ஒருநாள் உணவகம் ஒன்றில் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அந்த உணவகத்தில் மேசைகளை துடைப்பது, சாப்பிட வருகின்றவருக்கு நீர் வைப்பது, எச்சில் இலையை, எச்சில் தட்டை எடுப்பது என சில்லறை வேலைகளில் சிறுவர்கள் சிலர் ஈடுபட்டிருந்தார்கள். அவர்களுக்கு வயது 14க்குள் இருக்கும். எனக்கு நெருடலாக இருந்தது. குழந்தை உழைப்பை எவ்விதத்திலும் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது என்ற கொள்கை பிடிப்பு மனதிலே உண்டு. ஆனால் திரும்புகிற இடமெல்லாம் நிலைமை அப்படியேதான் இருக்கிறது. உணவகங்களில், தேனீர்க்கடைகளில், பேருந்துகளில் திண்பண்டம் விற்பவராக, தண்ணீர் பொட்டலங்களை விற்றுக் கொண்டு, திரையரங்குகளில், வாகனங்களை பழுது பார்க்கும் கடைகளில், வயல் வெளிகளில், வீட்டு வேலைகளில் தொலைக்காட்சி பெட்டிகளில் பொருளை விற்றுத்தரும் விளம்பரக்காரர்களாக.

Female Child
அரசியல் கட்சிகளுக்கு பிரச்சாரம் செய்பவராக இயற்கையாகவே “செத்துப் போன பசுவின் தோலிலிருந்து செய்த செருப்பைத்தான் அணிவேன்” என்று காந்தி கொள்கை பிடிப்போடு இருந்ததாகச் சொல்வார்கள். அவரின் கொள்கை தளர்ந்து போகாதிருக்க எப்போதும் ஒரு இணை செருப்புகள் அணியாக இருக்கும் காந்தியாரின் பரிவாரங்கள் இந்த விவகாரங்களை கவனமாகப் பார்த்துக் கொள்வார்கள். ஆனால் நமக்கு அப்படி எந்தப்பரிவாரமும் இல்லை. கொள்கை,

கொள்கையளவிலேயேதான் நிற்கிறது. இது எனக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகத்துக்குமே பொருந்தும் நிலைமைதான். சாப்பிட்டு முடித்த பின் உணவகத்திலிருந்து வெளியேற இருந்தபோது, ஒரு மேசையில் சாப்பிட உட்கார்ந்திருந்த இருவர் அச்சிறுவர்களையும், உணவகத்தின் உரிமையாளரையும் அழைத்து விசாரித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் இருவரும் தொழிலாளர் நலத்துறை அலுவலர்களாம். சிறுவர்களும், உணவக உரிமையாளரும பொய்களை சொல்லிக் கொண்டிருந்தனர். நான் ஆவலுடன் நின்று கவனித்தபடி இருந்தேன். இறுதியாக அலுவலரில் ஒருவர் சொன்னார்.

“சரி, சரி, இனிமே நான் இந்தப் பசங்கள இங்க பார்க்கக்கூடாது. தெரிஞ்சுதா?”

“சரிங்க சார்!”

உணவகத்தின் உரிமையாளர் ஒரு நிம்மதிப்பெருமூச்சுடன் சொன்னார்.

“டேய் பசங்களா, அய்யாக்கள நல்லா கவனிங்கடா!”

என்னா கேக்கறாங்களோ, அதக் கொடுங்க!

நான் அங்கிருந்து வெளியேறினேன். குழந்தைத் தொழில் நீடித்து நிலைப்பதற்கான அடிப்படைக் காரணத்தை கண்டுபிடித்து விட்டது போல் ஒரு உணர்வு. அந்த உணவகத்தின் உரிமையாளருக்கு சிறுவர்களை வைத்து தொழில் நடத்துவதில் எவ்விதமான குற்ற உணர்வும் இல்லை. அதை விசாரிக்கும் அலுவலருக்கு நடவடிக்கை எடுக்க மனமில்லை. பார்வையாளர்களுக்கு அக்கறையில்லை. உலகில் இன்று பெரியவர்களுக்காகவும், தனக்காகவும், தன் குடும்பத்துக்காகவும் உழைத்துக் கொண்டிருக்கும் 218 பில்லியன் குழந்தைத் தொழிலாளர்களும் இப்படியான சமூக நிலைமைகளிலிருந்தும், மனப்போக்குகளிலிருந்தும் தான் உருவாகிறார்கள்.

