நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களே அரசு ஆணைக்கு எதிராக கோயில் கட்டுவதை எதிர்த்த பேராசிரியர் கல்யாணி மற்றும் தோழர்கள் மீது வழக்கறிஞர்கள் பொய்யாக கொலை முயற்சி வழக்குப் போட்டனர். வழக்கறிஞர்கள் வாதாடவும் தடை போட்டனர். மிரட்டல்களை தகர்த்து வழக்கில் நீதி வென்றுள்ளதோடு, மதச்சார்பின்மைக்கு குரல் கொடுத்த தோழர்களையும் நீதிமன்றம் பாராட்டியுள்ளது. செய்தி விவரம்:

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு 7.9.2000 அன்று இரவு திண்டிவனம் சார்பு நீதிமன்ற வளாகத்திலுள்ள அரச மரத்தடியில், அப்போது இருந்த சார்பு நீதிபதி ஜி.எஸ்.ஆறுமுகம் ஆலோசனைப்படி வழக்கறிஞர்கள் பிள்ளையார் சிலை நிறுவினர். அரசு அலுவலகங்களில் மத வழிபாட்டுச் சின்னங்களை நிறுவக் கூடாது என்றும், ஏற்கனவே உள்ளவற்றை காலப்போக்கில் அப்புறப்படுத்த வேண்டும் என்றும் அரசு ஆணை இருப்பதால் நீதிமன்றத்தில் பிள்ளையார் சிலை நிறுவக் கூடாது என அப்போது விழுப்புரம் மாவட்டத்திற்கு நிர்வாகப் பொறுப்பு வகித்த உயர்நீதிமன்ற நீதிபதி எம்.கற்பக விநாயகம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் திண்டிவனம் மத நல்லிணக்கக் குழு சார்பாக புகார் செய்யப்பட்டது. இது தொடர்பாக 13.9.2000 அன்று பேராசிரியர் கல்யாணி திண்டிவனம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இதற்கு எதிராக திண்டிவனம் வழக்கறிஞர் செந்தாமரைக் கண்ணனை கொலை செய்ய முயற்சி செய்ததாக வழக்கறிஞர்கள் சார்பாக ஒரு பொய்ப் புகாரைக் கொடுத்து, பேராசிரியர் கல்யாணி, க.மு.தாஸ் (திராவிடர் கழகம்), ஆசிரியர் கந்தசாமி (த.தே.பொ.க) ஆகியோர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது. பிள்ளையார் சிலை வைப்பதற்கு காரணமாக இருந்த சார்பு நீதிபதி ஆறுமுகம் மீது தக்க நடவடிக்கை எடுக்கக் கோரியும், சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும், பிள்ளையார் சிலையை அகற்றக் கோரியும் 16.9.2000 அன்று பேராசிரியர் கல்யாணி சென்னை தலைமை நீதிபதிக்கு புகார் அனுப்பினார். திண்டிவனம் வழக்கறிஞர்கள் சாலை மறியல் செய்து, பொய் வழக்கின் கீழ் பேராசிரியர் கல்யாணியை கைது செய்ய வைத்தனர். மற்ற இருவர்கள் முன் ஜாமீன் பெற்றுக் கொண்டனர்.

இந்த கொலை முயற்சி வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, திண்டிவனம் விரைவு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக எந்த வழக்கறிஞரும் ஆஜராகக் கூடாது என்று திண்டிவனம் வழக்கறிஞர்கள் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனாலும் துணிவுடன் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் டி.ஏ.எஸ். பாலன் மற்றும் வழக்கறிஞர் எஸ். கணபதி ஆகியோர் வழக்கறிஞர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டனர்.

மேலும் ஆதரவாக இருந்த வழக்கறிஞர் விஜயராகவன் என்பவருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுத்தனர். இந்நிலையில் கொலை முயற்சி குற்றச்சாட்டுக்கான முகாந்திரம் ஏதும் வழக்கில் இல்லை என்று வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி பேராசிரியர் கல்யாணி உள்ளிட்ட மூவர் சார்பிலும் வாதாடப்பட்டது. விரைவு நீதிமன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்து விட்டது. தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இம் மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.அசோக்குமார் 28.6.06 அன்று ஒரு உத்தரவு பிறப்பித்தார்.

தங்கள் மீது தொடரப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நீதிபதி ஏற்கவில்லை. ஏற்கனவே வழக்கு விசாரணை தொடங்கி நடைபெற்று வருவதால் ரத்து செய்ய இயலாது என்று கூறி விட்டார். ஆனாலும், வழக்கு விசாரணையை திண்டிவனம் விரைவு நீதிமன்றத்தில் விசாரித்தால், பாகுபாடற்ற விசாரணையாக இருக்காது என்று கூறி, சென்னையில் உள்ள அமர்வு நீதிமன்றத்துக்கு வழக்கை மாற்றி உத்தரவிட்டார். திண்டிவனம் வழக்கறிஞர்கள் இந்த வழக்கில் ஆஜராக மறுத்ததோடு, வாதாட வந்த வழக்கறிஞர்களையும், வழக்கறிஞர் சங்கத்திலிருந்து நீக்கியது. அப்படி நீக்கப்பட்ட தீர்மான நகலையும் தர மறுத்தது ஆகியவற்றை நீதிபதி சுட்டிக் காட்டி, வழக்கை திண்டிவனத்திலிருந்து மாற்றினார்.

சென்னை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்த ஏ.சம்பத், கொலை முயற்சி குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று 11.11.2008 அன்று தள்ளுபடி செய்ததோடு, கோயில் கட்டுவதை எதிர்த்த தோழர்களையும் பாராட்டி, கீழ்க்கண்டவாறு தீர்ப்பில் எழுதியுள்ளார்.

“நமது அரசியல் சட்டத்தின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ள அரசியல் சட்ட அடிப்படை கட்டமைப்புகளான சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவைகளை போற்றிப் பின்பற்றுகின்ற நாம், ஆசிரியர் பணி ஓய்வுக்கு பிற்பாடும், அரசு ஆணை அடிப்படையிலான மத நல்லிணக்கத்திற்கான சமூக பணியாற்றி வரும் ஆர்வலர்களை அங்கீகரித்து, அவர்களது சமூக மேம்பாடு மற்றும் சமய நல்லிணக்கத்திற்கான நடவடிக்கைகளை ஊக்குவிப்பதின் மூலம் எதிர்கால சந்ததியினருக்கு வழிகாட்டுதலாக அமையும்” என்று குறிப்பிட்டுள்ளார். இது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.