50 படங்களை இயக்கி, 400 படங்களில் நகைச்சுவை, வில்லன், குணச்சித்திர நடிகராக நடித்து, தமிழ்த் திரையுலகிலும் தமிழின உணர்வாளர்களிடமும் செல்வாக்கை செலுத்தி வந்த தோழர் மணிவண்ணன், கடந்த ஜூன் 15, 2013 அன்று திடீரென்று விடைபெற்றுக் கொண்டு விட்டார். உண்மையில் அனைவருக்குமே அதிர்ச்சி! அவர் ஒரு பகுத்தறிவாளராக, ஜாதி எதிர்ப்பாளராக, இன விடுதலையாளராக வாழ்ந்தவர். தமிழ்ஈழ விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளர். அதை ஒளிவுமறைவின்றி வெளிப்படுத்தியவர். அவர் விருப்பப்படியே அவரது உடல் மீது புலிக்கொடி போர்த்தப்பட்டது. திரைத்துரையில் தன்னை நடிகவேள் எம்.ஆர்.இராதாவின் கலைவாரிசு என்று பல்வேறு பேட்டிகளில் அவர் பெருமையுடன் அறிவித்துக் கொண்டார். சிலுவையையும் பூணூலையும் தூக்கி எறிந்துவிட்டு, காதலர்களை இணைய வைத்த ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்திற்கு கதை வசனத்தை எழுதியவர் இவர்தான். வேலை கிடைக்காத இளைஞர்களின் உணர் வலைகளை கலைப் படைப்பாக்கிய ‘நிழல்கள்’ படத்தின் வசனங்களை தீட்டியதும் இவர்தான்.

கதை, வசனம் எழுதுபவராக-இயக்குனராக-நடிகராக படிப்படியாக உயர்ந்து, நடிகவேளைப் போலவே நகைச்சுவை கலந்து வில்லன் வேடங் களில் பரிணமித்தார். தமிழ்த் திரையுலகில் இவர் இயக்கிய அமைதிப்படை, அரசியலில் அதிர்வு களை உருவாக்கியது. அதன் இரண்டாம் பகுதியாக அண்மையில் அவர் எழுதி இயக்கிய இராஜராஜ சோழன், எம்.ஏ. எம்.எல்.ஏ. - மக்கள் விரோத அரசியலை அனல் பறக்க சாடியது. திரைப்பட ‘நட்சத்திரமாக’ தனக்கு சமூகத்தில் கிடைத்த ‘விளம்பரம்-புகழை’ தன்னை வளர்த்துக் கொள்ள பயன்படுத்தாமல் அவற்றை தேர்தல் அரசியலில் திரும்பிப் பார்க்காத இயக்கங்களுக்கும், கொள்கை களுக்கும் அந்த விளம்பர வெளிச்சங்களைக் குவிய வைத்தார். அதுதான், அவரது தனித்துவமான சிறப்பு. திராவிடர் கழகம் முன்னின்று எடுத்த வேலு. பிரபாகரன் இயக்கிய ‘கடவுள்’ படத்தில் கொள்கைக்காக பணம் பெற்றுக் கொள்ளாமல் நடித்தார். பெரியாரின் ஜாதி எதிர்ப்புக் கொள்கைக் காகவே ‘ஆண்டான் அடிமை’ படத்தையும், முற்போக்கு கொள்கைகளுக்காக ‘தோழர் பாண்டியன்’ படத்தையும் எடுத்தவர். இவையெல் லாம் வணிக ரீதியாக தனக்கு வெற்றியை ஈட்டித் தராது என்று நம்பியே அதில் இறங்கினார். பாரதிய ஜனதா ஆட்சிக் காலத்தில் வருமானவரித் துறையின் பார்ப்பன அதிகாரிகள் உரிய நேரத்தில் வரி செலுத்தவில்லை என்பதற்காக அவரது வீட்டில் சோதனை நடத்தி பெரும் தொகையை எடுத்துச் சென்றனர். அதற்காக கலங்கவில்லை. பாரதிய ஜனதாவின் மதவெறிக் கொள்கைகளை கடுமையாக சாடினார். ஒரு பிரபலமான தொலைக்காட்சி பேட்டியிலேயே வருமானவரித் துறை மிரட்டல் களுக்கு பணியாது பார்ப்பன இந்துத்துவ சக்திகளின் முத்திரையைக் கிழித்தார்.

