மயிலாடுதுறையில் தொடங்கிய திராவிடர் விடுதலைக் கழகத்தின் பரப்புரைப் பயணம் - மக்களை சந்தித்து, சாதி எதிர்ப்பு மற்றும் பார்ப்பனியத்தின் சமுதாய பொருளாதார சுரண்டல் கொள்கைகளை விளக்கி வருகிறது. மக்கள் திரண்டு கருத்துகளைக் கேட்கிறார்கள். கழகத் தலைவர், பொதுச் செயலாளர் தோழர்களோடு பயணத்தில் பங்கேற்று வருகிறார்கள்.

பயணம் பற்றிய செய்தித் தொகுப்பு:

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக சுயமரி யாதை சமதர்ம பரப்புரைப் பயணம் 24.07.2013 அன்று மயிலாடுதுறையில் தொடங்கி தொடர்ச்சி யாக 20 நாட்கள் 20 மாவட்டங்கள் வழியாகச் சென்று, தினசரி 2 இடங்களில் தெருமுனைக் கூட்டங்கள் இரவு பொதுக்கூட்டம் என்ற அடிப்படையில் நடைபெற்று வருகிறது. திராவிடர் விடுதலைக் கழகத்தின் இரண்டா மாண்டு தொடக்க நாளான 12.08.2013 அன்று புதுச்சேரி அரியாங் குப்பத்தில் நிறைவடைய உள்ளது..

24.07.2013 மாலை 6 மணிக்கு மயிலாடுதுறை சின்னக் கடைத் தெருவில் பறைமுழக்கத்துடன் பரப்புரையின் தொடக்க நிகழ்வுப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பார்ப்பனியத்தின் வடிவங்களான பெண்ணடிமை, சாதிய ஒடுக்குமுறை, கருவறைத் தீண்டாமை போன்ற பல்வேறு நிகழ்வுகளை விளக்கும் வீதி நாடகம் நடைபெற்றது. சாலையின் இருமருங்கிலும் ஏராளமான மக்கள் வீதி நாடகத்தைக் கண்டு களித்தனர். பிறகு தொடங்கிய பொதுக் கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் தெ.மகேசு தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் மகாலிங்கம் வரவேற்புரையாற்றினார். கழக பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன், பொருளாளர் ஈரோடு ப.இரத்தின சாமி, செயலவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி ஆகியோர் உரையாற்றினர். தமிழர் உரிமை இயக்கத்தைச் சார்ந்த சுப்பு. மகேசு, ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தைச் சார்ந்த தனவேந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இறுதியாக பரப்புரையின் நோக்கங்கள் குறித்து கழகத்தின் பொதுச் செயலாளார் விடுதலை இராசேந்திரன், தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் சிறப்புரை யாற்றினர். மாவட்டப் பொருளாளர் ந. விஜய ராகவன் நன்றி கூறினார்.

25.07.2013 - நண்பகல் 12 மணிக்கு பேரளம் பேருந்து நிறுத்தத்தில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. சுயமரியாதை கலை பண்பாட்டுக் கழகத்தின் பறைமுழக்கத்துடன் தொடங்கியது. கழகத்தின் பரப்புரைச் செயலாளர் தூத்துக்குடி பால். பிரபாகரன் பரப்புரையின் நோக்கங்கள் குறித்து விளக்கிப் பேசினார். தோழர்கள் உண்டியல் ஏந்தி துண்டறிக்கைகளை விநியோகித்து நிதிவசூல் செய்தனர்.

மதியம் 2 மணிக்கு திருவாரூர் பேருந்து நிலையத்தில் பறைமுழக்கம் மற்றும் வீதிநாடகம் நடைபெற்றது. கழக ஆதரவாளர் ஜாகீர் ரூ.100 அன்பளிப்பாக வழங்கினார். திருவாரூர் பேருந்து நிலைய ஆட்டோ ஓட்டுநர்கள் சார்பாக ரூ. 60 அன்பளிப்பாக வழங்கப்பட்டது. தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் தோழர் சிவக்குமார் உரையாற்றினார். மதியம் 3 மணிக்கு திருவாரூர் நகராட்சி பூங்காவில் தோழர்கள் அனைவருக்கும் மதிய உணவு உண்டனர்.

