அய்யாவின் சிந்தனைகள் - ஆயுள் செயலாளர் நிறுவனங்களின் ஆதிக்க உடைமையல்ல; அது, அடித்தள மக்களுக்கான உரிமை! பெரியார் திராவிடர் கழகம் 27 குடிஅரசு தொகுப்புகளையும் - 800 பக்கங்களுக்கும் அதிகமான ‘ரிவோல்ட்’ ஆங்கில பத்திரிகையின் கட்டுரைத் தொகுப்பு நூலையும் வெளிக் கொணர இருக்கிறது.

‘ரிவோல்ட்’ பெரியார் தொடங்கி நடத்திய ஆங்கில வார ஏடு. அப்பத்திரிகையை வெளியிட பெரியார் தேர்வு செய்த நாள் - ரஷ்யப் புரட்சி தினமான நவம்பர் 7 இல் 1928 ஆண்டு ‘ரிவோல்ட்’டின் முதல் இதழ் வெளியானது. முதலில் ஈரோட்டிலிருந்தும், இடையே சென்னையிலிருந்தும், பிறகு மீண்டும் ஈரோட்டிலிருந்தும் வெளிவந்தது. 1930 ஆம் ஆண்டோடு இதழ் நிறுத்தப்பட்டுவிட்டது என்றாலும், இந்த இரண்டாண்டு காலத்தில் அதன் சாதனை மகத்தானது.

இப்போது ‘குடிஅரசு’, ‘ரிவோல்ட்’ இதழ்களை மீண்டும் வெளிக் கொணருவதற்கு கி.வீரமணிகள் - எப்படி நீதிமன்றத்துக்குப் போவோம் என்று மிரட்டுகிறார்களோ, அதே போன்ற எதிர்ப்புகள் அன்றும் இருந்தன. இன்று வீரமணி, அன்று பிரிட்டிஷ் ஆட்சியின் உளவுத்துறை. அவ்வளவுதான் வேறுபாடு.

பெரியார் ‘ரிவோல்ட்’ ஆங்கில இதழைத் தொடங்குவதாக அறிவித்த பிறகும், 7 மாதம் வரை இதழைத் தொடங்க முடியவில்லை. காரணம், அன்றைய நீதிமன்றத்தில் நீதிபதி ‘ரிவோல்ட்டை’ பதிவு செய்ய மறுத்தார். ரிவோல்ட் பத்திரிகையின் வெளியீட்டாளரான அன்னை நாகம்மையார், நீதிபதியிடம் நேரில் சென்று விசாரித்தபோது, ரகசிய போலீசார் விசாரணைக்குப் பிறகுதான் பதிவு செய்யப்படும் என்று நிறுத்தி அறிவித்துவிட்டார்.

தொடர்ந்து அன்றைய ரகசிய போலீசார் ‘ரிவோல்ட்’ பத்திரிகை பற்றிய ரகசிய விசாரணைகளில் இறங்கினர். பின்னர் ரகசிய போலீஸ்துறை அதிகாரி, கேட்டுக் கொண்டதற்கு இணங்க, வெளியீட்டாளரான அன்னை நாகம்மையார் விளக்க அறிக்கை ஒன்றை எழுதிக் கொடுத்தார். அதில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

“ரிவோல்ட் என்ற வார்த்தைக்கு நான் எடுத்துக் கொண்ட அர்த்தம் கட்டுப்பாட்டை உடைத்தல் என்பது. அதாவது மனித தர்மத்துக்கும், மனித இயற்கைக்கும் விரோதமாக, அரசியல் ஆனாலும் சரி, மத இயலில் ஆனாலும் சரி, அதிகார இயலில் ஆனாலும் சரி, முதலாளி இயலில் ஆனாலும் சரி, ஆண் இயலில் ஆனாலும் சரி, மற்ற எவைகளினாலும் சரி, அவைகளினால் ஏற்படும் இயற்கைக்கும் அறிவுக்கும் மாறுபட்ட கட்டுப்பாடுகளை உடைத்து, உலகமும், அதன் இன்பமும், எல்லோருக்கும் பொது என்பதும், மக்கள் யாவரும் சமம் என்பதுமான கொள்கையை மனசாட்சிப்படி சாத்தியமான வழிகளில் பிரச்சாரம் செய்வதே அதன் நோக்கம்.”