ஈழ விடுதலைக்காக மருத்துவர் எழிலன் தலைமை யில் நடந்த பரப்புரைப் பயணத்தின் விளக்கக் கூட்டம், கோவையில் கழகத் தோழர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சொந்த வேலையாக கோவை வந்திருந்த தோழர் மணிவண்ணன், சுவரொட்டியைப் பார்த்துவிட்டு, கூட்டத்துக்கு வந்துவிட்டார். பங்கேற்று சிறப்பாகப் பேசினார்.

திருப்பூரில் ‘தந்தை பெரியார் திராவிடர் கழகம்’ நடத்திய மாநாட்டில் (2005, அக்.1 மற்றும் 2 தேதிகளில்) - அக்டோபர் 2இல் ‘குடிஅரசு’ 1926’ தொகுப்பை தோழர் ஆர். நல்லக்கண்ணு வெளியிட, முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டு தோழர் மணிவண்ணன் உரை நிகழ்த்தியபோது, கொட்டும் மழையிலேயே மேடையில் அமர்ந்திருந்தார். குடை பிடிக்க வந்தவர்களை போகச் சொல்லிவிட்டார். அந்த நிகழ்ச்சியில், “திரைப்படத் துறையில் சேரு வதற்கு முன்பு இருந்ததைப் போலவே நான் இப்போதும் இருக்கிறேன். சினிமாவை வைத்துக் கொண்டு செல்வாக்குப் பெறவேண்டும் என்று நான் நினைத்திருந்தால் இந்த மேடைகளை நோக்கி நான் வந்திருக்க மாட்டேன்... நினைத்திருந்தால் நான் அரசியலுக்குப் போயிருக்க முடியும். ஆனால், அது என் நோக்கமல்ல. நான் பெரியாரை நோக்கித்தான் வந்தேன். பெரியார் மட்டும் இருந்திருக்கவில்லை யானால், நான் மாடு மேய்த்துக் கொண்டிருந் திருப்பேன். அல்லது டாலர் சிட்டியான இந்த திருப்பூரில், அதிகபட்சமாக ஒரு பனியன் நிறு வனத்தில் வேலை பார்த்திருப்பேன். அவ்வளவு தான்” என்று உளம் திறந்து பேசினார்.

சூலூரில் பிறந்த இயக்குனர் மணிவண்ணனின் தந்தை பெயர் சுப்ரமணிய (தேவர்). அவர் தி.மு.க. காரர். அதனால் மணிவண்ணனுக்கு பெயர் சூட்டி யவரே கலைஞர் கருணாநிதி தான். மணிவண்ணன் தான் பிறந்த ஜாதித் தலைவர்களை நோக்கி ஓடியவரல்ல; ஜாதி மறுப்பு திருமணம் செய்தவர். அவர் காதலித்து திருமணம் செய்த பெண் ஒரு பார்ப்பனர். தனது மகள் ஜோதிக்கு சுயமரியாதை, ஜாதி மறுப்பு திருமணத்தை செய்தவர். பொது வுடைமை இயக்கத்திலும், மார்க்சிய லெனினிய கொள்கைகளிலும் ஈடுபாடு கொண்ட தோழர் மணிவண்ணன், ‘தேசிய இனங்களின் விடுதலை’க்கு முன்னுரிமை தரவேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் தேசிய இன விடுதலை, ஜாதி எதிர்ப்பு, பகுத்தறிவு, ஏகாதிபத்திய எதிர்ப்பு கருத்துகளை முன் வைக்கும் அனைத்து மேடை களிலும் பங்கேற்றார். இரண்டு மாதங்களுக்கு முன்பு, சென்னை இக்சா மய்யத்தில் கூடங்குளம் அணுஉலை ஆபத்துகளை விளக்கிடும் குறும்படம் வெளியீட்டு நிகழ்வில் பங்கேற்றுப் பேசினார்.