குழந்தைகளை வைத்து தொழில் செய்பவர்களுக்கு குற்ற உணர்வு இல்லாததற்கு காரணம் கறாரான சமூகப் பாகுபாடுதான். உழைக்கின்ற குழந்தைகளில் பெரும்பாலானோர் தலித்துகளாகவும், பொருளாதார ரீதியாகவோ, மத ரீதியாகவோ ஒடுக்கப்பட்டவர்களாகவும், வறுமைக் கோட்டுக்குக்கீழ் உள்ளவர்களாகவும், பெண்களாகவும் இருக்கிறார்கள். பொருளாதார ரீதியாகவும், சாதி மற்றும் பாலின ரீதியாகவும் ஒடுக்குகின்றவர்களாக இருக்கும் முதலாளிகளுக்கும், தொழில் அதிபர்களுக்கும், பண்ணையாட்களுக்கும் இது குறித்து கவலை ஏதுமில்லை. அவர்களுக்கு, மலிவான கூலிக்கு உழைக்கிறவர்கள் கிடைக்கிறார்கள். பல சமயங்களில் அவர்களே விதிகளை மீறுகிறவர்களாகிறார்கள். காஷ்மீர் மாநிலத்தின் ஸ்ரீ நகரில் 15 வயதுக்குட்பட்ட பல சிறுமிகளை பாலியல் தொழிலுக்கு ஆட்படுத்திய செய்தி இப்போது நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இச்சிறுமிகளுடன் பாலுறவில் ஈடுபடும் ஆபாசப் பட குறுந்தகடுகள் கள்ளச்சந்தையில் அங்கே விற்பனைக்கும் கிடைக்கிறதாக செய்திகள் சொல்கின்றன. இக்குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் இராணுவ உயர் அதிகாரிகளும், அரசின் உயர் அலுவர்களும் தான். இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டு சமூகம் மெத்தனமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்தியச் சமூகத்தின் தனிப் பண்பு இது. எத்தனையோ அதிர்ச்சிகளை இச்சமூகம் சந்தித்தது, அன்றாடம் சந்திக்கிறது. ஆனால் தன் அரசியல் தலைவன் தேர்தலில் தோற்றாலோ, கைது செய்யப்பட்டாலோ அதிர்ச்சியடைவதுபோல், வேறெந்த செயலுக்கும் இச்சமூகம் அதிர்ச்சியடைவதில்லை. சாதியும், மதமும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் இங்கே உருவாக்கி வைத்திருக்கும் கருத்தாக்கங்கள் அதிர்ச்சி தாங்கும் உய்வுப் பொருட்களாகப் பயன்பட்டு வருகின்றன. அதனால் தன் போக்கில் இச்சமூகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

இந்தியாவில் வேளாண்மை சார்ந்த தொழில்களிலும், செங்கல் அறுப்பு, தீப்பெட்டி, பட்டாசு, நெசவு, பீடி, தோல் பொருட்கள் தயாரிப்பு போன்ற தொழில்களிலும் குழந்தைத் தொழிலாளர் அதிக அளவிலே ஈடுபடுத்தப்படுகின்றார்கள்.

சமீபத்திலே வெளியிடப்பட்டிருக்கும் பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பின் அறிக்கையின்படி, உலகம் முழுவதிலும் இன்று சுமார் 218 மில்லியன் குழந்தைத் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். (The End of Child Labour; within Reach 2006) இவ்வறிக்கையின்படி, கடந்த இருபது ஆண்டுகளில் எடுக்கப்பட்ட பல்முனை நடவடிக்கைகளினால் 2000லிருந்து 2004 வருடத்திற்கும் இடையே 11 சதவீதம் குழந்தை தொழிலாளர் குறைந்திருப்பதாக அறியமுடிகிறது. ஆபத்து மிகுந்த தொழிகளிலே சுமார் 26 சதவீதம் குறைந்துள்ளது. ஆனாலும் ஒப்பிட்டளவிலே இது பெரிய மாறுதலாகத் தோன்றவில்லை.

