“இடஒதுக்கீடு எங்கள் உரிமை: அதை இழக்க முடியாது”

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தமிழ் மாநிலக் குழுவின் ஏற்பாட்டில் ‘தேவேந்திர குல வேளாளர் சமூக உரிமைப் பாதுகாப்பு மாநாடு” 24.9.2017 ஞாயிறு மாலை 6 மணியளவில் திருநெல்வேலி வானவில் திருமண மண்டபத்தில் எழுச்சியுடன் நடந்தது. ‘தேவேந்திர குல வேளாளர்’ எஸ்.சி. இடஒதுக்கீடு பட்டியலில் இடம் பெற்றிருப்பது இழிவு என்று பேசி வரும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, இடஒதுக்கீட்டால் தேவேந்திர குல வேளாளர்களுக்கு எந்தப் பயனும் கிடைக்கவில்லை என்று கூறி பட்டியலிலிருந்து வெளியேற வேண்டும் என்று பேசி வருகிறார். இதற்கு எதிராக தேவேந்திரகுல வேளாளர்கள் பல ஆயிரக்கணக்கில் திரண்டு, மாநாட்டின் வழியாக டாக்டர் கிருஷ்ணசாமிக்கு  கண்டனத்தைத் தெரிவித்ததோடு, இடஒதுக்கீடு போராடிப் பெற்ற உரிமை, அதை இழக்க முடியாது என்று தீர்மானம் நிறைவேற்றி யுள்ளனர். மாநாட்டுக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொதுச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தியாகி இமானுவேல் பேரவை பொதுச் செயலாளர் பூ. சந்திரபோசு, தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர் பி.சம்பத், பொதுச் செயலாளர் கே. சாமுவேல்ராஜ், பொறியாளர் ஊர்க்காவலன், நெல்லை மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வர் டாக்டர் எஸ். ராமகுரு, எம்.எஸ். (ஆர்த்தோ) உள்ளிட்ட பலரும் பேசினர். மாநாட்டு அரங்கம் நிரம்பி வழிந்தது. மண்டபத்துக்கு வெளியே போடப்பட்டிருந்த நாற்காலிகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. அவர்களுக்கு மாநாட்டு நிகழ்ச்சிகள் ‘காணொளி’ காட்சிகள் வழியாக ஒளிபரப்பப்பட்டது. இட ஒதுக்கீட்டின் உரிமைகளால்தான் ஓரளவு தலைநிமிர முடிந்தது என்பதை மாநாட்டுத் தீர்மானம் சுட்டிக் காட்டியது.

1918இல் சென்னை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற 14,927 பேரில் பார்ப்பனர்கள் மட்டும் 11,532 பேர்; மீதமுள்ள அனைத்து சாதிகளிலிருந்தும் பட்டம் பெற்றவர்கள் 3395 பேர் மட்டுமே என்று சுட்டிக்காட்டிய தீர்மானம் மத்திய அரசுத் துறைகளில் ‘ஏ’ பிரிவு பதவிகளில் பட்டியல் இனப் பிரிவினர் 11.5 சதவீதம் மட்டுமே இடம் பிடிக்க முடிந்திருப்பதை சுட்டிக் காட்டியுள்ளது. இடஒதுக்கீடு இல்லை என்றால், என்னவாகும் என்பதற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகளே சான்று என்பதை தீர்மானம் எடுத்துக் காட்டியது. “2012இல் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மொத்தம் 28 பேர். இதில் பட்டியல் சாதியினர் ஒருவர்கூட இல்லை. உயர்நீதிமன்ற நீதிபதிகள் 1036. இதில் பட்டியல் சாதியினர் 26 பேர் (2.5 சதவீதம்) மட்டுமே. ஏன் உச்சநீதி மன்ற வரலாற்றிலேயே வரதராசன், கே.ஜி.பாலகிருட்டிணன் ஆகிய இருவர் மட்டுமே பட்டியல் ஜாதி யினராக இருந்திருக்கிறார்கள். இட ஒதுக்கீடு இல்லை என்றால் இந்த நிலை தான் அனைத்துத்துறைகளிலும் நீடிக்கும்.

பட்டியலிலிருந்து விலகிக் கொண்டால் உள்ளாட்சித் தேர்தல் களில் சட்டமன்ற நாடாளுமன்றத் தேர்தல்களிலும், பிரதிநிதித்துவம் பறிபோய்விடும். தமிழ்நாட்டில் 1.5 இலட்சத்துக்கும் மேற்பட்ட பட்டியல் ஜாதி மாணவர்கள் அரசு ஆணை 92இன்படி ஆண்டுக்கு ரூ.70,000 பெற்று, பொறியியல் படித்து வரு கிறார்கள். இதில் 25,000 மாணவர் களாவது தேவேந்திரகுல வேளாளர் சமூக மாணவர்களாக இருக்க மாட்டார்களா? இதில் பெரும் பாலோர் கூலித் தொழிலாளர்களின் பிள்ளைகள்தானே!

சிறப்பு உட்கூறு திட்டம், தாட்கோ போன்ற திட்டங்களின் மூலம் பட்டியல் ஜாதிப் பிரிவினருக்கு கிடைக்கும் பயன்களை இழந்து விட முடியுமா?” என்றும் தீர்மானம் குறிப்பிடுகிறது.

“தேவேந்திர குல வேளாளர் மக்கள் மீதான ஒடுக்குமுறைகளை எதிர்த்துப் போராட 1953இல் தியாகி இமானுவேல் சேகரன் ஒடுக்கப்பட் டோர் கழகத்தை தொடங்கினார். 1954இல் அருப்புக்கோட்டை மற்றும் முதுகுளத்தூரில் இரட்டைக் குவளை ஒழிப்பு மாநாடுகளை நடத்தினார். கோயில் திருவிழாக்களில் பட்டியல் இன ஜாதியினர் மீது திணிக்கப்பட்ட தீண்டாமைகளை எதிர்த்துப் போராடினார். 1957இல் ஜாதி வெறியர்களால் படுகொலை செய்யப் பட்டார். எனவே இழிவு என்று இகழ்ந்தால் இமானுவேல் சேகரன் வழியில் போராடுவோம். சமூக, பொருளாதார, அரசியல் தளத்தில் நமக்கு உரிய பங்கு கிடைக்கும் வரை இடஒதுக்கீட்டு உரிமையை விட்டுத் தர மாட்டோம்” என்று மாநாட்டுத் தீர்மானம் அறிவித்தது.

மாநாட்டில் ஏராளமான மாணவர்கள், வழக்கறிஞர்கள், இளைஞர்கள் திரண்டிருந்தனர்.