நிகழ்ச்சியில் பேசிய தோழர் மணிவண்ணன், கமலகாசனின் விசுவரூபம் படத்தை மிகக் கடுமையாக சாடினார். சக கலைஞன் என்பதற்காக அவர் தயக்கம் காட்டவில்லை. “நீ ஹாலிவுட் தரத்தில் படம் எடு; அது உன் விருப்பம். நாங்கள் அதை எதிர்க்கவில்லை. ஆனால், ஹாலிவுட் அரசியலை இங்கே திணிக்காதே. இந்த எதிர்ப்பைப் பதிவு செய்யவே இங்கு வந்தேன். இல்லை என்றால் எனக்கு தூக்கமில்லாமல் போய்விடும்” என்று பேசினார் அவருடன் ஒரே சிந்தனை அலைவரிசை யில் பயணித்து, திரையுலகில் ‘இரட்டையர்களாக’ கொள்கை சிறகடித்து பறந்த நடிகர் சத்யராஜ் அவர் களுக்கு மணிவண்ணன் முடிவு மாபெரும் இழப்பு. நடிகராகவும், இயக்குனராகவும் புகழ் சேர்த்த இந்த மக்கள் கலைஞன், இயக்கங்களின் தோழர்களாக தன்னை அடையாளப்படுத்துவதிலேயே பெருமை யடைந்தார் என்பதால், இவர் நடிகர், இயக்குனர் என்ற எல்லைகளையும் விஞ்சி நின்ற தோழர்.

தமிழ்த் திரையுலகின் வரலாற்றில் கொள்கை அடையாளங்களைப் பதிவு செய்த விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சில நடிகர் வரிசையில் தோழர் மணிவண்ணனுக்கு உறுதியான இடம் உண்டு. 59வயது காலமே வாழ்ந்து விடைபெற்றுக் கொண்ட இந்த மகத்தான கலைஞனுக்கு திராவிடர் விடுதலைக் கழகம் வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறது. மணிவண்ணன் முடிவெய்தி விட்டார்; மணிவண்ணன் வாழ்க!

குறிப்பு: தோழர் மணிவண்ணன் முடிவெய்திய செய்தி அறிந்து, கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் மற்றும் தோழர்களோடு 15ஆம் தேதி பிற்பகல் 3 மணியளவில் அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினர். அன்று மாலை காஞ்சி மாவட்டம் மறைமலை நகரில் நடந்த கழகப் பொதுக் கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப் பட்டது. - ஆசிரியர்

இயக்குநர் இமயமல்ல; சிறுமையின் இமயம்

இயக்குநர், நடிகர் தோழர் மணிவண்ணன் முடிவெய்தியதற்கு முதல் நாள் வெளிவந்த ‘ஆனந்தவிகடன்’ வார ஏட்டில், ‘இயக்குநர் இமயம்’ என்ற பட்டப் பெயரால் அழைக்கப்படும் பாரதி ராஜா, நடிகர் மணிவண்ணன் பற்றி மிகவும் தரம் குறைந்த கீழ்மையான தனது அகம்பாவத்தை வெளிப்படுத்தக்கூடிய கருத்துகளை வெளியிட்டுள்ளார். தனது வீட்டு வாசலில் தினமும் வந்து சலாம் போட்டவன் என்றும், அவரது திருமணத்துக்கே இவர்தான் நகை வாங்கிக் கொடுத்ததாகவும், பிச்சைக்காரனாக திரிந்தவனுக்கு அரண்மனை சோறு போட்டவன், ஆனால், அவர் பிச்சைக்கார சாப்பாட்டை நோக்கியே ஓடினார் என்றும், ஒருமையில் சாக்கடையை பேனாவில் நிரப்பி எழுதியுள்ளார்.

இந்த தரம் கெட்ட எழுத்துகளை பாரம்பர்யமிக்க ‘ஆனந்தவிகடன்’ எப்படி வெளியிட்டது என்பதுதான் நமக்கு வருத்தம். திரை உலகின் ‘ஜாம்பவான்’ களாகத் திகழ்ந்த எம்.ஜி.ஆரும், சிவாஜியும்கூட நடிப்பு வாய்ப்புக்காக ஓடி அலைந்தவர்கள்தான். சின்னச்சாமியாக இருந்து, பிறகு பாரதியின் ராஜாவாக்கிக் கொண்ட இந்த மனிதனின் ‘பிளாஷ் பேக்’கும் அப்படித்தானே! ஏதோ, அம்பானி மாளிகையின் 72ஆவது தளத்தில் ஹெலிகாப்டர் தளத்தில் வந்திறங்கும் வாழ்க்கைக்கு உரியவர் போலும், தங்கத் தொட்டிலில் வெள்ளிக் கரண்டியை வாயில் வைத்துக் கொண்டு பூமியில் அவதரித்த இந்த மகான், கலை உலகில் மக்களுக்கு சேவை செய்வதற்காக ‘தியாக அவதாரம்’ எடுத்திருப்பது போலவும் எழுதியிருப்பது அருவறுக்கத்தக்க நாற்றம்!

