இலங்கையின் அத்துமீறல்கள் குறித்து - உள்நாட்டு விசாரணை நடத்தப் போவதாக அதிபர் சிறிபாலசேனா அறிவித்திருக்கிறார். இது உலக நாடுகளை ஏமாற்றும் ‘கபட நாடகம்’.

இலங்கை அரசை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்து!

ஈழத் தமிழர்களிடமும் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களிடமும் அவர்களின் அரசியல் கோரிக்கையை தீர்மானிக்க வாக்கெடுப்பு நடத்து -

இந்த இரண்டு முழக்கங்கள் அய்.நா.வை நோக்கி உலகத் தமிழர்களின் ஒருமித்த குரலாக ஒலிக்கிறது.

இலங்கை ஒற்றை ஆட்சியின் கீழ் தமிழர்கள் இணைந்து வாழ முடியாது - ஏன்?

• சிங்கள - புத்த மெஜாரிட்டி மக்களுக்கான சிறீலங்கா அரசு தமிழர்கள் மீதான இனப்படுகொலைகளுக்கான திட்டங்களை 1948ஆம் ஆண்டு முதலே தொடங்கி படிப்படியாக 60 ஆண்டுகளாக நிகழ்த்தி வருகிறது. அந்த இனப்படுகொலை 2009இல் முள்ளிவாய்க்காலில் முடித்து வைத்து, அதன் வெற்றி விழாவைக் கொண்டாடியிருக்கிறது.

• 60 ஆண்டுகாலங்களில் அங்கே ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை. இப்போதும் இராஜபக்சே போய், சிறிபாலசேனா அதிபராகி யிருக்கிறார். அங்கே தமிழர்களுக்கு உரிமைக் காற்று வீசத் தொடங்கிவிட்டதாக இந்தியாவும் பார்ப்பன ஊடகங்களும் ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கி வருகின்றன. சிறீபாலசேனா யார்? அவர்தான் முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தகாலத்தில் 4 மாதங்கள் தற்காலிக பாதுகாப்புத் துறை அமைச்சராக பொறுப்பேற்று இனப்படுகொலைகளை வழிநடத்தியவர்.

• அந்த இனப்படுகொலைகளை கட்டவிழ்த்து விட்ட அதே இராணுவ அதிகாரிகள்தான் இப்போதும் பதவியில் இருக்கிறார்கள். விடுதலைப் புலிகளையும் தமிழர்களையும் அழித்தொழிக்க சபதமேற்று செயல்பட்ட இராணுவ தளபதி சரத் பொன்சேகா மீண்டும் இராணுவ அதிகாரியாகி விட்டார். (அதிகாரப் போட்டியில் இடையில்சிலகாலம் இராஜபக்சேயுடன் முரண்பட்டு நின்றார்; அவ்வளவுதான்)

• விசாரணையின்றி - தமிழர்களை இழுத்துப்போய் சித்திரவதை செய்வதற்கும், காலவரம்பின்றி சிறையில் அடைப்பதற்கும் காரணமான ‘பயங்கரவாத தடுப்புச் சட்டம்’, இப்போதும் நீக்கப்படாமல், அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. அதனால்தான், “சிறீபால சிவசேனா தமிழர்களின் நம்பிக்கையைப் பெற முடியாது” என்று சர்வதேசப் புகழ் வாய்ந்த ‘எக்னாமிக்ஸ்’ பத்திரிகை (ஜன.3, 2015) எழுதுகிறது.

• ஆட்சி (Government) என்பது வேறு; அரசு (State) என்பது வேறு; ஆட்சிகள் மாறலாம்; ஆனால்,அரசு நிலையானது. அரசு என்றால், அதில் நாடாளுமன்றம், நீதிமன்றம், நிர்வாக அமைப்பு,இராணுவம் போன்றவை அடங்கும். ஆட்சிகள் மாறினாலும், இந்த அரசு நிறுவனங்கள் அப்படியே நீடிக்கும். இலங்கையின் ‘அரசு நிறுவனங்களே’ தமிழர்களுக்கு எதிராக கட்டமைக் கப்பட்டவை. இதுவே, தமிழர்களின் அழுத்தமான கருத்து, “ஒரு அரசு தனது குடிமக்களின் மீதான உரிமைகள் மீறப்படும்போது அவர்களை பாதுகாக்கும் கடமையில் தவறு இழைத்து விட்டோம் என்று ஒப்புக் கொள்ளும் போதுதான் அது ‘அரசு’ என்பதற்கான அடையாளமாக இருக்க முடியும் அப்படி ஒப்புக்கொள்ளாத அரசு அரசுக்குரிய வரையறைக்குள் வர முடியாது” என்று கூறுகிறது - அய்.நா.பொதுச்செயலாளர் பான்கி மூன் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கை (மார்ச் 31, 2011).

