தமிழ்நாட்டிலுள்ள 69 சதவீத இடஒதுக்கீடு தொடர்ந்து  நீடிக்க உச்சநீதிமன்றம் ஜூலை 13 ஆம் தேதி ஒப்புதல் தந்து விட்டது. அதே நேரத்தில் தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் 50 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கிறார்கள் என்பதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. இதற்கு ஓராண்டுகால அவகாசத்தை தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. எனவே தமிழக அரசு இதில் விரைந்து செயல்பட வேண்டியது அவசியமாகியுள்ளது. இதுபற்றி அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் ஊழியர்கள் நலச் சங்க பொதுச் செயலாளர் கருணாநிதி ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ வார ஏட்டுக்கு அளித்த பேட்டி ஒன்றில், தமிழக அரசுக்கு கீழ்க்கண்ட யோசனைகளை முன் வைத்துள்ளார்.
 
“சமூக நீதியின் தலைநகரமாக இருக்கக் கூடிய தமிழகத்தின் ஏறத்தாழ 80 ஆண்டு கால வரலாற்றில் இது முக்கியமான தீர்ப்பு.
 
உச்சநீதிமன்றம் 1950 இல் வழங்கிய தீர்ப்பு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 25 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்ட போது வந்த தீர்ப்பு. ஆனால் 2010 இல் வந்த இந்த தீர்ப்பு 50 விகிதத்திற்கு மேல் இடஒதுக்கீடு தொடர்வதற்கு ஒரு மாநிலம் வழிவகை செய்யக் கூடிய தீர்ப்பு.
 
இந்தியாவில் பல மாநிலங்களில் 50 சதவிகிதத்திற்கும் மேல் இடஒதுக்கீடு கிடையாது. இந்தத் தீர்ப்பின் மூலம் இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்கள் தங்கள் மாநிலத்தில் உள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப கல்வி, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க ஒரு வாய்ப்பினை அளித்திருக்கிறது.
 
தமிழக பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் தலைவர் நீதியரசர் ஜனார்த்தனம் ஏற்கனவே தமிழக அரசுக்கு ஓர் அறிக்கை தந்திருக்கிறார். அதில், “மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பை எடுத்துவரும் நிலையில், தமிழகத்தில் சாதிவாரியான கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் அனுப்ப வேண்டும். மக்கள் தொகை இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு2011 ஆம் ஆண்டு நடைபெறும்போது தமிழகத்தில் சாதிவாரியான கணக்கெடுப்பை நடத்த உதவ கேட்டுக் கொள்ள வேண்டும். தமிழக அரசு தனியாக நடத்தினால் கால தாமதம் மற்றும் 500 கோடி ரூபாய் அளவுக்கு செலவாகும். மத்திய அரசு எடுக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்போடு சேர்த்து எடுத்து விட்டால் எல்லாம் மிச்சப்படும்”என்றும் கூறியிருக்கிறார்.
 
சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் தமிழகத்தில் இருக்கும் பிற்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கையும், அவர்களில் எத்தனை பேர் டாக்டர்கள், இன்ஜினியர்கள், விவசாயிகள், வறுமை கோட்டிற்கு கீழே இருக்கிறார்கள் என்பது தெரிந்துவிடும்.
 
1931 ஆம் ஆண்டுக்குப் பிறகு சாதிவாரி கணக்கெடுப்பு நடக்கவில்லை என்று சிலர் சொல்வது தவறு. அதேபோல சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தினால் தேவையற்ற கொந்தளிப்பு ஏற்படும் என்று சொல்வதும் தவறு. ஆங்கிலேயர் காலத்தில் பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட பகுதிகள் இந்தியாவில் இருந்த காலகட்டத்திலேயே இது சாத்தியப்பட்டிருக்கிறது. மேலும் டச்சு ஆதிக்கம் இருந்த புதுச்சேரி மற்றும் கோவா போன்ற பகுதிகள்தான் இந்தப் பட்டியலில் இல்லை. வசதிகள் இல்லாத காலகட்டத் திலேயே சாதிவாரி கணக்கெடுப்பு சாத்தியப்பட்டபோது, அனைத்து வசதிகளும் நிறைந்த இந்தியாவில் இது சாத்தியப்படாதா?
 
ஒரு ஆண்டுக்குள் அறிக்கை சமர்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் கணக்கெடுப்பு முடிவுகள் மூன்று மாதத்தில் வந்துவிடும் என்பதால் நாம் அதை வைத்து அறிக்கை தயாரித்து விடலாம். இதன் மூலம் ஆண்டுதோறும் இடைக்கால நிவாரணம் மூலம் 69 சதவிகித இடஒதுக்கீட்டை பெறுவது தடுக்கப்பட்டு, முழுமையான நிவாரணம் கிடைக்கும்” என்று விளக்கி முடித்தார் கருணாநிதி.
 
இந்திய அளவில் சமூக நீதியை நிலைநாட்டும் பெருமையை தமிழகம் பெற வேண்டுமானால், அதன் பலன்களை இந்தியா முழுமையும் அனுபவிக்க வேண்டுமானால்... தமிழக அரசு ஒரு வருடத்துக்குள் உச்சநீதிமன்றம் கேட்ட அறிக்கையை தாக்கல் செய்வதில் வேகம் காட்ட வேண்டும் என்பதே சமூக நீதி ஆர்வலர்களின் அவா.

Pin It