பத்திரிகையாளரும், மிகச் சிறந்த புகைப்படக் கலைஞருமான தோழர் ‘சுபா’ சுந்தரம், கடந்த 16.7.2005 சனி இரவு 10 மணியளவில் கடும் மாரடைப்பால் முடிவெய்தினார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவருக்கு வயது 64. தந்தை பெரியார், காமராசர், அண்ணா போன்ற மறைந்த மூத்தத் தலைவர்களோடு நெருக்கமாகப் பழகியவர். தந்தை பெரியாரைப் பல்வேறு கோணங்களில் புகைப்படங்கள் எடுத்தவர். ‘விடுதலை’யில் சுருக்கெழுத்தாளராகப் பணியைத் துவங்கி, தமிழ்நாடு, சுதேசமித்திரன் ஏடுகளில் செய்தியாளராகப் பணியாற்றி, பிறகு ‘சுபா’ என்ற செய்தி புகைப்பட நிறுவனத்தைத் துவக்கினார். அவர் படம் பிடித்த பல தலைவர்களது படங்கள் தான், காலத்தால் நிலைத்து நிற்கிறது.

1976-ல் தனது திருமணத்தை மணியம்மையார் தலைமையில் அவர் செய்து கொண்டார். அவரது இராயப்பேட்டை அலுவலகம் பல பத்திரிகையாளர்களுக்கு தாய்வீடாக இருந்தது. இனிமையாகவும், அன்போடும் மற்றவர்களுக்கு உதவிட வேண்டும் என்ற மனித நேயத்துடனும் வாழ்ந்த ‘சுபா’ சுந்தரம், உலகின் பல்வேறு நாடுகளுக்குச் சென்று வந்தவர். ஆனந்த விகடனில் மணியன் எழுதிய உலகப் பயணக் கட்டுரைகளுக்கு புகைப்படக் கலைஞராகச் சென்று வந்தவர். புகைப்படத் துறையில் பல இளைஞர்களை உருவாக்கிய பெருமை அவருக்கு உண்டு.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பொய்யான குற்றச்சாட்டின் கீழ், அவர் கைது செய்யப்பட்டு சுமார் 8 ஆண்டுகாலம் சிறையில் வாடிய பிறகு குற்றமற்றவர் என்று அவரை நீதிமன்றம் விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது.