கோயில் கட்டுகிறவர்கள் - கல்லூரி வியாபாரம் நடத்துகிறவர்கள் - தங்கள் சுயநலனுக்காக ஜாதி வெறியைத் தூண்டி விடுகிறார்கள் என்று ‘எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்’ பரப்புரை இயக்கத்தை 20-03-2015 அன்று சென்னை பெரம்பூரில் தொடங்கி வைத்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரையின் சில பகுதிகள். (சென்ற இதழ் தொடர்ச்சி)

1930 இல் நடைபெற்ற கொங்கு வேளாளர் மாநாட்டில், “இனி விதவைகளை வெள்ளாடை உடுத்த கட்டாயப்படுத்தக் கூடாது; விரும்பிய ஆடைகளை உடுத்த அனுமதிக்க வேண்டும்; குழந்தை இல்லாத இளம் கைம்பெண்களுக்கு மறுமணம் அனுமதிக்க வேண்டும்” என்று தீர்மானம் நிறை வேற்றினார்கள். கல்வி நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என்ற நாடார் சங்கங்கள் இருந்தன. இப்படி மக்கள் நலனில் அக்கறையுள்ள ஜாதி சங்கங்கள்தான் அந்த காலத்தில் இருந்தன. ஆனால் இப்போது எதற்காக ஜாதி சங்கங்கள் இருக்கின்றது? ஜாதி சங்கங்களை வைத்திருப்பவர்கள் யார்?

ஒரு ஊரில் புதுக் கோவில் உருவானால், முன்பெல்லாம் அது கந்துவட்டிக்காரனால் அல்லது கள்ளச் சாராயக்காரனால் கட்டப்பட்டிருக்கும். பிறகு கல்லூரிக்காரர்கள் வந்தார்கள்; இவர்கள் கோவிலை கட்டுவதோடு நிற்கவில்லை கூடுதலாக ஜாதி சங்கங் களையும் கட்டுகின்றார்கள். ‘புலிக்கு பயந்தவனெல் லாம் என் மேல் படுத்துக் கொள்ளுங்கள்’ என்று சொல்வதைப் போல, புதுப் பணக்காரர்கள் தங்கள் பாதுகாப்பிற்கு ஜாதி சங்கங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

புலிக்கு பயந்து மேலே படுத்தவன் புலியிடம் கடி வாங்கியதைப் போல, ஜாதிப் போராட்டங்களால் பாதிக்கப்படுகிறார்கள் தொண்டர்கள். ஜாதி சங்கத் தலைவர்கள் பாது காப்பாக குளிரூட்டிய அறையில் உட்கார்ந்து கொண்டு அறிக்கை மட்டும் விட்டுக் கொண்டிருக் கின்றார்கள். மக்களுக்கான அறிவு கொடுப்பதற்கோ, சமூக வளர்ச்சிக்கோ, பொருளாதார வளர்ச்சிக்கோ உதவுகிறார்களா இவர்கள்? இப்படிப்பட்ட ஜாதி சங்கத் தலைவர்கள் தூண்டிவிட்ட ‘ஜாதிவெறி’ தான் இப்போது தலைவிரித்தாடிக் கொண்டிருக்கின்றது.

பார்ப்பனர்கள் தங்கள் இடத்தை அவ்வளவு சுலபமாக விட்டுவிட மாட்டார்கள். பெரியார் உதாரணத்தோடு விளக்குவார்… “இரயிலில் ஒரு ஸ்டேசன் முன்னால் ஏறியவன் நீட்டி படுத்துக் கொள்வான்; அடுத்த ஸ்டேசனில் ஏறும் மற்றொரு வனும் டிக்கெட் வாங்கிக் கொண்டுதான் ஏறுகிறான். படுத்திருப்பவன் முதலில் தூங்குவதைப் போல் நடிப்பான்; தட்டி எழுப்பிய பின்னால் அந்தப் பக்கம் இடம் இருக்கு, இந்தப்பக்கம் இடம் இருக்கு என்று காண்பிப்பான்; அதையெல்லாம் பார்த்துவிட்டு விட்டு வந்து சட்டைக் காலரைப் பிடித்து தூக்கினால் தான் எழுந்து இடம் கொடுப்பான். ஒரு ஸ்டேசனுக்கு முன்னால் ஏறி படுத்தவனுக்கே இடம் கொடுக்க மனம் இல்லையே! இரண்டாயிரம் ஆண்டுகளாக படுத்துக் கொண்டிருக்கும் பார்ப்பனர்கள் எளிதில் எழுந்திருப் பார்களா” என்று கேட்பார் பெரியார். சுலபமாக மாற்றிக்கொள்ள மாட்டார்கள்; எல்லா வழிகளிலும் அவனை அம்பலப்படுத்தி, அவனுடையை பொய்மை களையெல்லாம் மக்களிடம் விளக்கிக் காட்டி அதன் பிறகுதான் மாற்ற முடியும்.

