தீண்டாமை வன்கொடுமைகளைத் தடுத்து நிறுத்தாமல் அலட்சியப்படுத்திய காவல்துறை, நிர்வாகத் துறை உயர் அதிகாரிகளை பதவி நீக்கம் செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திராவிடர் விடுதலைக் கழகம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் தொடரப்பட்ட இந்த வழக்கை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல்துறை அதிகாரி உட்பட அனைத்து உயர் அதிகாரிகளுக்கும் ‘நோட்டீசு’ பிறப்பித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது.

திராவிடர் விடுதலைக் கழக கோவை மாநகர மாவட்ட தலைவர் வழக்கறிஞர் என்.பன்னீர் செல்வம், கழக சார்பில் உயர்நீதின்றத்தில் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார். கழகத்தின் முன்னணி அமைப்பான தமிழ்நாடு மாணவர் கழக சார்பில் கோவை மாவட்டம், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, காரமடை பகுதிகளில் கள ஆய்வு நடத்தி, தீண்டாமை வன்கொடுமைகளை செயல்படுத்தும் தேனீர்க் கடை, முடிதிருத்தும் கடைகள், பேக்கரிகளைக் கண்டறிந்தது. அந்தக் கடைகளின் பெயர்களும் மனுவில் பட்டியலிடப்பட்டுள்ளது. பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் முத்துக் கருப்பண்ணன் வீட்டின் எதிரிலும், சூலூர் சட்டமன்ற உறுப்பினர் தினகரன் வீட்டின் எதிரிலும் ‘இரட்டைக் குவளை’ தேனீர்க் கடைகள் இருப்பதும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வழக்கு மனுவில் மேலும் இடம் பெற்றுள்ள கருத்துகள்:

இந்த வன்கொடுமைகளை சுட்டிக்காட்டி, மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கழக சார்பில் புகார் அளிக்கப்பட்டது (26.3.2012). அவர் புகார் மனுவை பொள்ளாச்சி வருவாய்க் கோட்ட அலுவலகத்துக்கு அனுப்பிவிட்டார். நடவடிக்கை ஏதும் எடுக்கப் படாத நிலையில் மீண்டும் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு புகார் மனு தரப்பட்டது (29.4.2013). மாவட்ட ஆட்சித் தலைவர் புகார் மனுவை மாவட்ட தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி நல அதிகாரிக்கு அனுப்பினார், (20.5.2013) நடவடிக்கை ஏதும் இல்லை. மீண்டும் நடவடிக்கைக் கோரி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன் திராவிடர் விடுதலைக் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தியது (17.6.2013). இந்தச் செய்தி, ‘இந்து’, ‘டெக்கான் கிரானிக்கல்’, ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளேடுகளில் வெளி வந்தது. மாவட்ட ஆட்சித் தலைவர் இதற்குப் பிறகும் எந்த நடவடிக்கையும் எடுக்காதது அரசியல் சட்டப் பிரிவு 14 மற்றும் 21க்கு எதிரானது. எனவே சட்டம் வழங்கியுள்ள 226 பிரிவைப் பயன்படுத்தி, நீதிமன்றம் வருவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே உச்சநீதிமன்றம் வழங்கிய முக்கிய தீர்ப்பின் அடிப்படையில் இந்த வழக்கு தொடரப் பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ‘ஜல்லிக்கட்டு’ நடந்த போது ஜாதி சொல்லி திட்டியதாக ஆறுமுகம் சேர்வைக்கும், தமிழ்நாடு அரசுக்குமிடையே நடந்த வழக்கில் உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு ஒன்றை அளித்தது (19.4.2011). அதில் உச்சநீதிமன்றம் கீழ்க்கண்ட கருத்துகளைப் பதிவு செய்தது.

1. தமிழ்நாட்டில் தீண்டாமை வன்கொடுமை களான இரட்டை தம்ளர் போன்ற வன் கொடுமைகள் பரவலாக இருந்து வருகிறது.

2. இது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமாகும். வன்கொடுமைகளைப் பின்பற்று வோர் மீது கிரிமினல் வழக்குத் தொடர்ந்து, கடும் தண்டனை வழங்கப்படவேண்டியது சட்டபூர்வ கடமை.

3. இந்த வன்கொடுமைகளைத் தடுக்காமலும் நடப்பது தெரிந்தும் நடவடிக்கை எடுக்காமலும் இருப்பதற்கு நிர்வாக அதிகாரிகளுக்கும், காவல் துறை அதிகாரிகளுக்கும் பொறுப்பு உண்டு. உரிய தடுப்பு செயல்பாடுகளை மேற்கொள்ளாத அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களின் அதிகார வரம்புக்குட்பட்ட பகுதிகளில் நடக்கும் தீண்டாமை வன்கொடுமைகளுக்கு அவர்களே பொறுப்பேற்க வேண்டும்.

4. தீண்டாமை வன்கொடுமையை செயல்படுத்து வோர் மீது கிரிமினல் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதும், இவைகளைத் தடுக்காத மாவட்ட ஆட்சித் தலைவர், காவல்துறை கண்கணிப்பாளர் மீது மாநில அரசு அவர்களை இடை நீக்கம் செய்து, வழக்குப் பதிவு செய்து, பிறகு துறை ரீதியான நடவடிக்கைகளைத் தொடர வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் திட்டவட்டமாக கூறியுள்ளது.

அத்துடன் உச்சநீதிமன்றமே இந்தத் தீர்ப்பின் நகலை தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர், உள்துறை செயலாளருக்கு அனுப்பி, மாவட்ட காவல்துறை, நிர்வாகத் துறை அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பிட பணித்தது. அனைத்து உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கும் இந்த தீர்ப்பின் நகல் அனுப்பப்பட்டது. கோவை மாநகர மாவட்ட கழகத் தலைவர் வழக்கறிஞர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவில் இவை அனைத்தும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்ட தொடர்புடைய அதிகாரிகளை உடனடியாக பதவி நீக்கம் செய்து, கடமையாற்றத் தவறியவர்கள் மீது உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி சட்டபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி வழக்கு மனுவில் கோரப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ராஜேஷ் குமார் அகர்வால் மற்றும் நீதிபதி சத்யநாராயணன் அமர்வு முன் 25.7.2013 அன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், எதிர்வாதிகளாக குறிப்பிட்டுள்ள தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட தாழ்த்தப்பட் டோர், மற்றும் பழங்குடி நல அதிகாரி ஆகியோ ருக்கு விளக்கம் கேட்டு குறிப்பானைப் (நோட்டீசு) பிறப்பிக்க உத்தரவிட்டனர். வழக்கு 21.8.2013 அன்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கழக சார்பில் வழக்கறிஞர் சரவணன் உயர்நீதிமன்றத்தில் வாதாடினார்