Animals
வேளாண்மை சார்ந்த தொழில்களில் தான் மிக அதிகமாக 10ல் 7 குழந்தை தொழிலாளர்கள் இருக்கிறார்கள். ஆசிய பசிபிக் பகுதிகளில் 122 மில்லியன் குழந்தை தொழிலாளர்கள் இருக்கிறார்கள். இது மொத்தத்தில் 56 சதவீதம் ஆகும். 5 முதல் 14 வயதுக்குட்பட்டவர்களாக இருக்கும் இவர்களில் பலர் ஆபத்தான தொழில்களில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். ஆப்பிரிக்க நாடுகளில் நிலைமை மோசமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. அதிகரித்துவரும் மக்கட்பெருக்கம், இனக்குழு மோதல்கள் சமூகத்தில் செயலாற்றல் மிக்க வயதுடைய பலர் எய்ட்ஸ்சினால் இறந்து போதல் ஆகிய காரணங்களால் அங்கே குழந்தைத் தொழிலாளர்கள் அதிகரித்து இருக்கிறார்கள். குழந்தைத் தொழிலை ஒழிக்க உலகளாவிய அளவில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

1989ல், நவம்பர் 20 அன்று ஐ.நா.வினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட குழந்தைகளின் உரிமைகள் மீதான உடன்படிக்கைகள் இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்க முடியும். 54 விதிகளுடைய இந்த உடன்படிக்கை பல உறுப்பு நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகும். இந்த உடன்படிக்கைக்கான முன்வரைவுகள் 1942லும், 1959லும் உருவாக்கப்பட்டவை. இந்த உடன்படிக்கைகள் குழந்தைகளுக்கான அத்தனை உரிமைகளையும் வழங்கும்படி பரிந்துரைக்கின்றன. ஆனால் பல உறுப்பு நாடுகள் அவற்றை அமலாக்குவதில் அக்கறையின்றியே இருந்து வருகின்றன. இளம் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கக்கூடாது என்று இந்த உடன்படிக்கை கூறுகிறது. ஆனால் அமெரிக்கா இன்றளவும் அதை ஏற்காமல் இருப்பதோடு ஆண்டுதோறும் பல இளம் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றி வருகிறது.

குழந்தைத் தொழிலும், கொத்தடிமைத்தனமும் ஒன்றுடன் ஒன்று இணைந்ததாக, வலுவான சமூகக் காரணங்களைக் கொண்டிருக்கின்றன. வறுமையும், வேலையின்மையும், கல்வியறிவின்மையுமே இந்த இரண்டு தேசிய அவலங்களுக்கான காரணங்கள். இந்த நிலைமைகள் நீடித்திருக்கும் தலித் சமூகமே அதிக அளவில் கொத்தடி மைகளையும், குழந்தைத் தொழிலாளர் களையும் கொண்டதாக இருக்கிறது. இந்தியாவில் உள்ள சுமார் 4 கோடி (1999) கொத்தடிமைகளில் முக்கால் பாகம் தலித்துகள்தான். ஆந்திரா, பீகார், ஒரிசா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களிலே அதிக அளவிலும், பிற மாநிலங்களில் கணிசமாகவும் கொத்தடிமைகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் வேளாண் மை, நெல்(அரிசி) ஆலைகள், செங்கல் சூளைகள், கல் குவாரிகள் போன்ற தொழில்களில் கொத்தடிமைகள் அதிகம்பேர் இருக்கின்றனர். (கருப்பு அறிக்கை)