இந்த பார்ப்பனிய சிந்தனை எல்லோருடைய மூளையிலும் ஏறியிருக்கின்றது. பார்ப்பனர்களைத் தாண்டி இராமதாஸ் மூளையிலும் ஏறியது. அதையும் தாண்டி திருப்புவனம் என்ற ஊரில் அருந்ததியர் பையனை திருமணம் செய்து கொண்டதற்காக கோகிலா என்ற ஆதி திராவிடர் பெண்ணை எரித்துக் கொன்ற அவரது அப்பாவின் மூளையிலும் பார்ப்பனியம் இருக்கின்றது.

 1962 ஆம் ஆண்டு பார்ப்பன தோழர்களுக்கு என்று பெரியார் எழுதியதில் சொல்கிறார், “சமுதா யத்தில் உள்ள அனைத்து துறைகளிலும் உங்களின் விகிதாச்சாரத்துக்கு மேல் பங்கெடுத்து கொண்டீர்கள் என்பது தான் உங்கள் மீது எனக்குள்ள கோபம்; உங்கள் மேல் மட்டுமல்லாமல் இந்த சமுதாயத்தில் தனது விகிதாசாரத்துக்கு மேல் பங்கெடுத்துக் கொள்ளும் அனைவர் மீதும் எனக்கு அதே கோபம் உண்டு. நான் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களை ஏன் ஆதரிக்கிறேன்? நோயாளிக் குழந்தை களுக்கு சத்துள்ள உணவைத் தேடித்தேடி தாய் கொடுப்பது போல, நானும் செய்து கொண்டிருக் கிறேன். இதுவொரு தாய்மையோடு செய்யும் செயல் தானே! இதை ஏன் நீங்கள் வெறுப்போடு பார்க் கின்றீர்கள்?” என்று கேட்டார்.

இப்பொழுது பெரியாரைப் பற்றி அவதூறாகப் பேச பல புதிய அறிவாளிகளெல்லாம் வரு கின்றார்கள்; இவர்கள் பெரியாரை பற்றி ஏதேதோ சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். இவர்கள் பெரியாரை விமர்சனம் செய்கின்றார்களே தவிர, அவர் எதற்காக நின்றார்? அடிப்படையில் அவர் எதை நோக்கிச் சொன்னார்? என்று பார்க்க வேண்டும். அவருடையை தொடக்கக் காலத்தில் அவர் செய்த தெல்லாம், ஜாதி ஒழிப்புக்காக என்பது தாழ்த்தப் பட்டவர்களுக்காக மட்டும் பேசவில்லை; இப்போது தங்களை உயர் ஜாதியாக நினைத்துக் கொண் டிருக்கும் பலருக்காகவும் அவர் பேசினார். சூத்திரன் என்று அழைக்கக் கூடாது என்று சொன்னது தாழ்த்தப்பட்ட மக்களுக்காகவா?

நாகப்பட்டினத்தில் பிற்படுத்தப்பட்ட பகுதிக்கு அழைக்கப்பட்ட பெரியார் பேசுகிறார்… “உங்களை நீங்கள் உயர்வானவர்களாக கருதிக் கொண்டிருக் கின்றீர்கள்; பறையன், பள்ளன் என்பதற்கு கூட வாசித்த கருவியை (பறை) வைத்தோ, வசித்த இடத்தை (பள்ளம்) வைத்தோ வந்திருக்க ஏதாவது காரணம் இருக்கலாம்; ஆனால் சூத்திரன் என்று சொல்வதற்கு என்ன காரணம்? அதற்கு என்ன பொருள் தெரியுமா? என்னை யாராவது சூத்திரனாக இருக்க விரும்பு கிறாயா? பறையன், பள்ளன் என்று அழைக்கட்டுமா என்று கேட்டால், பறையன் பள்ளன் என்பதே பரவா யில்லை; சூத்திரன் என்பது அவ்வளவு இழிவானது; எனவே இந்த சூத்திரப் பட்டத்தை நீங்கள் ஒழித்தாக வேண்டும். இன்னொன்றையும் சொல்கிறேன், பறையன் பட்டம் போகாமல் சூத்திரப் பட்டம் போய் விடும் என்று கருதுவீர்களேயானால் நீங்கள் வடிக் கட்டிய முட்டாள்கள் ஆவீர்கள்” என்று சொன்னார்.