மாலை 6 மணிக்கு மன்னார்குடி பந்தலடியில் சட்ட எரிப்புப் போராளி புதுக்குடி ஞ. ரெங்கசாமி நினைவு மேடையில் பொதுக்கூட்டம் நடை பெற்றது. திருவாரூர் மாவட்ட அமைப்பாளர் தோழர் காளிதாசு தலைமை தாங்கினார். நகர செய லாளர் மா. மணிகண்டன் வரவேற்புரையாற்றினார். தாளாண்மை உழவர் இயக்கத்தின் தோழர் பொறி யாளர் திருநாவுக்கரசு, அகில இந்திய தலித் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜே.ஆர்.எஸ். பாவண்ணன், திராவிடர் விடுதலைக் கழகப் பொருளாளர் ஈரோடு ப.இரத்தினசாமி, செயலவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி ஆகியோர் உரையாற்றினர். இறுதியாக கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், பன்னாட்டு நிறுவனங்கள் தமிழகத்தை எவ்வாறெல் லாம் சுரண்டி நம் வளத்தைக் கொள்ளையடிக் கின்றன என்பது குறித்து விளக்கிப் பேசினார். சிறப்புரையாற்றிய கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பரப்புரையின் நோக்கங்கள் குறித்தும், பிற்படுத்தப்பட்ட மக்கள் பார்ப்பனியத்தை எதிர்த்துப் போராட வேண்டும் என்பது குறித்தும் விளக்கிப் பேசினார். ஆதிக்கசாதி என்று கருதப்படுகிற சாதியில் இருக்கக்கூடிய சாதிய எதிர்ப்பாளர்கள், சாதிவெறியர்களுக்கு எதிராக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு, சாதித் தலைவர்களின் முகமூடியைக் கிழிக்க முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். தோழர்கள் துண்டறிக்கை விநியோகித்து ஒவ்வொரு கடையாகச் சென்று நன்கொடை வசூல் செய்ததில் ரூ.4500/- வசூலானது.

26.07.2013  - காலை 11 மணிக்கு வடசேரி பேருந்து நிலையத்தில் கொளுத்தும் வெயிலில் பறைமுழக்கம் வீதி நாடகத்துடன் தெருமுனைக் கூட்டம் தொடங்கியது. தன் ஆதிக்க வெறியால், தாழ்த்தப்பட்ட மக்களை கோவிலுக்கு வெளியே நிறுத்தி விட்டு, கருவறைக்குள் நுழைய முற்பட்டு பார்ப்பானிடம் கேவலப்படும் உயர்சாதிக்காரனின் ஆதிக்க வெறியை உடைத்தெறியும் வகையில் நடத்தப்பட்ட வீதி நாடகத்தை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். பிறகு திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் தோழர். கொளத்தூர் மணி பயணத்தின் நோக்கங்கள் குறித்து விளக்கிப் பேசினார்.. ஒரத்தநாடு ஒன்றிய செயலாளர் தோழர் சிவ சுப்பிரமணியன் நன்றியுரை கூறினார்.

நண்பகல் 12 மணிக்கு மதுக்கூர் பேருந்து நிலை யத்தில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஏராளமான மக்கள் ஆங்காங்கே கடைகளில் நின்று கொண்டு உரையைக் கேட்டனர்.. பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் உரையாற்றினார். தொடர்ந்து பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பயண நோக்கங்கள் குறித்து உரையாற்றினார்.

மதியம் 2 மணிக்கு தஞ்சை மாவட்ட அமைப் பாளர் தோழர் பாரியின் இல்லத்தில் தோழர்களுக்கு அசைவ உணவு வழங்கப்பட்டது.. உணவுக்குப் பின் தோழர்கள் அனைவரும் தோழர் பாரியின் தோட்டத்தில் ஓய்வு எடுத்தனர். ஓய்வு வேளை யிலும் சுயமரியாதை கலை பண்பாட்டுக் கழகத்தினர் தங்களது சிலம்புப் பயிற்சியைத் தொடர்ந்தனர். பயிற்சியாளர் தோழர் ஆனந்த் மிகச் சிறந்த முறையில் தோழர்களை அரவணைத்து பயிற்சி கொடுத்தார்.

மாலை 4 மணிக்கு பட்டுக் கோட்டை நகரத்தில் தெருமுனைப் பரப்புரை நடைபெற்றது. பட்டுக் கோட்டை அஞ்சா நெஞ்சன் அழகிரி சிலை அருகில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அறிவியல் மன்ற அமைப்பாளர் தோழர் சிவக்குமார், பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன், பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆகியோர் உரையாற்றினர்.

