சமத்துவக் குடியுரிமை

தாழ்த்தப்பட்ட வர்க்கங்கள், தங்களுடைய தற்போதைய பரம்பரையாக அடிமைப்பட்டவர்கள் என்ற நிலையில், பெரும்பான்மையினரின் ஆட்சிக்குத் தங்களைக் கீழ்ப்படுத்திக் கொள்வதற்கு சம்மதிக்க முடியாது. பெரும்பான்மையினரின் ஆட்சி நிறுவப்படு வதற்கு முன்னால் தீண்டாமை முறையிலிருந்து தங்களுடைய விடுதலை, நிறைவு பெற்ற உண்மையாக வேண்டும். இது, பெரும்பான்மையினரின் முடிவுக்கு விடப்படக் கூடாது. தாழ்த்தப்பட்ட வர்க்கங்கள் சுதந்திர மான குடியுரிமை பெற்றவர்களாக வேண்டும். நாட்டின் பிற குடிமக்களைப் போன்றே அனைத்துக் குடியுரிமை யின் அனைத்து உரிமைகளுக்கும் தகுதியுள்ளவர் களாக்கப்பட வேண்டும்.

(அ) தீண்டாமை ஒழிப்பை சாத்தியமாக்குவதற்கும், குடிகளின் சமத்துவ உரிமையைத் தோற்றுவிப்பதற்கும், கீழ்வரும் அடிப்படை உரிமை, இந்தியாவில் அரசமைப்புச் சட்டத்தின் ஓர் அங்கமாக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கை செய்யப்படுகிறது.

அடிப்படை உரிமை

“இந்தியாவிலுள்ள அனைத்துக் குடிமக்களும் சட்டத்தின் முன் சமமானவர்கள். அவர்களுக்கு சமத்துவ சிவில் உரிமைகள் உண்டு. தீண்டாமையின் காரணமாக, எந்த அபராதமோ, பாதிப்போ, இயலாமையோ சுமத்தப் படுவதற்கும் அல்லது நாட்டின் எந்த ஒரு குடிமக்களுக்கு எதிராகவும் எந்தப் பாரபட்சமோ காட்டப்படுவதற்கும் வகை செய்யும் தற்போதிருந்து வரும் எந்த சட்டமோ, விதியோ, உத்தரவோ, இந்த அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வரும் நாளிலிருந்து இந்தியாவில் எந்தப் பாதிப்பும் ஏற்படுத்துவதினின்றும் ரத்தமாகும்.''

(ஆ) 1919 ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டத்தின் 110, 111ஆவது பிரிவுகளின்படி, நிர்வாக அதிகாரிகள் அனுபவித்து வரும் காப்புரிமைகளும் விதிவிலக்குகளும் ரத்து செய்யப்படும். மேலும், நிர்வாக ரீதியிலான நடவடிக்கைக்கு அவர்கள் உள்ளாகும் நிலைமை, ஓர் அய்ரோப்பிய பிரிட்டிஷ் குடிமக்களுக்கு உள்ளது போன்று அதே நிலைமையில் வைக்கப்படும்.

சம உரிமைகளைத் தங்கு தடையின்றி அனுபவித்தல்

தாழ்த்தப்பட்ட வர்க்கங்களுக்கு சம உரிமைகள் உண்டு என்று பிரகடனம் செய்வதால் மட்டும் பயனில்லை. தாழ்த்தப்பட்ட வர்க்கங்கள் குடிமக்களின் சம உரிமைகளைச் செயல்படுத்த முயலும்போது, வைதிகச் சமூகத்தின் முழு எதிர்ப்பு சக்தியையும் எதிர் கொள்ள நேரும் என்பதில் எவ்வித அய்யப்பாடும் இல்லை. எனவே, உரிமைகள் பற்றிய இந்தப் பிரகடனங் கள் வெறும் புனிதமான அறிவிப்புகள் என்ற அளவில் இல்லாமல், அன்றாட வாழ்க்கையில் என்ற அளவில் இல்லாமல், அன்றாட வாழ்க்கையில் எதார்த்தங்களாக தாழ்த்தப்பட்ட வர்க்கங்கள் உணர வேண்டுமெனில், அறிவிக்கப்பட்ட உரிமைகளை அவர்கள் அனுபவிப் பதற்கு இடையூறாக தலையிடுபவர்களுக்கு போதிய தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் வகையில் அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