இப்படி அதிகார இயல் கட்டுப்பாடுகளை தகர்க்க வந்ததுதான் ‘ரிவோல்ட்’. இன்று மீண்டும் அதை மக்களிடம் கொண்டு செல்லும் போதும், வீரமணியார்களின் ‘அதிகாரத்துவம்’ மிரட்டுகிறது. ‘கட்டுப்பாடுகள்’ என்ற ஆயுதத்தை கையில் எடுக்கிறது. நீதிமன்றம் போய் பெரியார் கொள்கைப் பரப்பலை தடுப்போம் என்று வீரம் பேசுகிறது. ‘ரிவோல்ட்’டும் ‘குடிஅரசு’ம் அன்று சந்தித்த தடைகளை 2008லும் சந்திக்கிறது. ஆனாலும், மிரட்டல்களை, உருட்டல்களை தூள்தூளாக்கி ‘ரிவோல்ட்’ மக்களிடம் வரு வதை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்திட முடியாது.

‘ரிவோல்ட்’ பத்திரிகையின் முதல் இதழை ஊ.பு.அ. சவுந்தரபாண்டியனார் வெளியிட்டார். விழாவில் வரவேற்புரையாற்றிய தந்தை பெரியார் இவ்வாறு குறிப்பிட்டார்: “முக்கியமாக நமக்கு எதிரிகள் பார்ப்பனர்கள் என்று எண்ணியிருந்தோம். ஆனால் அவர்கள் கூடுமானவரை எதிர்த்துப் பார்த்தார்கள். பின்னர் தங்கள் பித்தலாட்டக் காரியம் இங்கே செல்லாது என்று கண்டு அவர்களே இவ்வியக்கம் அவசியம் வேண்டியதுதான் என்று வெளியளவிலாவது சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால், நமக்கு எதிரிகள் நமக்குள்ளாகவே இருக்கிறார்கள். - ‘குடிஅரசு’ (11.11.28) இந்த செய்திகளைப் பதிவு செய்திருக்கிறது.

‘நமக்கு எதிரிகள் நமக்குள்ளாகவே இருக்கிறார்கள்’ என்று பெரியார் அன்று சொன்னது, இன்றும் உண்மையாகவே இருக்கிறது. வரலாறு படைத்த ‘ரிவோல்ட்’டில் பெரியார், குத்தூசி குருசாமி, இராமநாதன், நாகர்கோயில் வழக்கறிஞர் பி.சிதம்பரம்பிள்ளை, செல்வி ஞானம், வழக்குரைஞர் இலட்சுமிநாதன், ஜி.சுமதிபாய், மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி, செல்வி இந்திராணி, ஆர்.கே.சண்முகம், வழக்குரைஞர் கே.எம்.பாலசுப்பிரமணியம் என்று ஒரு எழுத்தாளர் பட்டாளமே கருத்துகளை எழுதிக் குவித்தது.

குத்தூசி குருசாமி இதிகாசங்களைப் பற்றி எழுதிய கட்டுரைத் தொடர் இந்தியா முழுவதையுமே கலக்கியது. அதைப் படித்த பிறகுதான், “காந்தியாரே, நான் சொல்லும் ராமன் வேறு; ராமாயண ராமன் வேறு” என்று தன்னிலை விளக்கம் தந்து, ராமாயண ராமனின் பக்தியிலிருந்து தன்னை துண்டித்துக் கொண்டார். இன்னும் ஒரு படி மேலே சென்று பார்ப்பனர்களைக்கூட, பெரியார் அன்று ‘ரிவோல்ட்’டில் எழுத அனுமதித்தார்.

