கோவை மாவட்டம் கிணத்துக்கடவு வட்டத்தில் தீண்டாமைக் கொடுமைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. தீண்டாமை ஒழிப்புக்காக செயல்படும் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் குறட்டைவிட்டு உறங்கிக் கொண்டிருக்கிறது. மக்களிடையே தீண்டாமைக்கு எதிராக விழிப் புணர்வை உருவாக்குவதற்காக வழங்கப்பட்ட அரசு வாகனங்கள் பயன்படுத்தப் படாமல் தூசி படிந்து முடங்கிப் போய் கிடப்பதை ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளேடு (ஏப்.30) படம் பிடித்து வெளியிட்டுள்ளது.

கிணத்துக்கடவு வட்டத்தில் தேனீர்க் கடைகளில் இரட்டைக்குவளை முறை கீழ்க்கண்ட கிராமங்களில் தொடர்ந்து வருகிறது. கொண்டம்பட்டி, ஓமலூர், மாம்பள்ளி, பகவதிபாளையம், சொலவம்பாளையம், மயிலேறிபாளையம், பனப்பட்டி, மெட்டுவாவி, பெரும்பதி, மீனாட்சிபுரம், வழுக்குப் பாறை, வீரப்ப பவுண்டன் புதூர், சின்னேரி பாளையம், மூட்டாம்பாளையம், கோதவாடி, காரச்சேரி, சிங்காரம்பாளையம், குருநல்லி பாளையம், மேலும், தாழ்த்தப்பட் டோருக்கு, வடசித்தூர், முத்துக்கவுண்டன்பாளையம், அரசம்பாளையம் ஆகிய கிராமங்களில் முடிவெட்ட மறுக்கப்படுகிறது. முதல்கட்டமாக அரசின் கவனத்தை ஈர்ப்பதற்கு திராவிடர் விடுதலைக் கழகம் கிணத்துக்கடவுவில் மே 11 ஆம் தேதி மாலை 3 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. கழக வெளியீட்டுச் செயலாளர் நா.தமிழ்ச்செல்வி தலைமையில் இராமகிருட்டிணன், கார்க்கி முன்னிலையில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் திருப்பூர் துரைசாமி, கோவை மாநகர மாவட்ட தலைவர் வழக்கறிஞர் பன்னீர்செல்வம், மண்டல செயலாளர் விஜயன், மாவட்ட தலைவர் வெள்ளமடை நாகராசன், மாவட்ட செயலாளர் பாலமுரளி, திருப்பூர் மாவட்ட செயலாளர் அகிலன், கோவை மாவட்ட துணைத் தலைவர் நா.வேநிர்மல், ஆதித் தமிழர் பேரவை மாவட்ட தலைவர் கோபால், வழக்கறிஞர் வெண்மணி, சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி அமைப்பாளர் கணபதி உள்ளிட்ட பலரும் கண்டன உரையாற்றுகிறார்கள்.

எம்பி.ஏ. படித்த சோனியா

கிராமங்களில் தீண்டாமைக் கொடுமைகள் தலைவிரித்தாடுவது குறித்து ஒவ்வொரு நாளும் ஏடுகளில் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ளது காருகாகுறிச்சி தெற்குத் தெரு என்ற கிராமம். இந்த கிராமத்திலிருந்து சோனியாகாந்தி என்ற தலித் பெண், சென்னைக்கு அருகே உள்ள கல்லூரி ஒன்றில் ‘எம்.பி.ஏ.’ பட்டம் படிப்பு முடித்துவிட்டு சொந்த கிராமத்துக்கு வந்திருந்தார். ‘குடல்வால்’ (அப்பென்டிசைட்டிஸ்) அறுவை சிகிச்சைக்குள்ளாகி, வீட்டு வாயிலில் கட்டிலில் படுத்திருந்த அந்தப் பெண்ணை சாலை வழியே மோட்டார் சைக்கிளில் சென்ற உள்ளூர் ஆதிக்க ஜாதி பஞ்சாயத்து தலைவர் பழனிவேலு என்பவர் அடித்து உதைத்துள்ளார். அக்கம்பக்கத்திலிருந்தவர்கள் ‘அறுவை சிகிச்சைக்குள்ளான பெண்ணை ஏன் அடித்து உதைக்கிறீர்கள்’ என்று கேட்டதற்கு, ‘நான் மோட்டார் சைக்கிளில் போகும்போது இந்த கீழ்ஜாதிக்காரி எழுந்து நிற்காமல் திமிரோடு படுத்திருப்பதா?’ என்று ஜாதி ஆணவத்தோடு கேட்டிருக்கிறார். அறுவை சிகிச்சை செய்துள்ள பெண் என்று கூறிய பிறகும், அதற்காக கவலைப்படாத பஞ்சாயத்து தலைவர் நிற்க முடியவில்லையென்றால் படுக்காமல், எழுந்தாவது உட்கார்ந்திருக்கக் கூடாதா? என்று திமிரோடு கேட்டுள்ளார். சோனியாகாந்தி என்ற தலித் பெண்ணின் தந்தை, ஒரு காங்கிரஸ்காரர். பெண்ணின் உடல்நிலை இதனால் மோசமடைந்துள்ளது என்று வடக்கு காவல்நிலையத்தில் இது பற்றி புகார் தரப்பட்டது. ஆனால், காவல்துறை வழக்கு பதிவு செய்ய மறுத்துள்ளது. மனம் உடைந்த பெண்ணின் தந்தை, மாவட்ட காவல்துறை அதிகாரியிடம் புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ (ஏப்.30) முதல் பக்கத்தில் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

தீண்டாமை தடுப்புச் சுவர்: கழகம் எதிர்ப்பு

பெரியநாயக்கன் பாளையத்தில் புதிதாக வீட்டுமனைகள் விற்கப்பட்டு வருகின்றன. இந்த மனைக்கு அருகே வாழும் தலித் மக்கள் குடியிருப்பிலிருந்து பிரிக்க நீண்ட தீண்டாமை தடுப்புச் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. இதை அகற்றக் கோரி கழக ஒன்றியத் தலைவர் பிரசன்னா, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியுள்ளதாவது:

“பெரியநாயக்கன்பாளையம், விவேகானந்தபுரத்திலுள்ள சீனிவாசன் வீதியில் 300 குடியிருப்புகளில் 1500க்கும் மேற்பட்ட தலித் மக்கள் வசித்து வரு கின்றனர். அப்பகுதிக்கு மிக அருகில் சுமார் மூன்றரை ஏக்கர் பரப்பில் காலியாக இருந்த இடத்தில் புதிதாக வீட்டுமனைகள் பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப் பட்டு வருகிறது. அந்த இடம் தலித் மக்கள் குடியிருப்பினை ஒட்டியிருப்பதால், அம்மக்கள் மீது தீண்டாமை கடைபிடிக்கும் வகையில் அக் குடியிருப்பை யொட்டி குடியிருப்புகள் இருக்கும் நீளம் வரை ஒரு நீளமான தீண்டாமைச் சுவர் கட்டப்பட்டிருக்கிறது. இது இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரான செயலாகும். தலித் மக்கள் மீது தீண்டாமை கடைபிடிக்கும் வகையிலும் ஊர், சேரி என மக்களை பிரித்து சமத்துவத்திற்கு எதிராகவும் இச்சுவர் கட்டப்பட்டிருப்பதால் அச் சுவற்றை விரைந்து அகற்றி மக்களுக்கிடையே ஏற்படும் பிரிவினையை தடுத்து இச் சுவர் கட்ட காரணமானவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.”