கிராமங்களில் ஆதிக்க ஜாதியர்கள் வெளிப்படுத்தும் பெண்ணடிமை - போலிப் பெருமைகளுக்கு புனிதம் கற்பித்து, ஜாதி ஒடுக்கு முறைகளை மூடி மறைத்த நபர் தான் ‘கிராமத்திலிருந்து வந்ததாக’ பெருமையடித்துக் கொள்ளும் இந்த முன்னாள் சின்னச்சாமி. (வேதம் புதிது மட்டும் விதிவிலக்கு. அதுகூட இவரது கதை அல்ல. கண்ணன் என்ற பார்ப்பனர் எழுதி, மேடையில் நாடகமாக நடிக்கப்பட்டது)

அண்மைக்காலமாக ஜாதியப் பார்வையில் தமிழர்களை அடையாளம் காணப் புறப்பட்டுள்ள ‘புரட்சியாளர்கள்’ கும்பலில் தன்னையும் இணைத்துக் கொண்டிருப்பவர். சுப. வீரபாண்டியன் எழுதிய ‘பெரியாரின் இடதுசாரி தமிழ் தேசியம்’ நூல் வெளியீட்டு விழாவுக்கு வருகை தர ஒப்புக் கொண்டு, காமராசர் அரங்கிற்கும் வந்து, நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன், ‘கன்னடரான பெரியாரை நான் தமிழனாக ஏற்க மாட்டேன்’ என்று கூறி, மேடையில் பேச மறுத்து வெளியேறியவர். இவர் பிறந்த அதே ‘ஜாதி’ பின்புலத்தில் பிறந்தவர்தான் தோழர் மணிவண்ணன் என்றாலும், ஜாதிப் பகட்டுகளை தூக்கி வீசிய பெருமைக்குரியவர். மணிவண்ணனின் கொள்கை அடையாளப் பெருமைக்கு முன், இந்த முன்னாள் சின்னச்சாமிகள் கால்தூசிக்குக்கூட சமமாக மாட்டார்கள். ‘ஆனந்த விகடனில்’ இதைப் படித்த சராசரி வாசகன்கூட அதற்குள் மறைந்துள்ள ஆணவம் அகம்பாவத்தைப் புரிந்து, இந்த மனிதர்களின் யோக்கியதையை அடையாளம் கண்டு கொண்டு விடுவான். செய்த உதவிகளை பட்டியல் போட்டுக் காட்டி விளம்பரம் தேடுகிற ஆசாமிகள், மனித நாகரிகத்தின் எல்லைக் கோட்டுக்கு வெளியே புறந் தள்ளப்பட்டவர்கள்தான். இவர்கள் இயக்குனர் இமயம் அல்ல; சிறுமைகளின் இமயம்.

எழுதியது: எவராக இருந்தால் என்ன?

ஒரு வினா; ஒரு விடை

வினா: காஷ்மீர் பல்கலை சட்டக் கல்வித் துறை மாணவர்களிடையே உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி உரையாற்ற வந்தார். தேசிய கீதம் பாடப்பட்டபோது நீதிபதிகள், முக்கிய பிரமுகர்கள் எழுந்து நிற்க, மாணவர்களும் பேராசிரியர் களும் உட்கார்ந்தே இருந்தார்கள். தேசிய கீதத்தை இப்படி அவமதிக்கலாமா?

விடை : ஜம்மு காஷ்மீரைப் பொறுத்தவரை தேசிய கீதம் பாடும்போது உட்கார்ந்திருப்பதுதான் மரியாதை. நீதிபதிகளும், பிரமுகர்களும் எழுந்து நின்று அவர்கள்தான் தேசிய கீதத்தை உண்மையில் அவமதித்திருக்கிறார்கள்!