‘பால்ய விவாகம்’ என்ற குழந்தைகள் திருமணக் கொடுமைச் சட்டத்தை அப்போது அரசு தடை செய்தது. தடைச் சட்டம் வந்த பிறகும்கூட, அதை செயல்படுத்த விடாமல் தடுக்கும் முயற்சிகளில் பார்ப்பனர்கள் இறங்கினர். பார்ப்பனர்களின் சூழ்ச்சிகளை ‘ரிவோல்ட்’ தொடர்ந்து அம்பலப்படுத்தியது. எம்.கே. ஆச்சாரியார் என்ற தமிழ்நாட்டுப் பார்ப்பனர் சிம்லாவில் இருந்து கொண்டு, இது தொடர்பாக தமிழகப் பார்ப்பனர்களுக்கு எழுதிய கடிதத்தை ‘ரிவோல்ட்’ அம்பலப்படுத்தியது. ‘ரிவோல்ட்’ ஆங்கில பத்திரிகை இந்தியா முழுதும் பொய்யுரைப்பதற்கு தடையாக இருப்பதை உணர்ந்த பார்ப்பனர்கள், திருச்சியில் கூடி, தங்களுக்கும் ஒரு ஆங்கில நாளிதழ் தொடங்க திட்டமிட்டனர்.

‘ரிவோல்ட்’ - இப்படி எல்லாம் பார்ப்பனர்களை கதிகலங்க வைத்தது என்பதுதான் வரலாறு. அந்த வரலாறுகளையும், அதன், கருத்தாழமிக்க கட்டுரைகளையும், ‘குடிஅரசு’ - வெளியிட்ட பெரியாரின் புரட்சிகர எழுத்துகளையும், தமிழ்நாட்டின் இளைய தலைமுறையினரிடம் கொண்டு போய் சேர்க்கும் கடமையில் தான் பெரியார் திராவிடர் கழகம், இப்போது தன்னை ஒப்படைத்துக் கொண்டு, களமிறங்கியுள்ளது.

பெரியாரின் சொத்துகளை தம்வசமாக்கிக் கொண்டு, பெரியாரை தங்களுக்கான ‘காப்புரிமையாக’ பறைசாற்றிக் கொள்ளும் வீரமணியார்கள், இந்த அரிய கருத்துக் கருவூலங்களை எப்போதோ வெளிக் கொண்டு வந்திருக்க வேண்டும். அந்த வரலாற்றுக் கடமைகளை ஆற்றாமல், “கி.வீரமணியின் வாழ்வியல் சிந்தனைகளை” ஆயிரம் ஆயிரமாய் அச்சடித்துக் கொண்டு, கூவிக் கூவி விற்றார்களே தவிர, ‘குடிஅரசு’ தொகுப்புகளை வெளிக்கொணரவில்லை. இப்போது தாமும் செய்யாமல், பிறரையும் செய்ய விடாது தடுக்கும் நோக்கத்தில் பெரியார் திராவிடர் கழகத்தின் முயற்சிகளை தடுக்கலாம் என்று துடிக்கிறார்கள்.

‘பூனைக் குட்டி வெளியே வந்துவிட்டது’ என்று அடிக்கடி கூறுவார், கி. வீரமணி. இப்போது, அதே சொற்றொடருக்கு அவரே சான்றாக நிற்கிறார். இப்போதுதான் அந்த சொற்றொடர் உயிர் துடிப்பு மிக்க அர்த்தம் பெற்றிருக்கிறது. இன உணர்வுள்ள தமிழர்களின் சிந்தனைக்கு - பெரியார் திராவிடர் கழகம் இந்த நியாயங்களை முன் வைக்கிறது. பெரியாரின் ‘குடிஅரசு’ தொகுப்புகளை கழகத்தின் கொள்கையாளர்கள் பல மாதங்கள் உழைத்து, தொகுத்து திரட்டி அதன் கையெழுத்துப் பிரதிகளை 1983 ஆம் ஆண்டிலேயே திரு.கி.வீரமணி அவர்களிடம் நேரில் வழங்கிய பிறகும், 2008 ஆம் ஆண்டு வரை அந்தத் தொகுப்புகள் அச்சு ஏறாமல் போனது ஏன்?

“வாழ்வியல் சிந்தனை”களுக்கு தரப்பட்ட முக்கியத்துவம், பெரியார் சிந்தனைகளுக்கு மறுக்கப்பட்டது ஏன்?

