இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியாவில் இனி பயிற்சியளிக்க மாட்டோம் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி, சில வாரங்களுக்கு முன் அளித்த உறுதி காற்றில் பறந்தே போய்விட்டது. உதகையில் உள்ள வெலிங்டன் இராணுவப் பயிற்சிப் பள்ளியில் கடந்த ஜூன் 7ஆம் தேதி முதல் இரண்டு சிங்கள ராணுவத்தினர் பயிற்சிப் பெற்று வருகிறார்கள். மேலும் 4 அதிகாரிகள் பயிற்சிப் பெறப் போகிறார்களாம். தமிழக முதல்வர் ஜெயலலிதாவே மத்திய அரசுக்கு இதைக் கண்டித்து கடிதம் எழுதியும் எந்தப் பயனும் இல்லை. இப்போது இலங்கை அரசு எவரை எதிர்த்துப் போராட ராணுவப் பயிற்சி வழங்கு கிறது? அப்பாவி தமிழ் மக்களை எதிர்த்துத் தாக்குதல் நடத்து வதற்காகவா?

இலங்கையில் ராஜீவ்-ஜெயவர்த்தனா உடன்பாட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட 13ஆவது சட்டத் திருத்தத்தையும் செல்லாக் காசாக்கும் முயற்சிகளில் இலங்கை அரசு இறங்கியுள்ளது. இந்த சட்டத்திருத்தத்தை அமுல்படுத்தச் செய்து ஈழத் தமிழர்களுக்கு உரிமைகளை பெற்றுத் தருவோம் என்று வாய் வீரம் பேசி வந்த மத்திய அரசு, குறிப்பாக மன்மோகன் சிங், ப.சிதம்பரம் போன்றவர்கள் இலங்கை அரசின் இந்த நடவடிக்கையை தட்டிக் கேட்காமல், வாயில் பிளாஸ்திரியைப் போட்டு ஒட்டிக் கொண்டு, வேடிக்கைப் பார்க்கிறார்கள். தமிழர்களுக்கு உருப்படியான எந்த உரிமையும் வழங்காததுதான் இந்த 13ஆவது சட்டத் திருத்தம் (இப்போது 13ஏ). வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு, தமிழர் வாழும் பகுதி ஒரே பிரதேசமாக்கப்படும் என்பது, இந்த சட்டத் திருத்தத்தில் இடம் பெற்றிருந்த முக்கிய அம்சம் அப்படி ஒன்றாக இணைக்கப்பட்ட பிறகு, இலங்கை உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் மீண்டும் இரண்டாகப் பிரித்து விட்டார்கள்.

தமிழ் பேசும் பகுதிகள் இணைக்கப்பட்டதுபோல், இனி எதிர்காலத்தில் நிச்சயமாக நடக்காது என்று இலங்கை அமைச்சரவைக் குழு சார்பில் அதன் பேச்சாளர் கேகலியா இராம்புக்வேலா என்பவர் அறிவித்துள்ளார். மாகாண கவுன்சில் ஒரு காவல்துறையை அமைத்துக் கொள்ளவும், சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும், நில உரிமைகளுக்கான அதிகாரங்களையும் இப்போது இலங்கை நாடாளுமன்றத்தின் வழியாகவே பறிக்கப் போகிறார்கள். இவை பற்றி எல்லாம் பரிசீலிக்க இலங்கை அமைச்சரவை ஒரு தேர்வுக் குழுவை அமைக்குமாறு அந்நாட்டு நாடாளுமன்ற அவைத் தலைவரிடம் கடந்த ஜூன் 13 ஆம் தேதி வேண்டுகோள் வைத்துள்ளது.

