மனு சாஸ்திரம், சமஸ்கிருத மொழியில் எழுதப் பட்டது. 1919 ஆம் ஆண்டு இது முதலில் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது. மனு சாஸ்திரம் சமஸ்கிருதம் தெரிந்த “பிராமணர்களுக்கு மட்டுமே” தெரியும். இதை மாற்றி, ‘சூத்திரர்’கள், ‘பிராமணர்’களின் அடிமைகளாக வாழ வேண்டும் என்ற கருத்து அனைவருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காகவே தமிழில் மொழி பெயர்க்கப் பட்டது. இப்படி தமிழில் இதை மொழி பெயர்க்க வேண்டும் என்று விரும்பி, அதற்கான செலவுகளை ஏற்க முன் வந்தது யார் தெரியுமா? புதுச்சேரியைச் சார்ந்த நா. முத்துரங்க செட்டியார் என்ற ‘வைசியர்’ (பார்ப்பானுக்கு கீழே 3வது இடத்தில் இருப்பவர்). அவர் இந்தக் கோரிக்கையை யாரிடம் முன் வைத்தார்? திருவைந்திரபுரம்-கோமண்டூர் என்ற ஊரைச் சார்ந்த இராமானுஜ ஆச்சாரி என்ற வைணவப் பார்ப்பனரிடம்!

மொழி பெயர்த்தப் பிறகு பிழை திருத்தியவர் முத்துக் கோவிந்த செட்டி மற்றும் பு.க. சுப்பராய முதலி என்ற வர்ணாஸ்ரமத்தை ஏற்றுக் கொண்ட பார்ப்பன அடிமைகள். சென்னை பத்மநாப விலாச அச்சகத்தில் 1919 இல் அச்சிடப்பட்டு இரண்டரை ரூபாய் விலைக்கு விற்பனைக்கு வந்தது. இப்படி பார்ப்பனின் மனு சாஸ்திரத்தை தமிழர்களிடம் பரப்பிட துடித்தவர்கள்; பார்ப்பனரல்லாத பார்ப்பன அடிமைகள் தான்.

•              ‘மனு சாஸ்திரம்’ என்ற சமுதாய ஒடுக்கு முறையை அதாவது பிராமணன் தலையி லிருந்தும், சத்திரியன் (போரிடுகிறவன்) தோளி லிருந்தும், வைஸ்யன் (வியாபாரம் செய்கிறவன்) தொடையிலிருந்தும் தோன்றியவர்கள். இவர்களில் ‘பிராமணன்’ முதலிடம்; சத்திரியன் இரண்டாவது இடம்; வைசியன் மூன்றாவது இடம். இந்த மூன்று பிரிவினரும் - இரு பிறப்பு கொண்டவர்கள். அதாவது முதலில் மனிதர்களாக பிறந்து, பிறகு பிறந்த வர்ணத்தின் அடிப்படையில் உயர்ந்தவர்களாகி விடு கிறார்கள். எனவே மூன்று பிரிவினரும் பூணூல் போடும் உரிமை கொண்டவர்கள். காலிலிருந்து பிறந்தவன் ‘சூத்திரன்’. இவன் மேற்குறிப்பிட்ட 3 பிரிவினருக்கும் அடிமையாக வாழ வேண்டும் என்கிறது மனு சாஸ்திரம்.

இவர்கள் உலகை ‘படைத்த’ கடவுளான ‘பிரம்மா’வின் உடலிலிருந்து பிறந்தவர்கள் என்கிறது மனுசாஸ்திரம். அதாவது இந்த ஏற்றத் தாழ்வுகளை படைக்கும் போதே ‘பிரம்மா’வே நிர்ணயித்துவிட்டார் என்கிறது மனு சாஸ்திரம். ஆக கடவுள் ‘பிர்மா’ - இதை மனுவுக்கு தெரியப்படுத்தி, அந்த ‘மனு’ இதை மக்களுக்கு தெரியப்படுத்தினார். ‘மனு சாஸ்திரத்தை’ கடவுளின் கட்டளைகளாகவே மாற்றி, அதை மனு சாஸ்திரத்திலும் எழுதி வைத்துக் கொண்டனர்.

• அப்படி ‘பிரம்மா’வோடு நேரடியாகவே பேசிய ‘மனு’ என்பவன் யார்? இது பற்றி புரட்சியாளர் அம்பேத்கர் விரிவாக ஆய்வுகளை செய் துள்ளார்.