இது ஒரு அமைப்பு (சிஸ்டம்); இந்த இந்து மதத்தை தானாக இயங்கும் ஒரு செயல் திட்டமாக பார்ப்பான் அமைத்து வைத்திருக்கின்றான். அதுவாக சுழன்று கொண்டிருக்கும்; வேகம் குறைந்தால் அதை ஒரு சுற்று சுற்றிவிட்டு விட்டு அமைதியாக பார்ப்பான் அமர்ந்து கொள்வான்; மீண்டும் தானாக சுற்றிக் கொண்டிருக்கும். ஒட்டு மொத்த அமைப்பையும் அழித் தொழிக்காமல் ஒரு ஜாதியை மட்டும் தனியாக மீட்க முடியாது.

இந்த சூத்திர இழிவின் காரணமாக நீங்கள் எவ்வளவு அவமானப்பட்டிருக்கின்றீர்கள்! உங்கள் நிலை இப்படி இருக்க என்ன காரணம்? பார்ப்பன ரல்லாதார் இயக்கம் தொடங்குவதற்கு முன்னால் – திராவிடர் இயக்க எழுச்சிக்கு முன்னால் உங்களின் நிலை என்னவாக இருந்தது? மொத்த படிக்கத் தெரிந்தவர்கள் ஏழு சதவீதம். அதில் பார்ப்பனர்கள் மூன்று சதவீதம் போக, பார்ப்பனரல்லாதவர்கள் நான்கு சதவீதம் பேர் மட்டும் தானே? ஆனால் இப் போது பிற்படுத்தப்பட்டவர்கள், இஸ்லாமியர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், பழங்குடிகள் எல்லோருமே படிக்கின்றார்களே! இப்போது 200-200 கட்ஆப் எடுத்தவர்கள் பட்டியலை பாருங்கள்; அதில் தாழ்த்தப்பட்டவர்கள் இருக்கின்றார்கள், பழங்குடி யினர், பிற்படுதப்பட்டோர் எல்லாம் இருக்கின்றனர். இந்த நிலை எப்படி ஏற்பட்டது? சரஸ்வதி (கடவுள்) வந்து நாக்கில் எழுதியெல்லாம் கல்வி வரவில்லை; கல்விக்காக இங்கு ஒரு இயக்கம் நடந்தது.

தமிழ்நாட்டின் தனித்துவம்

இந்தியா முழுவதும் ஒரு சமூக ஆய்வு நடை பெற்றது; அந்த ஆய்வில் இந்தியா முழுவதும் அறிவியல் ஆய்வில் குறிப்பிட்ட பெருமைமிக்க விருதுகள் வாங்கியவர்கள் பற்றிய கணக்கெடுப்பு நடத்துகிறார்கள். அந்த கணக்கெடுப்பில் தமிழ்நாடு மட்டும் தனித்து காணப்படுகின்றது. மற்ற அனைத்து மாநிலங்களிலும் ஆய்வு பட்டம் பெற்றவர்களெல் லாம் உயர் ஜாதிக்காரர்களாக இருக்கின்றார்கள்; தமிழ் நாட்டில் மட்டும்தான் பெரும்பாலானோர் (எண்பது சதவீதத்துக்கும் மேலானவர்கள்) பிற் படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த வர்களாக இருக்கின்றார்கள். மற்ற மாநிலங் களில் ஆய்வு பட்டம் பெற்றவர்கள் நகரத்தைச் சார்ந்தவர் களாக இருக்கின்றார்கள்; தமிழ் நாட்டில் மட்டும் கிராமப்புறத்தைச் சார்ந்தவர்கள் எழுபத்தாறு சதவீதத் தினர் உள்ளார்கள்.

