முதல்வர் ஜெயலலிதா தலைமையில் பதவியேற்ற 28 அமைச்சர்களும் ‘ஆண்டவன்’ பெயரில் உறுதி ஏற்றனர். தலா 14 பேர் கொண்ட இரண்டு அணிகளாக உறுதி ஏற்றனர். கடவுளை மறுத்து ‘உளமார’ என்று உறுதி ஏற்கும் வாய்ப்பு அமைச்சர்களுக்கு இந்த முறையினால் மறுக்கப்பட்டது. (அப்படி உளமார உறுதி ஏற்கும் துணிவு எந்த அமைச்சருக்காவது இருக்குமா என்பது வேறு கேள்வி; கடந்த முறை சட்டமன்ற உறுப் பினர்களாக பதவியேற்றபோது ஜோலார்பேட்டை வீரமணி மட்டும் கடவுள் பெயரால் உறுதியேற்கவில்லை என்ற ஒரு செய்தியும் உண்டு)

1967ஆம் ஆண்டு தி.மு.க. அமைச்சரவை அமைந்தவுடன் முதன்முதலாக கடவுள் பெயரால் உறுதியேற்கும் முறையை முதல்வர் அண்ணா மாற்றி ‘உளமார’ என்று கூறி உறுதி ஏற்கச் செய்தார். தொடர்ந்து எம்.ஜி.ஆர். தலைமையில் அ.இ.அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த போதும் ‘கடவுள்’ பெயரால் உறுதி ஏற்கவில்லை. அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த ஹண்டே போன்ற பார்ப்பனர்கள் மட்டும் கடவுள் பெயரால் உறுதி ஏற்றனர்.

கடவுள், மதங்களில் நம்பிக்கை யற்றவர்கள் கடவுள் பெயரால் உறுதியேற்க இயலாது என்பதை சுட்டிக்காட்டி, ஓர் இயக்கத்தையே இங்கிலாந்து நாட்டில் நடத்தினார், நாத்திகரான சார்லஸ் பிராட்லா. நாடாளுமன்றத்திற்கு நான்கு முறை அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட போதும் கடவுள் பெயரால் உறுதியேற்க மறுத்து, நாடாளுமன்றமே போகவில்லை. அதற்குப் பிறகு ‘கடவுள்பெயரால்’ உறுதியேற்க விரும்பாதவர்கள், ‘உளமார’ என்று கூறி உறுதி ஏற்கலாம் என்று 1888ஆம் ஆண்டு இங்கிலாந்து பொதுச் சபை பிராட்லா முயற்சியால் ஒரு சட்டத்தை நிறைவேற்றியது. தொடர்ந்து 1909ஆம் ஆண்டு உறுதி ஏற்புக்கான சட்டத்தில் இது இணைக்கப்பட்டது. நீதிபதிகள் பதவியேற்புக்கும் இது பொருந்தும். சட்டம் வந்த பிறகும்கூட மதவாதிகள் பழைய பழக்கத்தைக் கைவிட தயாராக இல்லை. புதிய உறுதியேற்பு சட்ட வாசகங்களை எடுத்து வரவில்லை என்று கூறி உறுப்பினர்களை கடவுள் பெயரால் உறுதியேற்கச் செய்ய சூழ்ச்சி செய்தனர்.

சூழ்ச்சியை புரிந்து கொண்ட உறுப்பினர்கள் பதவி ஏற்புக்குச் செல்லும் போதே, புதிய உறுதி ஏற்பு சட்ட நகலை தங்கள் கையுடன் எடுத்துச் சென்று அதை வைத்து உளமார என்று உறுதி ஏற்றனர். இந்த இங்கிலாந்து மரபைப்பின்பற்றி, ‘உளமார’ என்ற உறுதி ஏற்பு நடைமுறையை செயல்படுத்திக் காட்டினார் அண்ணா.

அண்ணாவின் படத்தை கொடியிலேயே பதித்து வைத்திருக்கும்ஜெயலலிதாவின் கட்சி, ‘கடவுள்’ பெயரால் மட்டுமே உறுதி ஏற்பதை கட்டாயமாக்கிவிட்டது. ‘கடவுள்’ என்பதற்கான விளக்கம் வரையறை ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்? என்று சார்லஸ் பிராட்லா, எழுப்பிய கேள்வியையே மீண்டும் எழுப்ப வேண்டியிருக்கிறது!