குழந்தைத் தொழிலை ஒழிக்க பல்வேறு சட்டங்கள் இந்தியாவிலே இயற்றப்பட்டுள்ளன. ஆனால் அவைகள் ஒழுங்காக செயல்படுத்தப் படாமலேயே இருக்கின்றன. குழந்தைத் தொழிலாளர்களையும், கொத்தடிமைகளையும் மீட்டு, அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் நோக்கோடு அளிக்கப்படும் பண உதவிகளும், கடன் உதவித் திட்டங்களும் உரியவர்களுக்கு சென்று சேராமல் ஏமாற்றப்படுகின்றன. ஆண்டு தோறும் பள்ளிகளிலே பீடி மற்றும் ஆபத்தானதும், சுகாதாரக் குறைவானதுமான தொழில்களை செய்வோரின் குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகையில் சுமார் 50 சதவீதம் அத்தொழிலில் ஈடுபடாதவர்களுக்கே சென்று சேர்கிறது. குழந்தைகளை, கொத்தடிமைகளாக வைத்திருக்கும் முதலாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவதில்லை. குழந்தைத் தொழிலாளர் தடுப்புச்சட்டம் மிகக் குறைந்த அளவிலேயே செயலாக்கப்படும் சட்டமாகத்தான் இந்தியாவிலே இருந்து வருகிறது.

பன்னாட்டு அளவிலே பரிந்துரைக்கப்படும் கூலி விகிதங்களை இங்கேயும் செயல்படுத்தினால் பெருமளவிலான குழந்தை தொழிலாளர்கள் விடுவிக்கப்படுவார்கள். குடும்ப நபர்கள் எல்லோருமே சேர்ந்து உழைத்தாலும் நிறைவடையாத வறுமையுடன்தான் இங்கே பல குடும்பங்கள் இருக்கின்றன. இதற்குக் காரணம் அநியாயமான கூலியை வழங்குவதுதான்.

தொழிற்சங்கங்கள் குழந்தை உழைப்புக்கு எதிராக கடுமையான பிரச்சாரத்தையும், ஒழிப்பு நடவடிக்கைக்கான ஒத்துழைப்பையும் வழங்குவது மற்றொரு தீர்வாக இருக்கும். குழந்தைத் தொழில் முறை நீடித்திருப்பது பெரியவர்கள் பெறும் கூலியில் மறைமுக பாதிப்பை எப்போதும் செலுத்தி வருகிறது. இதனோடு சேர்த்து ஒருங்கிணைக்கப்படாத தொழிலாளர்களை ஒருங்கி ணைப்பதும் கொத்தடிமை முறையை ஒழிக்க உதவும். அவர்களை விழிப்படையச் செய்து போராட்டத்துக்கு அணியமாக்குவதும், தமது உரிமைகளை பெறுவதற்கான தொடர் போராட்டங்களில் முன்னிறுத்துவதும் இன்றைய தேவையாகும்.

குழந்தை தொழிலாளர்களே இல்லாமலாக்கி கொத்தடிமை முறையை ஒழிப்பதில் சீனா தடம் பதித்திருப்பதாக நமக்கு செய்திகள் வருகின்றன. பல்லாயிரக்கணக்கான மக்களை வறுமையிலிருந்து மீட்டதும், கட்டாயக் கல்வி வழங்கியதும், வெற்றிகரமான மாற்றங்களையும், சரியான இலக்குடன் அமைந்த சமூக நலத்திட்டங்களையும் செயல்படுத்தியதுமே இம்மாற்றத்துக்கான காரணங்களாக சொல்கிறார்கள்.

இந்தியாலும் இதுபோன்ற நடவடிக்கைகளே சிறப்பானதாக பலன்தரும் வகையில் இருக்கும் என்று உறுதியாக நம்பலாம். இதில் தலித் மற்றும் சிறுபான்மையினரின் அரசியல் அமைப்புகளும், தொழிலாளர் நல அமைப்புகளும், இயக்கங்களும் மேலும் கவனம் செலுத்த வேண்டி இருக்கிறது.

பல் முனைத்தாக்குதலே எதிரியை வீழ்த்தும் சிறந்த தந்திரம்.
Pin It