மாலை 6 மணிக்கு பேராவூரணி அண்ணா சிலை அருகில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. பெரியார் பெருந்தொண்டர் ரெ.சா. இளவரசன் பெயரில் மேடை அமைக்கப்பட்டிருந்தது. மாவட்ட அமைப்பாளர் கு. பாரி தலைமை வகித்தார். ஒன்றிய அமைப்பாளர் சித. திருவேங்கடம் வரவேற்புரை யாற்றினார். முன்னதாக பள்ளத்தூர் நாவரசன் குழுவினரின் பகுத்தறிவு இசை நிகழ்ச்சி நடைபெற்றது. பெரம்பலூர் தாமோதரன் “மந்திரமல்ல தந்திரமே” என்ற அறிவியல் விளக்க நிகழ்ச்சி நடத்தினார். முனைவர் மு.ஜீவானந்தம், புதுக்கோட்டை பாவண்ணன் ஆகியோர் உரை யாற்றினர். தமிழக மக்கள் புரட்சிக் கழகத்தின் பொதுச் செயலாளார் அரங்க. குணசேகரன், திராவிடர் விடுதலைக் கழக பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆகியோர் உரை யாற்றினர். இறுதியாக கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி நிறைவுரையாற்றினார். ஒரத்தநாடு ஒன்றியச் செயலாளர் சிவசுப்பிரமணி நன்றி கூறினார்.

27.07.2013 - காலை 11 மணிக்கு புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பேருந்து நிலையத்தில் பறை முழக்கம், வீதி நாடகத்துடன் பரப்புரை தொடங்கியது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் பூபதி. கார்த்திகேயன் வரவேற்புரை யாற்றினார். கழக சொற்பொழிவாளர் முனைவர் ஆ.ஜீவானந்தம் அய்யப்பன் தோன்றிய வரலாறு குறித்தும், ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்ததாகச் சொல்லப்படும் அய்யப்பனை கடவுள் என்று கும்பிடும் இந்த சமூகம், தர்மபுரியில் ஒரு ஆணும் பெண்ணும் காதலித்து மணம் புரிந்து கொண்டதை ஏற்க மறுத்த சாதி வெறியர்களால் நிகழ்த்தப்பட்ட வெறியாட்டங்கள் குறித்து இடித்துரைத்தார். தொடர்ந்து பேசிய தமிழக முஸ்ஸிம் முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் முகமது சாதிக் முஸ்ஸிம்கள் என்பவர்கள் ஏதோ அரேபியாவி லிருந்து வந்தவர்களல்லர். இந்து மதத்தில் இருக்கிற சாதிய ஒடுக்குமுறை தாங்காமல் மதம் மாறிய தலித்துகளும் பிற்பட்டோரும் தான் இன்றைக்கு இருக்கக் கூடிய முஸ்ஸிம்கள் என்று கூறினார். சிபிஅய் (எம்.எல்.) இயக்கத்தின் ஒன்றிய செயலாளர் வைசி. கலைச்செல்வன் வாழ்த்துரை வழங்கினார். சிறப்புரையாற்றிய கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி பரப்புரையின் நோக்கங்கள் குறித்தும், சமூக இழிவுகள் குறித்தும் விளக்கி, அதனை எதிர்த்துப் போராட திராவிடர் விடுதலைக் கழகம் முன்னெடுக்கிற போராட்டங் களுக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தமிழ்நாடு முஸ்ஸிம் முன்னேற்றக் கழகத் தோழர்கள் சார்பில் தோழர்களுக்கு தேநீர் வழங்கப்பட்டது.

பரப்புரை வாகனத்தில் ஒட்டப்பட்டிருந்த செய்திகளை மக்கள் ஆர்வத்துடன் படித்தனர். சிலர் இட ஒதுக்கீடு பற்றிய புள்ளி விவரங்களை குறிப்பெடுத்தனர். மதிய உணவுக்குப் பின் தோழர்கள் அனைவரும் பூபதி. கார்த்திகேயன் இல்லத்தில் ஓய்வெடுத்தனர்.