பழங்கால இந்தியாவில் ‘மனு’ என்பது ஒரு மரியாதைக்குரிய பெயராக இருந்து வந்திருக்கிறது. அதற்காக ‘மனு’ என்ற பெயரில் இதை பார்ப்பனர்கள் பரப்பினார்கள். உண்மையில் இது ‘மனு’ என்ற ஒரு தனி நபரால் எழுதப்படவில்லை. ‘நாரத ஸ்மிருதி’ என்ற மற்றொரு நூலை எழுதிய சுமதிபார்க்கவா என்பவன்தான் மனுஸ்மிருதியை எழுதி, தன் பெயரை மறைத்துக் கொண்டு அந்த காலத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த ‘மனு’வின் பெயரைப் பயன்படுத்திக் கொண்டான் என்கிறார் அம்பேத்கர்.

• புத்த மதம், பார்ப்பனியத்தைக் கடுமையாக எதிர்த்தது. மவுரிய வம்சத்தைச் சார்ந்த ஆட்சியாளர்கள் புத்த மதத்தை அரசு மதமாக ஏற்றுக் கொண்டு பரப்பினார்கள். அசோக மன்னன் மவுரிய வம்சத்தில் வந்தவன்தான். அவன் புத்த மதத்தை அரசு மதமாக்கி, பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மையைத் தடுத்து நிறுத்தினான். மவுரியர்கள் ஆட்சி 140 ஆண்டுகள் நடந்தன. அப்போது பார்ப்பனர்கள் அடக்கி ஒடுக்கி வைக்கப்பட்டிருந்தனர்.

• மீண்டும் பார்ப்பன ஆட்சியை நிலைநாட்ட பார்ப்பனர்கள் நேரம் பார்த்திருந்தார்கள். உயிர்ப்பலி யாகங்களில் நம்பிக்கை கொண்ட சுங்க வம்சம் என்ற பார்ப்பன வம்சம் ஆட்சியைப் பிடித்தது. புஷ்யமித்திரசுங்கன் என்ற பார்ப்பான் அரசனாக வந்தான். அதிகாரத்தைப் பிடித்த சுங்க வம்ச பார்ப்பனர்கள், புத்தத் துறவிகளை தேடித் தேடிக் கொலை செய்தார்கள். ஒவ்வொரு புத்த துறவியின் தலைக்கும் 100 தங்கக் காசுகள் விலையாக அறிவிக்கப்பட்டது. புத்தர்களைக் கொன்று ஒழித்ததோடு மட்டுமல்லாமல், மக்களை அடிமைப்படுத்தும் பார்ப்பனக் கருத்துகளை கட்டளைகளாக சமூகத்தின் சட்டங்களாக்க விரும்பினர். அப்போது புஷ்யமித்திரன் ஆட்சியில் அரசின் சட்டமாக அறிவிக்கப்பட்டதுதான் ‘மனு சாஸ்திரம்’.

அதனால்தான் வேதத்தை பார்ப்பனியத்தை எதிர்த்து வந்த புத்தமதத் தவர்களை “வேத நிந்தனையாளர்கள்” என்று மனு சாஸ்திரம் கூறியதோடு அவர்கள் ஒழிக்கப்பட வேண்டியவர்கள். ஆபத்தானவர்கள், திருடர்கள் என்று வசை பாடுகிறது. வேத எதிர்ப்பாளர்களை அரசன் தனது எல்லையிலிருந்து வெளியேற்ற வேண்டும். (அத்.9: சுலோகம் 225) அரசனின் ஆட்சிக்குட்பட்ட பகுதியில் மாறு வேடத்தில் இவர்கள் பதுங்கி வாழ்கிறார்கள். இவர்கள் தீயவர்கள்; ஒழுக்கமற்றவர்கள் மக்களுக்கு கேடு செய்பவர்கள். (மனு-அத்.9; சுலோகம் 226)

“வேத எதிர்ப்பாளர்கள் அன்றாடக் கடமைகளை செய்யாதவர்கள்; இவர்களின் பிறப்பே வீண்; திருட்டுத்தனமாக சாதி மாறிப் பிறந்தவர்கள்; வேதத்தை கேள்வி கேட்டு நிந்தனை செய்யும் துறவிகளுக்கும் தற்கொலை செய்து கொண்டவர்களுக்கும் அவர்களின் ‘ஆத்மா’க்களுக்காக ‘தர்ப்பணம்’ (செத்தப் பிறகு ஆத்மா சாந்தியடைவதற்கான புரோகிதச் சடங்கு) செய்யக் கூடாது”. (அத்.5; சுலோகம் 89)

- என்று பவுத்தர்களுக்கு எதிராகவே மனு சாஸ்திரத்தில் பல ஸ்மிருதிகள் திணிக்கப்பட்டன. எனவே, பவுத்த கொள்கைகளை ஒழித்து மீண்டும் வேத பார்ப்பன ஆதிக்கத்தை நிலைநாட்ட வந்ததே மனு சாஸ்திரம்.

இது புரட்சியாளர் அம்பேத்கர் தனது ஆய்வின் வழியாக கண்டறிந்த உண்மைகள்.