ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் திரைப்படம் ஒன்றை சிங்கள இயக்குனர் பிரீஸ் என்வர் தயாரித்து, அதை பிரதி எடுப்பதற்காக (பிரிண்ட்) அந்த இயக்குனர் சென்னை ஜெமினி கலையகத்துக்கு வந்தார். செய்தி வெளியானவுடன், தமிழின உணர்வாளர்கள் கலையகம் விரைந்து எதிர்ப்பு தெரிவித்தனர். திரைப்பட இயக்குனர் சீமான், சுப. வீரபாண்டியன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் அமைப்பினரோடு பெரியார் திராவிடர் கழகத் தோழர்களும் விரைந்தனர். படத்தின் உள்ளடக்கம் பொதுவானது என்று கூறி, சிங்கள இயக்குனர் எதிர்ப்பாளர்களை ஏளனப்படுத்தியபோது, அவர் தாக்குதலுக்கு உள்ளானார்.

படத்தை திரையிட்டு பார்த்தப் பிறகு பிரதி எடுக்கலாம் என்று ஜெமினி கலையகத்துடன் பேசி முடிவெடுக்கப்பட்டது. இதற்கு சிங்கள இயக்குனரும் ஒப்புக் கொண்டார். மார்ச் 27 ஆம் தேதி அப்படம் வட பழனியில் உள்ள ஒரு திரையரங்கில் திரையிடப்பட்டது. திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தலைவர் இராம. நாராயணன், நடிகர் சத்தியராஜ், தங்கர்பச்சான், இயக்குனர் சீமான் உள்ளிட்ட கலை உலகப் பிரமுகர்களும், தொல். திருமாவளவன், பேராசிரியர் சுப.வீரபாண்டியன், கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், பா.ம.க. துணைத்தலைவர் முத்துக்குமார் மற்றும் தோழர்களும் படத்தைப் பார்த்தனர்.

சுமார் இரண்டு மணி நேரம் ஓடும் அத்திரைப்படம் இலங்கை ராணுவ அமைச்சகத்துக்கும், ராணுவ தளபதிகளுக்கும் நன்றி கூறி தொடங்குகிறது. பிரபாகரன் என்ற பெயரில் ஒரு சிறுவன், விடுதலைப்புலிகள் அமைப்பில் விருப்பமின்றி கட்டாயப்படுத்தி சேர்க்கப்படுவதாகவும், புலிகள் அமைப்பு பள்ளிக்கூடத்தில் நுழைந்து சிறுவர்களை கடத்திச் சென்று ராணுவத்தில் சேர்ப்பதாகவும் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன. பிரபாகரன் சகோதரியான தமிழ்ப் பெண், ஒரு சிங்களரை காதல் திருமணம் செய்து கொண்டு, நிறை மாத கர்ப்பிணியாக இருக்கும்போது, அந்தப் பெண்ணை தற்கொலைப் போராளியாக மாறுமாறு, விடுதலைப்புலிகள் கட்டாயப்படுத்துவதாகவும், அந்தப் பெண் மறுத்து, கடைசியில் புலிகளையே வெடிகுண்டு வீசி கொல்வதாகவும் கதை சொல்லியிருக்கிறார்கள்.

பிரபாகரன் என்ற சிறுவன் விடுதலைப் புலிகள் படையிடமிருந்து சிறுவர்களோடு தப்பும் போது, அனைவரும் புலிகளால் கொல்லப்படுவதாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. படத்தில் எந்த ஒரு இடத்திலும், ஒரு சிங்கள ராணுவமோ, சிங்கள ராணுவ தளபதியோ தலைகாட்டும் காட்சியே கிடையாது. அந்நிய நாடுகள் சதி செய்து - போலி சமாதான முயற்சிகளை மேற்கொள்வதாகவும், சர்வதேச தொண்டு நிறுவனங்கள் சிங்களர்களை எதிர்த்து செயல்படுவதாகவும், புலிகள் தாக்குதலால், அகதிகள் முகாம்களில் சிங்களர்கள் உணவின்றி தவிப்பதாகவும், காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. முழுமையாக பொய்யைப் பரப்பும் படத்தைப் பார்த்து கொதித்துப் போன தமிழர்கள் படத்தைத் திரையிட எதிர்ப்பு தெரிவித்தனர்.

சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரக அதிகாரியான அம்சா என்பவரே இத் திரைப்படத்தை தமிழில் பிரதி எடுத்து, தமிழகத்தில் திரையிடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதால், சிங்கள இயக்குனர் சென்னை வந்துள்ளார். எதிர்ப்பு வலுத்தவுடன், தமிழக காங்கிரஸ் கட்சியிடம் சிங்கள தூதரகம் சரணடைந்துள்ளது. காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம், சிங்கள தூதரகத்துடன் நெருக்கமாக இருப்பவர்; அவர் பத்திரிகையாளர்களைக் கூட்டி, சிங்கள இயக்குனர் தாக்கப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக மீனவர்களை சிங்களப் படைகள் தாக்கும் போதெல்லாம் ஒரு முறைகூட கண்டனம் தெரிவிக்காத எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் என்ற மனிதர், இப்போது சிங்கள இயக்குநருக்காக குரல் கொடுக்க முன் வந்துள்ளார். சிங்கள இயக்குனரைத் தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த சென்னை பிரமுகர் சபீர் அலி என்பவர் காவல் நிலையத்தில் புகார் கூறியுள்ளார்.

இதற்கிடையே ‘பிரபாகரன்’ படம் பற்றி சில முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. இந்தப் படத்தில் துரோகக் குழுவைச் சார்ந்த பிள்ளையான் என்பவரின் ஆட்களே, நடிக்க வைக்கப்பட்டுள்ளனர். துணை ராணுவக் குழுக்கள் அதிகம் நடமாடும் வெலிக்கந்த எனும் பகுதியில் இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. சிங்கள ராணுவத்தில் உயர் அதிகாரிகளான மேஜர் ஜெனரல் பராக்கிரம பன்னிப்பிட்டிய மற்றும் கேணல் பெரேரா ஆகியோர் படத் தயாரிப்புக்கு முழுமையாக உதவிகளை செய்துள்ளனர். தமிழ்நாட்டில் உருவாகியுள்ள இந்த எழுச்சி சென்னை இலங்கை தூதகரத்தை மட்டுமல்ல, தமிழக காங்கிரசாரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.