அடகு பிடிப்பவர்கள் வீடு தேடி வந்து பொருட்களை அடகு வாங்கிக் கொள்கிறார்கள். உலகத்தையே தன் வசப்படுத்த நினைக்கும் அமெரிக்கா இந்தப் பயணத்தில் இந்தியாவில் உள்ள 14 அணு உலைகளை அமெரிக்க அடகுக் கடை வசம் ஒப்படைத்து விட்டது. இனி இந்த 14 அணு உலைகளில் எல்லா மாற்றங்களுக்கும் அமெரிக்காவின் பச்சைக் கொடி அசைவு தேவை. எப்படி அந்த 8 ராணுவம் தொடர்புடைய அணு உலைகளை விட்டு வைத்தார்கள் என்று தெரியவில்லை.

அணு ஆயுதப் பாதுகாப்பு உடன்படிக்கையும் அதற்கு அமெரிக்கா காட்டும் அவசரமும் எல்லோர் மனதிலும் சந்தேகத்தை விதைத்தது. உலக வரலாற்றிலேயே மிகுந்த கோழைத்தனமான மனிதத்தனமற்ற செயல் ஒன்று இருக்குமேயானால் அதில் எவருக்கும் மாற்றம் இல்லை- அது ஹிரோசிமா, நாகசாகியில் அமெரிக்கா அணு குண்டு வீசியதே. செப்டம்பர் 11 உலக வர்த்தக மையத் தாக்குதலுக்குப் பின் புத்தி பேதலித்தவனைப் போல் செய்வதறியாது அலைகிறது அமெரிக்கா. அமெரிக்க அரசும் மக்களும் நிம்மதியாய் உறங்கி வருடங்கள் ஆகி விட்டது. அவர்களுடைய மிகப் பெரும் கவலைகளே அவர்கள் ஜப்பானில் செய்ததை எவரேனும் திருப்பிச் செய்து விட்டால் என்ன செய்வது. இந்த பயத்தில்தான் உலகம் முழுவதிலும் உள்ள அணு உலைகளை குறி வைக்கிறது அமெரிக்கா.

உலகம் முழுவதிலுமே அணு உலைகள் துவங்கப்பட்டதன் மறைமுக நோக்கம், அணு குண்டுகளுக்கான கச்சாப் பொருளை பெறுவதே. தன்னை அச்சுறுத்தும் என அவர்கள் நம்பும் நாடுகளை நெருக்கடிக்குள்ளாக்கி வருகிறார்கள். முதல் இரண்டு இடங்களில் இருப்பவர்கள் வடகொரியாவும், ஈரானும். இவர்களது அணு உலைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர்கள் விரித்த வலையில் இன்று உலகம் முழுவதிலும் உள்ள அணு உலைகளை சேர்த்துக் கொள்ளபட்டன.

ஏற்கனவே ஏராளமான கூட்டு ராணுவ உடன்படிக்கைகள் கையெழுத்தாகியுள்ளது. இனி அமெரிக்கப் படைகள் உலகெங்கும் தாக்குதல் தொடுக்கச் சென்றால் நம் படை வீரர்கள் உடன் செல்ல வேண்டுமாம். இந்த தகவல்கள் மிகுந்த ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. நம் வெளியுறவுக் கொள்கைகள் எங்கோ காற்றில் பறக்க விட்டுவிட்டார்கள்.

ஜனாதிபதி மாளிகையின் முகலாய தோட்டங்களில் அப்துல் கலாம், அமெரிக்க அதிபர் புஷ்ஷிற்கு விருந்தளித்தார். அந்த விருந்தில் தன் பரிவாரங்களுடன் புஷ் கலந்து கொண்டார். அதிபர் புஷ்-ஐ மகிழ்விப்பதற்காக இந்திய கப்பற்படையின் பிரசித்திபெற்ற இசைக் குழு மைக்கல் ஜாக்சனின் We are the world பாடலை இசைத்தது. நல்ல வேளை இந்திய கப்பற்படைக்கு அமெரிக்க கப்பற்படை என பெயர் மாற்றம் செய்யாமல் போனார்கள்.