“பெரியார் திராவிடர் கழகம்” தொடங்கிய பிறகு தான், 2003 ஆம் ஆண்டு ‘குடிஅரசு’ முதல் தொகுப்பை வெளியே கொண்டு வந்தது. அதன் பிறகு 2005 ஆம் ஆண்டு இரண்டாம் தொகுப்பை இரு தொகுதிகளாக வெளியிட்டது. இப்போது 1925 முதல் 1938 வரை ‘குடிஅரசு’ பத்திரிகையில் வெளிவந்த பெரியாரின் பேச்சுகளையும், எழுத்துகளையும் ‘ரிவோல்ட்’ ஏட்டின் கட்டுரைத் தொகுப்புகளையும் வெளிக் கொணர பெரும் முயற்சிகளில் இறங்கியுள்ளது. எந்த பொருளாதார பின்புலமும் இல்லாமல், தொண்டர்களின் கொள்கை வலிமையில் மட்டுமே இயங்கி வரும் அமைப்பு. கொள்கைப் பற்றுக் காரணமாகவே இந்தக் கடமையில் இறங்கியிருக்கிறது.

இத்தனை ஆண்டுகாலமாக, பெரியாரின் ‘குடிஅரசு’ தொகுப்பை வெளியிடாமல், பெரியாரியலுக்கு துரோகமிழைத்தவர்கள், இப்போது ‘பெரியார் திராவிடர் கழக’த்தை மிரட்டி, இந்தக் கடமையை செய்யவிடாது துடிப்பதும், நீதிமன்றம் போவோம் என்று மிரட்டுவதும் நியாயம் தானா என்ற கேள்வியை இனமானத் தமிழர்களின் மனசாட்சிக்கு சமர்ப்பிக்கிறோம். ஒன்றை மட்டும் உறுதியாகக் கூறுகிறோம். எத்தனை தடைகள் அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள் வந்தாலும், பெரியார் திராவிடர் கழகத்தின் இப்பெரும் பணியைத் தடுத்து நிறுத்த முடியாது; முடியவே முடியாது.

தடைகளைத் தகர்த்து, பெரியார் திராவிடர் கழகம் தடம் தோள் உயர்த்தும்; சட்டங்களின் பொந்துகளுக்குள் மறைந்து கொண்டு பெரியார் சிந்தனைகளை முடக்கத் துடிப்போரின் முகத்திரையை கிழித்துக் காட்டும்; அடக்குமுறைகள் எதுவரினும் அரிமாவாக எழுந்து நின்று, ‘குடிஅரசு’ தொகுதிகளை மக்கள் கரங்களில் கொண்டு போய் சேர்க்கும்! திட்டமிட்டபடி செப்டம்பர் 17 இல் ‘குடிஅரசு’ தொகுதிகள் - தமிழின உணர்வாளர்களின் கரங்களில் போர் வாளாக மிளிரும்!

பார்ப்பன அதிகாரக் கட்டுகளை தகர்க்தெறிந்த ‘ரிவோல்ட்’, ‘குடிஅரசு’ மக்களிடம் வந்ததுபோல், மீண்டும் 80 ஆண்டுகளுக்குப் பிறகும் அதே தடைகளை சந்தித்து - மிரட்டல்களைத் தகர்த்து வெளிவரப் போகிறது. இதுவும்கூட ஒரு பெருமை தான். அன்று ‘ரிவோல்ட்’ எழுதிய வரிகளையே பதிலாக முன்வைக்கிறோம்.

“எங்களது இதயம் எங்கள் கடமையைச் சுட்டிக்காட்டுகிறது. இனியும் நாங்கள் தயங்கி நிற்க துணிய மாட்டோம். நாங்கள் எங்கள் கொடியை உயர்த்திவிட்டோம். அந்தக் கரங்களை கீழே இறக்க மாட்டோம். எங்கள் கரங்கள் முறியடிக்கப்பட்டு, புழுதிக்குள் புதையுண்டாலொழிய எங்கள் கரங்கள் உயர்ந்தே நிற்கும். இனி சமரசம் என்ற பேச்சே இல்லை. எங்களின் நியாயங்களுக்கு செவிகள் காது கொடுத்தே தீரும்.”

 ‘ரிவோல்ட்’ (3.11.1929)