இன்று உலகிலுள்ள கடவுள்களும் மதங்களும் பகுத்தறிவின் படி சிந்தித்தால் ஏற்க முடியாதவைகளாகவும் இன்றைய நாகரிகங்களுக்கு ஏற்றவைகளாக இல்லாதவைகளாகவும் இருந்துவரக் காரணம் என்ன என்பதைப் பகுத்தறிவுள்ள ஒவ்வொரு மனிதனும் சிந்திக்க வேண்டியவனேயாவான்.

இவை பற்றி விளக்க வேண்டுமானால் இவைகளில் ஈடுபட்ட ஒவ்வொரு மனிதனும் முதலாவதாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டியது; இந்தக் கடவுள்களும் மதங்களும் எப்போது உண்டாக்கப்பட்டவை என்பதைச் சிந்திக்க வேண்டியது முக்கியமாகும்.

அப்படிப் பார்த்தால் எல்லாக் கடவுள்களும் அநேகமாக இன்றைக்கு 1500-2000-2500-3000 ஆண்டுகளுக்கு முன்னதாகவே உற்பத்தி செய்யப்பட்டவையாகும். மதங்களும் அப்படியே என்பதல்லாமல் அவை பற்றிய கற்பனைக் கதைகளும் புராணங்களும் இதிகாசங்களும் மற்றும் அவற்றின் பேரால் குறிப்பிடப்பட்டவைகளான. சாஸ்திரங்கள் வேதங்கள் தர்மங்கள் நிபந்தனைகள் யாவுமே அவைபோலவே 1500 முதல் 3000 ஆண்டுக் காலங்களில் உண்டாக்கப்பட்டவைகளேயாகும். இவை யாராலும் மறுக்க முடியாதனவென்றே கூறலாம்.

அக்காலங்களில் மக்களுடைய பொது அறிவு எந்த நிலையில் இருந்திருக்க முடியும்? இன்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பு உலக மக்கள் தொகை ஆதாரங்களின்படி 20 கோடி மக்கள்தாம் இருந்ததாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. மற்றும் இன்றைக்குச் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது கி.பி.1460 ஆம் ஆண்டில் உலக ஜனத்தொகை 47 கோடி என்றும், கி.பி.1800 இல் உலக ஜனத்தொகை 70 கோடி என்றும், கி.பி.1914 இல் உலக ஜனத் தொகை 165 கோடி என்றும், 1954 இல் 320 கோடி என்றும், 1964 இல் 350 கோடி என்றும் 1970 இல் 365 கோடி என்றும் ஆதாரங்கள் கூறுகின்றன.

இதன்படி பார்த்தால் கி.பி.1 இல் மக்களின் சராசரி ஆயுள் 5 ஆண்டுகள் தாம் இருந்திருக்க முடியும் என்றுதான் தோன்றுகிறது.

இன்றைய உலக மக்களின் சராசரி ஆயுள்: மேல் நாடுகளில் மனிதன் சராசரி 70 ஆண்டு வாழ்கிறான். நமது நாட்டில் 52 ஆண்டு வாழ்கிறான். இதை அனுசரித்துத் தானே மனிதனுடைய அறிவும் இருந்திருக்க முடியும்! மனிதன் சராசரி 5 வருஷமே வாழ்ந்த காலம் என்றால் அக்கால மக்களுக்கு அறிவு எவ்வளவு இருந்திருக்க முடியும் என்று சிந்தித்துப் பார்த்தால் அக்காலத்தில் உண்டாக்கப்பட்ட கடவுள், மதம், மதத் தலைவர்கள், அவர்களது வேதம், தர்மம், நீதி முதலியவைகள் இந்தக் காலத்துக்கு இன்றைய அறிவுக்கு ஏற்றனவாக எப்படிக் கருதப்பட முடியும்!

மனிதன் அக்காலத்தில் கடவுள் என்று சொன்னானே ஒழிய அறிவுக்கும் சாத்தியத்திற்கும் ஏற்றபடியாகத் தன்மைகளையும் குணங்களையும் பொருத்த முடியவில்லையே! விளக்க முடியாத காரணத்தினால்தானே கடவுள் கண்ணுக்குத் தெரியாது, கைக்குச் சிக்காது, மனத்தால் புரிந்து கொள்ள முடியாது என்று கூறிக் கடவுள் என்றால் நம்பித்தான் ஆகவேண்டும் என்று சொல்லித் தப்பித்துக் கொள்ள முயன்று இருக்கிறான்!

இந்த இலக்ஷணத்தில் இப்படி நம்ப வேண்டிய கடவுள் சர்வ சக்தி உள்ளவர், அவரால்தாம் உலகம் இயங்குகிறது என்று சொல்லிவிட்டான். இதை எல்லா மனிதனும் - படித்தவன், படிக்காதவன், ‘மேதாவி’, ‘புலவன்’, ‘விஞ்ஞானி’, ஞானி, அஞ்ஞானி, சங்கராச்சாரி, பண்டார சன்னிதி முதலிய எல்லோருமே ஒப்புக்கொள்கிறார்கள். ஏற்றுக் கொள்கிறார்கள் என்றுதானே காண்கிறோம்!

ஆனால், இதில் ஒரு அதிசயம் என்னவென்றால் இப்படிப் பட்டவர்களில் ஒருவன்கூடக் கடவுளின் சர்வ சக்தியை ஏற்றுக் கொள்ளாமல் வாழ்க்கையில் உள்ள எல்லாக் காரியங்களுக்கும் தன் சக்தியை, தன் அறிவை, தன் பயிற்சியைத்தானே பயன்படுத்துகிறான்.

எந்த மனிதன் எந்தக் காரியத்தைக் கடவுளுக்கு விட்டு விட்டுக் கடவுள் சக்திக்கு ஆளாகி வாழ்கிறான்? சர்வசக்தி உள்ள கடவுளை மனித சக்தியினால் தானே இருக்கிறதாகச் சொல்ல முயலு கிறான்!

இந்த முயற்சி ஒன்றே கடவுள் இல்லை என்பதைத் தெளிவுபடுத்துவதுடன் மனிதனுடைய முட்டாள்தனத்தையும் அல்லவா ருஜுப்பிக்கிறது! இன்றைய தினம் ஒரு பண்டத்தைப் பற்றிச் சொல்ல வருபவன் “இது உனக்குப் புரியாது நம்பு” என்று எதையாவது சொல்வானா? அப்படிச் சொன்னால் அவனை நீங்கள் என்னமாய்க் கருதுவீர்கள்? பெரிய மோசடிக்காரன் என்றல்லவா கூறுவீர்கள்!

ஆகவே, மக்கள் போதிய அறிவில்லாத காலத்து உண்டாக்கப்பட்ட, கற்பிக்கப்பட்ட கடவுள் இன்று பகுத்தறிவுக் காலத்தில் பொருந்தாது! பொருந்தாது!! பொருந்தவே பொருந்தாது!!!

- பெரியார், ‘உண்மை’ 14.6.1972