(அ) எனவே, குற்றங்கள், நடவடிக்கை, அபராதங்கள் தொடர்பான 1919 ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டத்தின் 11ஆம் பகுதியின் கீழ்வரும் பிரிவுகள் சேர்த்துக் கொள்ளப் பட வேண்டுமென்று தாழ்த்தப்பட்ட வர்க்கங்கள் அறிவிக்கை செய்கின்றன.

(i) குடியுரிமை மீறும் குற்றம்

“எந்த நபருக்காவது, சட்டப்படியல்லாது, எல்லா வர்க்கங்களுக்கும் பொருந்துகின்ற, முந்தைய தீண்டாமை நிலைமையைக் கணக்கில் கொள்ளாது எந்த சலுகைகள், அனுகூலங்கள், வசதிகள், விடுதிகளில் தங்கும் உரிமை கள், கல்வி நிலையங்கள், சாலைகள், நடைபாதைகள், தெருக்கள், குளங்கள், கிணறுகள், இதர நீர் நிலைகள், நிலம், வானம் அல்லது நீரில் பொதுப் போக்கு வரத்து வாகனங்கள், திரை அரங்குகள் அல்லது பொது மகிழ் இடங்கள், விடுதிகள் அல்லது கழிப்பிடங்கள் பொது மக்களின் நன்மைக்காக நிறுவப்பட்டவை அல்லது பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பராமரிக்கப்படுபவை அல்லது லைசென்சுக்கு விடப்பட்டவை ஆகியவற்றைப் பயன்படுத்துவதை யாராவது மறுத்தால் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். சிறைத் தண்டனை விதிக்கப் படுவர்; அது அய்ந்தாண்டுகள் வரை நீடிக்கக் கூடும், மேலும் அபராதமும் விதிக்கப்படும்.''

(அ) தாழ்த்தப்பட்ட வர்க்கங்கள் தமது உரிமைகளை அமைதிப் பூர்வமாக அனுபவிப்பதற்கு எதிராக வைதிகத் தனி நபர்கள் செய்யும் இடையூறுகள் மட்டுமே ஆபத்தானதல்ல. மிகவும் வழக்கமான இடையூறின் வடிவம் சமூகப் புறக்கணிப்பு ஆகும். வைதிக வர்க்கங்களின் கைகளில் அதுதான் மிகவும் வலிமையான ஆயதமாகும். அதைக் கொண்டு அவர்கள் தாழ்த்தப்பட்ட வர்க்கங்களின் எந்த நடவடிக்கைக்கான முயற்சியையும் அது அவர்களுக்கு செறிக்க முடியாததாகியிருந்தால், முறியடிக்கிறார்கள். அது செயல்படும் முறையும், அது செயலாக்கப்படும் சந்தர்ப்பங்களும் 1928 இல் பம்பாய் அரசு நியமித்த குழுவின் அறிக்கையில், நன்கு விவரிக்கப் பட்டுள்ளது. “ராஜதானியில் தாழ்த்தப்பட்ட வர்க்கங்களின் (தீண்டத்தகாதோரின்) மற்றும் பழங்குடிகளின் கல்வி, பொருளாதார மற்றும் சமூக நிலைமையை விசாரணை செய்வதற்கும், அவர்களின் முன்னேற்றத்திற் கான நடவடிக்கைகளைப் பரிந்துரை செய்வதற்கும் இக்குழு அமைக்கப்பட்டது. அந்த அறிக்கையின் ஒரு பகுதி பின்வருமாறு:

தாழ்த்தப்பட்ட வர்க்கங்களும் சமூகப் புறக்கணிப்பும்

“102. அனைத்துப் பொது வசதிகளிலும் தாழ்த்தப்பட்ட வர்க்கங்கள் தமது உரிமைகளைப் பெறுவதற்குப் பல்வேறு தீர்வுகளை நாங்கள் பரிந்துரை செய்துள்ள போதிலும், நீண்ட காலத்திற்கு அவர்கள் அவற்றை நடைமுறைப்படுத்தும் வழியில் சிரமங்கள் இருக்கும் என்று நாங்கள் அஞ்சுகிறோம். முதலாவது இடையூறும், வைதிக வர்க்கங்கள் அவர்களுக்கு எதிராகப் பகிரங்கமாக வன்முறையில் ஈடுபடுவார்கள் என்ற அச்சம். ஒவ்வொரு கிராமத்திலும் தாழ்த்தப்பட்ட வர்க்கங்கள் ஒரு சிறிய சிறுபான்மையோராக இருக்கின்றனர். அவர்களுக்கு எதிராக வைதிகர்கள் மிகப் பெரும்பான்மையினராக உள்ளனர். அவர்கள், தாழ்த்தப்பட்ட வர்க்கங்களிட மிருந்து ஏற்படப் போவதாகக் கருதப்படும் எந்தப் படையெடுப்பினின்றும் தமது நலன்களையும் சமூக நிலையினையும் காப்பாற்றிக் கொள்வதற்கு அவர்கள் (வைதிகர்கள்) மூர்க்கமாக உள்ளனர். போலீசாரால் வழக்குத் தொடரப்படக் கூடும் என்ற பயம். வைதிக வர்க்கங்கள் வன்முறையைப் பயன்படுத்துவதற்கு ஒரு எல்லை வரம்பை விதித்துள்ளன. எனவே, இதன் விளைவாக அத்தகைய வன்முறை நிகழ்வுகள் அரிதாக உள்ளன.

“தாழ்த்தப்பட்ட வர்க்கங்கள் இன்று இருந்து வரும் அவர்களுடைய பொருளாதார நிலையிலிருந்து இரண்டாவது சிரமம் ஏற்படுகிறது. ராஜதானியின் பெரும்பாலான பகுதிகளில் தாழ்த்தப்பட்ட வர்க்கங் களுக்கு பொருளாதார சுதந்திரம் இல்லை. சிலர் வைதிக வர்க்கங்களின் பொருளாதார சுதந்திரம் இல்லை. சிலர் வைதிக வர்க்கங்களின் நிலங்களை அவர்களுடைய வாரிசுதாரர்கள் தங்களுடைய விருப்பத்தின் பேரில் பயிரிடுகின்றனர். சிலர் வைதிக வர்க்கங்களினால் வேலைக்கு வைத்துக் கொள்ளப்பட்ட விவசாயத் தொழிலாளிகள் என்ற முறையில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு வாழ்கின்றனர். மற்றவர்கள், கிராம வேலையாட்கள் என்ற வகையில் வைதிக வர்க்கங்களுக்கு தொண்டு புரிவதற்காக, அவர்களால் வழங்கப்படும் உணவு அல்லது தானியத்தைக் கொண்டு உயிர் வாழ்கின்றனர்.

கிராமங்களில் தாழ்த்தப்பட்ட வர்க்கங்கள் துணிந்து தமது உரிமைகளை நடைமுறைப்படுத்த முயன்றபோது, அவர்களுக்கு எதிராக வைதிக வர்க்கங்கள் தமது பொருளாதார வலிமையை ஓர் ஆயுதமாகப் பயன் படுத்திய எண்ணற்ற எடுத்துக் கட்டுகளை நாம் கேள்விப்பட்டுள்ளோம். அவர்கள் நிலத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். அவர்களுக்கு வேலை கொடுக்க மறுத்துள்ளனர். கிராம வேலையாட்கள் என்ற வகையில் அவர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டிய ஊதியத்தை நிறுத்தி விட்டனர். இந்தப் புறக்கணிப்பு அடிக்கடி, ஒரு பரந்த அளவில் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. இதில், தாழ்த்தப்பட்ட வர்க்கங்கள் பொதுப் பாதைகளில் நடமாடுவதின்றும் தடுக்கப்படுவது கிராமக் கடைக்காரர்கள் அவர்களுக்கு வாழ்க்கைத் தேவைகளை விற்பதற்கு மறுப்பது ஆகியவையும் அடங்கும்.