மாலை 4 மணிக்கு கந்தர்வக்கோட்டை காந்தி சிலை அருகில் பரப்புரை நடைபெற்றது. சி.பி.அய் (எம்.எல்) இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் பழ. ஆசைத் தம்பி வாழ்த்துரை வழங்கினார். பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் பயண நோக்கங்கள் குறித்து விளக்கினார். தோழர்கள் நன்கொடை வசூல் செய்து கொண்டிருந்த போது பரப்புரை வாகனத்தின் அருகில் செருப்பு தைக்கும் கடை வைத்திருந்த 80 வயது முதியவர் மிகுந்த ஆர்வமுடன் வந்து ரூ.10/- வழங்கியதோடு, தான் தந்தை பெரியாரின் தொண்டன் என்றும், பெரியார் அவர்கள் 1956-57 ஆம் ஆண்டு வாக்கில் திருவையாறில் பொதுக்கூட்டட்தில் பேசிய போது அவர் அருகில் தான் பெட்ரோமாக்ஸ் விளக்கேந்தி நின்று கொண்டிருந்ததை பெருமிதத்துடன் குறிப்பிட்டு, கழகத் தலைவர் மற்றும் பொதுச் செயலாளருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

மாலை 5 மணிக்கு திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பேருந்து நிறுத்தத்தில் நடைபெற்ற தெருமுனைப் பரப்புரையில் பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் பயண நோக்கங்கள் குறித்து விளக்கினார். கழக பரப்புரை செய்ய முனைந்த அதே நேரத்தில் அங்கு தமிழ் வழிக் கல்வி கூட்டியக்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற ஆயத்தங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. கழக பரப்புரைக்கு வழி விட்டு தங்களது ஆர்ப்பாட்டத்தை சற்று நேரம் ஒதுக்கி வைத்து ஆர்ப்பாட்டம் நடத்திய தோழர்கள் ஒத்துழைப்பு கொடுத்தனர்

27.07.2013 மாலை 6 மணிக்கு திருச்சி காட்டூரில் பொதுக்கூட்டம் நடை பெற்றது. சட்ட எரிப்பு வீரர் வீ.அ பழனி நினைவாக மேடை அமைக்கப்பட் டிருந்தது. மாவட்டத் தலைவர் தோழர் மீ.இ ஆரோக்கியசாமி தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பாளர் குணராஜ் வரவேற்புரையாற்றினார். திருச்சி புதியவன், சுயமரியாதை கலை பண்பாட்டுக் கழக பயிற்சியாளர் தோழர் ஆனந்த், பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் ஆகியோர் உரையாற்றினர்.

பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தனது உரையில், விதைக்காமல் விளையக்கூடிய கழனி போன்றது பார்ப்பனியம் என்று அண்ணா கூறியதை நினைவு கூர்ந்தார். கல்வியில், மருத்துவத்தில், பொருளாதாரத்தில், கோவிலில், காதல் திருமணத்தில் பார்ப்பனியத்தின் நிலை குறித்து தெளிவாக எடுத்துரைத்தார்.

நிறைவுரையாற்றிய கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி, பார்ப்பனியம் என்பது பார்ப்பனர்களிடம் மட்டுமல்லாமல், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களிடமும் உள்ளதை எடுத்துக்காட்டுகளுடன் கூறினார். வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் மேலும் திருத்தம் கொண்டு வந்து அதனை இன்னும் கடுமையாக்க வேண்டும் என்று கூறினார். ஆறுமுகம் சேர்வை என்பவர் பன்னீர் செல்வம் என்ற பள்ளர் இனத்தைச் சார்ந்தவரை சாதிப் பெயரை சொல்லி திட்டிய வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டில், தண்டனையை உறுதி செய்த நீதிபதிகள், வன்கொடுமை வழக்குகளில் நடவடிக்கை எடுக்காத காவல் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அவர்களை பணியிடைநீக்கம் செய்ய வேண்டும், அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளதை சுட்டிக் காட்டினார். இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் மீது கழகம் தொடர்ந்த வழக்கில், நீதிமன்றம் தமிழக அரசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதையும் சுட்டிக் காட்டினார்.

27.07.2013 இரவு திருச்சி கண்டோன்மென்ட் கூஆளுளுளு எம்பவர்மென்ட் மையத்தில் தங்கியிருந்த தோழர்களுக்கு, 28.07.2013 காலையில் சிற்றுண்டியுடன் கூடிய அசைவ உணவை திருச்சி மாவட்ட செயலாளர் கந்தவேல் குமார் வழங்கினார்.

காலை 11 மணிக்கு சமயபுரம் டோல்கேட் பகுதியில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. மீ.இ ஆரோக்கியசாமி, திருச்சி புதியவன், பால். பிரபாகரன் ஆகியோர் உரையாற்றினர்.

