பேராசிரியர் புல்லார் வழக்கில் தூக்குத் தண்டனையை உறுதி செய்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, எஸ்.கே. முகோபாத்யா ஆகியோர் அசாமைச் சார்ந்த மகேந்திரநாத் தாஸ் என்பவருக்கு தூக்குத் தண்டனையை ரத்து செய்துள்ளனர். புல்லார் கருணை மனு நீண்டகாலம் கிடப்பில் போடப்பட்டிருந்ததால் அவருக்கு கருணை காட்ட முடியாது என்று கூறிய உச்சநீதிமன்றம், பயங்கரவாத தடை சட்டங்களின் கீழான வழக்குக்கு இந்த ‘காலதாமதம்’ என்ற வாதம் பொருந்தாது என்று கூறிவிட்டது.

இந்தத் தீர்ப்பு - ஏற்கனவே 1980 இல் அய்ந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சட்ட அமர்வு தூக்குத் தண்டனைகளுக்கு முன் நிபந்தனையாக வரையறுத்த ‘அரிதிலும் அரிதான வழக்கு’ என்ற வரையறுப்புக்கு மாறானது. அதில் சொல்லப்படாத ஒரு கருத்தை இந்த இரண்டு நீதிபதிகளும் ‘பயங்கரவாத தடை’ சட்டத்தில் கீழான வழக்குக்கு தூக்குத் தண்டனை தான் என்று அறிவித்து விட்டனர். இதே நீதிபதிகள், அடுத்த சில வாரங்களில், மகேந்திரதாஸ் என்பவர் வழக்கில் கருணை மனு தாக்கல் செய்து, 12 ஆண்டுகள் கழிந்துவிட்டது என்ற காரணத்தைக் காட்டி, அவரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்துவிட்டனர்.

அரிதிலும் அரிதான வழக்குகளை தீர்மானிப்பதற்கு அய்ந்து வழி காட்டுதல்களை உச்சநீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வு 1980 ம் ஆண்டு வழங்கியது. 16 ஆண்டுகளுக்குப் பிறகு 1996 ஆம் ஆண்டிலும்,  1997 ஆம் ஆண்டிலும் 5 நீதிபதிகள் வழங்கிய தீர்ப்புக்கு நேர் எதிராக இரண்டு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். அதாவது, அரிதிலும் அரிதான வழக்கை தீர்மானிக்கும்போது குற்றத்தை மட்டும் பார்க்காமல் அதற்கு இணையாக குற்றவாளியின் பின்னணியையும் பார்க்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற அரசியல் சட்ட அமர்வு வழங்கிய தீர்ப்புக்கு எதிராக குற்றவாளி பின்னணியை பார்க்க வேண்டிய அவசியமில்லை என்று இரண்டு நீதிபதிகள், 1996 ஆம் ஆண்டிலும், 1997 ஆம் ஆண்டிலும் தீர்ப்பளித்து தூக்குத் தண்டனையை வழங்கிவிட்டனர். இந்தத் தவறான தீர்ப்பை முன்னுதாரணமாகக் கொண்டு அதற்குப் பிறகு 6 வழக்குகளில் 7 பேருக்கு தூக்குத் தண்டனைகள் வழங்கப்பட்டுவிட்டன. 2009 ஆம் ஆண்டில்தான் உச்சநீதிமன்றமே அந்தத் தவறை உணர்ந்தது. மராட்டிய மாநிலத்தைச் சார்ந்த 3 தூக்குத் தண்டனை வழக்குகள் உச்சநீதிமன்றத்தின் மேல்முறையீட்டுக்கு வந்தபோதுதான் 9 ஆண்டுகளாக “பிழையாலும் அறியாமையினாலும் தூக்குத் தண்டனை விதிக்கும் தீர்ப்புகள் வழங்கப் பட்டுள்ளன (யீநச inஉரசiடிn) என்பதை ஒப்புக் கொள்கிறோம்” என்று உச்சநீதிமன்றமே ஏற்றுக் கொண்டது. மனித உயிர்களோடு விளையாடும் உச்சநீதிமன்றத்தின் குளறுபடிகள் இப்படி என்றால், குடியரசுத் தலைவர் பரிசீலனைக்கு வரும் கருணை மனுக்களிலும் குளறுபடிகள் நடந்து வருகின்றன.