நமக்குக் கிடைத்துள்ள சாட்சியங்களின்படி சில நேரங்களில், தாழ்த்தப்பட்ட வர்க்கங்களுக்கு எதிராக ஒரு சமூகப் புறக்கணிப்பை பிரகடனப்படுத்துவதற்கு சிறிய காரணங்கள் போதுமானதாக உள்ளது. அடிக்கடி, பொதுக் கிணற்றைப் பயன்படுத்துவதற்கு தாழ்த்தப்பட்ட வர்க்கங்கள் தமது உரிமையைச் செயலாக்கும்போது, இவ்வாறு சமூகப் புறக்கணிப்பு அறிவிக்கப்படுகிறது. தாழ்த்தப்பட்ட வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு நபர் பூணூலைப் போட்டுக் கொண்டாலோ, ஒரு துண்டு நிலத்தை வாங்கினாலோ, நல்ல துணிமணிகளை அல்லது நகைகளை அணிந்து கொண்டாலோ, அல்லது பொதுவான தெருவில் மணமகன் குதிரை மீது அமர்ந்தபடி திருமண ஊர்வலம் எடுத்துச் செல்லப்பட்டாலோ, ஒரு கடுமையான புறக்கணிப்பு பிரகடனம் செய்யப்பட்ட சம்பவங்கள் அரிதானதல்ல.

தாழ்த்தப்பட்ட வர்க்கங்களை ஒடுக்குவதற்கு இந்தச் சமூகப் புறக்கணிப்பைக் காட்டிலும் கூடுதல் பயனுறுதி யான வேறு எந்த ஆயுதமும் கண்டு பிடிக்கப்பட்டிருக்கக் கூடும் என்பதை நாம் அறியோம். பகிரங்கமான வன்முறை அதற்கு முன்னால் பிசுபிசுத்துப் போய்விடும். ஏனெனில், அது மிகவும் தொலை வீச்சுடைய மற்றும் பயங்கரமான விளைவுகளை கொண்டதாகும். அது மிகவும் ஆபத்தானது. ஏனெனில், அது ஒரு சட்டப்பூர்வமான முறை என்பதாகவும், தொடர்பு கொள்வதற் குரிய சுதந்திரம் என்ற தத்துவத்திற்கு இசைவுடைய தாகும் என்று போக்கு காட்டுகிறது. தாழ்த்தப்பட்ட வர்க்கங்களுக்கு, அவர்களின் மேம்பாட்டிற்குப் பேச்சுரிமையையும், செயல் உரிமையையும் நாம் உறுதிப்படுத்த வேண்டுமென்றால், பெரும்பான்மை யினரின் இந்தக் கொடுங்கோன்மைக்கு உறுதியாக முடிவு கட்டப்பட வேண்டும் என்று நாம் ஒப்புக் கொள்கிறோம்.

தமது பேச்சுரிமைகளுக்கும் சுதந்திரங்களுக்கும் எதிரான இந்த வகைப்பட்ட பேராபத்தைப் போக்குவதற்குரிய ஒரே வழி, சமூகப் புறக்கணிப்பை சட்டப்படி தண்டிக்கப்படத்தக்க ஒரு குற்றமாக்குவதுதான் என்று தாழ்த்தப்பட்ட வர்க்கங்கள் கருதுகின்றன. எனவே, 1919 ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டத்தில் குற்றங்கள், நடைமுறை மற்றும் அபராதங்கள் தொடர்புடைய 11 ஆவது பாகத்தில், கீழ்வரும் பிரிவுகளையும், சேர்க்க வேண்டும் என்று அவர்கள் நிச்சயம் வற்புறுத்துவார்கள்.

- அம்பேத்கர்

Pin It