மேற்கு வங்கத்தில் 32 பேரில் 26 பேர் கல்கத்தாவைச் சேர்ந்தவர்கள், தமிழ் நாட்டிலோ 41 பேரில் 10 பேரே சென்னையைச் சேர்ந்தவர்கள். ஆக மேற்கு வங்கத்தில் கிராமப் புறத்தினர் 19ரூ, தமிழ் நாட்டிலோ 76ரூ. இது எப்படி வந்தது என்று யாருக்கும் தெரிவதில்லை. யார் இதற்கு முதன்மைக் காரணம் என்றும் நம்மவர்களுக்குத் தெரிவதில்லை.

இந்த நாட்டில் மகாத்மா என்று சொல்லப்பட்ட காந்தியைக் கூட பார்ப்பனர்கள் மதிக்கவில்லை. அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் காந்தியை, சீனிவாச ஐயங்கார் வீட்டு திண்ணையில் தான் அனுமதித்தார்கள்; வீட்டிற்குள் காந்தியை விட வில்லை. மீண்டும் ஒரு முறை 1927 இல் காந்தி வந்துவிட்டு எழுதுகிறார்… ‘இப்போது என் மனைவி சீனிவாச ஐயங்கார் வீட்டு சமையல் அறைவரை சென்று வந்தாள்’ என்று. இந்த மாற்றம் எப்படி வந்தது? பார்ப்பானுக்குத் தானாகவே புத்தி வந்து விட்டதா? நல்லவன் ஆகிவிட்டானா? இல்லை; சுயமரியாதை இயக்கம் அப்போது தோன்றிவிட்டது. 1925லிருந்து பெரியாரின் வேகமான – வீச்சான பிரச்சாரம் தான் காரணம்.

இப்படி அவமானப்படுத்தப்பட்ட சமுதாயத்தில் இப்போது யாராவது அப்படி சொல்லக்கூடிய நிலை இருக்கின்றதா? வட கர்நாடகத்தில் தொடங்கி வட மாநிலங்களுக்கு எங்கு போனாலும் தேநீர் கடை களில் நான்கு வகை பெஞ்சுகள் (இருக்கைகளும்) இருப்பதும் ஐந்தாவது ஜாதி கீழே உட்கார்ந்து கொள்வதும் தெரியும்.

கழுத்தில் புண் ஏற்பட்ட காளைகளும் வண்டியில் பூட்டும் போது தாமாக முன் வந்து கழுத்தைக் கொடுப்பதுபோல் ஐந்து ஜாதி யினரும் தாமாகவே அவரவர் இடத்தில் அமர்ந்து கொள்கிறார்கள். இப்படி இயல்பாக பழக்கப்படுத்தி விட்டார்கள். நம்மையும் அப்படித் தான் வைத் திருந்தார்கள்; பழகிய மாடுகளைப் போல் தான் நாமும் இருந்தோம். நமக்கான சுயமரியாதை உணர்வைப் பெரியார் ஊட்டினார்; அதனால் கொஞ்சம் கொஞ்சமாக நாம் அதிலிருந்து மாறி முன்னேறி வந்திருக்கின்றோம்.

சற்சூத்திரன் என்று சிலர் தங்களை சொல்லிக் கொண்டிருந்தார்கள்; சூத்திரன் என்றால் வேசிமகன், சற் என்றால் அசல், நல்ல எனப் பொருள். சற்குணம் என்பதைப் போல. எனவே சற்சூத்திரன் என்றால் அசல் வேசிமகன் என்று பெரியார் சுட்டிக்காட்டி உணர்வூட்டினார். இப்படி பார்ப்பனர்களுக்கு எதிரான சிந்தனைகள், பார்ப்பன பாசாங்குகளை அம்பலபடுத்தியது, அதை மறுத்தது வெறுத்தது என பலவற்றை செய்து, முதலில் வந்துவிட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் மனதில் சூத்திர இழிவில் இருந்து நாம் தப்பித்தோம், கல்வியற்ற நிலையில் இருந்து வெளியே வந்து விட்டோம், அரசுப் பணிகளில் அமர்ந்து விட்டோம் நாம் பெரிய ஆள் என்று நினைத்துக் கொள்கிறார்கள். இனி தனக்கு கீழே உள்ளவனை விட்டால் நமது இடம் பறி போனாலும் போய்விடும் என்று கருதுகிறார்கள்.

(தொடரும்)