திருச்சி மாவட்ட கழகம் சார்பில், ரூ 28,000/- மதிப்புள்ள ஒலிப்பெருக்கி உபகரணங்கள் பரப்புரைக்கும் அதன் பிறகு இயக்க உபயோகத்திற்கும் என அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

மதியம் திருச்சியிலிருந்து பெரம்பலூர் செல்லும் சாலையில் பெரியார் தொண்டர் முகுந்தன் அமைத்துள்ள “எழில் நகர் பெரியார் பூங்காவில்” தோழர்களுக்கு தேநீர் வழங்கப்பட்டது. பிறகு அம்மாபாளையம் பகுதியில் தோழர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

மாலை 5 மணிக்கு பெரம்பலூர் பேருந்து நிலையத்தில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.. காவல்துறையினர் போக்குவரத்தில் மாற்றம் செய்து தோழர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தனர். பறை இசையோடு தொடங்கிய கலை நிகழ்ச்சிகள் சுயமரியாதை கலை பண்பாட்டுக் கழக வீதி நாடகம் ஆகியவை மக்களை நமது பக்கம் ஈர்த்தது. பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் உரையாற்றினார். கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட தேவராஜ் ரெட்டியார் என்பவர் ரூ 50/- நன்கொடை வழங்கியதோடு, அவர் தான் ரெட்டியார் வகுப்பைச் சார்ந்தவன் என்றாலும், உங்கள் கருத்துகள் என்னை ஈர்த்ததாலும், பேசப்பட்ட செய்தி சரியானது என்பதாலும் ,இது போன்ற பரப்புரை தொடர வேண்டும் என்றும் கூறி இந்த நன்கொடையை அளிப்பதாகக் கூறினார். கூட்டத்தில் விற்பனை செய்யப்பட்ட புத்தகங்களை காவல்துறையினரும் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். இது வரை நடந்த தெருமுனைக் கூட்டங்களில் கூடிய மக்கள் கூட்டத்தை விட, பெரம்பலூர் கூட்டத்தில் மக்கள் அதிகமாகக் கூடி இருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.

மாலை 6 மணிக்கு அம்மாபாளையம் பகுதியில் பொதுக்கூட்டம் நடை பெற்றது. பெரம்பலூர் மாவட்டத் தலைவர் துரை. தாமோதரன் மந்திரமல்ல தந்திரமே என்ற அறிவியல் விளக்க நிகழ்ச்சியை நடத்தினார். ஏராளமான ஊர்ப் பொதுமக்கள் கூடி நின்று நிகழ்ச்சியைக் கண்டு களித்தனர். முன்னதாக நமது பறைமுழக்கத் தோழர்கள் ஒவ்வொரு தெருவாகச் சென்று பறை அடித்து துண்டறிக்கைகளை விநியோகம் செய்து நிகழ்ச்சி பற்றி ஊர்மக்களுக்கு அறிவித்தனர். வீதிநாடகத்துடன் பொதுக்கூட்டம் தொடங்கியது. சிவக்குமார், துரை. தாமோதரன், பால்.பிரபாகரன் ஆகியோர் உரையாற்றினர். இறுதியாக கழகத் தலைவர் தலைவர் கொளத்தூர்மணி உரையாற்றினார். அவர் தனது உரையில் தனியார் துறையில் இட ஒதுக்கீட்டின் அவசியம் குறித்து மிகத் தெளிவாகக் கூறினார். இறுதியாக தோழர் கண்ணையன், ‘அச்சமில்லை அச்சமில்லை’ என்ற எழுச்சிமிகு பாடலுடன் நன்றியுரை கூறினார். நிகழ்ச்சியில் பெரம்பலூர் பகுதி தோழர்கள் மேலப்புலியூர் செந்தில், ராஜேஸ்குமார், பழனிமுருகன், சுதாகர் ஆகியோர் கலந்து கொண்டனர். இரவில் துரை.தாமோதரன் இல்லத்தில் தோழர்களுக்கு பிரியாணி மற்றும் மாட்டுக்கறி உணவு வழங்கப்பட்டது. உணவுக்குப் பின் பயணத் தோழர்களுடன் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்துரையாடினார். தோழர்களுக்கு நன்கொடை வசூலிக்கும் போது ஏற்பட்ட அனுபவங்கள், வீதிநாடகம் நடத்தியதன் மூலம் மக்களிடம் எழுந்த வினாக்கள், பயணத்தை இன்னும் சிறப்பானதாக்க தோழர் களின் கருத்துக்கள் பற்றி கலந்துரையாடப் பட்டது. பயணம் தொடருகிறது.

செய்தி : ஈரோடு சிவக்குமார்