கோவையில் கழகம் களம் இறங்குகிறது

‘கிருஷ்ணா ஸ்வீட்ஸ்’ என்ற பெயரில் தமிழகம் முழுதும் இனிப்புக் கடைகளை நடத்தி வரும் பார்ப்பன நிறுவனம், வணிகத்தோடு பார்ப்பனியத்தை பரப்புவதிலும் தீவிரம் காட்டி வருகிறது. கோவையில் இந்த பார்ப்பன நிறுவனம் ஒரு வாரம் முழுதும் “எப்போ வருவார்?” என்ற தலைப்பில் “கடவுள்” வருகையை முன் வைத்து மதப் பிரச்சாரர்களை அழைத்து பார்ப்பனியத்தைப் பரப்பி வருகிறது. இதற்கு பதிலடி தரும் வகையில் ‘எப்போதும் வர மாட்டார்’ என்ற தலைப்பில் கோவை பெரியார் திராவிடர் கழகம், ‘பகுத்தறிவு திருவிழா’ நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. 8.1.2012 அன்ற மாலை கோவை அண்ணாமலை ஓட்டல் அரங்கில் நடந்த இந்த நிகழ்வுக்கு கழகப் பொதுச் செயலாளர் கோவை இராம கிருட்டிணன் தலைமை தாங்கினார்.

‘ஆண்டவன் அறிவியலைப் பரப்ப வர மாட்டார்’ என்ற தலைப்பில் சிற்பிராசனும், ‘பெண்ணடிமையை ஒழிக்க வர மாட்டார்’ என்ற தலைப்பில் பேராசிரியர் டி. உருக்கு மணியும், ‘சாதி தீண்டாமையை ஒழிக்க முன் வரமாட்டார்’ என்ற தலைப்பில் பொதுச் செய லாளர் விடுதலை இராசேந்திரனும் உரையாற்றினர். பரபரப்பான இந்த நிகழ்வுக்கு ஏராளமான இளைஞர்கள், ஆர்வலர்கள் திரண்டு வந்திருந்தனர். அரங்கம் நிரம்பி வழிந்தது. ‘தினத்தந்தி’ நாளேட்டில் இந்த நிகழ்ச்சி கழக சார்பில் விளம்பரமாக தரப்பட்டிருந்தது. ‘கிருஷ்ணா ஸ்வீட் நிறுவனம்’ கோவை புறநகர்ப் பகுதியில் மின்சார சுடுகாடு ஒன்றை அமைத்துள்ளது. இங்கு பார்ப்பனர் பிணங்கள் மட்டுமே எரிப்பதற்கு அனுமதிக்கப் படுவதை சுட்டிக்காட்டிய கழகப் பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன், அதை எதிர்த்து விரைவில் பெரியார் திராவிடர் கழகம் போராட்டக் களம் அமைக்கும் என்று பலத்த கரவொலிக்கிடையே தெரிவித்தார்.

“சாதிக்கொரு சுடுகாடு என்ற சாதிய அவமானத்தை ஒழிப்பதற்கே மின்சார சுடுகாடு வந்தது. ஆனால், மின்சார சுடுகாட்டையும் பார்ப்பனர்கள் வர்ணாஸ்ரமத்தைக் காப்பதற்கே பயன்படுத்துகிறார்கள். நாங்கள் சூத்திரர்கள் பிணங்களை அங்கே கொண்டு போய் எரிக்கச் சொல்வோம்; பார்ப்பன இறுமாப்பை நெருப் பில் பொசுக்குவோம்” என்று பொதுச் செய லாளர் கோவை இராமகிருட்டிணன் தெரிவித்தார்.

பார்ப்பனியத்தை எதிர்க்கும் மானமுள்ள தமிழர்களும், கிறிஸ்துவ, முஸ்லீம் சமூகத்தினரும் பார்ப்பனியத்தை உயர்த்திப் பிடிக்கும், ‘கிருஷ்ணா ஸ்வீட்’ நிறுவனத்திடம் இனிப்பு வாங்க மாட்டோம் என்று புறக்கணிக்க வேண்டும் என்று கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் வேண்டுகோள் விடுத்தபோது கூட்டத்தினர் பலத்த கரவொலி செய்து வரவேற்றனர்.