‘13ஏ’ சட்டத்திருத்தத்தில் மாற்றங்கள் கொண்டு வரக்கூடாது என்று இலங்கை முஸ்லீம் காங்கிரஸ், ஈழம் மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி), இடதுசாரி இலங்கா சமாஜ் கட்சிகள் (எல்.எஸ்.எஸ்.பி.) கருத்து தெரிவித்துள்ளன. ஜாதிகா ஹெல உருமையா என்ற சிங்கள தீவிரவாத அமைப்பு ‘13ஏ’ என்ற பிரிவே இலங்கை சட்டத்தில் இடம்பெறக் கூடாது என்று மிரட்டுகிறது. தேசிய சுதந்திர முன்னணி (என்.எஃப்.எஃப்) சட்டம் ஒழுங்கு மற்றும் நிலம் தொடர்பான உரிமைகளை மட்டும் பறித்துவிட வேண்டும் என்று கூறுகிறது. இவை மட்டுமல்ல, ‘13ஏ’ சட்டத்திருத்தத்தையே நீக்கிட வேண்டும் என்று சிங்களர்களிடையே பல்லாயிரக்கணக்கில் கையெழுத்து இயக்கமும் நடைபெற்று வருகிறது.

1987 ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதி அன்றைய பிரதமர் ராஜிவ் காந்தி இலங்கை ராணுவத்தின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டிருந்தபோது சிங்கள கப்பல் படை சிப்பாயான விஜி முனி விஜிதா ரோகன டீ செல்வா என்பவர், ராஜீவ் - ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தை எதிர்த்து, ராஜீவ்காந்தியை துப்பாக்கி மட்டையால் தாக்கி, சாகடிக்க முயன்றார். அப்போது 21 வயது மட்டுமே நிறைந்திருந்த இந்த சிப்பாய், ராணுவ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டபோது அவருக்கு ஆதரவாக வாதாட, சிங்கள வழக்கறிஞர்கள் பட்டாளமே திரண்டு வந்தது. ஆனாலும், நீதிமன்றம் 6 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. அதற்குப் பிறகு அதிபராக வந்த பிரேமதாசா மன்னித்து இரண்டரை ஆண்டுகளில் விடுதலை செய்தார். இப்போது 13ஏ சட்டத் திருத்தத்தையே ரத்து செய்யும் இயக்கத்தில் பங்கேற்று ரோகன டி செல்வா கையெழுத்திடும் காட்சியை ‘சுடர்ஒளி’ தமிழ் நாளேடு வெளியிட்டுள்ளது.

மாகாண கவுன்சிலுக்கு வழங்கப்பட்டுள்ள சட்டம் ஒழுங்கு, நிலவுரிமை, காவல்துறை அமைத்தல் போன்ற அதிகாரங்களை சட்டப்படி பறித்த பிறகே யாழ்ப்பாணத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று வீட்டு வசதித் துறை அமைச்சர் விமல் வீரவன்சா என்பவர் அரசுக்கு மனு கொடுத்துள்ளார். சட்டம் ஒழுங்கை நிர்வகிக்கவோ, காவல்துறையை அமைத்துக் கொள்ளவோ, தங்கள் ஆட்சிக்குட்பட்ட நிலத்தில் உரிமை கொண்டாடவோ, மறுக்கக் கூடிய ஒரு மாகாணக் கவுன்சிலாம், அங்கே தமிழர்கள் “ஆட்சி” நடத்துவார்களாம். காதில் பூ சுற்றுகிறார்கள்.

இதைத் தட்டிக் கேட்க இந்திய பார்ப்பனிய ஆட்சி தயாராக இல்லை. இங்கே சில பார்ப்பன ஏடுகள் தமிழர்கள் பாதுகாப்போடும் வளமாகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று அப்பட்டமாக பொய்ப் பிரச்சாரங்களை பரப்பி வருகின்றன.

ஒவ்வொரு முறையும் அய்.நா.வில் மனித உரிமைக் குழுவில் தீர்மானம் வரும்போது மட்டும் ஏதோ சிறு சிறு சலசலப்புகள் வருவதும், மீண்டும் சிங்கள அரசின் பேரினவாத ஒடுக்குமுறைகள் தொடருவதும் வாடிக்கையாகிவிட்டது. மத்தியில் ஆளும் காங்கிரஸ் ஆட்சி இதற்கெல்லாம் என்ன பதில் தரப் போகிறது?