1967 தேர்தல் முடிந்த நேரம், ராஜபாளையத்தில் காங்கிரசு கட்சி மாநாடு. மாநாட்டு மேடையில் தலைவர் காமராஜரும், மற்றவர்களும் உட்கார்ந்திருக்க, நானும் இருக்கிறேன்.

முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காமராசரின் நெருங்கிய நண்பருமான டி.டி.கிருஷ்ணமாச்சாரி ஒலிபெருக்கியில் பேசுகிறார். தேர்தலில் காங்கிரசு கட்சி தோற்றுப் போனதற்கான காரணத்தை அவர் நோக்கில் பேசிக் கொண்டிருந்தவர், திடீரென என் பக்கம் திரும்பி, என்னை கையால் சுட்டிக்காட்டி - “இதோ, இங்கே நாத்திகம் இராமசாமி வீற்றிருக்கிறார்..... காங்கிரசு மேடையில் ஈ.வெ.ரா.வின் நாத்திகம் வந்து உட்கார்ந்ததும், காங்கிரசு தோல்விக்கு ஒரு காரணம்...” என்று அவர் சொல்லி முடிப்பதற்குள்ளேயே, தலைவர் காமராஜர் பெரும் கோபம் கொண்டு எம்பி எழுந்து, டி.டி.கே.யை நோக்கிக் கையை நீட்டி, ஆவேசமாகச் சொன்னார் - “உங்களைப் போன்றவர்கள் தான் தோல்விக்கு காரணம். உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள். அவன் வேலையை அவன் செய்வான். வேறு எதையாவது பேசுங்கள்” என்று ஓங்கிச் சத்தம் போட்டார்.

டி.டி.கே. பேச்சை நிறுத்திவிட்டு பதட்டத்தோடு நின்று கொண்டிருந்தார். தொடர்ந்து பேச முடியாமல் விக்கித்து நின்றார். மேடையில் இருந்தவர்களும் அதிர்ந்து போனார்கள். மக்கள் கூட்டமும் காமராஜர் உள்ளத்தைக் கண்டு, கரவொலி எழுப்பி ஆரவாரம் செய்தது.

இதுதான் காமராஜரின் உணர்வும் உள்ளமும், சுயமரியாதைக் கொள்கை உறவும்.

அதனால்தான், காங்கிரசு கட்சியின் ஈடு இணையற்ற தலைவர் காமராஜரை, நமது தந்தை பெரியாருக்கு இணையான சுயமரியாதைக் கொள்கைத் தலைவராக நான் ஏற்றிருக்கிறேன்.

‘நாத்திகம்’ இதழில் (ஜூலை 15) ஆசிரியர் பி.இராமசாமி எழுதியதிலிருந்து.

(ஜூலை 15 - காமராசர் பிறந்த நாள்.)