• மற்றொரு அரசு நிறுவனமான நீதித்துறையின் கதை என்ன? சிங்கள அரசியல் தலைவர்களின் ‘மந்திரக்கோலுக்கு’ அடங்கிக் கிடப்பவையே அந்நாட்டு நீதிமன்றங்கள். 1983ஆம் ஆண்டில் வெளிக்கடை சிறையில் தமிழர்கள் கொல்லப்பட்டபோதும், தமிழர்கள் பல்வேறு பகுதிகளில்வெட்டி சாய்க்கப்பட்ட போதும், அந்நாட்டின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவரே ஒரு தமிழர்தான். தமிழர்களை கூட்டம் கூட்டமாக படுகொலை செய்த சிங்களர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தமிழர்களுக்கு எதிரான செயல்பாடுகளானாலும் விசாரணை ஆணையங்கள் ஆனாலும் எதிலும்
நீதித் துறை, சிங்களர்களின் நீதித் துறையாகவே செயல்பட்டு வருகிறது. “சர்வதேச அழுத்தங்களினால் இலங்கை அரசு நியமித்த கண்துடைப்பு விசாரணை ஆணையங்கள் இதுவரை எந்த ஒரு சிங்கள குற்றவாளியையும் தண்டித்ததே இல்லை” என சுட்டிக்காட்டுகிறது. ‘ஆம்னஸ்டி இன்டர் நேஷனல்’ அறிக்கை (11 ஜூன், 2009).

• இராஜபக்சே ஆட்சியிலிருந்தபோது இலங்கை இராணுவத்தின் குற்றங்களை விசாரிக்க சர்வதேச விசாரணைக் குழுவுக்கு அனுமதியளிப்பதாக ஒரு நாடகம் ஆடினார். அப்போது இந்தியாவின் உச்சநீதிமன்ற நீதிபதி பகவதி தலைமையில் சர்வதேச சட்ட நிபுணர்குழு ஒன்று இலங்கையில் விசாரணைக்குச் சென்றது. அந்நாட்டு நீதிமன்றமோ, இராணுவமோ விசாரணைக்குஎந்த ஒத்துழைப்பும் தராததால் இலங்கை அரசு மீது கடும் குற்றங்களை சுமத்தி அறிக்கை அளித்து விட்டு, குழுவினர் பதவி விலகினர் (மார்ச், 2008).

“இலங்கையின் நீதித்துறையின் கடந்தகால செயல்பாடுகள் தற்போதைய நீதித் துறையின் செயல்பாட்டு முறைகளை கூர்ந்து பரிசீலிக்கும் போது, தற்போதைய அரசியல் சூழலில் நீதியை வழங்கும் என்ற நம்பிக்கை இல்லை” என்று அய்.நா.பொதுச் செயலாளர் நியமித்த நிபுணர் குழு அறிக்கை கூறுகிறது (மார்ச் 31, 2011).

போர்க் குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலைகளை விசாரிப்பதற்கு இலங்கையில் எந்த சட்டமும் இல்லை. எனவே, இலங்கையின் உள்நாட்டு விசாரணைகளை ஏற்க முடியாது.

எனவேதான் கூறுகிறோம், “பன்னாட்டு நீதிமன்றத்தில் இலங்கை அரசை நிறுத்து” - இதுவே உலகத் தமிழர்களின் ஒருமித்த முழக்கம்.

உள்நாட்டு விசாரணையோ அல்லது சர்வ தேசமும் இலங்கையும் இணைந்து நடத்தும் விசாரணையோ தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுத் தராது!

(நாடு கடந்த தமிழீழ அரசின் தலைமையமைச்சர் உருத்திரகுமார், காணொளி வழியாக சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியிலிருந்து - 6.5.2015)