உலகின் மூன்றாம் உலக நாடுகள் யாவற்றின் வெளியுறவுக் கொள்கைகளை தீர்மானிக்கும் விதமாக அமெரிக்கா எல்லா நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடுகிறது. பொருளாதாரக் கொள்கைகள் துவங்கி, வெளியுறவுக் கொள்கைகள் வரை எல்லாவற்றையும் உலக வங்கியிலும் சர்வதேச நிதி ஆணையமும் தீர்மானித்து அனுப்புகிறது. உலகின் அரசாங்கங்கள் எல்லாம் அவர்களின் கருவிகளாக மாறி வருகிறார்கள். அமெரிக்க மாதிரிகள் உலகெங்கும் திணிக்கப்படுகிறது. ராயின் வரிகள் மீண்டும் - “இந்த கோரச் செயல்களை நம்மால் தடுத்து நிறுத்த இயலாமல் போகலாம். ஆனால் எதிர்ப்பை தொடர்ந்து தெரிவித்துக் கொண்டே இருப்பது நம் கடமை, நம் உரிமை.”

-----------------------------

அமெரிக்காவில் கோடிக்கணக்கில் மக்கள் பசியின் கோரப்பிடியில் சிக்கித் தவிப்பதை நாம் தொடர்ந்து அறிந்து வருகிறோம். கடுமையான ஊடக தணிக்கைகளைத் தாண்டி அந்த தகவல்கள் நம்மை வந்து சேருகின்றன. கோடிக்கணக்கான வயிறுகள் அமெரிக்காவில் பசித்துக் கிடக்க பில்கேட்ஸ், போர்டு மற்றும் ஜார்ஜ் புஷ்ஷின் அமைச்சரவை பரிவாரங்கள் உலகின் ஏழ்மையை துடைக்க புறப்பட்டு பயணித்தவண்ணம் இருக்கிறார்கள்.

America
உலகை அச்சுறுத்தும் தீய சக்திகளை அழித்தே தீர்வார்களாம். உலகின் சுதந்திரத்தை ஜனநாயகத்தை அமெரிக்காதான் காக்கப்போகிறதாம். இதைவிட பெரிய ஏப்ரல் பூல் ஜோக் வேறு எதுவாக இருக்க முடியும். தங்கள் நாட்டு ஏழை எளியோர் நோக்கி காத்திரமான அணுகுமுறையுடன் அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தாமல் வெட்டி வாய் பேசுகிறது அமெரிக்கா.

ஈராக்கில் தொடர்ந்து குண்டுமழை பொழிந்து, அங்குள்ள அப்பாவி மக்களை கொன்று குவித்து வருகிறது. அமெரிக்க நிறுவனங்களுக்கு புனரமைப்பு ஒப்பந்தங்கள், எண்ணெய் வயல்கள் குத்தகை என எல்லாம் திட்டமிட்டபடி நடந்து வருகிறது. ஈராக் மீது போர் தொடுத்ததில் அமெரிக்காவுக்கு இதுவரை ஆன செலவு என்ன தெரியுமா? அந்தப் பெருந்தொகையை மக்கள் வாழ்நிலை கோரும் திட்டங்களுக்குச் செலவிட்டால் நன்மையாக இருக்கும்.

மார்ச் 3ஆம் தேதி காலை 10:38 மணி வரை ஈராக் படையெடுப்புக்கு அமெரிக்கா செலவிட்ட தொகை எவ்வளவு தெரியுமா?

US $ 244, 826, 311, 900

இந்த தொகையை வைத்து 10 ஆண்டுகள் உலகம் முழுவதிலும் உள்ள பசி, பஞ்சத்தை போக்கிடலாம்.

இந்த தொகையை வைத்து 146, 602, 808 குழந்தைகளுக்கு ஓர் ஆண்டுக்கான மருத்துவ இன்சுரன்ஸ் செய்திடலாம்.

இந்த தொகையை வைத்து 4, 242, 877 பள்ளி ஆசிரியர்களை ஓராண்டுக்கு பணியில் அமர்த்தலாம்.

இந்த தொகையை வைத்து 11,868, 666 மாணவர்களுக்கு நான்கு ஆண்டுகள் ஸ்காலர்ஸிப் வழங்கலாம்.

இந்த தொகையை வைத்து 24 ஆண்டுகள் உலகம் முழுவதிலும் உள்ள எய்ட்ஸ் தடுப்பு திட்டங்களை செயல்படுத்தலாம்.

இந்த தொகையை வைத்து 81 ஆண்டுகள் உலகம் முழுவதிலும் பிறக்கப்போகும் குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் போடலாம்.

இந்தத் தகவல்களை அனைவரும் அமெரிக்க அதிபருக்கு கீழே குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்பலாம்.

George Bush
The White House
1600, Pennsylavania Avenue, N.W.
Washington DC
DC 20500
202 - 456 - 1111
Fax - 202 - 456 - 2461
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Pin It