ஏப்.14இல் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளில் - ஜாதியை நியாயப்படுத்தும் - பெண்களை இழிவு படுத்தும் - பார்ப்பன ஆதிக்கத்தை உறுதிப்படுத்தும் - உழைக்கும் மக்களை அவமதிக்கும் மனு சாஸ்திரத்தை தீயிட்டு எரிக்கும் போராட்டம்! தோழமை அமைப்புகளின் ஆதரவு - பங்கேற்போடு - திராவிடர் விடுதலைக் கழகம் களமிறங்குகிறது.

- போராட்டத்துக்கு தலைவர்களாக பெண்களையே தேர்வு செய்யுங்கள்;

- மனு சாஸ்திரக் கொடுமைகளை துண்டறிக்கை களாக பரப்புங்கள்;

- முக்கியப் பகுதிகளில் போராட்டத்தை விளக்கிடும் அறிவிப்புப் பதாகைகளை நிறுவுங்கள்;

- தோழமை அமைப்புகளை நேரில் சந்தித்து போராட்டத்தில் பங்கேற்க அழையுங்கள்;

- காவல்துறைக்கு முன்கூட்டியே தகவல் தாருங்கள்!

- எரிப்புப் போராட்டம் நடத்தும் முன்பு, மனு சாஸ்திர-ஜாதி-தீண்டாமைக் கொடுமைகளை தோழமை அமைப்புகளோடு விளக்கிப் பேசுங்கள்; அவர்கள் பெயர்களையும் போராட்ட அறிவிப்பில் இணைத் திடுங்கள்!

- போராட்டத்தை விளக்கி தெருமுனைக் கூட்டங் களையும் வாய்ப்புள்ள பகுதிகளில் பொதுக் கூட்டங் களையும் நடத்துங்கள்;

மனுவின் வாரிசுகள் - இன்று பல்வேறு வடிவங் களில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்! அவர்கள் ஜாதி-தீண்டாமை வெறியைத் தூண்டி விடுகிறார்கள்; ஜாதி மறுப்பு திருமணங்களை கொச்சைப்படுத்து கிறார்கள்.

அதே நேரத்தில் காலாவதியாகிப் போன பழமைக் கருத்துகளை உயர்த்திப் பிடிக்கும் இந்த கற்கால பிரமுகர்களுக்கு எதிராக முற்போக்கு அணிகளின் குரல்கள் உரத்து ஒலிக்கத் தொடங்கிவிட்டன.

இது தலைதலைமுறையாக நடந்து வரும் சமூகப் போராட்டம். இந்த வரலாற்றுப் போராட்டத்தை திராவிடர் விடுதலைக் கழகம் இலக்கு நோக்கிய பார்வையில் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதும், அதில் நாம் ஒவ்வொருவரும் ஒரு போராளியாக செயல் பாட்டாளராக வீதிக்கு வந்து நிற்பதும் நமக்குக் கிடைத்துள்ள பெருமை; நல் வாய்ப்பு!

எரிப்புப் போராட்டம் அமைதியாக மக்களை சிந்திக்கச் செய்யும் போராட்டமாக நடக்கட்டும்!தீ வைத்து எரிக்கும் இடம் அருகே வாளிகளில் தண்ணீரை நிரப்பி வைத்துக் கொள்ளுங்கள். பொது சொத்துகளுக்கு சேதமின்றி அறிவு ஆசான் பெரியார் நடத்திய வழியில் போராட்டத்தை நடத்துவோம்! பெரியார் எதிர்த்த மனு சாஸ்திரம்; அம்பேத்கர் எரித்த மனு சாஸ்திரம்; சுயமரியாதை கூட்டங்களில் எரித்த மனு சாஸ்திரம்; - இதோ, ஜாதி-தீண்டாமைக்கு எதிரான அவர்களின் வாரிசுகளால் மீண்டும் எரியப் போகிறது! இது ஏதோ காகிதங்களின் எரிப்பு அல்ல! மக்கள் சிந்தனையில் மடிந்து கிடக்கும் பழமை வாதத்துக்கு வைக்கப்படும் நெருப்பு! ஜாதிய தீண்டாமை வெறிக்கு - பெண்ணடிமைக்கு மூட்டப்படும் நெருப்பு! தயாராவீர்! தயாராவீர்!!