மகேந்திரதாஸ் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, எஸ்.கே. முகோபாத்யாயா ஆகியோர் தங்கள் தீர்ப்பில் உள்துறை அமைச்சகம் நடத்தும் ‘தில்லுமுல்லு’களை சுட்டிக் காட்டியுள்ளனர்.  2009 ஆம் ஆண்டில் மகேந்திரதாசை தூக்கிலிடுவதற்கு உள்துறை அமைச்சகம் பரிந்துரைத்து, அன்றைய குடியரசுத் தலைவர் அப்துல்கலாமுக்கு அனுப்பியபோது, அப்துல்கலாம் பரிந்துரையை ஏற்கவில்லை. ஆயுள் தண்டனையாக குறைக்க பரிந்துரைத்தார். கலாமைத் தொடர்ந்து பிரதிபாபாட்டீல், குடியரசு தலைவராக வந்தபோது அதே மகேந்திரதாசுவின் கருணை மனுவை நிராகரித்து உள்துறை அமைச்சகம் மீண்டும் பரிந்துரைத்தது. அப்போது ஏற்கனவே கலாம் ஆயுள் தண்டனையாக குறைத்து முன் வைத்த குறிப்பை பிரதிபாபாட்டீல் பார்வைக்கு அனுப்பாமலே உள்துறை அமைச்சகம் மறைத்துவிட்டது. இதன் மூலம் தனக்கு முன்னாள் இருந்த குடியரசுத் தலைவர் எடுத்த முடிவு தெரிவிக்கப்படாமல், பிரதிபாபாட்டீல், உள்துறை அமைச்சகத்தால் இருளில் ஆழ்த்தப்பட்டார் என்று நீதிபதிகள் தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உள்துறை அமைச்சகம் கருணை மனுக்களை நிராகரித்து அனுப்பிய 15 பேர் பட்டியலை பிரதிபாபாட்டீல் கிடப்பில் வைத்துவிட்டார். தூக்குத் தண்டனை வழங்கிடக்கூடாது என்ற நோக்கத்தில் அவர் மேற்கொண்ட நல்ல நடவடிக்கை இது. அப்சல் குருவுக்கு கருணை மனுவை நிராகரித்து, உள்துறை அமைச்சகம் பிரதிபா பாட்டிலுக்கு அனுப்பியபோது (2011, ஆகஸ்ட் 4), பாட்டீல் உள்துறை அமைச்சகத்தின் முடிவை ஏற்கவில்லை. தனது பதவிக்காலம் முடியும் வரை பாட்டீல் கிடப்பிலேயே வைத்திருந்தார். 2012 ஜூலையில் பிரணாப் முகர்ஜி, குடியரசுத் தலைவராக வந்தவுடன், பிரதிபாபாட்டீல் கிடப்பில் போட்ட 15 பேரின் கருணை மனு பட்டியலை மீண்டும் உள்துறை அமைச்சகம் புதிய குடியரசுத் தலைவருக்கு அனுப்பி தூக்கிலிட பரிந்துரைத்தது. உடனே பிரணாப் முகர்ஜியும் ஏற்பு வழங்கிவிட்டார். குடியரசுத் தலைவராக இருந்த கே.ஆர்.நாராயணன், இராதாகிருட்டிணன் போன்றவர்கள் தங்கள் பதவி காலத்தில் ஒருவருக்குக்கூட தூக்குத் தண்டனை வழங்க அனுமதிக்கவில்லை. அப்துல்கலாம் மேற்கு வங்கத்தைச் சார்ந்த சாட்டர்ஜி என்ற ஒருவருக்கு மட்டுமே கருணை மனுவை நிராகரித்தார். பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட பல கருணை மனுக்களை மறுபரிசீலனைக்கு உள்துறை அமைச்சகத்துக்கு கலாம் திருப்பி அனுப்பி தூக்குத் தண்டனை வேண்டாம் என்றே பரிந்துரைத்தார்.

மீண்டும் உள்துறை அமைச்சராக இருந்தபோது ப.சிதம்பரம், இதே கருணை மனுக்களை தள்ளுபடி செய்து, குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார். ஆக, உச்சநீதிமன்றங்கள் ஆனாலும் சரி, குடியரசுத் தலைவரிடம் வரும் கருணை மனுக்கள் ஆனாலும் சரி, விருப்பு வெறுப்புக்கேற்றபடியே நகர்த்தப்படுகின்றன. ஒரே சீரான நெறிமுறைகள் பின்பற்றப்படுவது இல்லை. அரசியல் சட்டம் வழங்கும் அதிகாரத்தையும் நடைமுறைகளையும் மனித உயிர்களுக்கு எதிராக சதுரங்கத்தில் நகர்த்தப்படும் பகடைக்காய்களாக்கி வருகிறார்கள். தூக்குத் தண்டனையை சட்டப் புத்தகத்திலிருந்து நீக்குவதுதான் இதற்கு ஒரே வழி!