கேரளாவில் ஒடுக்கப்பட்ட ஈழவ மக்களின் உரிமைக்குப் போராடிய நாராயண குரு நிறுவிய சிவகிரி மடத்துக்கு குஜராத் முதல்வர் நரேந்திரமோடி சென்றுள்ளார். திருவனந்தபுரம் அருகே வர்கலா என்ற ஊரில் ஸ்ரீ நாராயணா தர்ம மீமம்சா பரிஷத்தின் பொன் விழாவை தொடங்கி வைத்துள்ளார். இனப் படுகொலை செய்த மோடி, இந்த விழாவில் பங்கேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜனநாயக வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்தியது. காங்கிரஸ் கட்சியும் விழாவில் பங்கேற்கவில்லை. விழாவில் பேசிய நரேந்திர மோடி, “அரசியல் தீண்டாமை சமுதாயத்தில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இன்னும் நீடித்துக் கொண்டிருக்கும் இந்த மிகப் பெரிய மோசமான நிலை சமூக வாழ்க்கையிலிருந்து அகற்றப்பட வேண்டும்” என்று பேசியுள்ளார். (‘தினந்தந்தி’ 25.4.2013)

மோடிக்கு கவலை எல்லாம் அரசியலில் நடக்கும் தீண்டாமை பற்றித்தான். சமூகத்தில் நடக்கும் தீண்டாமை பற்றி அவருக்கு எந்தக் கவலையும் இல்லை. “மோடியைப் போல் ஒரு சிறப்பான ஆட்சி இந்தியாவில் எங்குமே இல்லை; அவர்தான் அடுத்த பிரதமருக்கு தகுதியானவர்” என்று ‘துக்ளக்’ சோ ராமசாமி உள்ளிட்ட ஒரு “பஜனை கோஷ்டி” தொடர்ந்து ஜால்ரா தட்டி வருகிறது. இந்த நிலையில் மோடி ஆட்சி செய்யும் குஜராத்தில் ‘சமூகத் தீண்டாமை’ எப்படி இருக்கிறது என்ற தகவல்கள் இப்போது வெளி வந்து கொண்டிருக்கின்றன.

‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேட்டின் அகமதாபாத்பதிப்பு (ஏப்.11, 2013) முதல் பக்கத்தில் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. கீர்த்திரதோரு என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் குஜராத் அரசிடமிருந்து பெற்றுள்ள இந்த தகவல்கள் அம்மாநிலத்தில் தீண்டாமை-ஜாதி வெறி கொடி கட்டிப் பறப்பதை கிழித்துக் காட்டியுள்ளது.

•              98 சதவீத தலித் மக்களுக்கு குஜராத்தில் தேனீர்க் கடையில் தனி கிளாசில்தான் தேனீர் விற்கப்படுகிறது.

• தேர்ந்தெடுக்கப்பட்ட தலித் பஞ்சாயத்து தலைவர்களில் 62.71 சதவீதம் பேர் தீண்டாமைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். தங்கள் பஞ்சாயத்திலேகூட அவர்களுக்கு பொதுக் குழாய்களில் தண்ணீர் பிடிப்பதற்கும் உரிமை கிடையாது.

• அரசுப் பள்ளிகளில் நடக்கும் மதிய உணவுத் திட்டத்தில் தீண்டாமைதான் தலைவிரித்தாடுகிறது. 53.78 சதவீத ஆரம்பப் பள்ளிகளில் தலித் குழந்தைகள் பிற ஜாதி குழந்தைகளோடு சேர்ந்து உணவருந்த அனுமதிக்கப்படுவது இல்லை.

• தமிழ் பேசுவோர் வாழும் 1589 கிராமங்களில் 97 சதவீத தமிழ் மக்கள் கோயில்களுக்குள்ளேயே அனுமதிக்கப்படுவதில்லை.

- என்று அந்த செய்தி கூறுகிறது. உண்மையான சமூகத் தீண்டாமையை நடைமுறைப்படுத்திக் கொண்டு ‘அரசியல் தீண்டாமை’ பற்றி மோடிகள் பேசக் கிளம்பியிருக்கிறார்கள். மோடியின் ‘தீண்டாமை’யைப் பாராட்டி, அடுத்த ஆண்டு சித்திரா பவுர்ணமிக்கு மருத்துவர் ராமதாசு மோடியை சிறப்பு அழைப்பாளராகக்கூட அழைக்கலாம்!